Monday, November 30, 2020

துரோகமும் விளைவும்!

 Status - 415

யாரையும் திட்டாதீர்கள்; சாபம் விடாதீர்கள்; கெடுதல் நினைக்காதீர்கள்; நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும். நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.

- கிருஷ்ண பரமாத்மா

நம் எண்ணம் சொல் செயல் அனைத்திலும் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் நமக்கு  யார் துரோகம் செய்தாலும் அநீதி இழைத்தாலும் கொடுமைகள் செய்தாலும் அதனுடைய விளைவால் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையின் விளைவும் நமக்கு துரோக செய்தவர்களைத் தாக்கும் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. அவர்கள் வாழ்க்கை அழிவதில் இருந்து தப்பவே முடியாது.

- Victory King (VK)


Saturday, November 28, 2020

உழைப்பே உயர்வு தரும்!

 Status - 414

ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்கு செல்வத்தை சேர்த்து வைப்பதைவிட உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித்தரும்.

- ரிச்சர்ட் வாட்லி

உழைத்து சம்பாதிப்பவர்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். ஏதோ ஒரு விதத்தில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரிவது அரிது. எனவே நாம் நேர்மையாக சம்பாதிப்பதுடன் நம் பிள்ளைகளும் அதை உணரும்படி வாழ்ந்து காட்டும்போதுதான் தாமும் உழைக்க வேண்டும் என்கின்ற உத்வேகம் அவர்களுக்குள் ஏற்படும். எனவே, நம் பிள்ளைகள் வாழ்க்கை உயர்வதும் தாழ்வதும் பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது. 

- Victory King (VK)

Friday, November 27, 2020

அன்பும் பண்பும் வளமான வாழ்வும்!

Status 413

யார் உங்களுக்கு உதவுகிறார்களோ அவர்களை மறந்து விடாதீர்கள். யார் உங்களை நேசிக்கிறார்களோ அவர்களை வெறுத்து விடாதீர்கள். யார் உங்களை நம்புகிறார்களோ அவர்களை ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள்.

சுவாமி விவேகானந்தர்

இவை மூன்று குணநலன்களும் தான் ஒருவருடைய பண்பிற்கு இலக்கணமாகும். இல்லையேல் நம்மை  சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பச்சோந்திகள் என முத்திரையிட்டு நாம் தனிமைப்படுத்தப்படுவோம். எனவே நாம் அன்போடும் பண்போடும் பழகி வாழ்வை வளமாக்கிக் கொள்வோம்.

Victory King (VK)

Thursday, November 26, 2020

மகிழ்ச்சியை பரப்புவோம்!

 Status 412

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.

பெர்னாட்ஷா

சுற்றத்தோடு சுமுகமாகவும் சூழலை ரசனையோடு கண்டு மகிழ்ந்தும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதை இலேசாகவும் அகமகிழ்ந்து முகம் மலர்ந்து அனைவரையும் அரவணைத்து வாழ்க்கையை நாம் எதார்த்தமாக நகர்த்திச் செல்லும் பொழுது நமக்கு மனச்சுமை என்பதே உணராமல் மகிழ்வுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Wednesday, November 25, 2020

இயற்கையின் சீற்றம்!

 Status 412

இயற்கை சீற்றங்கள் நம்மை ஒன்றன்பின் ஒன்றாக விரட்டினாலும் நாம் மனம் தளராது சுய கட்டுப்பாட்டுடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்தும் நம்மால் பிறருக்கும் பிறரால் நமக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதனை எதிர்கொண்டு நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதுடன் பிறரையும் முடிந்தவரை காப்பாற்றி வெற்றி பெறுவோம்!

Victory King (VK)

Tuesday, November 24, 2020

உயர்வும் தாழ்வும்!

 Status 411

மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.

பெர்னாட்ஷா

நாம் பிறருக்கு துரோகம் செய்யாமல் அடுத்தவனை அழிக்காமல் நேர்வழியில் உயரும் பொழுது நம் உயர்வும் மதிப்பும் நிலைத்து நிற்கும். குறுகிய நெஞ்சத்தோடு குறுக்கு வழியிலும் சுயநலத்தோடும் அடுத்தவனை அழித்தும் நமக்குக் கிடைத்த உயர்வு எவ்வளவு வேகத்தில் உயர்ந்தோமோ அதைவிட பல மடங்கு வேகத்தில் அதல பாதாளத்தில்தான் விழுவோம். எனவே நமது உயர்வு நிலைத்து நிற்பதும் படுகுழியில் விழுவதும் நம் கையில்தான் உள்ளது.

Victory King (VK)

Monday, November 23, 2020

நிகழ்காலத்தில் வாழ்வோமே!

 Status 410

இந்த கணம் தான் உண்மை. மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும் தான்

ஓஷோ

நிகழ்காலத்தோடு ஒன்றி மனமகிழ்வுடன் அதனுடன் நாம் நடைபோடும் பொழுது ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். அதனை வருங்காலத்தில் நாம் அசைபோட்டு மகிழும் பொழுது நமக்கு கிடைக்கும் சுகத்திற்கு அளவே இல்லை. வருங்காலத்தை அதை வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம். எனவே நம் கண் முன்னே கண்டு கொண்டிருக்கும் நிகழ்காலத்தை சுகமாக அனுபவித்து மகிழ்வோமே

Victory King (VK)

Sunday, November 22, 2020

சாதனையும் போதனையும்!

 Status 409

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

பெர்னாட்ஷா

நாம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது  நாம் கொடுக்கும் அறிவுரைகளை நாம் கடைப்பிடிக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லையேல் அந்த அறிவுரையானது  நம்முடைய இயலாமையைத்தான் காட்டும். மற்றவர்கள் மத்தியில் அவமானப்பட கூடிய நிலை வரும். எனவே நாம் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் உண்மை இருந்தால் மட்டுமே மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.

Victory King (VK)

Saturday, November 21, 2020

நம் சுயத்தை இழக்க வேண்டாமே!

 Status 408

எவரைப் போல இருக்கவும் முயலாதே. எவரையும் பின்பற்றாதே. அப்படிச் செய்தால் உன் இருப்பு போலி ஆகும். அது தற்கொலையை விட மோசமானது. நீ நீயாக இரு. அப்போதுதான் நீ ஆதாரபூர்வமாக பொறுப்புள்ளவராக உண்மையாக இருக்க முடியும்.

ஓஷோ

நாம் போலி பகட்டை நம்பி மனதை சிதற விடாமலும், எந்நிலையிலும் நம் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமலும் வாழ்வோமேயானால் நாம் வாழ்நாள் முழுவதும் தலைநிமிர்ந்து வீறுநடை போட முடியும்.

Victory King (VK)

Friday, November 20, 2020

அராஜகத்தின் உச்சகட்டம் அழிவு!

 Status 407

சூரபத்மன் என்னும் அரக்கனின் அட்டகாசங்கள் எல்லை மீற, அவனது கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டி சிவன் முருகனைப் படைத்தார். அன்னை பார்வதி முருகனுக்கு ஒரு வேலினை அளித்தாள். தனது சக்தியை அதில் உருவேற்றி,  அதனை முருகனுக்கு ஆயுதமாக அளித்தாள். முருகனும் அந்த வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்தார்சூரபத்மனை அழித்தார். தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மரமாக மாறினான். முருகன் அந்த மரத்தை தனது வேல் கொண்டு இரண்டாகப்  பிளந்தார். அராஜகம் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இந்த உண்மையைத்தான் சூரசம்கார நிகழ்வு நமக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கிறது. எனவே அராஜகத்தின் உச்சக்கட்டம் அழிவுதான் என்பதை நாம் நன்கு உணர வேண்டும்

Victory King (VK)

Thursday, November 19, 2020

சர்வதேச ஆண்கள் தினம்!

 Status 406

சர்வதேச ஆண்கள் தினமாகிய இன்று நாம்

"அன்போடும் பண்போடும் பழகுவோம்

ஆணவத்தை தலைதூக்க விடமாட்டோம்

இயல்பாக வாழ்வோம்

ஈகோவை விரட்டுவோம்

உறவுகளை மதிப்போம்

ஊர் மெச்ச வாழ்வோம்

எதிரிகளை அண்ட விடோம்

ஏமாற்றாமலும் ஏ மாறாமலும் இருப்போம்

ஐய்ய உணர்வை மனதில் கொள்வோம்

ஒற்றுமைக்கு பாடுபடுவோம்

ஓரவஞ்சனை செய்யோம்

ஒளவை வாக்கை மதிப்போம்

அஃதே நாம் பிறந்த பிறவியின் இலக்கு"

என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்

Victory King (VK)

Wednesday, November 18, 2020

பண்போடு வாழ்வோமே!

 Status 405

நமக்கு அதிகாரம் பலம் இருக்கிறது நாம் எதை செய்தாலும் சாதித்துவிடலாம் என்ற ஆணவத்தில் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்வதும் பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் இருப்பதும் கேட்டாலும் அதற்கான உரிய மதிப்பை கொடுக்காமல் இருப்பதும் தொலைபேசியில் அழைத்தாலும் பதில் அளிக்காமல் இருப்பதுடன் அதற்கான ஒரு தார்மீக பயம் இல்லாமல் செயல்படுவது இவைகள் அனைத்தும் ஒரு பண்பற்ற செயல். எனவே நாம் சரியாக இருந்தால்தான் நம்மைப் பின்பற்றுபவர்கள், சரியாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து, அராஜகம் நிலைக்காது ஆணவம் அழிவைத்தான் கொடுக்கும் என்பதை நன்கு உணர்ந்து, மனசாட்சிக்கு மதிப்பளித்து பண்போடு வாழ்வோமே. குறிப்பாக இளையதலைமுறையினர் இதை நன்கு உணர வேண்டும்.

Victory King (VK)

Tuesday, November 17, 2020

மனம்போல் வசந்தம்!

 Status 404

மரணத்திற்குப் பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம்.எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

ரமண மகரிஷி

எனவே நிகழ்காலத்தில் நம் கடமைகளைச் செவ்வனே செய்து நடப்பவைகளை மகிழ்வுடன் ஏற்று வாழ்க்கையை வசந்தம் ஆக்கி வாழ்ந்தால் எதிர்காலமும் நம் மனம்போல் வசந்தம் ஆகவே அமையும்.

Victory King (VK)

Monday, November 16, 2020

வாதமும் வெற்றி தோல்வியும்!

 Status 403

வாதத்தில் தோற்றவன் அவதூறை கையில் எடுக்கிறான்.

சாக்ரட்டீஸ்

தன் குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமலும் அதையே நியாயப்படுத்தியும் பேசிக் கொண்டிருப்பவன் தன் அறிவை இழக்கிறான். மனசாட்சியை கொல்கிறான். அதன் பலன் மூர்க்க குணம் தலைவிரித்தாடுகிறது. நாவினால் அடுத்தவரை சாடுகிறான். செயலினால் அடுத்தவரை அழிக்க நினைக்கிறான். முடிவில் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். எனவே நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து  ‘நா’ நயத்துடன் நியாயத்தின் பக்கம் நின்று சொல்லிலும் செயலிலும் நம் பண்பை காப்பாற்றி ஆத்ம திருப்தியோடு வாழ்வோம்.

Victory King (VK)

Saturday, November 14, 2020

பிரார்த்தனையும் பொறுமையும்!

 Status 401

பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்!

புத்தர்

சாவி இல்லாத பூட்டை எப்படித் தயாரிக்க மாட்டார்களோ அதுபோல்தான் இறைவன் நமக்கு தீர்வு இல்லாத பிரச்சனைகளை கொடுக்க மாட்டார். எனவே பிரச்சனைகளைக் கண்டு கலங்காமல் இறைவனை பொறுமையுடன் பிரார்த்தித்து வந்தால் பிரச்சனைக்கான தீர்வு நமக்கு வந்தே தீரும். இறைவன் தீயவர்களை ஓடவிட்டு அழிப்பார். நல்லவர்களை நடக்கவிட்டு அருள்புரிவார். நம்புவோம் நலமுடன் வாழ்வோம்

Victory King (VK)

Friday, November 13, 2020

தீபாவளி நல்வாழ்த்துகள்!

 Status 400

உற்றார் உறவினர் சுற்றம் சூழ ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ந்து இந்த தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்றாலும் நாம் இருக்கும் இடத்திலேயே இருப்பவர்களுடன் இன்முகத்துடன் கலந்துரையாடி பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்வோம். அத்துடன் உறவினர்களுடனும் நட்பு வட்டத்திலும் தொலைபேசி வீடியோகால் மூலம் நலம் விசாரித்து வாழ்த்துகளை பரிமாறி மகிழ்வோம். புத்தாடை உடுத்தி வித விதமான இனிப்பு கார வகைகளை உண்டு மகிழ்ந்து இறை ஆசியையும் பெரியோர்களின் ஆசியையும் பெற்று பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்தி ஆனந்தமாய் இந்த தீபாவளியை கொண்டாட மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Victory King (VK)

Thursday, November 12, 2020

வெற்றிக்கனி!

 Status - 399

எல்லோரும் செல்கிறார்களே என்று அவர்களைத் தொடர்ந்து நீங்களும் செல்வதை நிறுத்துங்கள். உங்களுக்கான நல்லதோர் பாதையைத் தேர்ந்தெடுங்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் உங்களுக்கு வேண்டியதை நீங்களே முடிவு செய்யுங்கள். அதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி  தளர்வடையாமல் முயன்று வெற்றி கிட்டும் வரை ஓயாமல் உழையுங்கள். மற்றவர்கள் நம்மைக் கண்டு வியக்கும் அளவுக்கு நாம் உயர்வது நிச்சயம். அனைத்துக்கும் வேண்டியது மன உறுதி ஒன்றே.

Victory King (VK) 

Wednesday, November 11, 2020

கீதாச்சாரம்!

Status-398

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோஅது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோஅது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையதாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

- கீதாச்சாரம்.

எனவே நாம் கவலையை மறந்து கடமையை செய்து கருணை நெஞ்சத்துடன் வாழ்க்கையைத் தொடர்ந்தால் நலமான வாழ்க்கை நம்மை வந்து அடையும்.

Victory King (VK)



Tuesday, November 10, 2020

வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம்!

 Status 397

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித் தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்.

கிருஷ்ண பரமாத்மா

அடுத்தவன் எப்போது வீழ்வான் சந்தர்ப்பம் பார்த்து அவனை அழித்து சொத்துக்களை அபகரிக்கலாம் என்று காத்திருக்கும் துரோகிகளுக்கு நாம் இடம் கொடுக்காமல் அவனது துரோகச் செயலை அவ்வப்பொழுது களையெடுத்து நம்மை நாம் உயர்த்திக் கொண்டே சென்று அவனை கலங்க வைத்து தலை குனிய வைத்து நாம் தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டுவோம். மனதில் உறுதி இருந்தால் அனைத்தும் சாத்தியமே.

Victory King (VK)

Monday, November 9, 2020

மானிடப் பிறவியின் பயன்!

 Status 396

துரோகம் செய்பவர்களிடம் கோபம் இருக்காது. கோபம் இருப்பவர்களிடம் துரோகம் இருக்காது.

சாணக்கியர்

துரோகம் செய்பவர்கள் அனைவருமே மிருக குணம் படைத்த மனித ஜென்மங்கள். அவர்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்த இயலாத ஜடங்கள். சுயநலவாதிகளுக்கு தாம் செய்வது தவறு என்று உணரும் சக்தி இருந்தால் தானே மற்ற உணர்ச்சிகள் வேலை செய்யும். ஆனால் தவறு எது நியாயம் எது என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவர்கள் அநியாயத்தைக் கண்டும் துரோகத்தை கண்டும் மனம் பொறுக்காமல் பொங்கி எழுவார்கள். எனவே நாம் எடுத்த பெருமைமிகு மானிட ஜன்மத்தில் நியாயத்தின் பக்கம் நின்று தலை நிமிர்ந்து வாழ்வோம்.

Victory King (VK)

Sunday, November 8, 2020

உண்மை, அன்பு, பண்பு, அடக்கம்!

 Status 395

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.

உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்.

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்.

கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள்

உண்மை அன்பு பண்பு அடக்கம் இவைகளை நாம் செயல் வடிவில் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனுடைய மதிப்பு நம் வாழ்நாள் முழுவதும் ஏன் வாழ் நாளுக்குப் பிறகும் நிலைத்து நின்று நம் புகழ் பாடுவதோடு நம் குடும்பத்தையும் மகிழ வைத்து வழிநடத்திச் செல்லும். நாமும் கடைபிடித்து நலம் பெறுவோமே!

Victory King (VK)

Saturday, November 7, 2020

பிறப்பும் இறப்பும்!

 Status 394

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நாம் இன்பம் துன்பம், விருப்பு வெறுப்பு, சுகம் சோகம், பாசம் பகைமை, நல்லவை தீயவை, லாபம் நஷ்டம், சினேகம் குரோதம் அனைத்தையும் சந்தித்துத்தான் நம் வாழ்க்கை படகில் பயணிக்கிறோம். இதில் ஒருவர் இறந்த பிறகு ஒரு அன்னப் பறவை பாலுடன் கலந்த தண்ணீரை விலக்கி பாலை மட்டும் பருகுவது போல் அவர்களுடைய நல்லவைகளை மட்டும் நினைவில் கொண்டு அவர்களின் புகழை பறைசாற்றுவது தான் பண்பு. அதை விடுத்து இறந்த பிறகும் அவர்களுடைய தீயவைகளை மட்டும்  மனதிற்கொண்டு அதை அப்படியே வம்சாவழிகளுக்கும் பரப்பி அவர்கள் வாழ்க்கையையும் சூனியம் ஆக்காமல் வாழப் பழகுவோம்.

Victory King (VK)

Friday, November 6, 2020

நல்லதையே நினைப்போம், நலமாக வாழ்வோம்!

 Status 393 

பழுத்துக் கனிந்த பழம் தரையில் விழுந்துதான் தீர வேண்டும். அதுபோல் பூமியில் பிறந்த மனிதனும் இறந்துதான் ஆக வேண்டும் இறப்பது நிச்சயம், இருப்பது நிச்சயமில்லை. 

- ஸ்ரீ ராமர்

அடுத்த நிமிடம் நாம் இருப்போமா இல்லையா என்பதே தெரியாத நிலையில் நம்மிடம் போட்டி பொறாமை குரோதம் அடுத்தவனை அழித்து பிழைத்தல் போன்ற கொடூர குணங்களால் நாம் இறந்த பிறகு நம்  வம்சத்திற்குத் தான் அழிவு என்பதையும் உணராமல் வாழ்ந்து தான் என்ன பயன். நாம் உயிரோடு இருக்கும் நிமிடம்வரை நல்லவற்றையே நினைத்து நன்மைகளையே செய்து நலமாக வாழ்வோமே!

Victory King (VK)

Thursday, November 5, 2020

நன்மைகள் நம்மைத் தேடி வர!

 Status - 392

நீ பிறரிடம் எதிர்பார்க்கும் அன்பு, மரியாதை போன்றவற்றை பிறர் எதிர்பார்க்கும் முன்னர் கொடுப்பாயேயானால் உனக்கானது உன்னைத் தேடி வரும்.

- கிருஷ்ண பரமாத்மா 

நாம் பிறரிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதனை நாம் பிறருக்குக் கொடுத்து கடைபிடித்தால் வாழ்க்கையில் நன்மைகள் நம்மைத் தேடி தானே வரும். எனவே, நம் வாழ்க்கையில் நன்மைகளையே செய்து நலம் பெறுவோமே!

- Victory King (VK)


Wednesday, November 4, 2020

அஞ்சுவதற்கு அஞ்சுவோமே!

 Status 391

அஞ்சக்கூடாது விடயங்களுக்கு அஞ்சுபவர்களும் அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாதவர்களும் தீய பாதையில் செல்கிறவராகிறார்கள்.

புத்தர்

பொய் சொல்வதற்கு அஞ்சவேண்டும், அடுத்தவர்களுக்கு தீங்கிழைப்பதற்கு அஞ்சவேண்டும், அடுத்தவனை அழித்து தாம் மட்டும் வாழ எண்ணுவதற்கு அஞ்ச வேண்டும். இதையெல்லாம் விடுத்து தாம் செய்த செயல்களுக்கெல்லாம் தண்டனையை அனுபவிக்கும் பொழுது உயிருக்கு பயந்து அஞ்சுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படி அஞ்சுவதும் ஒரு சுயநலம்தான். எனவே நாம் வாழும் பொழுது அஞ்ச வேண்டிய விஷயத்திற்கு அஞ்சி வாழ்ந்தால் நாம் அமைதியுடன் நலமாக வாழலாம்.

Victory King (VK)

Tuesday, November 3, 2020

உண்மையும் பொய்யும்!

 Status 390

நீங்கள் எதை வேண்டுமானாலும் மறைத்துவிட முடியும்; ஆனால், உண்மையை மறைப்பது என்பது முடியாத காரியம். உண்மை என்பது சூரிய சந்திரர்களை போன்றது; அழிவில்லாதது, மறைக்க முடியாதது. வாழ்வில் உண்மையை கடைபிடிக்க முயலுங்கள், உண்மையாக இருக்க முயற்சியுங்கள்.

புத்தர்

உண்மை எப்பொழுதும் நிலைத்து நிற்பது. உண்மை பேசுபவர்களிடம் எந்த சந்தர்ப்பத்திலும் தடுமாற்றம் இருக்காது. பொய் பேசுபவர்கள் பொய்க்கு மேல் பொய்க்கு மேல் பேசிக்கொண்டே அவர்களுடைய வாழ்க்கையே பொய்யாகிவிடும். கடைசியில் அவர்கள் பேசும் பொய்யே அவர்களுடைய முகத்திரையை கிழிக்கும் ஆயுதமாக மாறிவிடும். எனவே எனவே உண்மையே பேசி நன்மைகளையே செய்து நலமாக வாழ்வோம்

Victory King (VK)

Monday, November 2, 2020

நலமாக வாழும் வழி!

 Status 389

ஆகாயத்திற்கு சென்றாலும், நடுக் கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளிலிருந்து தப்பவே முடியாது.

புத்தர்

தீய எண்ணம் தீய செயல் அதில் காணும் சுகம் அனைத்துமே ஒருவருடைய அழிவு காலத்தை உணர்த்தும் முன்னெச்சரிக்கையே. அதையும் தாண்டி தீய செயல்களை தொடர்பவர்கள் வாழ்க்கை நரகமாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதனை உணர்ந்து நம்மை நாம் காத்துக் கொள்வோம். நலமாக வாழ்வோம்.

Victory King (VK)

Sunday, November 1, 2020

தண்டனையில் இருந்து தப்ப முடியாது!

 Status 388

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.

புத்தர்

அடுத்தவர்களுக்கு தீங்கு இழைத்து அவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து சந்தோஷப்படுபவர்கள், அதேபோல் தமக்கும் அந்த நிலை வரும் பொழுது தான் அந்த துன்பத்தின் வலியும் வேதனையும் புரியவரும். தமக்கு பக்க பலத்திற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற மமதையில் அடுத்தவர்களுக்கு தீங்கிழைப்பவர்களுக்கு ஏதோ ஒரு வடிவில் எங்கோ ஒரு இடத்தில் தண்டனைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அடுத்தவர்களுக்கு தீங்கு இழப்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

Victory King (VK)