Thursday, April 30, 2020

உழைப்பினால் உயர்வு!

Status 206

வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம்

-ஆப்ரஹாம் லிங்கன்

உழைப்பினால் உயரவேண்டும். பிறர் உழைப்பால் உயர கூடாது. உழைப்பின் மகிமையை எக்காலத்தும் இவ்வுலகம் போற்றும். எத்தொழில் ஆனாலும் அதில் உழைத்தே முன்னேறுவோம். வாய்ப் பேச்சால் நாம் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் வந்தால் நாம் சரியில்லாத நிலை வந்தாலும் நம் "நா" தடுமாற்றம் கொண்டாலும் நாம் நட்டாற்றில் தான்  விடப்படுவோம். எனவே இந்த உலக தொழிலாளர் தினத்தில் உழைப்பை மதிப்போம் உழைப்பவரை போற்றுவோம் என்று சூளுரைப்போமே!

-Victory king (VK)

Wednesday, April 29, 2020

சாதனையாளர்களின் வெற்றிகள்

Status 205

வெற்றி பெற்றுள்ள சாதனையாளர் அனைவரும்
இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்கிறார்கள்.
ஒன்று, தங்கள் தன்னம்பிக்கையை நம்புகிறார்கள்!
இரண்டு, நேர்மையான பாதையிலே செல்கிறார்கள்!!

-நெப்போலியன் ஹில்

நம் குழந்தைகளை சாதனை குழந்தையாக சாதிக்கும் படியாக வளர்க்க நாம் ஏதாவது ஒரு விதத்தில் சாதித்து வாழ்ந்து காட்ட வேண்டும். மேலும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர்களையும்,நம் நாட்டில் இளம் சாதனையாளர்களின் விவரங்களைப் பற்றியும் சுட்டிக்காட்டி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு தன்னம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வரும்

- Victory king (VK)

Tuesday, April 28, 2020

குறையும் நிறையும்!

Status 204

நான் எவ்வளவு செய்தேன் என்று மனம் சொல்லும் போது, அது குறைகூற ஆரம்பிக்கிறது. குறைகளே வாழ்வைப் பெறும் சுமையாக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு நாம் எந்த விதத்திலாவது உதவி செய்து ஆறுதல் செய்ய நினைத்தால் அது நமக்கு ஆத்ம திருப்தியை கொடுக்கும் செயலாக இருக்கவேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது இருக்கவேண்டும். நம்மால் இயன்றதை இயன்ற
பொழுது இயல்பாக உதவி செய்யும்போது நம் மனதிற்கு அது மகிழ்வூட்டுவதுடன் நம் வருங்கால சந்ததியினரையும் காக்கும் பாலமாக அமையும்.

Victory king (VK)

Monday, April 27, 2020

அன்பின் மகிமை

Status 203

குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் மன்னிக்கவும்... மறக்கவும்... ஒரே காரணம்தான். "அன்பு". அன்பு மட்டும்தான்.

- பகவத் கீதை

அன்பு பண்பை வளர்க்கும்
அன்பு அனைவரையும் அரவணைக்கும்
அன்பு நட்புக்கு தூதுவனாக இருக்கும்
அன்பு ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்கும்
அன்பு நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
அன்பு  நம் வாழ்வை வளமாக்கி மகிழ வைக்கும் ஓர் மகாசக்தி

Victory king (VK)

Sunday, April 26, 2020

கஷ்டமும் தோல்வியும் பயந்தோட!

Status 202

கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது. சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது... ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.

-அன்னை தெரசா

நாம் கஷ்டம் வரும்பொழுது கலங்காமல் இதுவும் கடந்து போகும் என்று மன உறுதியுடன் இருத்தல் வேண்டும். ஏனென்றால் நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. அனைத்துமே கடந்து செல்லும் மேகம் போல்தான். எனவே கஷ்டம் என்று ஒன்று நமக்கு வரும் பொழுது அது இன்றோடு முடிந்துவிடும் ஒரு நிகழ்ச்சி என மனதளவில் எண்ணிவிட்டால் அதன் வலி மறைந்து நாளைய பொழுது நலமாகவே பிறக்கும் என்ற மகிழ்வில் நாம் புத்துணர்ச்சி பெற்று விடுவோம்.

-Victory king (VK)

Saturday, April 25, 2020

உண்மையும் தியாகமும்

Status 201

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்துவிடாதீர்கள்.

-சுவாமி விவேகானந்தர்

உண்மை பேசுவது என்பது ஒரு உன்னதமான புனிதமான செயல்.
உண்மை ஒரு நிரந்தரமான முழுநிலா. இதயத்திற்கு இதமளிக்கும்.
உண்மையின் உயர்வு ஓர் கோபுர கலசம். உண்மை என்றும் வற்றாத ஜீவ நதி. ஆழ்மனதில் இருந்து வருவது தான் உண்மை. எனவே அது அழியாதது. அமைதியை கொடுக்கும். என்றும் நிலைத்து நிற்கும். உண்மை உறங்கிவிட்டால் பொய் தன் ஆட்டத்தை ஆரம்பித்து விடும். எனவே எப்பொழுதும் உண்மையையே பேசி நன்மையே செய்து நலம்பெற வாழ்வோம்.

- Victory King (VK)

Friday, April 24, 2020

கருத்து ஒருமித்தல்

Status - 200

வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதை விட அவற்றை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இன்பம்.

- ஹம்போல்ட்

ஒரு கருத்தை ஒருவர் கூறும்பொழுது அதன் நம்பகத்தன்மை அக்கருத்தை சொல்பவரையும் கேட்பவரையும் பொறுத்துத்தான் உயிர் பெறுகிறது. இருவருமே ஒருமித்த கருத்து உள்ளவராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். எளியவர் ஆயினும் வலியவர் ஆயினும் கருத்து ஒருமித்தல்  என்பதுதான் முக்கியம்.

Victory king (VK)

Thursday, April 23, 2020

நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துவோம்

Status 199

கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.

- மகாவீரரின் அறிவுரை

இன்றைய ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருக்கும் நம் அனைவருக்கும் இந்த அறிவுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடும்பத்துடன் தனித்திருக்கும் இந்த நிலையில் தேவையற்ற விஷயங்களை பேசுவதைத் விடுத்து அனைவருடனும அன்பாகவும் ஆறுதலாகவும் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி நம் குழந்தைகளால் நாமும் நம்மால் நம் குழந்தைகளும் மகிழ்வுடன் இருக்கும் நிலையை உருவாக்குவோம். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் நம்மை காப்பாற்றிக் கொள்வோம்.

Victory king (VK)

Wednesday, April 22, 2020

பொறுமையின் மகிமை

Status 198

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனி தருகிறது!

இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது.

- அரிஸ்டாட்டில்

"பதறிய காரியம் சிதறும்"எந்த ஒரு செயலையும் பொறுமையோடு நிதானமாக செய்யும்பொழுது வெற்றி என்பது நிச்சயம். பொறுமை கடலினும் பெரிது. வேகம் விவேகம் அல்ல. இவற்றை வாழ்க்கையில் பின்பற்றி அனைத்திலும் வெற்றி பெறுவோமே

-Victory king (VK)

Tuesday, April 21, 2020

அகந்தையும் தற்புகழ்ச்சியும்

Status 197

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை கொள்ளும் கனத்தில் முட்டாளா கின்றான்

-அப்துல் கலாம்

'நமக்கு தான்' என்ற அகந்தை தலைக்கேறும் பொழுது நம் நாவில் தற்புகழ்ச்சி நடனமாட ஆரம்பிக்கும். விளைவு அகந்தை அத்துமீறும். வாழ்வை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும். எனவே  அகந்தை நம்மை வந்து அடையாதிருக்க மனதை கட்டுப்படுத்துவோம். இயல்பான வாழ்வோடு இணைந்து வாழ்ந்து இன்பம் பெறுவோம்

-Victory king (VK)

Monday, April 20, 2020

அச்சம் தவிர்ப்போம்


Status 196

அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது, கேட்டை விளைவிப்பது, மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

-சுவாமி விவேகானந்தர்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

என்ற பாரதியின் கூற்றை மனதிற் கொண்டு எந்த நிலையிலும் எதற்கும் அச்சமின்றி செயல்பட்டு நற்செயல்களில் வெற்றி காண்போம்.

-Victory king (VK)

Sunday, April 19, 2020

கஷ்டங்களை வெல்லும் வழி!

Status 195

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.

- ஏபிஜே அப்துல் கலாம்

நாம் இஷ்டப்பட்டபடி எல்லாம் வாழலாம் என்று வாழும் பொழுது தான் நமக்கு கஷ்டங்கள் வரும்பொழுது கலங்குகிறோம். வாழ்க்கையின் போக்கில் நாம் வாழ நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டுவிட்டால் கஷ்டங்களை எதிர்நோக்கும் சக்தி நமக்குத்தானே வந்துவிடும். கஷ்டங்களை எளிதில் வென்று விடலாம்.

-Victory king (VK)

Saturday, April 18, 2020

இலக்கும் ஆசையும்!

Status 194

பேராசையானதுஅநுபோகத்தினால் அடங்குவது கிடையாது. அது அக்னியில் நெய் போல் வளரும். ஆகையால் பேராசையை அறவே மனதிலிருந்து ஒழிக்க வேண்டும். இன்றேல் அந்த ஆசையினாலேயே அழிந்து விடுவோம்.

-இந்து தர்ம சாஸ்திரம்

நாம் ஓர் இலக்கை அடைய ஆசை ஒரு கருவிதான் இலக்கு சரியாக இருக்கும் வரை. இலக்கு திசைமாறி செல்லும்பொழுது பேராசையாக உருவெடுத்து அந்தக் கருவி ஆயுதமாக மாறி நம்மையே அழித்துவிடும். எனவே நாம் நம் தகுதிக்கேற்ப ஆசைப்பட்டு இலக்கை அடைவோம்

Victory king (VK)

Friday, April 17, 2020

எண்ணத் தூய்மை

Status 193

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

- ஔவையார்

நமக்கு எண்ணத் தூய்மை இருந்தாலே போதும். மற்றவை அனைத்தும் தானே நம்மை வந்தடைந்து சீரிய வழியில் நம்மை வழிநடத்திச் சென்று வாழ்வை வளமாக்கும்

-Victory king (VK)

Thursday, April 16, 2020

நம்பிக்கையும் துரோகமும்!!!

Status 192

உன்னை நம்புகிறவர்களுக்கு நீ நம்பத் தகுதியுள்ளவனாய் இரு. உன்னை நம்புகிறவர்களை நீ ஒருபோதும் ஏமாற்ற நினையாதே. திருடுவதைப் பார்க்கிலும் நம்பினவர்களை ஏமாற்றுவது கொடுமையாகும்.

- இந்து தர்ம சாஸ்திரம்

ஒருவர் செய்யும் நம்பிக்கை துரோகம் அது அவரது சாமர்த்தியம் என்று பெருமைப் பட வேண்டாம். அது அவர் அடுத்தவருக்கு செய்யும் வஞ்சனை.  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், நம் கூடவே இருந்து நமக்கே குறிப்பறித்தல் போன்ற செயல்கள் வஞ்சத்தின் உச்சம். பாம்பாட்டிக்கு பாம்பினால் தான் சாவு என்று கூறுவார்கள். அதுபோல நம்பிக்கை துரோகிகளுடன்  நாம் தொடர்பு வைத்துக் கொண்டால் நம்மை முழுவதுமாக நசிக்கி விடுவார்கள். எனவே இனம் கொண்டு நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

- Victory king (VK)

Wednesday, April 15, 2020

ஒட்டும் உறவும் நட்பும்

Status 191

"ஒட்டி உறுவார் உறவு". துன்பம் வந்த காலத்தே கைவிட்டு செல்பவர்கள் நமக்கு ஒருபோதும் உறவினர் அல்லர். அவர்களை உறவினர் என்று கருதுதல் கூடாது. துன்ப காலத்திலும் நம்முடன் இணைந்து நட்புடன் இருப்பவர்களே நமக்கு உறவினர். அத்தகையவர்களையே உறவினராகக் கருதவேண்டும்.

- வாக்குண்டாம்

நாம் கல்வியில் மேம்பட்டு இருக்கலாம், செல்வச் செழிப்பிலும் மிகுந்து இருக்கலாம், புகழின் உச்சியில் கூட இருக்கலாம். அந்த நிலையிலும் நாம் ஒருவரிடம் காட்டும் நட்பானது எந்த விதத்திலும் தொய்வில்லாமல் தொடர்வதுதான் நிலையான, உண்மையான, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நட்புக்கு உதாரணமாகும். எனவே உயர் நட்போடு பழகுவோம் உறவுகளை வலுப்படுத்துவோம்.

- Victory king (VK)

Tuesday, April 14, 2020

பெருமைமிகு பெற்றோர்

Status 190

நல்லறிவு இல்லாமல் நெஞ்செல்லாம் அச்சமே நிரம்பி நிற்கும் அற்ப குணம் உள்ள குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும் அக் குடியில் தோன்றிய ஒருவன் எங்களுக்குப் பின் வாரிசு ஒருவரும் இல்லை என்று பெருமையோடு கூறிக் கொள்ளுதல் நலமாகும்.

- வெற்றி வேற்கை

ஒருவருக்கு குழந்தைச் செல்வம் கிடைப்பது என்பது ஒரு பெரும் பாக்கியம். அப்படி கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர்கள் கையில்தான்.  பிள்ளைகள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் பாசத்திற்கும் நேசத்திற்கும் அடிமையாகி பயப்படாமல் அவர்களை நெறி தவறாமல் வாழ வழிவகுக்கும் பெற்றோர்களே  பெருமைக்குரியவர்கள்.

- Victory king (VK)

Monday, April 13, 2020

நன்மையே செய்வோம் நலமுடன் வாழ்வோம்!

Status 189

"அரைக்கினும் சந்தனம், தன்மணம் அறாது"

சந்தனக்கட்டையை தேய்த்து தேய்த்து அரைத்துத் துன்புறுத்தினாலும் அதன் நறுமணம் போகாது. மேலும் அதிகமாகும்.

- வெற்றிவேற்கை

அதுபோல நாம் உள்ளத்தால் நலிந்தாலும், உடலால் மெலிந்தாலும், செல்வத்தால் நொடித்தாலும் எல்லா நிலைகளிலும் நாம் செய்த நற்செயல்களின் புகழ் அழியாது நம்முடனே பயணம் செய்யும். எனவே நன்மையே செய்வோம் நலமுடன் புகழோடு வாழ்வோம்.

- Victory king (VK)

Sunday, April 12, 2020

வல்லமை பேசேல்!

Status188

வல்லமை பேசேல்

வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் உண்டு. ஆகையால் தன்னுடைய உடல் வலிமையையோ சாமர்த்தியத்தையோ எடுத்துக்கூறி தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டாம்.

- ஆத்திசூடி

நாம் நம் எதிரில் இருப்பவர் முட்டாள் என்று நினைத்துக்கொண்டு நமது அனைத்து செயல்களையும் மிகைப்படுத்தி கூறி பிரபலப்படுத்தி கொள்ளும்பொழுது அதைக் கேட்பவர் புத்திசாலியாக இருந்துவிட்டால் நமது அலப்பறை எடுபடாது. எனவே நாம் எப்பொழுதும் எதிரில் இருப்பவர் புத்திசாலி என்ற நினைப்புடன் பேசினால் நாவடக்கம் நமக்குத்தானே வரும்

- Victory king (VK)

Saturday, April 11, 2020

அறம் செய விரும்பு

Status 187

அறம் செய விரும்பு.  ஒருவன் தர்மம் செய்ய இயலாதவனாக இருக்கலாம். அதனை எடுத்துச் சொல்லும் வன்மை இல்லாதவனாகக்கூட இருக்கலாம். ஆனால் தர்மத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

- ஆத்திச்சூடி

நாம் செய்யும் செயலை விட எண்ணத்தில் தூய்மையாக இருக்க வேண்டும். நன்மை செய்ய வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணம் நம் ஆழ்மனதில் இருந்து வரும்பொழுது தான் அது முழுமை பெறும். இந்த மனப்பக்குவத்தை நாம் மேம்படுத்திக் கொண்டு மகிழ்வோடு வாழ்வோம்.

- Victory king (VK)

Friday, April 10, 2020

துஷ்டரைக் கண்டால் தூர விலகு!

Status 186

தலையில் கொம்புள்ள ஆடு, மாடு போன்ற விலங்கினங்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஐந்து முழ தூரத்திற்கு அப்பால் விலகி நிற்க வேண்டும். குதிரையாயின் பத்து முழ தூரத்திற்கு அப்பால் விலகி நிற்க வேண்டும். கோபம் மிகுந்த யானையாயின் ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். ஆனால் வம்பையே தொழிலாகக் கொண்ட தீய மக்களுடைய கண்களுக்குத் தெரியாதபடி வெகுதூரம் தள்ளி சென்று விடுவதே நல்லதாகும்.

நீதி வெண்பா

துஷ்டரைக் கண்டால் தூர விலகி விடுவதுதான் சாலச்சிறந்தது.நியாயம் நேர்மை, தர்மம் என்று அவர்களிடம் பேசி எந்தவித பிரயோஜனமும் இல்லை. அவர்களிடமிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி அவர்களிடமிருந்து விலகி இருப்பது ஒன்றுதான்.

Victory king (VK)

Thursday, April 9, 2020

நிலையான செல்வம்

Status - 185

ஔவை பலர் வந்து
அறிச்சுவடி தந்தாலும்

வள்ளுவன் நேரில் வந்து
வாய்மொழியே தந்தாலும்

காதருந்த ஊசியும்
கடைசி வரை வாரா என
பட்டினத்தார் சொன்னாலும்

அரசனும் ஆண்டியும்
ஆவி போன பின்னர்
கைப்பிடி சாம்பல் என்று
அறநூல்கள் சொன்னாலும்

அச்சடித்த பச்சை நோட்டை
தேடாதார் எவரும் உண்டோ

- தமிழ் கவிதை

பணத்தை நோக்கி நாம் அலையக்கூடாது. அப்படி வரும் பணம் நிலையில்லாதது. பணம் நம்மை நோக்கி வர வேண்டும். நம் உழைப்பால் வரும் பணம்தான் நம்மை  நோக்கி வருவது. இது நிலையானது. எனவே நேர்வழியில் உழைத்து நம் வாழ்வை வளம் பெறச் செய்வோம்.

Victory king (VK)

Wednesday, April 8, 2020

புகழ்தல்!

Status 184

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

செருக்கில்லாமல் இருத்தலே பெருமையாகும். அளவு  கடந்த செருக்குக் கொள்வது சிறுமையாகும்.

திருக்குறள் 979

நாம் ஒருவரை புகழ்ந்து புகழ்ந்து அவரை உயர்த்துவது நமக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். மற்றவர்கள் முன்னால் ஒருவருக்கு புகழ் மாலை சூட்டும் பொழுது அவர்கள் அந்த புகழுக்கே அடிமையாகி தன் தனித்துவத்தை இழக்க நேரிடும். எனவே புகழ வேண்டியவரை இடமறிந்து அளவோடு புகழ்ந்து அவர்கள் நலம் காக்க வேண்டும்.

Victory king (VK)

Tuesday, April 7, 2020

வெற்றி!

Status 183

துன்பப்பட்டு வெற்றி அடைந்தவன் மனதில் வெறுப்புடன் வாழ்வான். ஆனால், வெற்றியையும் தோல்வியையும் லட்சியம் செய்யாமல் அமைதியாக இருப்பவன் சந்தோஷமாக வாழ்வான். ஒருவன் தன்னிடம் உள்ள குறைகளை மறைத்து மற்றவர்களின் குறைகளைத் தூற்றித் திரிவது சூதாடுபவன் தோல்வி சமயத்தில் சூது செய்வதற்கு ஒப்பாகும்.

- புத்தர்

தன்னிடமுள்ள குற்றத்தை உணராமல் அடுத்தவர்கள் குற்றத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் தான். சுயக்கட்டுப்பாட்டை நமக்கு நாமே வளர்ப்போம். நலமாக  நாம் வாழ்வதுடன் மற்றவர்கள் நலனிலும் அக்கறை கொள்வோம்.

- Victory king (VK)

Monday, April 6, 2020

நம்பிக்கை

Status 183

உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். திடமான நம்பிக்கைகளே பெரும் செயல்களுக்கு வழிவகுக்கின்றன.

- சுவாமி விவேகானந்தர்

தன்னம்பிக்கையோடு இருப்போம். நல்லதையே நினைப்போம். நலமாக வாழ்வோம்.

- Victory king (VK)

Sunday, April 5, 2020

இன்பமும் துன்பமும்

Status 182

துன்பம் இல்லாத இன்பமோ,தீமையில்லாத நன்மையோ ஒருபோதும் இருக்க முடியாது.

- சுவாமி விவேகானந்தர்

எனவே இன்றைய சூழ்நிலையில் நாம் துன்பம் அனுபவிப்பது போல் தோன்றினாலும் அதனை மனோதிடத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என மனதார நம்புவோம்.

- Victory king (VK)

Saturday, April 4, 2020

செயலில் முழுமை!

Status 181

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

ஒரு காரியத்தை முழுவதுமாக முடிக்காமல் அரைகுறையாக விட்டவரை இவ்வுலகம் மதிக்காது. ஆகவே அச்செயலை முழுவதும் முடிப்பதில் விடாமுயற்சி வேண்டும்.

திருக்குறள் (612)

நாம் இன்றைய நிலையில் உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கு எடுத்து வரும் முயற்சிகளில் தொய்வு வரலாம். இருப்பினும் நம் ஒவ்வொருவரின் விடாமுயற்சியாலும், ஒற்றுமையாலும் இக்கட்டான இந்தசூழ் நிலையிலிருந்து நிச்சயம் மீண்டு வருவோம் என்று சூளுரைப்போமே.

Victory king (VK)

Friday, April 3, 2020

மனோதிடம்!

Status 180

கவலைப்படாதே. முணுமுணுக்காதே. இப்போதுதான் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சிறப்பு பணி இன்னும் ஆரம்பமாகவில்லை. சிறந்த பணி இன்னும் முடிக்கப்படவில்லை. உங்களுடைய கனவுகளும், லட்சியங்களும், நம்பிக்கைகளும் தகர்க்கப்படும் போது அந்த சிதைவுகளுக் கிடையே தேடிப்பாருங்கள். இடிபாடுகளுக்குள்ளே  புதைந்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்.

- டாக்டர் அப்துல் கலாம்

நாம் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் எந்த இன்னல்களையும் சந்தித்து வெற்றி அடைய முடியும் என்ற மனோதிடத்தை வளர்த்துக்கொண்டு மகிழ்வுடன் வாழ முயற்சிப்போம்

- Victory king (VK)

Thursday, April 2, 2020

நம்பிக்கை

Status 179

நம்பிக்கை இழத்தல் ஒருபோதும் முன்னேற்றத்திற்கு தேவையானது அன்று. அது பலவீனத்திற்கு அடையாளம். மனம் என்பது ஒரு பாலிஷ் செய்யப்பட்ட நிலைக்கண்ணாடி. அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் தூசு படியாமல் வைத்துக்கொள்வதும் நமது தொடர்ச்சியான பணி.

- ஸ்ரீ அன்னை

நாம் தன்னம்பிக்கையுடன் இருந்தால்தான் எல்லா கஷ்டங்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் ஊக்கத்தை இழந்துவிடாமல் மனம் உடைந்து போகாமல் எதிர்த்து நிற்க முடியும். எனவே இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்த மனப்பக்குவத்தை நாம் மேற்கொண்டு செயல் வடிவம் கொடுத்தால் நம்மை காப்பாற்றிக் கொள்வதோடு அனைவரது நலனையும் காக்க முடியும்.

- Victory king (VK)

Wednesday, April 1, 2020

கோபம்!

Status 178

கோபத்தில் இரண்டு வகை. நல்ல கோபம். கெட்ட கோபம். கெட்ட கோபம் தன்னையும் பாதிக்கும், பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நல்ல கோபம், பிறர் நல்லவற்றில் ஈடுபட, திருத்த உதவும். கோபப்படுபவர் உறவினர், நண்பர்களை இழக்கிறார்கள். கோபத்தை நல்ல பாம்பினைப் போல் கையாளவேண்டும். அதாவது நல்ல பாம்பு கூட சாதுவாய் இருந்தால், பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் அது சீறினாலே போதும்.
அதுபோன்று கோபத்தைக் கையாள வேண்டும்.

- ஸ்ரீ இராமகிருஷ்ணர் 

நாம்எதற்கெடுத்தாலும் கோபப்பட்டால் நமக்கு மதிப்பில்லாமல் போய்விடும். எனவே அறிவுரையோடு சேர்ந்த கோபமும், அன்போடு சேர்ந்த கோபமும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும். ஒருவரை திருத்த நாம் காட்டும் கோபம் அவரை பயமுறுத்தி தெளியவைக்கும். இதுதான் இன்றைய காவல்துறையின் நிலை.

- Victory king (VK)