Wednesday, March 31, 2021

வெற்றியின் தாரக மந்திரம்!

Status 2021 (89)

நாம் நினைப்பது நியாயமாக இருக்க வேண்டும். அதை முடிப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும். நம்மால் முடியும் வரை அல்ல. நாம் நியாயமாக நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை. தோல்விகள் வரலாம் எதிர்ப்புகள் வரலாம். இவை எல்லாம் நம் வெற்றிப்படிகளாக நினைத்து நமது குறிக்கோள் ஒன்றே குறி என்ற நேர்கொண்ட பார்வையில் விடாது முயற்சி செய்தால் வெற்றி என்பது நமக்கு நிச்சயம் தான். நம்மால் எதுவும் முடியும் என்ற தாரக மந்திரத்தை மனதார ஏற்று வெற்றியின் உச்சியை அடைந்து பெருமை கொள்வோம்!

Victory King (VK)

Tuesday, March 30, 2021

நம்பிக்கையும் சங்கடங்களும்!

 Status 2021 (88)

நாம் ஒரு வேலையை மற்றவர்கள் ஒத்துழைப்போடு செய்ய முயலலாம். ஆனால் முழுமையாக நம்பி மற்றவர்களிடம கொடுப்பது நமக்கு தர்மசங்கடத்தைத்தான் கொடுக்கும். அதனை நாமே செய்யும்பொழுது இடர்பாடுகள் வந்தாலும் முயற்சித்து முழுமை பெற்று விடலாம். ஆனால் மற்றவர்களிடம் கொடுக்கும்பொழுது அவர்கள் நமக்கு துரோகம் செய்பவர்களாக இருந்துவிட்டால் அதுவும் நமக்குத் தெரிந்துவிட்டால் நமது மனம் சுக்குநூறாக நொறுங்கி விடும். எனவே மற்றவர்களை முழுமையாக நம்பி ஒரு செயலில் ஈடுபடாமல் நம்மால் முடிந்ததை நாமே முயற்சித்து வெற்றி பெறுவதுடன் தேவையற்ற மன வேதனையை விலை கொடுத்து வாங்காமல் இருக்கலாம்!

Victory King (VK)

Monday, March 29, 2021

தெரிந்ததும் தெரியாததும்!

 Status 2021 (87)

நமக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருந்தாலும் அதில் எவ்வளவு விஷயங்களுக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளோம் என்பதுதான் மிகவும் முக்கியமானது. அப்பொழுதுதான் நமக்கு தெரிந்து இருக்கும் விஷயங்களுக்கு ஒரு முழுமை கிடைக்கும். நமக்கும் ஒரு திருப்தி. விஷயங்கள் தெரிந்து இருந்தாலும் ஈடுபாடு வேண்டும். எந்த ஈடுபாடும் இல்லாமல் எனக்கு தெரியும் எனக்கும் தெரியும் என்று சொல்வதில் எந்த பலனும் இல்லை. நமக்கு தெரிந்திருந்தாலும் தெரியாத நிலையில் ஒரு முட்டாளாகவே திகழ்வோம். நமக்குத் தெரிந்த விஷயங்களை வெளிக்கொணரும் பொழுது தான் நமக்கும் பெருமை மற்றவர்களுக்கும் தெரியும் நம் அருமை.

Victory King (VK)

Sunday, March 28, 2021

தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்!

 Status 2021 (86) 

நாம் வாழ்க்கையில் தோல்வியைத் தழுவாமல் வெற்றியை அடைவதற்கு சிறந்த மருந்து நமது தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் விடா முயற்சியும்தான். இது சற்று கசப்பான மருந்து தான். ஆனால் வெற்றி என்பது நிச்சயம்.  கசப்பான மருந்து தான் சிறப்பான பலனைத் தரும். எனவே, முயன்று வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

Victory King (VK)

.

Saturday, March 27, 2021

உண்மையும் பொய்யும்!

 Status 2021 (85)

பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால் பொய் வாழ விடாது. உண்மை சாக விடாது.

விவேகானந்தர்

தவறு செய்வது மனித இயல்பு. தவறை நாம் உணரும் பொழுது உண்மையைச் சொல்லி நாம் மாட்டிக் கொண்டாலும் திருந்தி வாழ்வதற்கு அதுவே ஒரு மருந்தாக அமையும். ஆனால் தவறை தவறே இல்லை என்று சாதித்து தவறுக்கு மேல் தவறு செய்பவர்கள் தன் வாழ்க்கையையே பொய்யாக்கி கொள்வதுடன் தன்னைத்தானே அழித்துக் கொள்கின்றனர். எனவே உண்மைக்கு மருந்து தவறை உணர்ந்து திருந்துதல். பொய் என்பது ஒரு புரையோடிப்போன மருந்திற்கு அடங்காத புற்றுநோய் என்பதை நாம் நன்கு உணர்ந்து உண்மைக்கு உயிர் கொடுப்போம்

Victory King (VK)

Friday, March 26, 2021

சொந்த பலத்தில் முன்னேறுவோம்!

 Status 2021 (84)

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது!

கண்ணதாசன்

ஒருவர் இருக்கும் தகுதியைப் பொறுத்துதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. நலிந்தோரின் பின்னால் வலியோர் கூட்டம் ஒன்று சேர்ந்து விட்டால் நலிந்தோர் தன் பின்புல பலத்தின் தைரியத்தில் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுகிறார்கள். ஒரு நிலையில் பின்பலம் தன்னை விட்டு விலகும் பொழுது மற்றவர்களால் மிதிபட்டு சாகிறார்கள். எனவேதான் தகுதியறிந்து பழக வேண்டும் தன் பலத்தில் வாழ வேண்டும் என்பது. இல்லையேல் சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பின் நிலைதான். சிந்தித்துப் பார்ப்போம் சொந்த பலத்தில் வாழ்வோம்!

Victory King (VK)

Thursday, March 25, 2021

பிரச்சனைகளும் தீர்வுகளும்!

 Status 2021 (83)

மழை வந்துவிட்டால் பறவைகள்  அதனுடைய கூட்டிற்குள் சென்று அடைந்து விடும். ஆனால் கழுகு மட்டும் மேகத்திற்கு மேலே பறந்து தன்னை மழையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும். அதுபோல ஒரு பிரச்சனை என்று  வந்துவிட்டால் அதனை அவரவர்கள் சக்திக்கு ஏற்பவும் திறனுக்கு ஏற்பவும் செயல்பட்டு அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடவேண்டும். பறவைகளுக்கே அப்படிப்பட்ட ஞானம் இருக்கும்பொழுது ஆறறிவு பெற்ற நாம் எதனையும் முறையாக சிந்தித்து சரியான பாதையில் செயல்பட்டால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து நம்மால் விடுபட முடியும். எனவே பிரச்சனையை கண்டு முடங்காமல் சிந்திப்போம் செயல்படுவோம் வெற்றி பெறுவோம்.

Victory King (VK)

Wednesday, March 24, 2021

பண்புடன் பக்குவப்படுத்திக்கொள்வோமே!

 Status 2021 (82)

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

கண்ணதாசன்

நாம் இறந்த பிறகு நம்மோடு வருவது வீடு வறரயில்தான் உறவுகள், வீதி வரையில்தான் மனைவியும் மக்களும், காடு வரையில்தான் பிள்ளை. அதன் பிறகு நம்மோடு வருவது ஒன்றும் இல்லை. நம் நிலை பூமிக்கு அடியிலோ அல்லது எரித்த சாம்பல் ஒரு பிடியிலோ. இதனை அனைவரும் நன்கு உணர்ந்தாலும் சிலர் உயிரோடு இருக்கும் பொழுது தான் என்ற இறுமாப்பில் அடாது செய்தும் மற்றவர்களை பாடாய்படுத்தியும் அனைவரது சாபங்களையும் பெற்று இறந்த பிறகும் அனைவராலும் தூற்றப்பட்டு கேவலப் படுகிறார்கள். எனவே இதனை நாம் மனதில் ஏற்றி வாழும் பொழுதே பண்போடு வாழ்ந்து நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வோமே!

Victory King (VK)

Tuesday, March 23, 2021

நிம்மதி!

Status 2021 (81)

எதையும் யாரும் இன்னொருவருக்குக் கொடுத்துவிட முடியும். ஆனால் நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடம் இருந்து தான் பெற்றுக் கொள்ள முடியும்

கண்ணதாசன்

நிம்மதி என்பது நம் மனதைப் பொறுத்தது. இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வுடன் வாழ்வது நிம்மதி. நேர்வழியில்முயற்சி செய்து வசதி பெறுவது நிம்மதி. அடுத்தவர்களுக்கு ஆத்மார்த்தமாக உதவி செய்து உளம் மகிழ்வது நிம்மதி. குடும்பம் குழந்தைகள் உற்றார் உறவினர் ஒன்றுகூடி மகிழ்வது நிம்மதி. பெரியவர்களிடம் ஆசி பெற்று பெருமையுடன் வாழ்வதில் நிம்மதி. இறைவனிடம் சரணாகதி அடைந்து நம் குறைகளை மானசீகமாக கூறி நம் மனச்சுமையை இறக்குவது நிம்மதி. இப்படிப்பட்ட நிம்மதிகளை நம்மிடமிருந்து நாமே வாங்கி மன அமைதியை பெற்று மகிழ்வுடன் வாழ்வோமே!

Victory King (VK)

Monday, March 22, 2021

நம்பிக்கைக்கு உயிர் கொடுப்போம்!

 Status 2021 (80)

உயிரே போனாலும் நாம் நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது. நாம் இழந்ததை எல்லாம் மீட்டெடுக்கும் சக்தி நம்பிக்கைக்கு மட்டும்தான் உண்டு. எனவே என் நிலையிலும் நம் செயலில் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற்று "நம்பிக்கை"என்ற வார்த்தைக்கு உயிர் கொடுப்போம்.

Victory King (VK)

Sunday, March 21, 2021

பண்புக்கு இலக்கணம்!

 Status 2021 (79)

 பண்பிற்கு இலக்கணம் வந்தவரை வணக்கம் சொல்லி இன்முகத்தோடு வரவேற்றல், நமக்கு உதவி  செய்தோருக்கு நன்றி சொல்லல், நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டல், நமக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக் கொடுப்போர்க்கு மரியாதை கொடுத்தல், நமக்கு எவ்வளவு வயது ஆனாலும் வீட்டில் நம் மூத்தவர்களுக்கு அன்புடன் கூடிய மரியாதை கொடுத்தல், கூடா நட்பை கேடாய் நினைத்து ஒதுங்குதல், எல்லா தருணத்திலும் உண்மையே பேசி நம்மை நாமே திருத்திக்கொள்ளல். இவை அனைத்தையும் நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து சமூகத்தில் ஒரு அந்தஸ்தை பெற்று பெருமையுடன் தலைநிமிர்ந்தும் வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, March 20, 2021

திறமையும் கனவுகளும் சாத்தியமாக...

 Status 2021 (78)

உங்கள் திறமைகளின் அளவிற்கு உங்கள் கனவுகளை குறைத்துக் கொள்ளாதீர்கள். மாறாக அந்தக் கனவுகளின் அளவிற்குத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

சுவாமி விவேகானந்தர்

நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது நம் தகுதிக்கேற்ப அந்த செயலில் உச்சத்தை அடைய வேண்டும் என்று கனவு கண்டு அதற்கேற்ப நம் திறமைகளை வளர்த்துக்கொண்டால் நாம் நம் குறிக்கோளை அடைவது நிச்சயம். எனவே நாம் நம் எண்ணத்தில் மேலோங்கி திறமையை மேலும் மேலும் கூட்டி வெற்றியின் உச்சத்தை அடைவோமே!

Victory King (VK)

Friday, March 19, 2021

மனசாட்சி!

 Status 2021 (77)

மனசாட்சி உறங்கும் நேரங்களில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நம்மிடம் தார்மீக பயம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். நம் மனம் பாகன் கட்டுப்பாட்டில் இருக்கும் யானையைப் போன்றது. யானைக்கு மதம் பிடித்து விட்டால் அதற்கு பாகனும் ஒன்று தான் பாமர மக்களும் ஒன்றுதான். மிதித்து த்வம்ஸம் செய்து விடும். அதுபோல் தான் நம்மிடம் மனசாட்சி உயிரோடு இல்லை என்றால் நாம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் மிருகத் தன்மை நம்மிடம் தஞ்சமடைந்து நல்ல எண்ணங்களே நம்மிடம் இல்லாத அளவிற்கு கொண்டு சென்று அடுத்தவர்களை கெடுத்தும் அழித்தும் அதுவே பெரும் சாதனை போல் எண்ணி மகிழும் நிலைதான் நமக்கு வந்து சேரும். எனவே நாம் நம் மனசாட்சிக்கு பயந்து நல்லவற்றையே எண்ணி நல்லவற்றையே செய்து நலம் பெற வாழ்வோமே!

Victory King (VK)

Thursday, March 18, 2021

அறங்கள்!

 Status 2021 (76)

திருக்குறள் கூறும் அறங்கள்:

* அன்பாய் இருப்பது அறம்

* உண்மை இன்ப‌ம் த‌ருவ‌து அற‌ம்

* இனிமையாய்ப் பேசுவ‌து அற‌ம்

* க‌டுஞ்சொற்க‌ளைத் த‌விர்ப்ப‌து அற‌ம்

* ந‌ல்ல‌தையே நாடுவ‌து அற‌ம்

* ந‌ன்மை தராத‌வ‌ற்றைத் த‌விர்ப்ப‌து அற‌ம்

* ம‌ன‌தில் குற்ற‌ம‌ற்று இருப்ப‌து அற‌ம்

வள்ளுவர் கூறிய இத்தகைய அறங்களை வாழ்க்கையில் நாம் மேற்கொண்டு நம் வாழ்க்கையை பசுமையாக்கி உளம் மகிழ்ந்து வாழ்வோமே

Victory King (VK)

Wednesday, March 17, 2021

முயற்சியும் நம்பிக்கையும்!

 Status 2021 (75)

எந்தத் தகுதியையும் விட விடாமுயற்சி ஒன்றுதான் வெற்றிக்கு ஒரே வழி. ஆம் அனைத்தையும் வெல்லுவதற்கான தாரக மந்திரமும் விடாமுயற்சி தான். முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாமல் முயற்சி இல்லை. எனவே நாம் நம் நம்பிக்கையை கைவிடாமல் விடாமுயற்சியுடன் ஒரு செயலில் ஈடுபடும்பொழுது வெற்றி நம்மை தேடி வரும். மனசாட்சியுடனும் மனோதிடத்துடனும விடா முயற்சியுடனும் நல்ல எண்ணத்துடனும் நாம் எடுக்கும் எந்த முடிவும் வெற்றியைத் தான் கொடுக்கும். முயற்சித்து தான் பார்ப்போமே

Victory King (VK)

Tuesday, March 16, 2021

வளமான வாழ்க்கைக்கு!

 Status 2021 (74)

ஒரு பக்கம் பிறர் பொருளை நாம் நாடும் பொழுது மறுபக்கம் நம் பொருள் நம்மை அறியாமலேயே போய்விடும்

மகாவீரர்

நாம் மற்றவர்களுக்கு தீங்கிழைத்தாலும் அவர்கள் பொருளை அபகரித்தாலும் ஏதோ ஒரு நிலையில் நமக்கே அந்த தீங்கு வந்தடைவதுடன் அவர்களிடமிருந்து நாம் அபகரித்தை விட பல மடங்கு நஷ்டமும் நம்மை வந்து அடையும். நாம் அதில் இருந்து தப்பவே முடியாது. எனவே மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படாமலும் மற்றவர் வாழ்க்கையை அழிக்க முயற்சிக்காமலும் வாழ்ந்து நம் வாழ்க்கையை வளமாக வாழ முயற்சிப்போமே!

Victory King (VK)

Monday, March 15, 2021

அன்பு என்பது சிறந்த பரிசு!

Status 2021 (73)

அழகு இளமையில் தோன்றி இளமையில் முடிகிறது. ஆனால் அன்பு இளமையில் தொடங்கினாலும் அது முதுமை வரை உன் பின்னால் தொடரும்.

கிருஷ்ண பரமாத்மா

அன்பு என்பது சிறந்த பரிசு. அதை நாம் மற்றவர்களுக்கு கொடுத்தாலும் நாம் மற்றவர்களிடமிருந்து பெற்றாலும்  மகிழ்ச்சிதான். நம் மனதிற்கு புத்துணர்ச்சி கொடுப்பதும் அன்புதான். அனைவரையும் ஒருங்கிணைய வைப்பதும் அன்புதான். உறவு ச்சங்கிலியை உறுதிப்படுத்துதல் அன்புதான். குழந்தைகள் நம்மை ஈர்பதும் அன்பால்தான். எனவே உண்மையான உளமார்ந்த உள்ளன்புடன் நாமும் ஒருங்கிணைந்து வாழ்க்கையில் பெருமைப்படுவோமே!

Victory King (VK) 

மனிதநேயத்தை பகிர்ந்து கொள்வோமே!

Status 2021 (72)

மனதில் பட்டதை எல்லாம் பேசு தவறில்லை. அடுத்தவரின் மனதை பட்டுப் போகும்படி பேசி விடாதே. ஏனெனில் அவரிடமும் இருப்பது இதயம் தானே தவிர இரும்பல்ல.

புத்தர்

நாம் மற்றவரிடம் பேசும்போது அன்போடும் பண்போடும் பேசி பரஸ்பரம் மனிதநேயத்தை பகிர்ந்து கொள்வோமே!

Victory King (VK)

Saturday, March 13, 2021

செய்யும் செயலில் கவனம் வைப்போம்!

 Status 2021 (71)

நாம் ஒரு வேலையை செய்யும் பொழுது அதற்கான நேரத்தை நிர்ணயித்து வைத்துக்கொள்ளலாம். நேரத்தைப் பார்த்துப் பார்த்து  அதில் ஈடுபடும் பொழுது நம்முடைய கவனம் வேலையிலிருந்து அவ்வப்பொழுது சிதறி அந்த செயலில் முழுமையை அடைவதற்கு மேலும் நேரத்தை எடுத்துக் கொள்வதுடன் செயலில் நேர்த்தியும் குறைவதற்கு வாய்ப்பு உண்டாகும். எனவே செய்கின்ற  வேலையில் முழு கவனம் செலுத்தி நேரத்தைப் பார்த்தால் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே முடித்து இருப்போம். எனவே எந்த செயலாக இருந்தாலும் கவனத்தை சிதறவிடாமல் செய்து செயலில் முழுமையையும் நேர்த்தியையும் பெற்று மன திருப்தியும் அடைவோம்!

Victory King (VK)

Friday, March 12, 2021

பாதையை மாற்றலாமே!

 Status 2021 (70)

சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான முடிவுகளினால் செயலில் இடர்பாடுகள் வரும்பொழுது மனதைத் தளர விடாமல் நம் பாதையை மாற்றி செயல்பட்டால் அதற்கான தீர்வு வந்தே தீரும். அதை விடுத்து எடுத்த முடிவையே நினைத்து நினைத்து வருத்தப்படுவதால் நாம் எடுத்த செயல் பலனின்றிதான் போகும். எனவே சமயோஜிதமாக சிந்தித்து  சரியான முடிவுக்கு  சரியான மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவோமே!

Victory King (VK)

Thursday, March 11, 2021

அன்புதான் நிரந்தரம்!

 Status 2021 (69)

யாருக்கும் நம்மை பிடிக்கவில்லை என்றால் நாம் இன்னும் நடிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். இன்று நாம் அனுபவிக்கும் பெரும் சோதனைகள் நாளை நமக்கு பெரும் சாதனைகளாக மாறி நம்மை காப்பாற்றும். இழந்ததை நினைத்து வருந்தாமல் எதை இழந்தோமோ அது ஏதோ ஒரு வடிவில் நம்மை வந்தடைந்தே தீரும் என்ற நம்பிக்கையை கைவிடாமல் எந்நிலையிலும் நாம் நம் சுயத்தை இழக்காமல் நமக்கு நடிப்பால் வரும் நட்பை விட அன்பு பிணைப்பால் வரும் நட்புதான் நிரந்தரம் என்பதை உணர்வோம் மன அமைதி பெறுவோம்

Victory King. ( VK)

Wednesday, March 10, 2021

மகிழ்வுடன் வாழ...

 Status 2021 (68)

நாம் செய்த தவறுக்கு மனம் உருகி வருந்தி நம்மை வருத்திக் கொண்டு திருந்தி வாழலாம். ஆனால் மற்றவர்கள் நமக்கு செய்த துரோகத்திற்கு நாம் அதை நினைத்து நினைத்து வருந்தி நம் உடலை கெடுத்துக் கொள்வதால் நமக்குத்தான் கஷ்டமே ஒழிய அது தீர்வாகாது. நமது மன விரக்தி விரோதிகளுக்கு சாதகமாகவும் அமைந்துவிடும். எனவே துரோகியை கையாள்வது எப்படி என்பதை நன்கு யோசித்து இறைவனிடம் சரணடைந்து மனம் உருகி வேண்டினால் மன அமைதியும் கிடைக்கும் துரோகிகளின் செயலுக்கு நமக்கு பரிகாரமும் கிடைக்கும். துரோகிகளுக்கு சரியான தண்டனையும் கிடைக்கும். எனவே சிந்தித்து செயல்பட்டு இடர்பாடுகளில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழ முனைவோம்.

Victory King (VK)

Tuesday, March 9, 2021

எல்லையைத் தாண்ட வேண்டாமே!

 Status 2021 (67)

நாம் நம் எல்லையைத் தாண்டாத வரையில் நம் வாழ்க்கையும் நன்றாக அமைதியாக இருக்கும். எல்லையைத் தாண்டும் பொழுது தான் நம் நிலையிலிருந்து தடுமாறி அடுத்தவனை அழிக்கலாமா அடுத்தவன் குடியைக் எடுக்கலாமா என்ற எண்ணம் மேலோங்கி இறுதியில் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் நிலை வந்துவிடும். நான் என்ற எண்ணம் நமக்கு தலைக்கு ஏறி ஆட்டம் போடும் பொழுது தான் நாம் எல்லையைத் தாண்டுகிறோம். கடல் தன் சீற்றத்தால் எல்லையை தாண்டும் பொழுது நிலம் அழிகிறது. ஆனால் நாம் அகந்தையால் நம் எல்லையை தாண்டும் பொழுது நாமே அழிந்து விடுகிறோம் கடல் சீற்றத்தை நாம் அடக்க  முடியாது. இயற்கை. ஆனால் நம் அகந்தையை நாம் நினைத்தால் அடக்கி நலமாக வாழமுடியும். முயற்சித்து தான் பார்ப்போமே!

Victory King (VK)

Monday, March 8, 2021

மகளிர் தின வாழ்த்து!

 Status 2021 (66)

பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது. 

எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும் குதூகலம் அதிகரிக்கும் மங்களகரமாக இருக்கும் என்று சொல்வார்கள்.

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது.

வாழ்க்கை எனும் ஆற்றை கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம்தேவை.

சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண். கல்வி, செல்வம், வீரம் இவற்றுக்கான அதிதேவதையே சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என  பெண் தெய்வங்கள்தான்.

இத்தகைய பெருமை வாய்ந்த பெண்கள் மேலும் மேலும் சிறக்க  உலகம் மெச்ச புகழோடு வாழ இந்த மகளிர் தின தில் உளமார வாழ்த்தும்,

Victory King (VK)

Sunday, March 7, 2021

இயற்கையின் நியதி!

 Status 2021 (65)

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான், உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான், பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான்,  வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான், இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான் விழியிரண்டு இருந்த போதும் பார்வை ஒன்றுதான்!

கவிஞர் கண்ணதாசன் 

நமக்கு கிடைத்த இந்த மானிடப் பிறவியில் அந்தந்த காலகட்டத்தில் என்னென்ன நடக்குமோ அதுதான் இயற்கை. அதுதான் விதி. அதை நாம் நன்கு உணர்ந்து அதோடு ஒட்டி வாழ பழகிவிட்டால் வாழ்வின் எந்த நிகழ்வுமே நமக்கு பெரிதாகத் தோன்றாமல் மகிழ்வோடு வாழலாம்!

Victory King (VK)

Saturday, March 6, 2021

நல்லவர்களை இனம் கண்டு கொள்வோம்!

 Status 2021 (64)

நல்லவர்கள் போல் நம்மிடம் பேசிப் பழகி நம்மிடம் உள்ள விஷயங்களை நமக்கு துரோகம் செய்யும் கயவர்களிடம் எடுத்துச்சொல்லும் துரோகிகளை இனங்கண்டுகொண்டு அவர்களையும், சுயநலத்திற்காக கயவர்களுடன் கூட்டு சேர்ந்து நம்மிடம் நல்லவர்கள்போல் நாடகமாடி ஒன்றும் தெரியாதது போல் ஒளிந்து கொண்டு இருக்கும் நயவஞ்சகர்களையும் இனம்கண்டு கொண்டு இறைவனிடம் நாம் சரணாகதி அடைந்து துரோகிகளிடமிருந்தும் நயவஞ்சகர்களிடமிருந்தும் விலகி இருந்தாலே இறையருளால் நமக்கு தடைப்பட்ட பாதை விலகி நலம் பெறுவோம்!

Victory King (VK)

Friday, March 5, 2021

பொறுமையின் பெருமை!

 Status 2021 (63)

பொறுமை இருந்தால் நாம் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி அடையலாம். பொறுமை அமைதியைக் கொடுக்கிறது. சிந்திக்கும் திறனை கொடுக்கிறது. செயலின் உத்வேகத்தைக் கொடுக்கிறது. எனவேதான் பொறுமை கடலினும் பெரிது என்று கூறுவார்கள். அதற்கு எதிர்மறைதான் பொறாமை. இந்த தீய குணம் மன அமைதியை கெடுத்து சிந்தனைகளை சிதற விட்டு நாம் செல்லும் பாதையை தடுமாறச் செய்து நம் வாழ்க்கையே கெடுத்துவிடும். எனவே பொறுத்தார் பூமி ஆள்வார் பொறுமைக்கும் உண்டோ ஈடு இணை என்பதை நம் மனதில் பதியவைத்து பொறுமையுடன் இருந்து நமக்கும் நம் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்து மகிழ்வுடன் வாழ்வோமே

Victory King (VK)

Thursday, March 4, 2021

கட்டற்ற சுதந்திரம் ஆபத்தானது!

Status 2021 (62)

சுதந்திரம் என்பது நினைத்ததை எல்லாம் செய்வதற்கான உரிமை ஆகாது.

காந்தியடிகள்

காந்தியடிகளாரின் இந்த அருமையான கூற்று  பெற்றோர்களுக்குத்தான் பொருந்தும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் என்ன செய்தாலும் கேட்காமல் அவர்கள் செய்வதெல்லாம் சரிதான் என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு மற்றவர்கள் வாயை அடைத்து பிள்ளைகள் வாழ்க்கையே சிக்கலாக்கி வருகிறார்கள் சிலர். கொடுக்கும் சுதந்திரம் ஒரு கட்டுப்பாட்டோடு இருந்தால் பிள்ளைகள் தங்களை தானே திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. இல்லையேல் பிள்ளைகள் கட்டவிழ்த்துவிட்ட காளைபோல்  தறிகெட்டு செல்லும் நிலைதான் வரும். எனவே, பிள்ளைகள் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டுமென்றால் பெற்றோர்கள் அவர்களுக்கு கட்டுப்பாடுடன் சுதந்திரத்தைக் கொடுத்து அன்போடும் பண்போடும் வளர்க்க வேண்டும்!

Victory King (VK)

Wednesday, March 3, 2021

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்!

 Status 2021 (61) 

சந்தர்பமும் சூழ்நிலையும் நல்லவர்களைக் கெட்டவர்களாக்கி, கெட்டவர்களை உத்தமர்கள் ஆக்கி நிற்க வைத்து விடும். ஆனால் உண்மை ஒரு நாள் உலகறிய வெளிவந்தே தீரும். அப்போது யார் யார் எப்படி என்ற மாயையும் விலகும்.

பகவத் கீதை

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் விளைவுகள் தற்காலிகமானதே. உண்மைகள் வெளிவரும் பொழுது உண்மைதான் நிலைத்து நிற்கும். உத்தமர்கள் போல் காட்சியளித்த கயவர்களின் முகத்திரை அப்பொழுது கிழிக்கப்பட்டு படு கேவலமாக காட்சியளிப்பதுடன் அவர்களது மானம் மரியாதை மாயையான புகழ் அனைத்தும் பறந்துபோய் தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலை வந்தே தீரும். எனவே உண்மையையே பேசி நன்மையே செய்து மனதை தெளிவாக வைத்துக் கொண்டு மகிழ்வோடு வாழ்வோமே!

Victory King (VK)

Tuesday, March 2, 2021

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்!

 Status 2021 (60)

குடும்பம் என்பது செங்கலால் கட்டப்பட்ட கட்டடத்தில் நடக்கும் இல்லறம் மட்டுமல்ல. அது அன்பான உள்ளங்கள் உள்ளன்போடு வாழும் அன்பு ஆலயம்.பெற்றோர்கள் உறவுகளின் உன்னதத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அளவுகடந்த பாசத்தின் காரணமாக குழந்தைகளைக் கண்டிக்காமல் விட்டால் அக்குழந்தைகள் வழிதவறிச்செல்லும். வீட்டின் வலியையும் வாய்ப்புகளையும் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். உங்கள் கனவுமூட்டைகளைச் சுமக்கும் சுமைதாங்கியல்ல குழந்தைகள். குடும்பம் ஒரு போதிமரம். குடும்பம் உறவுகளின் அருமை சொல்லித்தரும் பண்பாட்டுப் பயிற்சிக்கூடம்.  சண்டையிட்டு மண்டையுடைக்க குடும்பம் ஒன்றும் போர்க்களம் அல்ல. காட்டுப்பறவைகள்கூட ஒற்றுமையாக இருக்கும் போது வீட்டு உறவுகள் நாம் ஏன் இணக்கமின்றி பிணக்கத்தோடு அலையவேண்டும். எனவே ஒன்றுபட்டு ஒற்றுமையாய் மகிழ்வோடு வாழ்வோமே!

Victory King (VK)

Monday, March 1, 2021

நடப்பது அனைத்தும் ஒரு காரணத்துக்காகவே!

 Status 2021 (59)

எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.

பகவத் கீதை

நமக்கு நல்லது நடக்கும் பொழுது இயல்பாகவே நாம் மகிழ்கிறோம். அதேபோல் துன்பம் வரும் பொழுதும் எதோ நமக்கு ஒரு பெரிய இடர்பாடு வருவதை சுட்டிக் காட்டுவதாக எண்ணி எதிர்கொண்டு சமாளிக்க ஆயத்தமாகி விட்டால் அதில் நம் கவனம் திரும்பி துன்பத்தின் சுமை குறையும் வாய்ப்பு உண்டு. இதன் மூலம் துன்பத்தின் வேகம் குறைந்து நம் மனதிற்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். எனவே துன்பத்தைக் கண்டு மிரளாமல் மன அமைதியுடன் அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை அடைந்து நம்மை நாம் காத்துக் கொள்வோமே!

Victory King ((VK)