Sunday, January 31, 2021

பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வோம்!

 Status 2021 (31)

பெற்றோர்கள் தம் பிள்ளைகளை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அன்போடும், பண்போடும், போற்றியும், அரவணைத்தும் வளர்த்தால் அவர்களுக்கு பொறுப்பு  தானாகவே வரும். ஆனால் கடிவாளம் மட்டும் நம் கையில் இருக்க வேண்டும். இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரை போல்தான் நிலைமை மாறிவிடும். எனவே நாம் நம் பிள்ளைகளை கனிவோடும் கண்டிப்போடும் வளர்த்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவோம்!

Victory King (VK)

Saturday, January 30, 2021

My Life is My Message

 Status 2021 (30)

"My life is my message"  - மகாத்மா காந்தியடிகள்.

நாம் இருக்கும் பொழுதும் சரி, இறந்த பிறகும் சரி நாம் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். மற்றவர்கள் நம்மை நேரடியாக தூற்றாவிட்டாலும் மறைந்த பிறகு தூற்றும் அளவிற்கு வாழாமல், போற்றும் அளவிற்கு வாழ்ந்து,வாழ்ந்தால் அவர் போல் வாழவேண்டும் என்று வாயார வாழ்த்ததும் அளவிற்கு நம் வாழ்க்கை அமைய வேண்டும். எனவே மகாத்மா காந்தி அடிகளின் நினைவு நாளான இன்று நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு வாழ்ந்து காட்டுவோம்

Victory King (VK)

Friday, January 29, 2021

எண்ணம், சொல், செயல்!

 Status 2021 (29)

தூய இதயம் கொண்டவர்களிடம்தான் எண்ணத் தூய்மையும் இருக்கும். எண்ணத் தூய்மை இருப்பவர்களிடம்தான் சொல்லிலும் செயலிலும் நேர்மையும் நேர்த்தியும் இருக்கும். எந்த செயலில் ஈடுபட்டாலும் எண்ணியது எண்ணியபடியே நடந்து வெற்றியைக் கொடுக்கும். ஆனால் தீய எண்ணங்களிலிருந்து வெளிப்படும் தீய வாா்த்தைகளும் தீய செயல்களும் ஒருவருக்கு நன்மை பயப்பதுபோலத் தோன்றினாலும் அவை முடிவில் துன்பத்தையே தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எண்ணம் ஆணையிட்டால் தான் உடல் உறுப்புகள் நமக்கு செவ்வனே சேவை செய்து சொல் செயல் இரண்டிலும் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும். எனவே இதனை மனதில் கொண்டு நம்மை நாமே பண்படுத்தி கொள்வோமே!

Victory King (VK)

Thursday, January 28, 2021

உதவி செய்வோம், வாழ்க்கையில் உயர்வோம்!

 Status 2021 (28)

குடும்பத்தில் வசதி உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது, பரஸ்பரம் நட்பு வட்டத்தில் வைத்துக்கொள்வது இவையெல்லாம் தங்கள் அந்தஸ்தை நிலைநாட்டுவதற்காகத்தான். நம் குடும்பத்தில் உள்ள நம்மை விட நலிந்தோர், வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படுவோர், நமக்கு சரிசமமாக வாழ்ந்து நொடித்தவர்கள் இவர்களுக்கு கைகொடுத்து ஆறுதல் சொல்லி அரவணைத்து ஆரவாரமில்லாமல் நம்மால் முடிந்த உதவிகளை செய்வதுதான் உண்மையான நட்பிற்கும் பண்பிற்கும் அழகு. நமக்கும் இந்நிலை வரும் என்பதை நாம் நன்கு உணர்ந்து விட்டால் நாம் யாரையும் தரக்குறைவாக நினைத்து புறம் நின்று வேடிக்கை பார்க்கும் மனம் நமக்கு வராது. நிலையில்லா வாழ்க்கையை புரிந்து கொள்வோம். நலமுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Wednesday, January 27, 2021

பணம் வரும் வழியை நேர்வழியாக இருக்கட்டுமே!

 Status 2021 (27)

பணத்தால் பணத்தை வாங்கலாம், புகழை வாங்கலாம், தான் உயர மற்றவர்களை அழிக்கலாம், அடாத காரியங்களில் ஈடுபட்டு தப்பிக்கலாம். ஆனால் நம் இதயத்தையோ, நிம்மதியையோ, நாம் செய்த பாவத்திற்கான பரிகாரத்தையோ புண்ணியத்தையோ எக்காலத்திலும் பணத்தால் வாங்க முடியாது. பணம் பத்தும் செய்யும். ஆனால் அன்பையும் பண்பையும்பெற முடியாது. வாழ்வதற்கு பணம் அவசியம் தேவை. அதே பணம் தீய செயல்களுக்கு ஒரு கருவியாக இருக்கும் பொழுது அந்தப் பணமே நமக்கு விரோதி. எனவே வாழ்வாதாரத்துக்கு நேர்வழியில் பணத்தை உழைத்து பெற்று இதமான இதயத்தோடு இனிமையாக வாழ்வோமே

Victory King (VK)

Tuesday, January 26, 2021

நல்லதும் கெட்டதும்!

 Status 2021 (26)

நாம் வாழ்க்கை முழுவதுமே ஆனந்தமாக இருப்பதற்கும் அனைத்து சக்திகளையும் அனுபவிப்பதற்கும் மொத்தத்தில் இவ்வளவு காலங்கள்தான் என நமக்கு விதிக்கப்பட்ட ஒன்று. அதேபோல்தான் கஷ்டங்களை அனுபவிப்பதற்கும் வேதனையோடு வாழ்வதற்கும் பொருந்தும். எனவே நல்லவை நடக்கும் பொழுதே அதை முழுமையாக அனுபவிப்பதுதான் புத்திசாலித்தனம். இதனை நாம் நம் வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உன்னித்து பார்த்தோமானால் நமக்கே புரியும் நம் கால சுழற்சியில். எனவே நல்லவற்றை மனமுவந்து அனுபவித்து நிலைகள் மாறும் பொழுது அதனை சமாளித்து வாழப் பழகுவோம்!

Victory King (VK)



Monday, January 25, 2021

நல்லதே நினைப்போம், பொறுமை காப்போம்!

Status 2021 (24)

நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், நன்மைகளையே செய்து வந்தாலும், நம்மைத் தேடி வரும் தீவினைகளை நம்மை அழிக்க நினைக்கும் துரோகிகளின் அராஜகங்களை கண்டு மன உளைச்சலுடன் மனமுடைந்த நிலைதான் வருகிறது இந்நாட்களில். என்னதான் பிறருக்கு கேடு நினைப்பவன் கடைசியில் அழிந்தே தீருவான் என்ற  நீதியை நாம் உணர்ந்திருந்தாலும், நாம் படும் துன்பங்கள் இருந்து தப்ப முடியவில்லையே என்ற மன உளைச்சலில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழியே இல்லை. எனவே கர்மவினையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று நமக்கு நாமே ஆறுதல் அடைந்து நம்மை நாமே காத்து அமைதி பெறுவோம்.

Victory King (VK)


Sunday, January 24, 2021

இலக்கணப் பெற்றோராய் இருப்போமே!

 Status 2021 (24). 

பிறந்தது முதல் இறுதிவரை நாம் பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான். இதனைப் பெற்றோர்கள் நன்கு உணர்ந்து தம் பிள்ளைகள் வளர்ந்த நிலையிலும் உயர்ந்த நிலையிலும் அனைத்தையும் ஒன்றாக பாவித்து அவர்கள் நல்வாழ்வுக்கான அறநெறிகளையும்  அறிவுரைகளையும் பண்புகளையும் சிறிதும் தயங்காமல் கூறியும், அந்தந்த நிலையில் பெற்றோர்களாய், நண்பர்களாய், சிறந்த ஆசானாய் இருந்து வளர்க்கும் பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் புகழ்பட வாழவேண்டும். இப்படி ஒரு நிலையை நாம் உருவாக்கும் பொழுது நம் குடும்பம் ஒரு மகிழ்ச்சி பொங்கும் அமைதிப் பூங்காவாக விளஙகும்.

Victory King (VK)

Saturday, January 23, 2021

இங்கிதமாகப் பழகுவோம்!

 Status 2021 (23)

நமக்கு பிடிக்காத விஷயங்களை மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும், மற்றவர்களுக்கு நாம் பேசுவது பிடிக்காத போதும் அமைதி காத்தலாலும், அல்லது பேச்சை மாற்று திசைக்கு திருப்பி பேசுதலாலும் உறவுகள்/நட்புகள் இடையே இடைவெளி வருவதை தவிர்க்கலாம். நம்மைப்போல்தான் மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பது பண்பல்ல. தவறுகளை சுட்டிக் காட்டுவது மட்டும் தான் நமது எல்லை. எல்லையை தாண்டினால் நமக்கு இல்லை மதிப்பு. எனவே நமது கருத்தில் நாம் திடமாக இருப்போம். மதிப்போடு மகிழ்ந்து வாழ்வோம்.

Victory King (VK)

Friday, January 22, 2021

ஆளைப் பார்த்து எடை போட வேண்டாமே!

 Status 2021 (22)

ஆளைப் பார்த்து எடை போடாதே. ஒருவருடைய கம்பிரமான உடல் அமைப்பு, படாடோபமான ஆடை அலங்காரம், கவர்ச்சிகரமான பேச்சு, வாய்ச்சவடால் இவைகளை நம்பி அவர் வசம் நாம் விழுந்தால் கடைசியில் அவர்களால் நாம் ஏமாற்றப்படும் பொழுது வேதனைதான் மிஞ்சும். ஒருவருடைய திறமையையும் அறிவாற்றலையும் அறியாது அவருடைய தன்னடக்கத்தையும் அவர் அணிந்திருக்கும் எளிமையான உடைகளையும் எளிமையான பேச்சையும் பார்த்து நாம் அவரை எடை குறைவாக நினைத்து ஒரு நிலையில் உண்மையை உணரும் பொழுது நமக்கு வெட்கப்பட்டு வேதனைப்படும் நிலைதான் வரும். எனவே நாம் வெளிப்பகட்டை நம்பி மயங்காமல் உண்மை நிலை உணர்ந்து பண்போடு பழகி பரவசமாக வாழ்வோமே!

Victory King (VK)

Thursday, January 21, 2021

எண்ணியதை எண்ணியவுடன் செய்துவிடவும்!

 Status 2021 (21)

நாம் ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்தால் எண்ணிய உடனேயே செய்ய வேண்டும். ஏனெனில் கொஞ்சம் தாமதித்தாலும் இடர்பாடுகளும் வரலாம்.  எண்ணங்கள் மாறலாம். அதுபோல் நாம் ஒரு நல்ல விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது நம் ஆழ்மனதில் இருந்து அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். ஏதோ சம்பிரதாயத்திற்காக கூறுவதும் ஒன்றுதான் கூறாமல் இருப்பதும் ஒன்றுதான். அப்பொழுதுதான் மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் பொழுதும் அவர்கள் ஆழ் மனதிலிருந்து வரும். நாவிலிருந்து வருவது பெரும் சம்பிரதாயமே. உறவுகளின் வலிமையும் நட்பின் ஆழமும் நன்கு உணர்ந்தவர்களால் மட்டுமே இதனை நன்கு புரிந்து கொள்ள முடியும். உறவுகளின் அருமையை புரிந்து நடப்போம். புன்னகையோடு வாழ்வோம்.

Victory King (VK)

Wednesday, January 20, 2021

அங்கீகாரம்!

 Status 2021 (20)

நண்பர்கள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும் ஒருவருக்கு ஒருவர் சமயங்களில் உதவிகள் செய்து செய்து கொள்வதில் தப்பில்லை. எதற்கும் ஒரு எல்லை உண்டு. உதவி என்ற பெயரில் நமக்கு வேண்டிய பொழுதெல்லாம் அதை எதிர்பார்த்தால் நமக்கும் நட்புக்கும் உறவுக்கும் இடையில் ஒரு இடைவெளி வரத்தான் செய்யும். உதவிகளை அன்போடும் பண்போடும் பகிர்ந்து கொள்வது தான் நாகரீகம். இதை உணர்ந்து நாம் நடந்தால் நமக்கு கிடைக்கும் உரிய அங்கீகாரம்.

Victory King (VK)

Tuesday, January 19, 2021

வாழத்தானே பிறந்தோம், வாழ்ந்துத்தான் பார்த்து விடுவோமே!

 Status 2021 (19)

நாம் வாழத்தான் பிறந்தோம். வாழ்க்கையில் பல இன்னல்கள் இடர்பாடுகள் வரத்தான் செய்யும். அப்பொழுது கவலைப்படுவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை.ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் -கவலையால் எதையும் தடுத்துவிட முடியாது.  எதையும் மாற்றிவிட முடியாது. கவலை எதற்கும் மாற்றாகிவிடாது. அமைதியாக சிந்தித்து அதிலிருந்து விடுபட முயன்றால் ஏதாவது ஒருவிதத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். ஒரு பழமொழி உண்டு, "நம் தலைக்கு மேலே பறக்கும் பறவையை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அது நம் தலையில் கூடு கட்டாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்". அதுபோல கவலைகள் வரும் பொழுது அமைதியாக சிந்தித்து அதற்கான விடையைக் காண வேண்டும். கவலையில் இருந்து நாம் விடுபட இதை முயற்சிப்போமே!

Victory King (VK)

Monday, January 18, 2021

தர்மம் தலை காக்கும்!

Status 2021 (18)

தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்,  மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும், நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்.நல்லவர் என்றும் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு. கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள்

இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும்  புராணங்களில் நிரூபணமான ஒன்று.

தர்மமும் உண்மையும் ஒன்றுக்கொன்று இணை பிரியாது. உள்ளத்தில் உண்மை இருந்தால் தான் தர்ம சிந்தனையே வரும். உள்ளம் ஆணையிட்டால்தான் உடல் உறுப்புக்கள் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும்.எனவே இதனை நாம் மனதில் பதியவைத்து உள்ளத்திலே உண்மைக்கு மட்டும் இருப்பிடம் தந்து பொய்யான பாவ காரியங்களை உள்ளே அனுமதிக்காமல் வாழ்ந்து நம்மையும் நம் தலைமுறையையும் காப்போம்!

Victory King (VK)

Sunday, January 17, 2021

மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவோம்!

 Status 2021 (17)

நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது நாம் சிந்திக்கும் திறனையும் செயல்திறனையும் இழக்கிறோம். சக்தியை இழக்கிறோம். அதனால் நமது உடல் மேலும் மேலும் பலவீனமாகி எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. இந்த சமயங்களில் நிதானமாக அமர்ந்து நமது பழைய கால நினைவுகளை அசை போடும் பொழுது அந்த நினைவலைகளில் ஐக்கியமாகி உற்சாகத் தன்மை ஏற்பட்டு மகிழலாம் அல்லது நமக்கு பிடித்த ஏதோ ஒரு விஷயத்தில் ஈடுபட்டு அதில் அதிக கவனம் செலுத்தலாம். உளமார்ந்த உறவுகளுடனோ நட்பு வட்டங்களுடனோ உரையாடி மனதை திசையில் மாற்ற முயற்சிக்கலாம். தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தால் மன அழுத்தம் மேலும் மேலும் தான் அதிகமாகவே தவிர விடை கிடைக்காது.எனவே ஏதாவது ஒரு விதத்தில் நம்மை நாம் மன அழுத்தத்தில் இருந்து வெளியேற முயற்சித்து உடல் நலத்தை பேணி காப்போம்.

Victory King (VK)

Saturday, January 16, 2021

வெற்றி நம்மைத் தேடி வர!

 Status 2021 (16)

நேரம் தவறாமை, தூய்மையான கண்ணியமான உடை அணிதல், தனக்குத் தெரிந்ததைஎல்லாம் பேசுவதைவிட தேவையானதை மட்டும் பேசுதல், மற்றவர்கள் கூறுவதை இடை மறிக்காமல் கூர்மையாகக் கவனித்து அதிலுள்ள உண்மைகளே மனதில் ஆழப் பதிய வைத்தல், தன்னைப்பற்றி தானே பெருமைப் படுத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் பெருமைப்படும் அளவிற்கு நடந்து கொள்ளுதல், தம் உழைப்பால் மட்டுமே முன்னேற முயற்சித்தல், நேர்வழியில் சிந்தித்தல், இலக்கை அடையும் வரை முயற்சியை கைவிடாதிருத்தல், உற்றார் உறவினர்களுக்கும் வயதில் மூத்தவர் களுக்கும் உரிய மரியாதையை கொடுத்தல், செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து செயல்படுதல் இவை அனைத்தையும் நாம் கடைப்பிடித்தால் வெற்றி நம்மை தேடி தானே வரும்.

Victory King(VK)

Friday, January 15, 2021

எண்ணம் போல் வாழ்க்கை!

 Status 2021 (15)

ஒரு மனிதனை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்வது அவனுடைய எண்ணம் தான். ‘எண்ணம் போல் வாழ்க்கை’. நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். நம் எண்ணம்தான் நம் வாழ்க்கையை மேலே எடுத்துச் செல்லும். கீழேயும் தள்ளிவிடும். ஆகவே, நம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும் நேர்மறையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.எண்ணங்கள் நல்லதாக, புதியதாக தோன்றிக்கொண்டே இருக்க வேண்டுமே தவிர, குறுக்கு வழியையும், கெட்ட வழியையும் என்றும் சிந்திக்க கூடாது. எண்ணம் போல் எல்லாம் நடக்கும் எதுவும் தப்பாது நாம் நல்லதையே நினைக்கும் வரை.

Victory King (VK)

Thursday, January 14, 2021

நல்லதையே நினைப்போம்; நல்லவற்றையே செய்வோம்!


 Status 2021 (14)

நல்ல உள்ளங்கள் நலமுடன் வாழ எப்பொழுதும் நமக்கு ஆசி வழங்கி வரும் காஞ்சி மகாபெரியவர் அருள் மென்மேலும் கிடைக்கப்பெற்று நல்லவைகளை பார்ப்போம் நல்லவைகளையே கேட்போம். அனைவருக்கும் நன்மையே செய்வோம் என்று இந்த மகர மாதத்தில் சூரிய பகவான் அணுகிரகத்தோடு சபதம் எடுத்து வாழ்ந்து நம் வாழ்வை சோலைவனமாக மாற்றுவோம். மகாபெரியவரை மனதார தினமும் வணங்கினால் அனைத்து நலன்களையும் பெறுவோம்.

Victory King (VK)

Wednesday, January 13, 2021

தைப் பொங்கல் வாழ்த்துகள்!

 Status 2021 (13)

இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் மகரத்தில் பிரவேசிக்கும் சூரிய பகவானை மனதார வணங்கி அவர் அருள் பெற்று வீட்டில் அடுப்பில் பால் பொங்கட்டும். நம் அனைவரது உள்ளங்களிலும் மட்டற்ற மகிழ்ச்சி நிலைத்து நிற்கட்டும்.  உறவுகளோடு இதயங்கள் இணைந்து களிப்படையட்டும். பாசப் பிணைப்புகள் பெருகி வளரட்டும். பட்ட துன்பங்கள் நம்மை விட்டு விலகட்டும். பாவிகளின் பார்வை நம் மீது படாது இருக்கட்டும். நேர்மை நம்மை விட்டு விலகாது இருக்கட்டும். மொத்தத்தில் தைப்பொங்கல் திருநாள் நம் வீட்டில் குதூகலத்துடன் துள்ளி விளையாடட்டும். மென்மேலும் நம் நட்புணர்வு தொடர்ந்து மகிழ்ச்சியை சுவாசித்து சூரிய பகவானின் அருள் பெற்று அனைவருக்கும் தித்திக்கும் திருநாளாம் இந்த தைப்பொங்கல் திருநாள் இனிதாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Victory King (VK)

Tuesday, January 12, 2021

பார்த்துப் பழகுவோம்!

 Status 2021 (12) 

நாம் நம் வாழ்க்கையில் சந்திக்க கூடாதவர்கள்: நம்முடன் இருந்தே நயவஞ்சகம் செய்பவர்கள், நம்மை பற்றி புறம் பேசுபவர்கள், மனிதத் தன்மையே சிறிதும் இல்லாத சுயநலக்காரர்கள். இவர்களெல்லாம் ஆறறிவு இருந்தும் அறிவில்லாதவர்கள் படித்திருந்தும் பண்பு இல்லாதவர்கள். இப்படிப்பட்ட அற்ப குணங்களை உடையவர்களை நாம் சந்திக்காமலிருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம். அப்படியே சந்திக்க நேர்ந்தாலும் அவர்களுக்காக நாம் நம்மை வருத்திக் கொள்வதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை. எனவே இப்படிப்பட்டவர்களை ஒரு ஜட ஜந்துவாக நினைத்து நம் மனதில் இருந்தே புறக்கணித்து நம்மை நாம் காத்துக் கொண்டு மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வோம்.

Victory King (VK)

Monday, January 11, 2021

செய்யும் தொழிலே தெய்வம்!

 Status 2021 (11)

எதுவுமே எளிதில் கிடைத்து விட்டால் அதன் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக ஒரு வேலையைத் தேடி செல்லும்பொழுது அது நமக்கு உடனே கிடைத்துவிட்டால் அது நம்முடைய தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்த ஒன்று என்று நினைத்து பெருமைப்பட்டு அதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நாம் மென்மேலும் உயரலாம். அதை விடுத்து தன் திறமைக்கு அந்த வேலையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற  இறுமாப்பில் இருந்தால் அந்த வேலையில் முழு ஈடுபாடு இருக்காது. அதன் விளைவு வேலையில் கவனம் சிதறி வேலை கொடுத்தவரை குறை கூறிக்கொண்டு தன் வேலையை மாற்றி மாற்றி கொண்டே செல்ல நேரிடும். எனவே செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மனதில் கொண்டு எடுத்த வேலையை ஈடுபாட்டுடன் செய்து மனத்திருப்தியுடனும் மகிழ்வுடனும் வாழ்வோமே!

Victory King (VK)

Sunday, January 10, 2021

நேர்வழியே நல்வழி!

 Status 2021 (11)

பணத்தை தேடி நாம் ஓடக்கூடாது. பணம் நம்மைத் தேடி வர வேண்டும். எப்படி என்றால் நம் தகுதிக்கும் சக்திக்கும் ஏற்ப நம் உழைப்பால் நமக்கு கிடைப்பது தான். பணத்தைத் தேடி நாம் ஓடினால் அது நம்மை பல குறுக்கு வழிகளில் இழுத்து சென்று பணத்தைப் பலவழிகளில் நம் கண்களுக்கு காண்பித்தது பேராசையை தூண்டி பணமேதான் உலகம் என்று நம்மை அழைத்துச்சென்று கடைசியில் படுகுழியில் தள்ளிவிடும். வாழ்வே நாசமாகிவிடும். எனவே நம் திறமையால் உழைப்பால் நேர் வழியில் கிடைக்கும் பணம் தான் நம்மை தேடி வரும் பணம். நேர்வழியே நம் வழி நிலைத்து நிற்போம் அவ்வழியில்.

Victory King (VK)

Saturday, January 9, 2021

நியாயமான ஆசைகள்!

 Status 2021 (10)

கண்களாலும் காதுகளாலும் ஈர்க்கப்பட்டு உள்ளத்தால் உந்தப்பட்டு மனதில் தேங்கி இருப்பதை தேடுவது தான் ஆசை. பிறந்தது முதல் இறக்கும்வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலையிலும் இந்த ஆசை இருந்து கொண்டுதான் இருக்கும். அனைத்திற்கும்ஆசைப்படு என்று டாக்டர் அப்துல் கலாம் கூறியது போல அனைத்திற்கும் ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நம் தகுதிக்கும் சக்திக்கும் உட்பட்டதாக இருந்து நம் முயற்சியில் நியாயமான முறையில் நாம் தேடும் பொழுது நமது ஆசை நிச்சயமாக நிறைவேறும். அப்படி நமது ஆசை நிறைவேறும் பொழுது அது நம் உடலுக்கு ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் மனோபலத்தையும் கொடுத்து நமது வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும்

Victory King (VK)

Friday, January 8, 2021

அன்பும் பண்பும்!

 Status 2021 (9)

பெற்றோர் உற்றார் உறவினர் போதுமான வசதி நல்ல கல்வி இவை அனைத்தும் இருந்தும் நமக்குக் கிடைக்கக்கூடிய அன்பும் பாசமும் கிடைக்காத நிலையிலும் குடும்பத்தில் தம்மை பாரபட்சமாக நடத்தும் நிலையிலும் அன்பிற்கும் பண்பிற்கும் ஏங்கும் இதயம் வெற்றிடமாக இருக்கும் நிலையில் நாமும் ஒரு அனாதையே. நமக்குப் போதுமான வருமானம் இருந்தும் நாம் போற்றி போற்றி வளர்த்த பிள்ளைகள் நம்மை வயதான காலத்தில் ஒரு தேவையற்ற பொருள் என்று கருதும் நிலையிலும் நாம் ஒரு அனாதையே. எனவே பணம் பொருள் சமூக அந்தஸ்து புகழ் இவைகள் அனைத்தையும் விட  அன்பிற்கும் பண்பிற்கும் ஏங்கும் நம் வெற்றிடமான இதயத்தை அன்பினாலும் பாசத்தினாலும் நிரப்பி நம்மை மகிழ்வித்தாலே போதும்.

Victory King (VK)

Thursday, January 7, 2021

யாரையும் குறைவாக எண்ண வேண்டாமே!

 Status 2021 (8)

யாரையும் தரக் குறைவாக எடை போட வேண்டாம். அடுத்தவர் அமைதியாக இருக்கிறார் என்று ஆட்டம் போட வேண்டாம். அடுத்தவர் அமைதியாக இருக்கிறார் என்றால் நீங்கள் கூறுவதையும் உங்கள் செயலையும் பொறுமையாக கவனித்து தக்க பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமாகிறார் என்று புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு எதிரடி கொடுக்கும் பொழுது நீங்கள் தாங்க மாட்டீர்கள். தான் தான் புத்திசாலி என்று நினைத்து அடுத்தவனை அழிக்க நினைத்தால் அழிவு உங்களுக்குத்தான் என்பதை நன்கு உணர வேண்டும். ஆணவத்தால் அடுத்தவர்களை இகழ்ந்து பேசி இன்னல்களை விலைக்கு வாங்காமல் மகிழ்வுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Wednesday, January 6, 2021

நம் வாழ்க்கையின் அட்மின் நாமே!

 Status 2021 (7)

நமக்கு பல பிரச்சனைகள் இருக்கலாம். சோகங்கள் இருக்கலாம். மனத்தளர்ச்சி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளவேண்டும். வெளியுலகில் மற்றவர்களோடு பேசும் போதும் பழகும் போதும் நம்முடைய உள்ளுணர்வுகள் தெரியாவண்ணம் சகஜமாகவே பழக வேண்டும்.. நம்முடைய உணர்வுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு தெரியாத வரையில் மற்றவர்களுக்கும் நமக்கும் பரஸ்பரம் நேர்மறை சக்தி ஏற்படும். அதுவே உள் உணர்வுகளுக்கான மருந்தாகவும் அமையும். நம் வாழ்க்கை நம் கையில். அதை நாம் கடைப்பிடித்தால் நாம் முன்னேறுவோம் வாழ்க்கையில். நம் வாழ்க்கையின் அட்மின் நாமாக மட்டுமே இருக்க வேண்டும்.

Victory King (VK)

Tuesday, January 5, 2021

உண்மையும், பொய்யும்!

 Status 2021 (6)

பொய் இரண்டு வகைப்படும். 

ஒன்று தான் செய்த தவறை, மற்றவர்களுக்கு இழைத்த துரோகத்தை, மறைத்து பேசி அடுத்தவர்களை அழிக்கும் பாவச் செயலை செய்வது. இது நடந்த உண்மையை மறைத்துப் பேசி பித்தலாட்டம் செய்வதாகும். 

இரண்டாவது நடக்காத ஒரு செயலையே நடந்ததாக கூறுவதும் தான் செய்த ஒரு செயலை மிகவும் மிகைப்படுத்தி கூறி தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதும். இதில் உண்மை கிடையாது. மற்றவர்களுக்கும் பாதிப்பு கிடையாது. இவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அவமானப்பட்டு திருந்துவதற்கும் வாய்ப்பு உண்டு. 

ஆனால் முதலாவது ஒரு பாவச் செயல். அதற்கு தண்டனை நிச்சயமுண்டு. அவர்கள்  தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு நிலை வந்தே தீரும். . எனவே நாம் அந்த பாவச் செயலை செய்யாமலும் பாவச் செயலுக்கு துணை போகாமலும் வாழ்ந்து வாழ்க்கையில் வளம் பெறுவோம்

Victory King  (VK)

Monday, January 4, 2021

மனித நேயம் காப்போம்!

 Status 2021 (5)

பணம் பதவி புகழ் ஏழை எளியவர் என்ற பாகுபாட்டையும் தான்டி மனித நேயத்திற்கு வலிமையான ஒரு சக்தி. மனித நேயத்தோடு உதவி செய்வதற்கும் ஒருவரை பாராட்டுவதற்கும் எந்தவித தகுதியும் தேவையில்லை.  அவரவர்கள் தங்கள் எல்லையை மீறாத வரையில் மனிதநேயத்திற்கு மதிப்பு உண்டு. ஆனால் சுய நலத்திற்காக அதன் எல்லையை மீறும் பொழுது தங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக ஒரு அலுவலகத்தில் செக்யூரிட்டியிடம் அவருடைய வயதிற்கு மதிப்பு கொடுத்து சகஜமாக பேசலாம் கருணையோடு உதவலாம். நாம் ஒரு உயர் பதவியில் இருக்கும் பொழுது தன்னுடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அந்தக் கருணையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் பொழுது அங்கே மனித நேயம் மடிகிறது. எனவே இரக்க குணத்துடனும் மனிதநேயத்துடனும் உள் நோக்கமில்லாமல் உதவி செய்ய பழகுவோம்!

Victory King (VK)

Sunday, January 3, 2021

நீயும் வாழு,பிறரையும் வாழ விடு!

 Status 2021 (4)

நீயும் வாழு,பிறரையும் வாழ விடு. இதுவும் ஓர் அஹிம்சையின் தத்துவம்தான் பாவச் செயல்களின் முடிவில் துன்பம் வந்தே தீரும்.

மகாவீரர்

யார் என்ன அறிவுரை கூறினாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாது அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் தன்னுடைய சுயநலத்தை சிறிதும் விடாமல் செய்யும் பாவச் செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்கும் திருந்தாத ஜென்மங்கள் ஜடமாக இருந்தென்ன லாபம். தான் அழிவதை தன் கண் முன்னே பார்த்து மடியும் துர்பாக்கிய நிலைதான் அவர்களுக்கு வந்து சேரும். இதனை நன்கு உணர்ந்து உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி என்பதனை மனதில் கொண்டு நாமும் நலமுடன் வாழ்வோம் பிறரையும் நலமுடன் வாழ வைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

Victory King (VK)


Saturday, January 2, 2021

சுயதம்பட்டம் தவிர்ப்போமே!

 Status 2021 (3)

நம்மைப் பற்றி நாமே பெருமைப்படுவதில் அர்த்தமில்லை. செய்யும் செயல்களால் பிறர் நம்மை மதிக்க வேண்டும்.

மகாவீரர்

சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது சுயபச்சாதாபம் ஏற்படுத்துதல் இதெல்லாம் பிறர் நம்மிடம் பேசும் பொழுது மகிழ்வுடனும் கருணையுடனும் கேட்டுக் கொண்டு இருப்பது போல் தோன்றினாலும் பின்னால் நின்று நக்கல் அடிப்பார்கள். உண்மையிலேயே மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று எண்ணினால் நம் பேச்சில் நயம் இருக்க வேண்டும். செயலில் நன்மை இருக்க வேண்டும். வாக்கில் உண்மை இருக்க வேண்டும். உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் நம்மை மதிக்கும்.

Victory King (VK)

Friday, January 1, 2021

நேர்மறையாக சிந்திப்போமே!

 Status 2021(2)

எல்லோருமே மன அழுத்தம் பதட்டம், கோபம் ஆகியவற்றில் இருந்து வெளியே வர விரும்புகிறோம். அதற்குக்  காரணம், தற்போதைய வாழ்க்கை முறை நம் அனைவருக்குமே இது போல நெருக்கடியைக் கொடுக்கிறது. எனவே,  நாம் இதில் விடுபடவே  விரும்புகிறோம்.  இவற்றில் இருந்து விடுபட நினைத்தால் எதிர்மறையாக நினைப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தூர ஒதுக்கி வைக்க வேண்டும். எதிர்மறை சிந்தனையாளர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நேர்மறையாக சிந்திக்கும் சூழல் உருவாகும். நல்லதையே நினைப்போம், மன அழுத்தத்தைக் குறைப்போம், நம் உடல்நலத்தைக் காப்போம்.

Victory King (VK)