Friday, July 31, 2020

செய்வதை உணர்வோம்!

Status 298

கொல்லல் தீது!
திருடல் தீது
பொய் பேசல் தீது!
பழித்தல் தீது!
வம்புரைத்தல் தீது!
பொறாமை தீது!
பகை தீது!
பொய்க் கொள்கையைப் பற்றுதல் தீது!

புத்தர்

தீது என்று உணர்ந்தே தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் தம்மையும் அழித்துக்கொண்டு சந்ததியினரையும் அழிக்கின்றனர். தீது என்று தெரியாமல் தீமை செய்துவிட்டு உணர்ந்தவுடன் தன்னைத் திருத்திக் கொள்பவர்கள் தன்னலம் காப்பதுடன் சார்ந்தோரையும் காத்து வழி நடத்த முடிகிறது. தீதே நம்மை வந்து அடையா வண்ணம் தன்னை காத்து நன்மையே செய்து வருபவர்கள் அனைத்து விதத்திலும் நலம்பெற வாழ முடிகிறது. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்,வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற  கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை மனதில் கொண்டு நலமாக வாழ்வோம்.

Victory king (VK)

Thursday, July 30, 2020

மனமெனும் மாயசக்தி!

Status 297

சில குறிப்பிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு காரணம் மனம்தான். அதிலிருந்து உன்னை காப்பாற்றுவதும் மனம்தான். உன்மனம் தான் உன்னுடைய உலகம், உன் மனம்தான் உன்னுடைய ஆரோக்கியம்.

ஓஷோ

நம்மால் அனைத்தும் முடியும், முடியாதது ஒன்றுமில்லை என்று நாம் எண்ணும் பொழுதும் சொல்லும் பொழுதும் மேலிருந்து அசரீரி என்னும் ஓர் சக்தி 'அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும்' என்று நம்மை ஆசீர்வதித்து கொண்டே இருக்கும். அதன் பலன் நமக்கு மனோதிடத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும். எனவேதான் எப்பொழுதும் நாம் நினைப்பதும் சொல்வதும் நல்லவையாகவே இருக்க வேண்டும் என்று கூறுவது. மனோபலமே தேகபலம். எனவே நமக்கு மனோபலம் இருந்தாலே நாம் ஆரோக்கியமாகவும் மகிழ்வோடும் இருப்போம்.

Victory King (VK)

Wednesday, July 29, 2020

வாழ்க்கையைப் புரிந்துகொள்வோம்!

Status 296

வாழ்வை புரிந்துகொள்ள முயற்சி செய்யாதீர்கள். அதை வாழுங்கள். அன்பை புரிந்துகொள்ள முயற்சி செய்யாதீர்கள். அன்பிற்குள் செல்லுங்கள்.

ஓஷோ

நமக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. எனவே நம் வாழ்க்கைப் பயணத்தை ரசித்து அனுபவித்து கடக்க வேண்டும். இழந்த வாழ்க்கையை திரும்ப பெற இயலாது. கடக்கும் பாதை சில இடங்களில் கரடு முரடாக இருந்தாலும அதனையும் ரசித்து கடந்தால் மிகவும் எளிதாக கடக்க முடியும். அதுபோல்தான் நாம் காட்டும் அன்பை ஆரவாரப்படுத்தாமல் ஆழ்மனதில் இருந்து செலுத்தினால் மற்றவர்கள் ஆழ் மனதிலும் ஆழப் பதிந்து நிலைத்து நிற்கும். அன்பை செலுத்துவோரும் ஏற்போரும் அதனை அனுபவிக்கும் பொழுதுதான் அன்பின் ஆனந்தத்தை உணரமுடியும். எனவே அன்போடும் பண்போடும் வாழ்க்கை பயணத்தை மகிழ்வோடு தொடர்வோம்.

Victory King (VK)

Tuesday, July 28, 2020

ஒற்றுமை!

Status 295

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே- நம்மில் 
ஒற்றுமை நீங்கில் அ‎னைவர்க்கும் தாழ்வே

பாரதியார்

நமது ஒற்றுமை தான் எதிராளியை பணிய வைக்கும் வலிமையான ஆயுதம். நாம எடுக்கும் எந்த செயலுக்கும் உரிய அந்தஸ்தும் வெற்றியும் கொடுப்பது நமது ஒற்றுமைதான். நம் நாக்கிலிருந்து வரும் வார்த்தைகள் கூட நான் நீ என்கின்ற பொழுது உதடுகள் இணையாது. நாம் என்று சொல்லும் பொழுதுதான் நாவோடு உதடுகள் இணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. காகம் கரைந்துண்ணும். காகமும் நமக்கு ஒற்றுமைக்குப் பாடம் எடுக்கிறது. எனவே கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவப் பழமொழியை உணர்ந்து ஒற்றுமையாக வாழ்வோம் உறவுகளை மேம்படுத்துவோம்

Victory king (VK)

Monday, July 27, 2020

அப்துல் கலாம்!

Status 294

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.அதிகம் செயல்படுபவனையே கைக்கூப்பி தொழுகிறது.
தவறு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின்வாங்குவது இழிவானது. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகி இருக்கும்.

Dr.அப்துல் கலாம்

கலாம் அவர்களது  நினைவு நாளான இன்று இந்த அறிய பொன்மொழிகளை நம் நினைவில் நிறுத்தி செயல்களில் நம் திறமையை வெளிப்படுத்தி மகிழ்ச்சி என்ற உணர்ச்சியின் உச்சத்தை பெற்று பெருமையோடு வாழ்வோமே.

Victory King (VK)

Sunday, July 26, 2020

வெற்றிக்கான வழி!

Status 293

உங்களின் உழைப்பை 80% திட்டமிடவும் 20% திட்டப்படி செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்கள்தான்.

ஆபிரகாம் லிங்கன்

நாம் ஒரு குறிக்கோளை அடைய எண்ணும் பொழுது அதன் முதல் படி திட்டமிடல். அதற்கு

1.குறிக்கோள் பற்றி முழுமையாக புரிதல்
2. விதிமுறைகளை அறிதல்
3. அதைப்பற்றி மூத்த அனுபவஸ்தர்களின் ஆலோசனை முறையாக பெறுதல்
4. நமது தகுதிக்குள் வருகிறதா என  ஆராய்தல்
5. இவைகள் அனைத்தும் நம் மனதிற்கு சரி என்று முழுமையாக தீர்மானித்தல் 

பிறகு நாம் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பொழுது வெற்றி என்பது நிச்சயம். முறைப்படி செயல்படுவோம் முழுமையான வெற்றியை அடைவோம்

Victory King (VK)

Saturday, July 25, 2020

பொறுமையின் சிறப்பு!

Status 292

அவசரப்படாதீர்கள். நேரம் வரும்போது தானாகவே அது நடந்தேறும். பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.

புத்தர்

நாம் ஒரு விதை விதைத்தால் அது வளர்ந்து செடியாகி மரமாகி பூ பூத்து காய் காய்த்து கனியாவதற்கு பல மாதங்களாகும். இதுதான் பொறுமைக்கான இலக்கணம். எனவே நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது பொறுமையாக தளர்வடையாமல் முயற்சித்து முன்னோக்கி சென்று கொண்டிருந்தால் வெற்றி என்பது நிச்சயம். "பொறுமை கடலினும் பெரிது.. பொறுமை உடையார் சிறுமை அடையார்" இதனை மனதில் கொண்டு எங்கும் எதிலும் பொறுமையைக் கடைப்பிடித்து செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம்.

Victory King (VK)

Friday, July 24, 2020

நல்வினையும் தீவினையும்!

Status 291

மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய். நம் எண்ணங்கள் யாவும் பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

புத்தர்

இவற்றினை சிறிது சிந்தித்துப் பார்த்தால் பிறருக்கு நாம் தீமை நினைக்கும்பொழுதே நமக்கு வரும் தீமையை நம் மனம் நமக்கு எச்சரித்து  நன்மையே செய் இல்லையேல் நீ அல்லல்பட்டு அவமானப்படுவாய் என்று கட்டளையிட்டு நம்மை காப்பாற்றி வழி நடத்தும். எனவே தீவினையை துரத்தி நல்வினையே செய்து நலமாக வாழ்வோம்.

Victory King (VK)

Thursday, July 23, 2020

மனமே மகிழ்வுக்குக் காரணி!

Status 290

மனதை அடக்க நினைத்தால் அலையும், அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம் தான்.இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.உங்கள் மகிழ்ச்சிக்கும் துயரத்துக்கும் நீங்களே காரணம்.

புத்தர்

நம்மை சிந்திக்க வைப்பதும், நம் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உந்து விசையாக செயல்படுவதும், நம் கற்பனையை தூண்டுவதும் மனமே. எனவே இவைகள் அனைத்தையும்  நம் கட்டுக்குள் வைத்து மனதை உறுதி படுத்தி விட்டால் மனம் நாம் நினைப்பதை ஏற்று நம்மை மகிழ்விக்கும்.

Victory King (VK)

Wednesday, July 22, 2020

இதுதான் உலகம்!

Status 289

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா…
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

கவிஞர் கா.மு.ஷெரிப் (பாடல் வரிகள்)

இதுதான் உலகம். எனவே நம்மை நாம் நன்கு உணர்ந்து சொல் செயல் சிந்தனை இவற்றில் தூய்மையுடன் நம் வாழ்வு நம் கையில்தான் என்ற திடமான தன்னம்பிக்கையுடன்  வாழ்க்கையில் பயணித்து வந்தாள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தலைநிமிர்ந்து நாம் மகிழ்வோடு வாழலாம்

Victory King (VK)

Tuesday, July 21, 2020

அனுபவங்களே ஆசான்!

Status 288

பல நூல்களை படித்து அறிவாளியாக இருக்கலாம், பல மணி நேரங்கள் தொடர்ந்து சொற்பொழிவாற்ற லாம், பல மணி நேரங்கள் அயராது அறிவுசார்ந்த சொற்பொழிவுகளைக் கேட்கலாம் இருப்பினும் வாழ்க்கையில் அனுபவங்கள் தான் உங்களுக்கு ஆசான்.

சுவாமி விவேகானந்தர்

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு ஒரு அனுபவம் தான். இந்த அனுபவங்கள் தான் தீவினைகளை திருத்துக் கொள்ளவும் நல்வினைகள் மேலும் நலம் பெறச் செய்யவும் நமக்கு உதவுகிறது. அனுபவத்தினால் நமக்கு கிடைத்த ஞானம் என்றுமே அழியாத ஒன்று. நம்மைப் பக்குவப்படுத்துவதும் அனுபவம்தான். எனவே நன்மையோ தீமையோ எதுவாயினும் அதனை மனமகிழ்ந்து அனுபவமாக ஏற்று வாழ்வை செம்மைப்படுத்துவோம்.

Victory king (VK)

Monday, July 20, 2020

வாழ்க்கை!

Status 287

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில்நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

கவிஞர் கண்ணதாசன் (பாடல் வரிகள்)

ஏற்றம் இறக்கம் இன்பம் துன்பம் ஆனந்தம் அழுகை பாசம் பிரிவு வெற்றி தோல்வி இவைகள் அனைத்தும் கலந்த கலவை தான் வாழ்க்கை. இவைகள் அனைத்தையும் ஏற்று எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டு விட்டால் நாம் எந்த சலனமுமின்றி என்னி லையிலும் மகிழ்வோடு வாழலாம். எனவே நமக்கு விதித்ததை ஏற்று வளமாக வாழ பழகுவோம்.

Victory King (VK)

Sunday, July 19, 2020

பொய்யும் உண்மையும்!

Status 286

பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது.

சுவாமி விவேகானந்தர்

உண்மைக்கு ஒரு முகம்தான் ஆனால் போய்க்கோ பல முகங்கள். முகத்திரை விலகும் பொழுது பொய்யின் உண்மை சொரூபம் தெரிந்துவிடும். மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்,
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும், பெரும் பணிவு என்பது பண்பாகும்" கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகளை மனதில் கொண்டு எந்த நிலையிலும் பொய் பேசுவதை தவிர்த்து உண்மையே பேசி உயரடைவோமே.

Victory King (VK)

Saturday, July 18, 2020

விருந்தோம்பல்!

Status 285

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு உபசரிப்பவனது வீட்டில் மனம் மகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

குறள் எண் 84 (பொருள்)

விருந்தோம்பல் ஒரு கடமை அல்ல. வந்தோரை அகமகிழ்ந்து முகமலர்ந்து வரவேற்று, பாசத்துடன் பக்கத்தில் அமர்ந்து உள்ளன்புடன் உரையாடி, வருவோருக்கு ஏற்ப தயாரித்த உணவுகளை பரிவோடு பரிமாறி, அவர்கள் சுவைத்து உண்பதைக் கண்டு அகமகிழ்ந்து அன்போடு உபசரித்து, உண்டபின் பண்போடு அவர்கள் குடும்பத்தினரையும் விசாரித்து குதூகலத்துடன் அவருடைய வருகைக்கு நன்றி சொல்லி வாயில் வரை சென்று வாயார வாழ்த்தி வழி அனுப்புதல்தான் விருந்தோம்பலின் சிறப்பு. அதனால் ஏற்படும் புத்துணர்வை நாம் அனுபவிக்கும் பொழுதுதான் உணரமுடியும்.

Victory king (VK)

Friday, July 17, 2020

தன் குற்றமும் பிறர் குற்றமும்!

Status 284

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை
உணராதவனே குருடன்.

மகாத்மா காந்தி

தன் குற்றங்களை உணராதவன் காதிருந்தும் செவிடன். மற்றவர் சொற்களை ஏற்கமாட்டான்.  நாவிருந்தும் நல்லவை நாடா. புறம் பேசுவதில் வல்லவன். இவற்றால் தன் வாழ்வை தானே அழித்துக் கொள்ளும் நிலைதான்.

எனவே, புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ? என்ற வள்ளுவர் கூற்றின்படி  இவற்றை மனதில் கொண்டு வாழ்வோமேயானால் நாம் வாழ்வதற்கான பயனைஅடைவோம்.

Victory king (VK)

Thursday, July 16, 2020

கோபமும் சாந்தமும்!

Status 283

கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்து விடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

சுவாமி விவேகானந்தர்

கோபம் அழிக்கும்... சாந்தம் செழிக்கும். இது அறிஞர் மொழி. கோபப்படும் பொழுது நாம் நம் நிலையை இழக்கிறோம். நம் நரம்புகள் தளர்வுற்று மூளையின் செயலை இழக்கச் செய்து இதயத்தை பாதிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. எனவே நாம் நம் கோபத்தின் காரணம் ஆராய்ந்து அந்த சூழலை தவிர்க்கலாம்.  சாந்தமுடன் அந்த சூழலை எதிர்கொண்டு நம்மையும் காத்து, அனைவரையும் அரவணைத்து மகிழ்வுடன் வாழலாம். கோபத்திற்கு சிறந்த நிவாரணி சாந்தமே

Victory king (VK)

Wednesday, July 15, 2020

மனசாட்சியின் குரல்!

Status 282

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

குறள் 293(உரை)

தார்மீக பயம் இல்லாதவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தானாகவும் உணரமாட்டார்கள் மற்றவர்கள் எடுத்துரைத்தாலும் கவலைப்படாமல் தாம் செய்த தவறை நியாயப்படுத்த பல காரணங்களை உதிர்ப்பார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை பண்பில்லாமல் வளர்க்கும் பொழுதுதான் அவர்களுக்கு தார்மீக பயம் விட்டுப் போகிறது. எனவேதான் அவர்கள் வாழ்க்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே போய் தம் வாழ்க்கையை சூனியம் ஆக்கிக் கொள்கிறார்கள். எனவே பிள்ளைகளின் நல்வாழ்வு பெற்றோரின் கையில் தான் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

Victory king (VK)

Tuesday, July 14, 2020

தீவினைக்கான பலன்

Status 281

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

புத்தர்

நாம் விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும். அதுபோலத்தான் நாம் செய்யும் வினைகளுக்கேற்ப தான் விளைவுகளும். நாம் செய்யும் நற்செயல்களுக்கேற்ப  நம் வாழ்வில் அனைத்திலும் நன்மைகளை அடைவோம். அதில் சிறிது சறுக்கல் ஏற்பட்டாலும்  செய்த நற்செயலினால் அது தூள் தூளாகி விடும். அதுபோல் நாம் செய்யும் தீவினைகளிலிருந்து  தப்பவே முடியாது. அது நம்மை விரட்டி விரட்டி துன்புறுத்தாமல் விடாது. எனவே தீவினை துறந்து நல்வினையையே ஏற்று நலமுடன் வாழ்வோம்.

Victory king (VK)

Monday, July 13, 2020

நம்மை நாம் புரிந்துகொள்வோம்!

Status 280

பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

சுவாமி விவேகானந்தர்

நாம் மற்றவர்களிடம் இருந்து பண்பையும் அவர்களின் உயர்ந்த எண்ணங்களையும் மட்டும் கற்று நம் மீது நம்பிக்கை வைத்து நம் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து எண்ணத் தூய்மையுடன் நாம் எடுக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவோம். எனவே பிறரைப் பார்த்து வாழாமல் நம்மை நாமே நன்கு புரிந்து கொண்டு நலமாக வாழ்வோம்.

Victory king (VK)

நாவை அடக்குவோம்!

Status 279 

வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.

பித்தகோரஸ்

நாவை நம் வசப்படுத்தி விட்டால் அதைப்போல் உயர்ந்தது ஒன்றுமில்லை. ஆனால் நாவிற்கு நாம் வசப்பட்டுவிட்டால் அதுபோல் தீயதும் ஒன்றுமில்லை.'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்ற திருவள்ளுவர் வாக்கை மனதில் மேற்கொண்டு 'நல்லதைத் தவிர
வேறொன்றும் அறியேன்' என்று கூறுமளவிற்கு நம் நாவை நாம் வசப்படுத்தி விட்டால் நா நயத்துடன் நம் வாழ்க்கை நலமாக வீறுநடை போடும்.

Victory king (VK)

Saturday, July 11, 2020

பேச்சின் வலிமை!

Status 278

அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவமாக பேசினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாக பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
பெருமையாக பேசினால் ஆண்டவனின் அன்பை இழப்பாய்

சுவாமி விவேகானந்தர்

நாம் பேசும் பொழுது மற்றவர்களின் குறிப்பறிந்தும் தன் நிலை தடுமாறாமலும் நிதானத்துடனும் பொருள்படவும், சபை அறிந்தும், மற்றவர்களை ஈர்க்கும் வண்ணமும் அமைதியாக பேசும்பொழுது பேசியதின் மதிப்பை நாம் பெறுவோம். எனவே யோசித்து பேசுவோம். நம் மதிப்பை நிலைநாட்டுவோம்

Victory king (VK)

Friday, July 10, 2020

மகிழ்ச்சி!

Status 277

மகிழ்ச்சி என்பது ஒரு வண்ணத்துப்பூச்சி போல. அதைத் துரத்திக் கொண்டே போனால் பிடிக்கு அகப்படாமலேயே போய்க்கொண்டே இருக்கும். ஆனால் பேசாது அமைதியாக உட்கார்ந்து கொண்டால் அது உங்கள் மீது வந்து உட்காரும்.

பெஞ்சமின்  பிராங்கிளின்

அதுபோல்தான் மகிழ்ச்சியை தேடி நாம் அலையும் பொழுது அது நமக்கு கிடைப்பதற்கு அரிது. நம் நற்செயல்களிற்கு ஏற்பவும் நல்ல எண்ணங்களுக்கு ஏற்பவும் மகிழ்ச்சியானது நம்மை வந்து அடையும். நம் மகிழ்ச்சி என்பது நம் மனதையும் எண்ணத்தையும் பொருத்துதான்.

Victory king (VK)

Thursday, July 9, 2020

அனுபவமே ஆசான்!

Status 276

அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகுதான் பாடத்தை போதிக்கும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் 

நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவத்தை கொடுக்கிறது நமக்கு. நாம் இன்பத்தையும் துன்பத்தையும் நம் வாழ்வில் அனுபவிக்கும் பொழுது அதிலுள்ள நல்லவைகளையும் தீயவைகளையும் நாம் உணர்ந்து அதற்கேற்ப நம் வாழ்க்கைப் பயணத்தை தொடரும் பொழுது நம் வாழ்வே இன்பமயமாகத்தான் இருக்கும். நம் அனுபவம் நமக்கு கொடுத்த பாடத்தை பயனுள்ளதாக்கி கொள்வது நம் கையில் தான் உள்ளது.

Victory king (VK)

Wednesday, July 8, 2020

நம் மதிப்பும் நம் செயல்களின் மதிப்பும்!

Status 275

 உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதை விட, உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்லவை அதுவே சிறந்த வாழ்க்கை.

அன்னை

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:
தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

எனவே நம்மைப் பற்றியும் நம் செயல்களைப் பற்றியும் சிறப்பாக மற்றவர்கள் கூறும் பொழுது தான் நம் மதிப்பு கூடும். நாம் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் இயல்பாக அது மற்றவர்களுக்கு முறையாக சென்றடைய  செய்யும்பொழுது அழியா புகழ் நம்மை தேடி தானே வந்தடையும். நாம் புகழைத் தேடி அலைய வேண்டியதில்லை.

Victory king (VK)

Tuesday, July 7, 2020

புகழ்ச்சியும் இகழ்ச்சியும்!

Status 274

உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு. உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு.வாழ்வில் எளிதில் வெற்றிபெறுவாய்

சுவாமி விவேகானந்தர்

ஒருவர் நம்மைப் புகழந்து பேசும்பொழுது மனம் மகிழ்கிறது. அது ஆணவத்திற்கு அடிகோலுகிறது. ஆணவம் மிகும்பொழுது சுற்றத்தை இழக்கிறோம். சூழலை இழக்கிறோம். மற்றவர்களை அவமதிக்கிறோம். முடிவில் நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அதுபோல் நம்மைத் தாழ்த்தி பேசும் பொழுது மன வேதனையில் ஆத்திரப் படுகிறோம். ஆவேசப்படுகிறோம். நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை வந்து நம் உடலையும் வருத்தி மற்றவர்கள் முன் அவமானப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். எனவே இரண்டிற்குமே ஒரு முக்கியத்துவம் கொடுக்காது அமைதி காப்பதே நாம் நலமாக வாழ்வதற்கு ஒரே வழி.

Victory King (VK)

Monday, July 6, 2020

சாதனைகளும் சோதனைகளும்!

Status 273 

உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள்  பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள்.

ராமகிருஷ்ணர்

சாதனை படைத்த பலரும் பல சோதனைகளுக்கு பிறகு தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள். எனவே சோதனைகள் வரும் பொழுது மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் சோதனைகளை வெற்றியின் முதல்படி என்று எண்ணி அயராது நேர்மையாக உழைக்கும் பொழுது சோதனைகளை எல்லாம் தூள் தூளாக்கி நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.

Victory king (VK)

Sunday, July 5, 2020

பாவமும் புண்ணியமும்

Status 272  

பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத்தருகிறார்.

காஞ்சி மகாபெரியவர்

இறைவன் அருளிய இந்த பிறப்பினை பயனுள்ளதாக்க தர்ம நியாயங்களை கடைப்பிடித்து புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு நம்மை தூய்மை படுத்துக்கொண்டாள் முற்பிறவியில் நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகுவதோடு நம் சந்ததியினரையும் காத்து நம் குடும்பத்தினையும்  காத்து வாழ்வை வளம் பெறச் செய்யும்

Victory king (VK)

Saturday, July 4, 2020

துன்பத்தின் சுமை குறைய!

Status 271

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு
மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்). வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.

ஸ்ரீ அன்னை

எனவே நாம் கஷ்டம் வருங்காலத்திலும் மனம் தளராமல் நேர்மையையும் சத்தியத்தையும் கடைபிடித்து வாழ்ந்தால் நமக்கு துன்பத்தின் சுமை குறைந்து மகிழ்வோடு வாழ வழி பிறக்கும்.

Victory King (VK)

Friday, July 3, 2020

உயிர்கள் மேல் அன்பு காட்டுங்கள்!

Status 270

உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள்.செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

காஞ்சி மஹாபெரியவர்

ஆராய்ந்து அறிய ஆறாவது அறிவைப் பெற்ற பெருமை மனித குலத்திற்கு மட்டுமே உண்டு. அதனை நன்கு உணர்ந்து காஞ்சி மகா பெரியவர் மேலே கூறியது போல் மனித உயிர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவதும் அனைத்து ஜீவன்களிடத்தும் பாசத்தோடு உணவளிப்பதும் இயற்கைச் சூழலை பசுமையாக்க செடி கொடி மரங்களை செம்மை படுத்துவதும் நம் பண்பை வளர்ப்பதுடன் நாட்டையும் செம்மையாக்கும் நற்செயல் ஆகும். குருவின் மகிமையை அறிவோம். குருவை சரணம் அடைவோம்.

Victory king (VK)

Thursday, July 2, 2020

ஓம் ஷாந்தி!

Status 269

என்னோடு 15 ஆண்டுகாலம் கூடவே பணியாற்றி தொடர்ந்து 45 வருட காலம் குடும்ப நண்பராகவும் பயணித்த திரு.வி. சுப்ரமணியம் (69) இன்று மதியம் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலைக் கேட்டு தீராத மனத்துயரத்தில் இருந்து மீளாத நிலையில் அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்பதைத் தவிர வேறு வழியில்லாமல்  இதயத்தை இரும்பாக்கித் தவிக்கும் சோக நிலையில்...

ஓம் ஷாந்தி!

Victory King (VK)

Wednesday, July 1, 2020

சிந்தித்து செயல்படுவோம்!

Status 268

எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைக்கும்போது ஒன்றை மறக்காதீர்கள்.. எதிர்காலம் என்ற ஒன்று உள்ளதை.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா

நாம் இழந்த இன்பங்கள், இழந்த செல்வங்கள், இழந்த உறவுகள், இழந்த நற்பெயர்கள் அனைத்தையும் எண்ணி எண்ணி துன்பப்படாமல் இழப்பிற்கான காரணங்களை ஆராய்ந்தறிந்து சோர்வடையாமலும் மனோதிடத்துடனும் பொறுமையுடனும் தெளிவான சிந்தனையுடனும் இழந்தவைகள் அனைத்தையும் மீட்டெடுக்க நாம் செவ்வனே செயல்பட்டால் இழந்த அனைத்துமே நம்மை வந்தடையும். எனவே நம் எதிர்காலம் இன்பமயமாக சிந்தித்து செயல்படுவோம். சாதித்து மகிழ்வோம்.

Victory King (VK)