Monday, May 31, 2021

நல்லவை பெருக!

Status 2021 (146)  

நல்லவை பெருக பெரு முயற்சிகள் தேவையாக இருக்கிறது. தீயவை பெருக ஒரு சிறுதுளி முயற்சி இருந்தாலே அல்லது தீயவற்றை மனதால் நினைத்தால் கூட போதும்.  சர்வ வல்லமை படைத்ததாய் நம்மில் குடியேறிவிடும். ஒரு கட்டிடத்தை முழுமையாகக் கட்ட வேண்டும் என்றால் அதற்கான மனவலிமை முயற்சிகள் செயல்பாடுகள் என அத்தனை சக்திகளையும் நாம் பயன்படுத்தினால்தான் ஒரு முழுமை கிடைக்கும். ஆனால் அதை அழிப்பவனுக்கு சில மணி நேரங்கள் போதும். இயந்திரத்தை வைத்து இடித்துத் தள்ளிவிடுவார்கள். எனவே, நம் மனதில் எந்த நேரத்திலும் நப்பாசைக்குக் கூட தீய எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாமல் நன்மைகளுக்கு இடம் கொடுத்து நற்பலன்களைப் பெற்று நலமாக வாழ்வோமே!

Victory King (VK)

Sunday, May 30, 2021

பாசம்!

 Status 2021 (146)

மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் மலர் என்ற உறவு பறிக்கும் வரை மகள் என்ற உறவு கொடுக்கும் வரை உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன் உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன் எந்தன் வீட்டு கன்று இன்று எட்டி எட்டிப் போகின்றது கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறது இமைகள் அதை மறைக்கிறது. இந்தப்பாடல் வரிகளை அன்புள்ள அப்பா அம்மாவில் சிவாஜி கணேசன் மகளிடம் உள்ள பாசத்தை தத்துரூபமாக காட்சிப்படுத்தி இருப்பார். பாசம் என்பது நம் ஆழ்மனதிலிருந்து நம்மையும் மீறி வரக்கூடிய ஒரு உணர்வு என்பதற்கு இதுவே ஒரு சான்று. எனவே நாம் பாசத்தையும் நேசத்தையும் வளர்த்துக்கொண்டு அன்பான வாழ்வை அடைவோமே!

Victory King (VK)

Saturday, May 29, 2021

கவலை மறப்போம்!

 Status 2021 (145)

எப்பொழுது வரும் நம் வாழ்க்கையின் இயல்பு நிலை. வருத்தம் மிகுந்து முடங்கி தவிப்பதும் உண்ணுவதும் உறங்குவதும் மட்டுமே இயல்பாகி எப்பொழுதும் சலிப்பான மனம் வெறிச்சோடிய முகம் வெறுப்பான பேச்சு நம் வீட்டிற்குள்ளேயே நாம் முடங்கி கிடக்கும் சிறைவாசம் இவைகள்தான் இன்று நம்முடைய நிலை. உப்பு இருந்தால் தானே உணவு சுவைக்கும் அதுபோல மனதில் மகிழ்வு இருந்தால்தானே வாழ்க்கை இனிக்கும். எனவே இந்நிலையில் நாம் மனம் தளராமல் உறுதியுடன் இருந்து நம் மனதை மகிழ்வோடு வைத்துக்கொள்ள ஆக்கப்பூர்வமாகவும் ஈடுபாடுடனும் நமக்கு பிடித்த செயல்களை செய்தும் நமது பழைய கால இனிய நினைவலைகளை நினைத்து மகிழ்ந்தும் நம் கவலைகளை மறந்து மகிழ்வுடன் வாழ்வோமே!

Victory King (VK)

Friday, May 28, 2021

நா காக்க!

 Status 2021 (144)

எந்தவித சுவடுகளுமே தெரியாமல் அடுத்தவரை கொன்றுவிடக்கூடிய கூர்மையான ஆயுதம் நமது நாக்குதான். பிறரை வார்த்தையால் காயப்படுதுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். அதே நிலமையை அவர்கள் திருப்பித் தந்தால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று. இதனை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் மற்றவர்களை வார்த்தைகளால் கொல்லமாட்டோம். துவேஷத்தால் தூக்கி எறிய மாட்டோம். எனவே நாம் நாவன்மையை நன்கு உணர்வோம். அன்பும் பண்பும் நம்மை விட்டு அகலாது பாதுகாப்போம்!

Victory King (VK)

Thursday, May 27, 2021

உதவி!

 Status 2021 (143)

உதவி என்பது உங்களிடம் எஞ்சியதை பிறருக்கு அள்ளிக் கொடுப்பதல்ல. பிறருக்கு தேவையான பொழுது தேவையான நேரத்தில் தேவையானதை நம்மால் முடிந்த அளவு கொடுத்து உதவுவதே. எனவே, நாம் நல்லவற்றையே சிந்திப்போம், நல்லவற்றையே செயல்படுத்துவோம், நல்லவற்றையே திட்டமிடுவோம். மற்றவர்களுக்கு மனமுவந்து  உதவி செய்யும் மனப்பக்குவம் தானாகவே நமக்கு வந்தடையும்.

Victory King (VK)

Wednesday, May 26, 2021

அறுபதிலும் மகிழலாம்!

 Status 2021 (142)

நாம் 60 வயதை தாண்டிவிட்டால் நாம் முதுமையை புரிந்துகொண்டு நம் அகங்காரத்தை அழித்து பிடிவாதத்தை புறக்கணித்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கடவுள் பக்தியை மேம்படுத்திக்கொண்டு சிரிக்கக் கற்றுக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு உடல் பலவீனமானாலும் உள்ளத்தை உறுதி படுத்திக்கொண்டு நாம் வாழ்ந்த வாழ்க்கை அனுபவத்தை மனதில் நினைவுபடுத்தி மகிழ்ந்து அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ பழக வேண்டும். யார் திட்டினாலும் சிரிக்க கற்றுக்கொண்டு நாம் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் நம்மைப் பார்த்து குற்றம் குறை கூறினாலும் பொறுமை காத்து மனதளவில் நாம் மன்னிக்க கற்றுக் கொண்டுவிட்டால் நமக்கு வயது ஒரு பொருட்டல்ல. முயற்சித்து தான் பார்ப்போமே.

Victory King (VK)

Tuesday, May 25, 2021

பொறாமையை புறந்தள்ளுவோம்!

 Status 2021 (141)  

தம் வளர்ச்சியை விட மற்றவர்கள் வளர்ச்சியை உற்று நோக்குதலும், ஒவ்வொரு விஷயத்திலும் அடுத்தவர்களையே ஒப்பிட்டுப் பார்த்து அதனையே சிந்தித்து சிந்தித்து தன் தகுதிக்கேற்ற திறமையை அழித்துக்கொள்வதும் தான் மனித மனதின் பொறாமை என்னும் கொடுமையான நோய். அடுத்தவனுக்கு கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லை என்று பொறாமை படாத ஒரே விஷயம் இப்படிப்பட்டவர்களுக்கு மரணம்தான். எனவே இப்படிப்பட்ட மனோநிலை உள்ள உள்ளவர்கள் தனிமையில் சிந்தித்து  தம் தகுதிக்கேற்ப தம் முன்னேற்றத்திற்கான வழியை சிந்தித்து செயல்பட்டால் தம் வாழ்க்கையில் முன்னேறி ஒளிமயமான நிகழ்காலமும் எதிர்காலமும் அமையும். பொறாமையை புறந்தள்ளுவோம் மகிழ்வுடன் வாழ்வோம்!

Victory King (VK)

Monday, May 24, 2021

தார்மீக பயம்!

 Status 2021 (140)

பயம் என்பது நமது உணர்ச்சிகளில் ஒன்று. பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த உணர்வானது ஒவ்வொரு விதத்தில் வரும். குழந்தைகள் பயப்படும் பொழுது நாம் அவர்கள் பயத்தை போக்குவதற்கு சில யுக்திகளை கையாளுவோம். நாம் வளர வளர நாம் நம் மனோதிடத்தை வளர்த்து அந்த பயத்தை போக்க முயற்சிப்போம். இத்தகைய பயத்தை நாம் எதிர் கொள்வது எளிது. ஆனால் ஒருவர் தவறு செய்யும் பொழுதும் அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யும் பொழுதும் சற்றும் குற்ற உணர்வில்லாமல் தார்மீக பயம் இல்லாது செயல்படுபவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களுடைய செயல்பாடுகளே அவர்களை அழித்துவிடும்.எனவே பயம் என்ற உணர்வை மனோதிடத்தோடு எதிர்கொண்டு தார்மீக பயத்தோடு நாம் வாழ்வோமேயானால் இறுதிவரை மகிழ்வோடு வாழ்வோம்!

Victory King (VK)

Saturday, May 22, 2021

ஆனந்தமும், பேரானந்தமும்!

 Status 2021 (139)

வெற்றிக்கு முன் நமக்கு அவசியம் தேவை தன்னம்பிக்கை. வெற்றிக்குப்பின் தன்னடக்கம். தோல்விக்கு முன் நாம் செய்ய வேண்டியது முயற்சி. தோல்விக்குப் பின் விடாமுயற்சி. ஆசைப்படுவதற்கு முன் தவிர்க்க வேண்டியது பேராசை. ஆசைப்பட்டது கிடைத்தவுடன் நாம் அடைய வேண்டியது மனத்திருப்தி. வாழ்க்கையில் வசதியை தேடி செல்லும் பொழுது நாம் செய்யவேண்டியது நேர்மையான உழைப்பு. வசதி பெற்றவுடன் நாம் தவிர்க்க வேண்டியது செருக்கு. எனவே ஆத்ம திருப்திதான் ஆனந்தம் என்பதை நாம் உணர்ந்து விட்டால் நமக்கு வாழ்க்கையில கிடைப்பது பேரானந்தம்!

Victory King (VK)

Friday, May 21, 2021

வாழ்தல் இனிது!

 Status 2021 (138)

எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்? கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள். வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல. மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை. மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும். இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போமே! 

அன்னை தெரசா

இன்றைய நிலையில் இன்றிருப்போர் நாளை இல்லை என்று இருக்கும் பொழுது நாம் அன்னை தெரசாவின் அருளுரையை மனதில் கொண்டு வேண்டா வெறுப்புடன் வாழ்ந்து மடிவதை விட அன்புடன் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்து நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைப்போமே.

Victory King (VK)

Thursday, May 20, 2021

வெற்றியின் மூலதனம்!

 Status 2021 (137)

வெற்றிக்கு நம் முதலீடு தொடர் முயற்சி தான். தேனிக்களின் தொடர் முயற்சியினால்தான் நமக்கு சுவையான தேன் கிடைக்கிறது. விதி நம் முயற்சிகளுக்கு பல தடைகளை ஏற்படுத்தினாலும் நாம் தொடர்ந்து முயற்சித்தோமேயானால் ஏதோ ஒரு மூலையில் நமது வெற்றிக்கான பாதையை காண்பித்து நம்மை வெற்றி அடைய செய்து விடும். அடுத்தவர்களை போல் நமக்கு வெற்றி உடனே கிடைக்கவில்லை என்று வருந்தாமல் தொடர்ந்து முயற்சித்தால் நம் திறமைக்கான வெற்றி நம்மை வந்து அடைந்தே தீரும். எதற்கும் மனம் தளராமல் தடைகளை கண்டு அஞ்சாமல் முழு மனதுடன் முயற்சித்து எடுத்த நியாயமான செயலில் வெற்றி அடைந்து மகிழ்ந்து வாழ்வோம்.

Victory King (VK)

Wednesday, May 19, 2021

தவறு ஒரு குற்றமா?

 Status 2021 (136)

தவறு செய்வது என்பது ஒரு குற்றமாகாது. ஆனால் அது ஒரு தொடர்கதை ஆகும் பொழுதுதான் குற்றத்தில் கொண்டு விடுகிறது. தவறுகள் பல விதம். தெரியாமல் செய்வது. புரியாமல் செய்வது. தெரிந்தே செய்வது. இதில் நாம் தெரியாமல் செய்த தவறை உணர்ந்தபின் நம்மை திருத்திக் கொள்வதும் புரியாமல் செய்த தவறை அதைப் பற்றி நன்கு புரிந்தபின் சரியாக செய்வதும் நம்மை நாம் பண்படுத்திக்கொள்ளும் வழியாகும். ஒரு தவறை தெரிந்தே செய்து அதனையே நியாயப்படுத்தி மேலும் மேலும் தவறுகளையே செய்து கொண்டே இருக்கும் பொழுதுதான் நாம் செய்யும் எல்லா குற்றங்களுக்கும் மூல காரணமாகிறது. இத்தகைய நிலை வரும் பொழுது நாம் அதிலிருந்து விடுபட முடியாமல் நாம் நம் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்கிறோம். எனவே  நாம் செய்யும் தவறை உணர்ந்தபின் திருந்தி நம்மை நாம் பண்படுத்திக் கொண்டு வாழ்வோமே!!!

Victory King (VK)

Tuesday, May 18, 2021

நம்மை நாம் மதிப்போமே!

 Status 2021 (135)

நாம் மகிழ்வுடன் வாழ நாம் ஒருவருக்கொருவர் தகுதிகள் பார்க்காமல் மதித்து வாழ வேண்டும். மதித்தல் என்றால் சொல் செயல் நம் சிந்தனை அனைத்திலும் மனிதாபிமானத்தோடு இருத்தல்தான். மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்களா என்பதை விடுத்து நாம் எந்த நிலையிலும் நம் பண்பிலிருந்து மாறாது இருந்தாலே ஏதாவது ஒரு நிலையில் மதிக்காத அவர்களும் நம்மை மதிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுபோல் நம்மை நாம் நேசித்தாலே நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். நம்  செயல் சிறப்பாக உள்ளது என்பதை நம் மனம் நேசித்தால் போதும். மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் நம்மை நாம் நேசித்து மன மகிழ்ச்சியோடு வாழ முயற்சிப்போமே!

Victory King (VK)

Monday, May 17, 2021

அததற்கான மதிப்பைக் கொடுப்போமே!

 Status 2021 (134)

இன்று இயற்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் தான் என்ன? நாம் காடுகளை தொலைத்தோம் மரங்களை அழித்தோம், குளம் குட்டைகளை தரை மட்டமாக்கி விண்ணை முட்டும் கட்டிடங்கள் கட்டினோம், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக பயன்படுத்தாதிருந்தோம், நிலத்தடி நீரை முழுமையாக உறுஞ்சி எடுத்தோம், பூமித்தாயின் நாவினை வரட்டினோம், சுற்றுச்சூழலை முறையாக பயன்படுத்த கவனமின்றி இருந்தோம். அதன் பலன்தான் இன்று நாம் இயற்கையால் பலவிதத்திலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை. ஒன்றை மட்டும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இயற்கைக்காகட்டும் ஒரு தனிமனிதனுக்காகட்டும் நாம் செய்யும் துரோகம் நம்மையே வந்து அடையும என்று.எனவே நாம் மனிதநேயத்தோடு உயிரற்றவை உயிருள்ளவை என்ற பாகுபாடின்றி அனைத்திற்கும் அதற்கான மதிப்பைக் கொடுத்து வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Sunday, May 16, 2021

பிரச்சனைகளில் இருந்து விடுபட!

Status 2021 (133) 

நம்முடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் நம் துன்பங்கள் மட்டும்தான் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்படும் துன்பங்களினால் கஷ்டங்களும் வலிகளும் நமக்கு உண்டாவது உண்மைதான்.  அந்த துன்பங்களை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற எண்ணத்தினாலேயே அவை கொடுக்கும் வலி அதிகமாகிறது.  மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய இமேஜை வளர்த்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் நாம் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போது அதில் இருந்து வெளிவர யோசிப்பதைவிட மற்றவர்கள் நம்மை எப்படி நினைப்பார்கள் என்று யோசித்து யோசித்தே நம் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வளர்கின்றன. யாரும் பார்க்கவில்லை என்றாலோ அல்லது யாரேனும் பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவில்லை என்றாலோ எதிர்மறை எண்ணங்கள் வளர்ந்துகொண்டே போகாது. முயற்சிப்போமே!

Victory King (VK)

Saturday, May 15, 2021

என்று தணியும் இந்த வைரஸின் வேகம்?

 Status 2021 (132)

என்று தணியும் இந்த வைரஸின் வேகம், என்று முடியும் இந்த நம் வாழ்க்கையின் சோகம்? என்று பாரதிபோல் பாடத் தோன்றினாலும் எந்த நிலையிலும் எந்த சூழலையும் சமாளிக்கும் மனப்பக்குவத்துடன் அஞ்சுவதை விடுத்து அஞ்சா நெஞ்சத்துடன் இதுவும் கடந்து போகும், நாம் அனைவரும் பழைய வாழ்க்கையை விரைவில் சந்திக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்று மனதார எப்பொழுதும் நினைத்து வந்தாலே நமது மனச்சுமை நீங்கி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும். வருந்தி வருந்தி அழைத்து விருந்தோம்பல் செய்த நமக்கா இந்த நிலை என்று எண்ணுவதை விடுத்து அந்த நாள் மீண்டும் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று மனதார எண்ணி மகிழ்ந்து நம்மை நாமே புத்துணர்ச்சி செய்துகொண்டு வாழ்வோமே!

Victory King (VK)

Friday, May 14, 2021

வளைந்து கொடுப்பதும், விட்டுக்கொடுப்பதும்!

Status 2021 (132)

வாழ்க்கை என்பது, நாணல் போன்றது; சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பலருக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுப்பதற்கும், முற்றிலும் முறிந்து போகும் அளவிற்கு வளைந்து கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சூழலுக்கு ஏற்ப நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம் தான். அதன் எல்லை எதுவரை என்றும் தெரிந்து வைத்துக் கொள்வது அதைவிட முக்கியம்.  பக்குவப்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொண்டு முற்றிலும் நம்மைத் தொலைத்து விடக் கூடாது. தீய சூழலுக்குள் நாம் தொலைந்து விடாமல் இருக்கும் சூட்சுமம் நம் கைகளில் தான் உள்ளது. 

Victory King (VK)

Thursday, May 13, 2021

நம்பிக்கை துரோகம்!

Status 2021 (131)

நாம் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தவர் நமக்கு துரோகம் செய்து விட்டாரே என்று வருத்தப்பட வேண்டாம். நம்பிக்கை வைத்ததால்தான் அவருடைய சுயரூபம் நமக்குத் தெரிந்தது. இதுவும் நமக்கு ஒரு அனுபவம்தான்.  நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் நம்மை புகழ்ந்தால் அதில் மயங்காமலும் இகழ்ந்தால் தளராமலும் உள்ள மனப்பக்குவத்தோடு நியாயத்தின் பக்கம் நாம் நின்று வாழ்க்கையை கடத்தினால் துரோகிகள் நம்மிடம் கூட இருந்தே குழிபறிக்க முடியாது. எனவே நாம் இருக்கும் வரை துரோகிகளை நம்மிடம் அண்டவிடாமல் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்து நம்மை நாம் பெருமைப்படுத்தி கொள்வோமே!

Victory King (VK)


Wednesday, May 12, 2021

எதிரியின் பலம் அறிவோம்!

 Status 2021 (130)

நாம் நம் எதிரியை  தூக்கி எறிவது பெரிய செயலல்ல. ஆனால் அப்படி நாம் தூக்கி எறியும்முன்னர் அந்த நபரின் சகலத்தையும் அறிந்துகொண்டு, முடிந்தால் அவருடைய தவறை அவரே உணரச் செய்து, சாத்தியமிருந்தால் திருந்தச் செய்து, எதுவுமே முடியாதபட்சத்தில்  பிற்காலத்தில் அவரால் நமக்கு எந்த பிரச்சனையும் வராத அளவுக்கு விவேகத்துடன் தூக்கி எறிய வேண்டும். இல்லை என்றால் நாம் தூக்கி எறியும் ஒரு நபர் பலமடங்காகப் பெருகி நம்மை எதிர்க்க திட்டம் தீட்ட வாய்ப்புண்டு. ஒருவரை  தூக்கி எறிய முடிவெடுத்துவிட்டால் அவரால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு அவர் தன் பலமாக எதை நினைத்துக்கொண்டிருக்கிறாரோ அதை பலவீனமாக்கி அவரால் நிமிரவே முடியாது என்ற நிலையை உருவாக்க நாம் மனதளவில் தயாராக  வேண்டும்.

Victory King (VK)

Tuesday, May 11, 2021

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய!

 Status 2021 (129)

நாம் மரணத்திற்கு பயப்படக்கூடாது. அதனை வெல்லும் சக்தி நமக்கு இல்லை. ஆனால் நாம் மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் பொழுது, துரோகம் செய்யும் பொழுது, அடுத்தவர்களை அழிக்க நினைக்கும் பொழுது, மற்றவர்களைப் பற்றி புறம் பேசும் பொழுது, சுயநலத்திற்காக பொய்யையே மூலதனமாக்கி தன்னை உயர்த்திக் கொள்ளும் பொழுது அந்த பயம் வர வேண்டும். இல்லையேல் நம் செயல்களே நம்மை அணு அணுவாக சீரழித்து கடைசியில் நம் வாழ்க்கையையே நாசமாக்கி விடும்.உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான். இதனை உணர்ந்தால் நமக்கு உண்டு நல்வாழ்வு!

Victory King (VK)

Monday, May 10, 2021

விருந்தோம்பல்!

 Status 2021 (129)

விருந்தோம்பல் என்பது ஏதோ நண்பர்களையும் உறவுகளையும் அழைத்து உபசரிப்பது என்ற ஒரு சம்பிரதாயம் மட்டுமல்ல.பகையை முறிக்கும் ஆற்றல் பெற்றது! நட்பை வளர்க்கும் சக்தி வாய்ந்தது! உறவுமுறைகளை பின்னிப் பிணைக்கும் பாலம்! தலை முறைகளை இணைக்கும் உறவுச் சங்கிலி! தலைமுறை இடைவெளியை குறைக்கும் மேஜிக்! வருபவர்களை அன்போடு வரவேற்று பண்போடு பேசி உள்ளன்போடு உபசரித்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நினைவலைகளை பகிர்ந்து உரையாடி உளம் மகிழ்ந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் அருமை பெருமை தெரியும். எனவே அத்தகைய சந்தர்ப்பங்களை அடிக்கடி ஏற்படுத்தி மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

Sunday, May 9, 2021

அன்னையர் தின வாழ்த்து!

 Status 2021 (128)

நம்மை தன்னுடைய கருவறையில் கருணையுடன் வைத்து காப்பாற்றி இப்பூவுலகை நாம் பார்த்து மகிழச் செய்த நமது அன்னை நம் துன்பம் தொல்லைகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு ஒரு சுமை தாங்கியாக தானிருந்து நம்மை வளர்த்து ஆளாக்கிய அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. அவளை ஒரு நிலையில் சுமையாக நினைத்து ஒதுக்குவோர் மனிதரும் இல்லை. எனவே நமது அன்னையை நாம் மனதார நினைத்து மதித்து போற்றி அவள் மகிழ்ச்சியில் நாம் மகிழ வேண்டும். அவள் ஆசி பெற்று நம் தலைமுறைகள் செழிக்க வேண்டும். அனைவருக்கும் என் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்களுடன்

Victory King (VK)

Saturday, May 8, 2021

கிடைப்பதை ஏற்று பெருமை கொள்வோம்!

  Status 2021 (127)

நம் ஆசைகள் பெரியதாக இருந்தால் நமக்குக் கிடைப்பவை நம் எதிர்பார்ப்புகளைவிட குறைவாகவே இருப்பதாகத் தோன்றும். அது எவ்வளவு கிடைத்தாலும். மனித இயல்பு அது. ஆனால் நம் ஆசைகள் சிறியதாக இருக்கும்போது நமக்குக் கிடைப்பவை கொஞ்சமாகவே இருந்தாலும் அவை நம் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாகவே இருக்கும். பூரணத் திருப்தியும் கிடைக்கும். எனவே, நமக்குக் கிடைப்பதை பெரிதாக நினைத்து பெருமையுடன் ஏற்று ஆத்ம திருப்தியுடன் வாழப் பழகுவோமே! 

Victory King (VK)

Friday, May 7, 2021

இந்த நாளை இனிய நாளாக்கிக்கொள்வோம்!

 Status 2021 (126)

நம்மால் ஒருவருக்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தால்அந்த இடத்தவிட்டு நாம் விலகிட வேண்டும். அது உறவானாலும் சரி. உயிர் நட்பாக இருந்தாலும் சரி. ஆயிரம் உறவுகள் துணையாக இருந்தாலும் நம் வாழ்வை நாம்தான்  எதிர்க்கொள்ள வேண்டும் அவரவர் பாதை அவரவர் பயணம். அவரவர் மனம் அவரவர் வாழ்க்கை.ஒரு கதவு மூடப்பட்டாலும் அதை விட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்து இன்றைய நாளை சிறப்பாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாளை என்பது விதியின் கைக்குள் என்பதை நாம் நன்கு உணர்ந்து நம் வாழ்வை இனிமையாக கடத்த முயல வேண்டும்.

Victory King (VK)

Thursday, May 6, 2021

இயல்புதான் அழகு!

 Status 2021 (125)

வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதிலோ அல்லது மாற்றி சிந்திக்க வேண்டும் என நினைத்துப் புதுமைகளை செய்ய விரும்புவதிலோ தவறில்லை. ஆனால் அப்படி செய்யப்படும் விஷயங்கள் உண்மையிலேயே புதுமையாக இருந்தால் அவை தானாகவே மற்றவர்கள் பார்வைக்குப் புதுமையாகவே சென்றடையும்.  தான் செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களையும் தான் மட்டுமே புதுமையாக செய்வதாகவும், உலகிலேயே அப்படிப்பட்ட புதுமைகளை வேறு யாருமே செய்திருக்கமாட்டார்கள் என்றும் சுய பெருமை பேசுவது நாளடைவில் சலிப்பையே ஏற்படுத்தும். எனவே எதையும் பெருமைக்காக செய்யாமல் இயல்பாக செய்து நம் திறமையை வெளிப்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவதே பெருமை!

Victory King (VK)

Wednesday, May 5, 2021

புத்துணர்ச்சி அடைவோம்!

 Status 2021 (124)

மண்ணில் ஈரம் இருக்கும் வரை செடியின் இலைகள் வாடுவதில்லை. அதுபோல் மனதில் உறுதியும் நம்பிக்கையும் இருக்கும் வரை நாம் எடுக்கும் எந்த முயற்சியும் தோல்வி அடைவதில்லை. மனதளவில் நாம் தளர்வடையும் போழுது நமது சூழலை சுமூகமா க்கி இனிய காட்சிகளைக் கண்டு களித்து காதுகளினால் நல்ல விஷயங்களையே கேட்டு மனதை  மகிழ்வடையைச் செய்து நம் மனதை ஊக்க சக்தி அடைய செய்து மீண்டும் நாம் புத்துணர்ச்சி அடைந்து எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவோம். மனதை மகிழ்விப்பது நம் கையில்தான் உள்ளது என்பதை நாம் நன்கு உணர்ந்து செவ்வனே செயல்பட்டு சிறப்பாக வாழ்வோம்.

Victory King (VK)

Tuesday, May 4, 2021

சரியும் தவறும்!

 Status 2021 (123)

தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான். நாம் செய்யும் தவறை நியாயப்படுத்தி விட முடியாது. அடுத்தவர் தவறு செய்தாலும் நாம் தவறு செய்தாலும் தவறை உணர்ந்து திருந்தி வாழ முயல வேண்டும். தவறு செய்துவிட்டு நியாயப்படுத்தி தங்களை மேதாவிகளாக நினைத்து வாழ்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையே தவறாக தான் முடியும். எனவே அடுத்தவர்கள் தவறு செய்யும்போது நீதிபதியாகவும் நாம் தவறு செய்யும் போது நியாயவாதி ஆகவும் இருந்து நம்மை நாமே ஏமாற்றி கொள்ளாமல் நம் தவறை ஒத்துக்கொண்டு மீண்டும் நம்மை தூய்மைப்படுத்தி வாழ முயல்வோம்!

Victory King  (VK)

சரியும் தவறும்!

 Status 2021 (123)

தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான். நாம் செய்யும் தவறை நியாயப்படுத்தி விட முடியாது. அடுத்தவர் தவறு செய்தாலும் நாம் தவறு செய்தாலும் தவறை உணர்ந்து திருந்தி வாழ முயல வேண்டும். தவறு செய்துவிட்டு நியாயப்படுத்தி தங்களை மேதாவிகளாக நினைத்து வாழ்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையே தவறாக தான் முடியும். எனவே அடுத்தவர்கள் தவறு செய்யும்போது நீதிபதியாகவும் நாம் தவறு செய்யும் போது நியாயவாதி ஆகவும் இருந்து நம்மை நாமே ஏமாற்றி கொள்ளாமல் நம் தவறை ஒத்துக்கொண்டு மீண்டும் நம்மை தூய்மைப்படுத்தி வாழ முயல்வோம்!

Victory King  (VK)

Monday, May 3, 2021

மன நிம்மதி!

 Status 2021 (122)

நடந்ததை நாம் மறக்க முடியாது ஆனால் நாம் நினைப்பதை மாற்றிக்கொள்ளலாம். அதனால் நடந்ததைப் பற்றி பிறரிடம் அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டாம் நம் கருத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம். ஏனெனில் இரண்டுமே நம் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும். எனவே நாம் நாமாக இருப்போம் விரும்பினால் நம்மோடு மற்றவர்கள் பழகட்டும் வெறுத்தால் விலகட்டும். மனநிம்மதி இருந்தால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே அதற்கேற்ப நாம் வாழ்ந்து வளம் பெறுவோம்.

Victory King (VK)

Sunday, May 2, 2021

மனத் தெளிவு!

 Status 2021 (121)

ஏனோ தெரியல என் வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்கு கிடைப்பதில்லை, நான் பாசம் வச்ச யாரும் என்னோடு கடைசி வரையில் இருந்ததுமில்லை என்று தனிமையில் இருக்கும்போது சிந்தித்து வருந்துவதை விடுத்து ஒரு சமயத்தில் நமக்கு ஆறுதலாக பாசத்தோடு இருந்த உறவுகள் நம் ஆயுள் முழுவதும் அப்படியே இருக்க முடியுமா என்று சிந்தித்து அந்த நினைவலைகளை மானசீகமாக கண்முன் கொணர்ந்து மகிழ்வதுடன் இன்றைய சூழ்நிலையில் நாம் இப்படித்தான் இருக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்து மனதை தெளிவாக்கி மகிழ்வுடன் வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, May 1, 2021

தார்மீக பயம்!

 Status 2021 (20)

சொன்ன சொல்லை காப்பாற்றாமலும், அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமலும், செய்யும் தவறுகளை தவறாக நினைக்காமலும, ஒருவருக்கு துரோகம் செயதுவிட்டு அவரிடமே எதுவுமே நடக்காதது போல் சகஜமாக பேசி தார்மீக பயமே இல்லாமல் இருப்பவனுக்கும் இதயநோய் வராது. அவர்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால்தானே? ஆனால் அப்படிப்பட்டவர்கள் இதய நோயில் இருந்து தப்பலாம் ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வாழ்க்கை சூனியமாகி காணாமல் போய்விடும். எனவே சொன்ன சொல்லைக் காப்பாற்றி நயவஞ்சகத்தை தவிர்த்து தார்மீக சிந்தனையோடு நாம் வாழ்க்கை நடத்தினால் நாம் எப்போதும் ஆத்ம திருப்தியோடும் மற்றவர்கள் மத்தியில் மதிப்போடும் வாழ்வோம். வாழ்வில் எப்பொழுதும் நலனையே பெறுவோம்

Victory King (VK)