Monday, August 31, 2020

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!

 Status 328               

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்.

கொன்றைவேந்தன்

நம் குற்றத்தை பிறர் விமர்சிக்கும் பொழுது நமக்கு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தால் பிறர் குற்றத்தை அலசி ஆராய மாட்டோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் தவறுகள் செய்வது மனித இயல்பு. எனவே அவர்களை நல்வழிப்படுத்தி நமது நட்பு வட்டத்தையும் உறவுகளையும் தக்க வைத்துக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

Victory King (VK)

Sunday, August 30, 2020

ஊருடன் ஒத்து வாழ்!

 Status 327

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். 'ஊரோடு ஒத்துப்போ' என்று சொல்வார்கள்.  அப்படியில்லாமல், ஊருடன் பகைத்துக்கொண்டால், அவன் பரம்பரைக்கு தீங்கு நேரும். தம் வம்சமே அழிந்துவிட வாய்ப்புண்டு என்கிறார்.

கொன்றை வேந்தன்

ஒளவையின் இந்த அருள்வாக்கு பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய ஒன்று. அனைத்து தரப்பினர்களுக்கும் அனைத்து வயதினர்களுக்கும் பொருந்தும் ஒரு முத்தான பாடல். எனவே நாம் ஒவ்வொருவரும் இதனைக் கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்து ஆனந்தமாய் வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, August 29, 2020

செயலுக்கு முன் தீர்மானம்!

 Status 326

ஒரு மரத்தை வெட்ட எனக்கு 6 மணி நேரம் அளிக்கப்பட்டால் அதில் நான்கு மணி நேரத்தை கோடாரியைக் கூர் தீட்டவே பயன்படுத்துவேன்

ஆபிரகாம் லிங்கன்

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன் அதற்கான திட்டம் வகுப்பது தான் மிகவும் முக்கியம். தீர்மானித்தல் அதற்கான முழு விவரங்களையும் கேட்டறிதல் வல்லுனர்களின் ஆலோசனை பெறுதல்  முதலீட்டுக்கான திட்டங்கள் வகுத்தல் இவைகள் அனைத்தையும் ஆராய்ந்த பிறகு அதற்கான செயல் வடிவம் கொடுத்து முழு மனதுடனும் தளராத நெஞ்சுடனும் நம் உழைப்பை  கொடுத்தால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் எடுத்த செயலுக்கான வெற்றி நம்மை வந்து அடைந்தே தீரும்.

Victory King (VK)

Friday, August 28, 2020

வெற்றிக்கு காந்திஜி கூறிய 3 வழிகள்

 Status 325

1. தவறுகளிலிருந்து பாடம் கற்பது. மீண்டும் அதை செய்யாமல் இருப்பது

2. ஒவ்வொரு திட்டத்துக்கும் இலக்கை நிர்ணயிக்கும்போதே அதற்கான தயாரிப்பு காலத்தையும் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு திட்டத்துக்கான மாற்றையும் யோசித்து வைத்துக்கொள்ளுதல்

3. என்ன எதிர்ப்புகள் வந்தாலும் களத்தில் இருந்து விலகாமல் இருப்பது

மகாத்மா காந்தியடிகள் 

காந்தியடிகள் அனுபவப்பூர்வமாக உதிர்த்த இந்த மூன்று மொழிகளையும் நாம் மூல மந்திரமாக எடுத்துக்கொண்டு ஒரு செயலில் ஈடுபட்டால் வெற்றி என்பது நிச்சயம்.

Victory King (VK)

Thursday, August 27, 2020

தீதும் நன்றும்!

 Status 324

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்"

 பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு இழைக்கும் போது அவரால் எதிர்க்க முடியாமல் இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும்.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு"

"அடாது செய்பவன் படாத பாடுபடுவான்"

பழமொழிகள்

இப்படிப்பட்ட உயிருள்ள பழமொழிகளை நம் மனதில் ஏற்றிக் கொண்டுவிட்டால் தீங்கு செய்யும் எண்ணம் நமக்கு மேலோங்கும் பொழுதெல்லாம் இவை ஒரு கேடயமாக இருந்து நம்மை காப்பாற்றும். 

Victory King (VK)

Wednesday, August 26, 2020

ஐந்தில் வளையாதது...

 Status 323

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

பழமொழி

நடுத்தர மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து நாம்தான் கஷ்டப்பட்டோம் நம் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்றும், பணம் படைத்தவர்களும் உயர் பதவியில் உள்ளவர்களும் தம் பிள்ளைகளை தங்களுடைய தகுதிகளை வைத்து பெருமையாக வளர்த்து விடலாம் என்ற எண்ணத்திலும் பிள்ளைகளுக்கு தங்கள் நிலை தெரியாத வண்ணமும் நல்லவை கெட்டவற்றை சொல்லித் தராமலும் அவர்கள் போக்கிலே பள்ளிப் பருவத்திலிருந்தே விட்டுவிடுவதால் இப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வாழ்க்கையில் எந்த நிலையிலும் எதையும் உணராமல் தங்களைப் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். எனவே பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே தவறுகளை சுட்டிக்காட்டி நல்லவற்றை  எடுத்துச்சொல்லி வளர்த்தால் அவர்கள் வாழ்க்கை நலமாக இருப்பதுடன் நமக்கும் பெருமை

 Victory King (VK)

Tuesday, August 25, 2020

பெரியோர்களே முன் உதாரணம்!

 Status 322

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

பழமொழி

ஒரு குடும்பம் தொடர்ந்து தவறிழைத்துக்கொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம் அவ்வீட்டின் பெரியோர்களே. பெற்றோர்கள் செய்யும் தவறானது அதனைப் பார்த்து வளரும் சந்ததியினர்களும்அதே  மனப்பான்மையோடு தான் வளர்க்கிறார்கள்.

சந்ததியினர்கள் திருந்த வேண்டும் என்றால் பெற்றோர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். எனவே ஒரு குடும்பமே நல்லவர்களாவதும் கெட்டவர்களாவதும் அந்த வீட்டின் பெரியவர்கள் கையில் தான் இருக்கிறது. எனவே குடும்பத்தை வழி நடத்தும் நாம் இதை உணர்ந்து நம் சந்ததியினருக்கு ஒரு நல் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து நாமும் ஒரு சமூக அந்தஸ்தை பெற்று நலமாக வாழ்வோமே.

Victory King (VK)

Monday, August 24, 2020

நிம்மதியான வாழ்க்கை!

 Status 321

தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகவே தோன்றும்.

கவிஞர் கண்ணதாசன்

இவை இரண்டுமே ஒருநிலையில் பணத்திற்கு பேராசை பட்டு புகழுக்கு அடிமையாகி ஓர் மயக்கநிலையில் தன்னிலை உணராமல் மற்றவர்களை மதியாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் கடைசியில் எல்லோராலும் தூற்றப்பட்டு தன்னைத்தானே பைத்தியமாக்கிக் கொண்டு சொந்தத்தில் சூனியம் வைத்துக் கொள்ளும் நிலையை வந்தடைவர். எனவே நாம் நிலையான புகழுடன் நலமாக வாழ்க இயல்பான வாழ்க்கையை கடைபிடிப்போம்.

Victory King (VK)

Sunday, August 23, 2020

நம்பினோர் கைவிடப்படார்!

 Status 320

 

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா

 பூமியிலே யாவும் வஞ்சம் வாழ்த்தும் கை    யில் வாளுண்டு

போற்றும் மொழியில் விஷமுண்டு வஞ்சம் சிந்தும் புன்னகை

 இல்லா மனிதர் இங்கே எவருண்டு.

 

கவிஞர் கண்ணதாசன்

 

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு

நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு

தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்

கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா

கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா.

 

நயவஞ்சகர்களின் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள கண்ணனை வேண்டி சரணடைவோம். இடர் களிலிருந்து இருந்து விடுபட்டு நலமாக வாழ்வோம்.

 

Victory King (VK)

 


Saturday, August 22, 2020

பெற்றோரைப் போற்றக் கற்றுக் கொடுத்த விநாயகர்!

 

My daughter’s office (COMPCARE) Vinayagar Pooja. 

உலகைச் சுற்றினாலும், பெற்றோரை சுற்றினாலும் ஒன்றுதான் என்று நிரூபித்து மாம்பழத்தைப் பெற்று பெற்றோரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய விநாயகப் பெருமானை இன்று மனமகிழ்ந்து வணங்கி அனைத்து அருளையும் பெறுவோம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். 

-Victory King (VK)

Friday, August 21, 2020

மகிழ்ச்சியே வெற்றி!

 Status 318

ஒரு செயலைச் செய்வது வெற்றி அல்ல. மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி. எதையுமே சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்

அன்னை தெரசா

இறைவன் படைப்பில் மனிதர்களுக்கு மட்டுமே அழகிய முகத்தைக் கொடுத்திருக்கிறார். அதற்கு மெருகூட்டுவது புன்னகை என்னும் அணிகலன் தான். உள்ளத்திலே பொங்கி எழும் நம் மகிழ்ச்சி முகத்தை பொலிவுறச் செய்து உதடுகளை விரிவடையச் செய்து மற்றவர்களையும் மகிழ்வடையை செய்து அன்பால் இணைப்பது புன்னகையே. வெற்றிக்கு இலக்கணம் புன்னகையே. உலக மூத்த மக்கள் தினமான இன்று நமது பெற்றோர்களுக்கும் பெற்றோர்களைப் பெற்ற பெற்றோர்களுக்கும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் புன்னகை என்ற விலையில்லா மாமருந்தை பரிசாக அளித்து அவர்களை ஆரோக்கியத்துடனும்  மகிழ்வுடனும் வாழ வழி வகுப்போம்.

Victory King (VK)

Thursday, August 20, 2020

ஆணவம் துறப்போம்!

Status 317 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை. எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும். இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும். கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் இதனை உணராமல் அனைத்தும் நானே என்ற ஆணவத்தில் நாம் தான் தோன்றித் தனமாக தகாத செயலில் ஈடுபட்டால் அழிவது என்னவோ நம் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல ஒரு நல்ல குடும்பத்தின் வாழ்க்கையும் சேர்ந்துதான். எனவே இறைவன் நமக்கு விதித்த வாழ்க்கையை ஆணவத்தால் அழித்து விடாமல் நலமுடன் வாழ்வோம் Victory King (VK)

Wednesday, August 19, 2020

மனிதநேயம்!

 Status 316

 மகாபாரதத்தில் மாலை நேரங்களில் போர் செய்வதும் மேலும்  பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்கப்பட்டது நிராயுதபாணியாக போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட இராமன் "இன்று போய் நாளை வா" என்று கூறியதாக மனித நேயத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்

இதிகாசங்கள்

ஒருவன் சுயநலவாதியாக இருக்கலாம். அவன் அடுத்தவனை துன்புறுத்தாமலிருத்தல், அடுத்தவனை அழித்து வழாதிருத்தல், புத்திசாலி போல் பேசி புற முதுகில் குத்தாதிருத்தல் இவைகள் அனைத்துமே ஒருவிதத்தில் மனிதநேயம் தான். ஆனால் ஈரநெஞ்சமே இல்லாத மனதுடன் வாழும் ஈன ஜென்மங்களுக்கு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்க கூட ஆளில்லாமல் அவதிப்படுவர். எனவே நாம் மனித நேயத்துடன் வாழ்ந்து பிறவியின் பயனை அடைவோம்.

Victory King (VK)

Tuesday, August 18, 2020

துஷ்டரைக் கண்டால் தூர விலகு!

 Status 315

துஷ்டனைக் கண்டால் தூர விலகு  

- பழமொழி 

நல்ல பாம்பு கடித்தால் விஷத்தை உடனே எடுத்து விட்டால் விஷம் இறங்கிவிடும். ஆபத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு  விடலாம்.ஆனால் கட்டுவிரியன் கடித்து விட்டால் விஷத்தை உடனே எடுத்தாலும் ஆபத்திலிருந்து அப்பொழுது விடுபட்டாலும் காலப்போக்கில் அதன் பாதிப்பு வந்து வந்து போகும். அடுத்தவர்களைஅழித்து வாழும் துரோகிகளும் குரோத எண்ணங்களே தங்கள் உயிர் மூச்சாக கொண்டுள்ள கயவர்களும் கட்டுவிரியனைவிட கொடூரமானவர்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து  ஒதுங்கி இருப்பது தான் நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு ஒரே வழி. அவர்கள் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள். எனவே நாம் அவர்களிடமிருந்து விலகி நின்று நம்மை நாம் காத்து நலமுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Monday, August 17, 2020

நல்லவர்களும் கெட்டவர்களும்!

 Status 314

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்கள் ஆகி விட மாட்டோம்

மகாத்மா காந்தி

நம்மை மற்றவர்கள் நல்லவர்கள் என்று கூறும் அளவிற்கு நம் சொல் செயல் சிந்தனை இருந்துவிட்டால் அடுத்தவர்களைப் பற்றி குறை கூற நம் மனம் இடம் கொடுக்காது. மற்றவர்களுக்கு எனவே மற்றவர்களைப் பற்றி குறைகூறுவதை விடுத்து நம்மை நாம் மேன்மேலும் பட்டை தீட்டி பக்குவப்படுத்திக் கொண்டால் நிமிர்ந்த நடையுடன் நேர்கொண்ட பார்வையுடன் மதிப்போடும் மகிழ்வோடும் வாழலாம்

Victory King (VK)

Sunday, August 16, 2020

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி!



Status - 313

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்  சுருட்டப்பள்ளி. 

ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில்தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது

பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கே தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, தனது மனைவி கவுரியுடன் காட்சியளிக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி,  திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

திருக்கோயில் வரலாறு 

இந்த பிரதோஷ சிவனையும் தாம்பத்திய  தட்சிணாமூர்த்தியையும்  வழிபட்டு சகல சௌபாக்யத்தையும் பெற்று நலமுடன் வாழ்வோம்

Victory King (VK)

Saturday, August 15, 2020

குற்றங்களை உணராதவனே மனிதன்!

 Status 312

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராதவன் தான் குருடன்.

காந்தியடிகள்

கண் தெரியாதவர்கள் தங்களது யுக்தியால் அனுமானத்தில் அனைத்து செயல்களையும் செய்ய முடிகிறது. ஆனால் கண் தெரிந்தும் குருடனாய் செயல்படும் குற்றவாளிகள் தாங்களே புதை குழியில் விழுந்து தங்களை அழித்துக் கொள்வார்கள். அவர்கள் கண் தெரிந்தும் கயவர்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை அவர்களைத் தேடி வந்து கொடுக்கும். தப்பவே முடியாது. எனவே நம் குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ்வோமே!

Victory King (VK)

Friday, August 14, 2020

சுதந்திர தின சிந்தனைகள்

Status 311

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்

- ஔவையார்

நாம் ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடனும் பண்புடனும் வாழ்ந்து  நம் சந்ததியினரையும் வழிநடத்தி முதலில் நம் குடும்பத்தை நலம் பெற செய்தால் நம் நாடும் நலம் பெறும். நாம் அடைந்த சுதந்திரத்தின் பெருமையையும் அருமையையும் உணர்ந்து நாம் அனைவரும் பாரதத்தாயின் மக்கள் என வீர கோஷமிட்டு நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டுவோம். சுதந்திர இந்தியாவின் நலனுக்காக சுதந்திரமாக செயலாற்றி நம் நாட்டின் பெருமையைப் போற்றுவோம். அனைவருக்கும் இந்தியாவின் 74 வது சுதந்திர தின வாழ்த்துக்களுடன்

Victory King (VK)

Thursday, August 13, 2020

கோபம் குறைப்போம்!

 Status 310

கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்’ 

புத்தர்

நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் முதலில் நாம் கோபத்தை அடக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிலர் தன் குற்றத்தை மறைப்பதற்காக கோபப்படும் பொழுது சுவற்றில் அடித்த பந்து போல் அது தன்னையே வந்து தாக்கி விடும். நியாயத்திற்காக நாம் கோபப்படும்போது எதிராளிகளின் குற்றத்திற்கு நாம் தண்டனை அனுபவிப்பது போலாகிவிடும். எனவே நாம் கோபத்தைத் தணித்து நிதானத்தைக் கடைப்பிடித்து நம் நரம்புகளையும் ரத்த ஓட்டத்தையும்  பாதிக்காவண்ணம் பாதுகாத்து நம்மை நாம் காத்துக்கொள்வதுடன் நன்மைகளையே செய்து மற்றவர்கள் மத்தியில் நன்மதிப்பை பெருமளவிற்கு வாழப் பழகுவோம்

Victory King (VK)

Wednesday, August 12, 2020

சுயநலம் தவிர்ப்போம்!

 Status 309

சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்

காஞ்சி மகாபெரியவர்

ஒருவனுக்கு சுயநலம் தலை தூக்கும் பொழுதுதான் அடுத்தவனை அழித்தாவது தன் நலனை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற குறுகிய கொடூர புத்தி அவனது மனதில் நிலைத்து நிற்கிறது. சுயநலம் என்பது ஒரு புற்றுநோய். அதை ஒரு நிலையில் சரி செய்து கொள்ளாவிட்டால் அதுவே அவனை செல்லரிக்க வைத்து அழித்துவிடும். எனவே சுயநலம் நம்மை அண்டா வண்ணம் நம் மனதை தூய்மையாக்கி நலமுடன் வாழப் பழகுவோம்

Victory King (VK)

Tuesday, August 11, 2020

கிருஷ்ண ஜெயந்தி!

 Status 308

கிருஷ்ணர் கம்சனை அழிப்பதற்காகவும், மகாபாரதம் எனும் உன்னத காவியத்தில், நீதியை நிலை நாட்டுவதற்காகவும் அவதரித்தவர். மதுராவில் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த கம்சனை அவன் தங்கை தேவகியின் எட்டாவது குழந்தையான கிருஷ்ணன் கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்து இளைஞன் ஆனதும் மதுராவுக்கு வந்து கம்சனை அழித்து மக்களைக் காத்தருளினார்.

மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று நாம் மனமகிழ்ந்து நம் இல்லத்திற்கு வரவேற்று பலவகை தின்பண்டங்களையும் பால் பழங்களையும் உளமகிழுந்து உபசரித்து வணங்கினால் அவர் நம்மை காப்பதுடன் நமக்கு துரோகம் செய்யும் அசுர குணம் படைத்தவர்களையும்  வதம் செய்து நம்மை நலமுடன் வாழ வைப்பார்.அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

Victory King (VK)

Monday, August 10, 2020

பண்பும் ஒழுக்கமும்!

 Status 307

ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன்பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும். குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

காஞ்சி மகாபெரியவர்

பண்போடும் ஒழுக்கத்தோடும் வாழ்ந்துகாட்டி தங்கள் குழந்தைகளை வளர்த்த பெற்றோர்கள் வளர்ப்பினால் கிடைத்த முதிர்ச்சியினால் அக்குழந்தைகள் வாழ்க்கையில் மேம்பட்டு தங்களையும் உயர்த்திக்கொண்டு பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு பெருமையையும் அவர்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தையும் அள்ளிக்கொடுத்து சிறந்து விளங்குவார்கள். எனவே பெற்றோர்களாகிய நாம் மொட்டுக்களை மலர வைத்து மலர்ந்த மலர்களின் வாசனை நுகர்ந்து அனுபவித்து பரவசமடைவோமே.

Victory King (VK)

Sunday, August 9, 2020

நம்பினோர் கெடுவதில்லை!

 Status 306

திருநள்ளாருக்கு அருகில் உள்ள அம்பகரத்தூரில் 

அஷ்ட புஜ மகா பத்ரகாளி

அன்புடன் வீற்றிருக்கின்றாள்

அவளைச் சரணடைந்தோர்க்கு 

அல்லல் என்பதே  இல்லை.

அம்பரன் எனும் அரக்கன் ஒரு பயங்கர மகிஷாசுரன் உருக்கொண்டு தேவியை எதிர்த்தான். காளி, அசுரனின் உயிர் இருப்பிடம் அவனது ‘நெஞ்சு‘ என அறிந்து சூலத்தால் அம்பரனின் நெஞ்சில் குத்தினாள்

அம்பரன் அழிந்தான். அந்த இடமே இப்பொழுது உள்ள அம்பகரத்தூர் ஆகும். அந்த காளிதான் அங்கு குடிகொண்டுள்ள பத்திரகாளியம்மன்.

அவளை மனமுருகி வேண்டினாள் நமக்கு தீமை செய்பவர்களை அழித்து நம்மை காப்பாற்றுவாள். அன்பர்களுக்கு அருள் புரிவதில் அவளுக்கு நிகர் அவளேதான்.

வணங்குவோம் வளம் பெறுவோம்!

Victory King (VK)

Saturday, August 8, 2020

ஆணவம் அழிப்போம்!

 Status 305

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு

இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது

அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது!

கவிஞர் கண்ணதாசன்

அடுத்தவன் வயிற்றில் அடித்து தன் வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக்கி அதில் சுகம் கண்டு அந்த ஆனந்தத்தில் சிரிக்கும் ஆணவச் சிரிப்பு தான் அவனுக்கு எமன். அந்த ஆணவச் சிரிப்பின் ஒலி அலைகள் வழியாக துர்தேவதைகள் பல ரூபங்களில் அவனைத் தாக்கி அவன் அழிவது என்பது நிச்சயம். இதை உணர்ந்து பிறர் மனதை நோகடிக்காமல் வாழப் பழகுவோம்

 Victory King (VK)

Friday, August 7, 2020

எண்ணிய முடிதல் வேண்டும்!

 Status 304

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவ மெல்லாம் பரிதி முன் பனியே போல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னையே

மகாகவி பாரதி

அடுத்தவர்களை அழித்து வாழும் சுயநல துரோகிகளை மனதில் கொண்டுதான் அன்று பாரதி அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து நல்லெண்ணத்தையும் நல்லறிவையும் அளிக்க வேண்டும் என்று அந்தக்காலத்திலேயே அன்னையிடம் வேண்டிகொண்டார் போலும். ஆனால் இன்றைய நிலை நாமாக நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் பத்ரகாளி சூலாயுதத்தை கொண்டு வதைப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே நாம் அடுத்தவனை அழிக்க நினைத்தால் நாம் அழிவதிலிருந்து தப்பவே முடியாது.

Victory king (VK)

Thursday, August 6, 2020

தானமும் தர்மமும்!

Status 303

உயிர் மீது அன்பு காட்டுங்கள். செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

காஞ்சி மகாபெரியவர்.

தர்மம் என்பது எவரும் கேட்காமல்  அவர் நிலை அறிந்து நாமாகக் கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். இதை பாரதப்போரில் கர்ணன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில், ஈசன் கர்ணனுடைய தந்தை சூரிய தேவனிடம் கூறியது. தானம் குடும்பத்தை செழிக்க வைக்கும். தர்மத்தினால் கிடைத்த புண்ணியத்தின் பலன் ஏழேழு ஜென்மத்திலும் நிலைத்து நிற்கும். எனவே வாழ்க்கையில் தானதர்மங்கள் செய்து நாமும் நலமுடன் வாழ்ந்து நம்ம சந்ததியினரையும் வாழவைத்து மகிழ்வோம்.

Victory King (VK)

Wednesday, August 5, 2020

இறந்த பின்னும் வாழ்வோமே!

Status 302

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்

டாக்டர் அப்துல் கலாம்

நாம் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று ஒரு நடைபிணமாக வாழ்வதில் என்ன பயன். கிடைப்பதற்கரிய மானிடப் பிறவியை நாம் பெற்றிருக்கிறோம். அதனை பயனுள்ள தாக்கி நம் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்து நாம் இறந்த பிறகும் நம் புகழ் நிலைக்கும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் நாம் இந்த பிறவி எடுத்ததின் பயனாகும். காலம் நதியைப் போன்றது. உற்பத்தியாகும் இடத்திற்கு அது திரும்பி வருவதற்கு சாத்தியமே இல்லை. எனவே இதை உணர்ந்து வாழ்க்கையை நாம் பயனுள்ளதாக்கி பயணம் செய்வோம்.

Victory King (VK)

Tuesday, August 4, 2020

ஆறறிவு மனிதன்!

Status 301


இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்.
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு


கவிஞர் வாலி


அருமையான கருத்து.அடுத்தவர்களை துன்புறுத்தி ஆனந்தப்படும் பண்பற்ற சுயநலவாதிகள் ஐந்தறிவு படைத்த இந்தப் பறவைகளை பார்த்தாவது சுயநலத்தை விடுத்து அனைவரையும் அரவணைக்கும் பண்பை கற்றுக் கொள்ளட்டும்.


Victory king (VK)


Monday, August 3, 2020

தன் வினை தன்னைச்சுடும்!

Status 300

பட்டினத்தார் துறவு நிலையில் வீடு வீடாக உணவு பெற்று உண்டது கண்டு அவரது உறவினர்கள் சினமடைந்தனர். 

தங்கள் குலப்பெருமை இவரால் சீரழிகிறதே என்று ஒருநாள் அந்த உறவினர்கள் அப்பம் ஒன்றில் நஞ்சு கலந்து, அதை உண்ணும்படி பட்டினத்தாரிடம் தந்தனர்.

உண்மையை உணர்ந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை உண்ணவில்லை, 

‘தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’ என்றபடி, அப்பம் கொடுத்த உறவினர் வீட்டுக் கூரை மீது அதை எறிந்தார். உடனே அவர்கள் வீடு தீப்பற்றி எரிந்தது. 

அதுபோல் நம்மை எவரேனும் துன்புறுத்தி அழிக்க நினைத்தால் அதனால் நம் ஆழ்மனது வெம்பி வேதனைப்படும் பொழுது நம் மனம் பட்ட வேதனையே நம்மை அழிக்க நினைத்தவனுடைய வாழ்வை சின்னாபின்னமாக்கி விடும் என்பதற்கு பட்டினத்தாரின் இந்தநிலையே ஒரு சான்றாகும்.

Victory King (VK)

Sunday, August 2, 2020

துன்பங்களைக் கண்டு தூர நிற்போம்!

Status 299

பிறரை அழ வைப்பவர்கள் தங்கள் கண்களிலும் கண்ணீர் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. 

கவிஞர் கண்ணதாசன்

பிறருக்கு துன்பம் தந்து மகிழ்பவர்கள் துரோகிகள். எதிரிகளைக் கூட நாம் எதிர்கொண்டு விடலாம் ஆனால் துரோகிகளை போல கொடூரமானவர்களை
எதிர்கொள்வது மிகவும் கடினம்.அவர்கள் எப்பொழுது புற முதுகில் குத்துவார்கள் என்று கணிக்க முடியாது. மற்றவர்கள் கண்ணீரை பன்னீராக நினைக்கும் துரோகிகளுக்கும் கண்ணீரின் வலியை உணரும் காலம் வந்தே தீரும். எனவே நாம் எக்காலத்தும் எந்த சூழ்நிலையிலும் துரோகிகளுக்கு துணை போகாமல் அவர்களிடமிருந்து விலகி இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.

Victory King (VK)

Saturday, August 1, 2020

அழுகையும் சிரிப்பும்!

Status 298

அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி, கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

கவிஞர் கண்ணதாசன்

நாம் அழ வேண்டிய இடத்தில் அழுது, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்தால் தான் நமது மனச்சுமை நீங்கி நாம் சகஜ நிலையில் இயங்க முடியும். சிரிப்பும் அழுகையும் உணர்ச்சிகளின் உச்சகட்ட வெளிப்பாடு. அதை அடக்கவோ மறைக்கவோ செய்தால் நம் உடல் நிலைதான் கெடும். எனவே மற்றவர்களுக்காக நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் நாம் நாமாகவே இருந்து நம்மை நாம் காத்துக் கொள்வோம்.

Victory King (VK)