Tuesday, June 30, 2020

மாற்ற முயற்சிக்க வேண்டாமே!

Status 267

யாரையும் உங்களுக்கு பிடித்தார் போல் மாற்ற முயற்சிக்காதீர்கள். அது வீண் முயற்சி. முடிந்தால் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.‌

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

நம் கருத்துக்களையும் அறிவுரைகளையும் மனிதாபிமான அடிப்படையில் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பொழுது எதிராளி யிடமிருந்து எந்தவித சலனத்தையும் நாம் எதிர்பார்க்கக் கூடாது. நாம் செய்தது ஒரு நற்செயல் என்ற மனசாந்தி யோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நமக்கு தேவையில்லாத மன அழுத்தமும் உடல்நிலை பாதிப்பும் தான் மிஞ்சும். எனவே நமது சுபாவம் சொல்லிலும் செயலிலும் நலன் காப்பதே என்று எண்ணி மகிழ்வோடு வாழ்வோமே

Victory king (VK)

Monday, June 29, 2020

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!

Status 266

தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

வேதாத்திரி மகரிஷி

நம்மால் தாங்க முடியாத  இழப்பு, உண்மைகளை மறைக்க வேண்டிய சூழ்நிலை,  நம் சந்தோஷங்களை வெளியில் காட்டிக் கொள்ள முடியாத சந்தர்ப்பம், இவைகளினால்தான் நம் மனதில் தாங்க முடியாத துன்பம் தொற்றிக்கொள்கிறது அந்த சமயத்தில்தான் நாம் மனோதிடத்துடன் அமைதியுடனும் இருந்து இதனை எதிர்கொள்ளும் உபாயத்தை கண்டறிந்து துன்பத்திலிருந்து தெளிவடைய முயற்சிக்க வேண்டும்.
அனைத்திற்கும் நமக்கு உபாயம் கிடைக்க அபயம் அளிப்பது நம் மனமே.

Victory king (VK)

Sunday, June 28, 2020

அச்சமே துயரம், துயரமே அச்சம்!

Status 265

அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது.
அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

விவேகானந்தர்

அச்சம் என்பது நம் மனதைப் பொருத்தது. தன்னம்பிக்கை இல்லாதபோதுதான் நம்மிடம் அச்சம் குடிகொள்கிறது.இது நாம் குழந்தை பருவத்தில் இருந்தே வளர்க்கப்பட்ட விதத்திலும் இருக்கலாம் அல்லது நம் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்ஒரு நிகழ்வில் பயந்து அது நம் மனதை விட்டு அகலாத நிலையினாலும் இருக்கலாம். எனவே முயற்சி செய்து மனதை திடமாக்க பயிற்சி செய்து அச்சத்தில் இருந்து வெளிவந்து நாம் நம் இயல்பு நிலைக்கு வருவோமேயானால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

Victory king (VK)

Saturday, June 27, 2020

இரக்கமும் இதயமும்!

Status 264

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

சுவாமி விவேகானந்தர்

இந்த நம்பிக்கையில் தான் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சி இருக்கிறது. நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு நம் சிந்தனைகளுக்கு புத்துணர்ச்சி கொடுத்து நாளும் நாளும் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயமாக வெற்றியைத் தான் கொடுக்கும். அந்த வெற்றி திருநாளை எதிர்நோக்கும் ஒவ்வொரு நாளும் நமக்கு பொன்னாளே.

Victory king (VK)

Friday, June 26, 2020

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

Status 263

இளமையில் தூய வாழ்க்கையை மேற்கொள்ளாத வரும் செல்வத்தை தேடிக் கொள்ளாதவரும தமது முதுமை காலத்தில், மீன் இல்லா குளத்தில் இறை தேடி காத்திருக்கும் கிழ கொக்கைப் போல சோர்ந்து அழிவார்கள்.

புத்தர்

இளமைக்காலம் திரும்பி வராது என்பதும் முதுமை நம்மை விரட்டும் பொழுது ஒடி ஒளிய முடியாது என்பதும் அனைவரும் உணர்ந்த ஒன்றே. முதுமை காலம் என்பது இளமை காலத்தின் பிரதிபலிப்பு தான். எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கேற்ப இளமை காலத்தை முழுமையாக பயன்படுத்தி நற் பண்போடு கல்வி அறிவையும் செல்வத்தையும் முறையே பெற்று நாம் வளர்ந்தாள் நாம் முதுமையை பெருமையாக ஏற்க முடியும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு செயல்பட்டு முதுமையை  வெல்வோம்.

Victory King (VK)

Thursday, June 25, 2020

முயற்சி!

Status 262

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

சுவாமி விவேகானந்தர்

எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற ஏக்கத்தை மட்டும் மனதில் கொண்டு சோகத்தை முகத்திற்கு சொந்தமாக்கி செயலற்று அமர்ந்திருப்பவர்களின் நிலை தம் வாழ்க்கையை தாமே சூனியமாக்கி கொள்வது போல்தான்.
எனவே கடந்தகால அனுபவத்தை மனதிற்கொண்டு சீரிய சிந்தனையுடன் எதிர்காலத்தைத் தீர்மானித்து நிகழ்காலத்தில் திறம்பட செயல்பட்டால் எதிர்காலம் இன்ப மயமாகும் என்பதில் சந்தேகமே இல்லை. எதிர்கால வாழ்க்கையை ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்பட்டு எப்பொழுதுமே ஆனந்தமாக வாழ முயற்சிப்போமே.

Victory king (VK)

Wednesday, June 24, 2020

நல்ல உள்ளங்கள்!

Status 261

நேருக்கு நேர் இனிமையாகப் பேசி விட்டு, பின்னர் போகவிட்டுப் புறம் பேசும் மனிதர்களை தவிர்த்து விடுங்கள். அத்தகைய மனிதர்களோடு நட்புக் கொள்வது, பசும்பாலில் கடும் விஷத்தைக் கலந்து பருகுவதற்கு ஒப்பாகும்.

சாணக்கியர்

நயவஞ்சகத்தை மனதில் வைத்து நாவினால் தேனொழுகப் பேசி நம்மை ஈர்த்து நம்மை நாசப்படுத்த நினைக்கும் நயவஞ்சகர்களை இனம் கண்டு கொண்டு ஒதுக்கவேண்டும். உண்மையான அன்பு உள்ளங்களை ஊன்றி கவனித்து உறவு கொள்ள வேண்டும். நல் உள்ளங்களோடு நட்பு கொண்டு நலமாக வாழ வேண்டும்.

Victory King (VK)

Tuesday, June 23, 2020

பேச்சின் மகிமை

Status 260

பேசித் தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள் நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள். உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள். உறுதி காட்டுங்கள் பிடிவாதம் பிடிக்காதீர்கள்.விவரங்கள் சொல்லுங்கள் வீண் வார்த்தை சொல்லாதீர்கள். தீர்வை விரும்புங்கள் தர்க்கம் விரும்பாதீர்கள்.

புத்தர்

இந்த அறிவுரைகளை நம்மால் முடிந்தவரை செயல்படுத்தி நம்மை நாம் காத்து நலமாக வாழ முயற்சிப்போமே.

Victory King (VK)

Monday, June 22, 2020

தர்மங்கள்!

Status 259

உயிரோடு இருக்கையில் எதையும் கொடாமல் இறந்த பிறகு தர்மங்கள் செய்ய ஏற்பாடு செய்வது சுயநலமாகும்.

இந்து தர்ம சாஸ்திரம்

நாம் நம் பெற்றோர்களை அவர்கள் உயிரோடு இருக்கும்போது அன்போடும் பாசத்தோடும் அரவணைத்து இறுதி காலம் வரை விரும்பியவற்றை விரும்பும்போது மனம் கோணாமல் பேணி காப்பதை விடுத்து அவர்கள் இறந்த பிறகு அவருக்காக என்று தான தர்மங்கள் செய்வதும், அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து அவர்கள் நினைவு நாளன்று சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடத்துவதும் நம் பெருமையை பறைசாற்றிக் கொள்வது போல்தான். இவைகள் அனைத்தையும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது செய்திருந்தால் இறந்த பிறகு செய்யும் இச்செயல்கள் இயல்பாகும். நமக்கும் ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும்.

Victory king (VK)

Sunday, June 21, 2020

அர்த்தநாரீஸ்வரர்!

Status 258


சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு    சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவமே  அர்த்தநாரீஸ்வரர்

பெற்றோர்கள்குழந்தைகளை வளர்க்கும் பொழுது தாய் தந்தையர்கள் இருவருமே ஒருங்கிணைந்து தாய் அன்புடன் தந்தையும் தந்தை பாசத்துடன் தாயும் அர்த்தநாரீஸ்வரர் தானே தந்தையும் தாயுமாகி பக்தர்களுக்கு அருள் புரிவது போன்ற உள்ளுணர்வுடன் குழந்தைகளை வழிநடத்தும் போது குழந்தைகள் மனதில் அது ஆழப்பதிந்து பெற்றோர்களிடம் தாய் தந்தை என்ற பேதமின்றி பாசத்துடனும் நேசத்துடனும் வளர்ந்து வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வார்கள். பெற்றோர்களை மதிக்கும் உயர்குணம் தானே அவர்களை வந்தடையும். தந்தையர் தின வாழ்த்துகளுடன்

Victory king (VK)

Saturday, June 20, 2020

இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வோமே!

Status 257

இல்லாத விஷயங்களுக்காக வருத்தப்படுவதை விட்டுவிட்டு இருக்கும் விஷயங்களுக்காக நன்றி சொல்லிப் பாருங்கள். நீங்கள் நினைப்பதை விட உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்.

வேதாத்திரி மகரிஷி

ஆசைகள் பேராசைகளாக மாறாமலும், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமலும்,மற்றவர்களைப் போல் நம் வாழ்க்கை இல்லையே என்று ஏங்காமலும், நம்மை விட வசதியானவர்களை பார்க்கும் பொழுது அவர்களைவிட நாம் மனதளவிலும் குணத்தளவிலும் மேன்மையாகத்தான் இருக்கிறோம் என்பதை எண்ணும் பொழுதும், நம்மைவிட கீழ்மட்டத்தில் இருப்பவர்களை பார்க்கும் பொழுது அவர்கள் வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நிலையில்  இருக்கும் பொழுது நாம் அனைத்து விதத்திலும் நலமாக இருக்கிறோம் என்ற எண்ணம் நமக்கு வரும் பொழுதும் நம் வாழ்க்கை நமக்கு எப்பொழுதுமே மகிழ்வுடன்தான் இருக்கும்.

Victory King (VK)

Friday, June 19, 2020

கல்வியும் பணமும்!

Status 256

முறையாக கற்காத கல்வி, சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்

சாணக்கியர்

நாம் கல்வி கற்பது நம் அறிவை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு அதன் பயனால் நம் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதுடன் நாம் பெற்ற அறிவினை மற்றவர்களுக்கும் பயன்படும் படி செய்தல் மற்றவர்கள் மத்தியிலும் நமக்கு ஒரு நல்ல மதிப்பையும் கொடுக்கும் ஒரு பொக்கிஷம் தான் கல்வி. எனவே கல்வியின் உயர்வை மனதில் கொண்டு முறையாகக் கற்று முன்னேறுவது நம் கையில் தான் இருக்கிறது. அதேபோல்தான் நேர்வழியில் உழைத்து நாம் ஈட்டிய பணத்தை முறையாக பேணிக் காப்பதும் அதைப் பயன்படுத்துவதும். நேர்வழி நம் வழி அதை மேற்கொண்டால் நமக்கு கிடைக்கும் நல்வழி.

Victory king (VK)

Thursday, June 18, 2020

பூமித்தாயின் கருணை!

Status 255

நம் தாயாகிய பூமி, நமது விருப்பங்கள் அனைத்தையும் நமக்கு அளிக்க தயாராக இருக்கிறாள். அவளை பாதுகாத்து போற்றுங்கள்.

காஞ்சி மகாபெரியவர்

நம் வீட்டை காப்பாற்றுவதும், நாட்டை காப்பாற்றுவதும் நம் ஒற்றுமையில் தான் இருக்கிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு கைகோர்த்து கூட்டு பிரார்த்தனை செய்தும், நல்லதே நடக்க ஒருங்கிணைந்து முழக்கமிட்டால் தீய சக்திகள் அனைத்தையும். விரட்டிவிடலாம். நமது ஒருங்கிணைந்த ஒற்றுமை நம் வீட்டையும் நம் நாட்டையும் நல்வழி படுத்திவிடும். எனவே நமது ஒற்றுமை குரல் ஓங்கி ஒலிக்கட்டும். ஒருமனதாக செயல்படுவோம். வெற்றிக்கு வித்திடுவோம்.

Victory king (VK)

Wednesday, June 17, 2020

கற்றுக்கொண்டே இருப்பவன் இளமையானவன்!

Status 254

இருபது வயதோ எண்பது வயதோ கற்பதை நிறுத்துபவன் வயோதிகன்; கற்றுக்கொண்டே இருப்பவனே இளமையானவன். வாழ்வின் முக்கிய குறிக்கோள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான்.

-ஹென்றி ஃபோர்ட்

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறோமோ, நம் உடலுக்கு உழைப்பைத் தருகிறோமோ, அறிவை மேம்படுத்திக் கொள்கிறோமோ இவைகள் அனைத்துமே நாம் நம் உடல் நரம்புகளுக்கு கொடுக்கும் உற்சாக உந்துவிசைகள். இவைகள் நம் இதயத்தை குளுமையாக்கி, நம் நரம்புகள் சோர்வடையாவண்ணம் பாதுகாத்து நம்மை எந்த வயதிலும் மனதளவிலும், உடலளவிலும் இளமை ஆக்குகிறது. இதை அடைவதற்கான வழி நம் கையில்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

Victory king (VK)

Tuesday, June 16, 2020

நடப்பது அத்தனையும் நல்லதுக்கே!

Status 253

நடந்தது நல்லதாகவே நடந்தது. நடப்பது நல்லதாகவே நடக்கிறது. நடப்பதும்நல்லதாவே நடக்கும் . கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. பலன் தானாகவரும். இந்த உலகில் எதுவும் எவருக்கும் சொந்தமல்ல. நாம் வரும் போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை. போகும்போதும் ஒன்றும் கொண்டு போகப்போவதில்லை.

கீதையில் கிருஷ்ணர்

எக்காலத்தும் எல்லோருக்கும் ஏற்ற உபதேசம். இதை நாம் நன்கு உணர்ந்து விட்டால் நமக்குள் போட்டி, பொறாமை, குரோதம், வஞ்சகம் அனைத்தும் நம்மை விட்டு விலகிப் போகும்.

Victory king (VK)

Monday, June 15, 2020

வெற்றியின் வெற்றி!

Status 252

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில்! அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தான் அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்.

சுவாமி விவேகானந்தர்

நம் நோக்கம் நல்லதாக இருந்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டு, அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டு ஒரு செயலை நாம் செய்யும் பொழுதும், வாழ்வில் பல சாதனைகளை செய்ய முற்படும் பொழுதும் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமே இல்லை.

Victory king (VK)

Sunday, June 14, 2020

அமைதியின் மகிமை!

Status 251

அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவுமில்லை.
உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே!
அமைதியை உங்களுக்குள் தேடுங்கள். மற்றவர்களிடம் தேடாதீர்கள்.

புத்தர்

மற்றவர்கள் விஷயத்தில் தானாகவே தலையிடாமல் இருத்தல், புகழ்ச்சிக்கு ஏங்காதிருத்தல், பொறாமைப் படாமல் இருத்தல், நம்மால் முடியும் என்று தோன்றியதை மட்டும் செய்தல் இவைகளை நாம் கடைபிடித்தால் நம் மனம் அமைதி பெற்று சாந்தமுடன் இருப்போம். நம் சொல் செயல் சிந்தனை அனைத்திலும் தெளிவு இருக்கும். மகிழ்வோடு வாழ்வோம்.

Victory king (VK)

Saturday, June 13, 2020

நம்மை நாம் மேம்படுத்திக்கொள்வோம்!

Status 250

பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

 சுவாமி விவேகானந்தர்

நாம் நலிந்தோரை நசுக்கி நம் வாழ்வை செம்மைப்படுத்த நினைத்தால் வருங்காலத்தில் நம் வாழ்க்கையே நம்மை அழித்துவிடும். அதுவும் ஒரு ஏழையின் வயிற்றில் அடித்து வாழும் பொழுது அந்த ஏழையின் வயிற்றெரிச்சல் நம் குடும்பத்தையே எரித்து சாம்பலாக்கி விடும். இன்று வேண்டுமானால் நாம் செய்வது நமக்கு அது சுகமாக இருக்கலாம். ஆனால் சிதறி சீரழிவதற்கான நேரம் என்றோ ஒரு நாள் வந்தே தீரும். எனவே அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாமல் வாழ்ந்து நம்மை நாம் செம்மைப்படுத்திக் கொள்வோம்.

Victory king (VK)

Friday, June 12, 2020

கற்றவனின் பலம்!

Status 249

கற்றவனின் பலம் அவன் கற்ற கல்வியை பொறுத்தது. வீரனின் பலம் அவனின் படையை பொருத்தது. வியாபாரியின் பலம் அவனின் பொருள் வளத்தை பொருத்தது. அதுபோல, உழைப்பாளியின் பலம் அவனின் உழைப்பை பொறுத்துள்ளது.

சாணக்கியர் நீதி

உழைப்புதான் ஒருவனுக்கு எளிமையை கொடுக்கும், வலிமையை கொடுக்கும், நேசத்தை கொடுக்கும், ஒற்றுமையை கொடுக்கும். மொத்தத்தில் உழைப்புதான் ஒருவனுக்கு உண்மையான உயர்வை கொடுக்கும். உழைப்பில்லா உயர்வு உறுதியானதும்
 இல்லை, நிலையானது மில்லை. எனவே உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை

Victory king (VK)

Thursday, June 11, 2020

தன்னம்பிக்கை பூஸ்டர்!

Status 248

தன்னுடைய சுய புத்தியில் நம்பிக்கை இல்லாத ஒருவனுக்கு என்றுமே அவனுடைய வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலம் என்பது இருக்கவே முடியாது. தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள்.

ரவீந்திரநாத் தாகூர்

தன்னம்பிக்கை என்பது நம் மனதிற்கு ஒரு பூஸ்டர். நமக்கு மனத்தளர்ச்சி ஏற்படும் பொழுதெல்லாம் தன்னம்பிக்கை என்ற பூஸ்டர் தானாகவே நமக்கு எனர்ஜியை கொடுத்து நம்மை செயல்பட வைத்து வெற்றியடையச் செய்யும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஓர் தெளிவான உண்மை.

Victory king (VK)

Wednesday, June 10, 2020

உழைப்பின் மகிமை!

Status 247

கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகிலே மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.

 -விவேகானந்தர்

சூழ்நிலையை சூழ்ச்சியால் சமாளித்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து "எண்ணங்கள் அனைத்தும் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இதன் மூலம்தான் சாதனைகளை படைக்க முடியும்" என்ற அப்துல் கலாம் கூற்றினை மனதில்கொண்டு எந்த சூழ்நிலையையும் நேர்வழியில் சந்தித்து சாதனை செய்வோமே!

Victory king (VK)

Tuesday, June 9, 2020

பொறுமையின் சிறப்பு!

Status 246

பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியைவிட மேலான இன்பமில்லை. இரக்கத்தைவிட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலைவிட ஆற்றல்மிக்க ஆயுதமில்லை.

 -குருநானக்

அன்பைவிட சிறந்த பண்பு இல்லை. எனவே நம் இதயத்தில் அன்பு மட்டும் இருந்தால் நமக்கு அனைத்திலும் திருப்தி என்பது தானே வந்தடையும். எதையும் பொறுமையாக கையாளும் திறமையுடன் இரக்க குணமும் ஈகை மனப்பான்மையும் பெற்று அடுத்தவர்கள் மமதையையும் மிதமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் அடைந்து நம்மனதை இலேசாக்கி கொள்ளும் சக்தியைப் பெறுவோம்

Victory king (VK)

Monday, June 8, 2020

மானுடப் பிறவி!

Status 245

மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது. உயர்ந்த  அறநெறிகளைக் கேட்பது அரிது.ஆயிரம் வீண்வார்த்தைகளை விட, கேட்பவர்களுக்கு இதம் தரும் ஒரு நல்ல வார்த்தை மேலானது

புத்தர்

அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

என்ற ஔவை வாய் மலர்ந்த பெருமைமிகு மானிடப் பிறவியைப் பெற்ற நாம்
நம்மை நாடி வருபவர்களுக்கு நாம் நல்லது செய்யாவிடினும் கடுமையாகப் பேசி அவர்கள் இதயத்தை துளைக்காமல் ஆறுதலாகப் பேசினாலே அவர்கள் நாடிவந்த உதவியை அடைந்த பெருமையை அடைவார்கள். நாம் பெற்ற சிறப்புமிகு இப்பிறவியில் இதை மட்டுமாவது செய்ய முயல்வோமே.

Victory king (VK)

Sunday, June 7, 2020

திருப்தியான வாழ்க்கை!

Status 244

உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள் அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி.

புத்தர்

நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன் அதனை நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து திட நம்பிக்கையுடனும் முழு மனதுடனும் தீர்மானித்து செயல்படுத்த வேண்டும். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தான் அதனுடைய பையன் நம்மை வந்தடையும். எனவே நம் வெற்றியின் ரகசியம் நம் கையில் தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நாம் வெற்றிக்கனியை சுவைத்து மகிழலாம்

 Victory king (VK)

Saturday, June 6, 2020

வாழ்க்கைப் பாடம்!

Status 243

வாழ்க்கையில் யாரையும் பழிக்காதீர்கள். நல்லவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறார்கள். மோசமான மக்கள் உங்களுக்கு அனுபவத்தை கொடுக்கிறார்கள். மிகவும் மோசமான மக்கள் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கிறார்கள். சிறந்த மக்கள் உங்களுக்கு இனிமையான பல நினைவுகள் கொடுக்கிறார்கள்.

புத்தர்

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்னல்களும் இனிமையான நிகழ்வுகளும் கலந்து தான் வரும். இன்னல்கள் வரும்பொழுது அதற்கான காரணம் அறிந்து அதையே ஒரு அனுபவமாக ஏற்று நம்மை நாம் சுய பரிகாரம் செய்து கொண்டு அதையே ஒரு இனிய நிகழ்வாக ஏற்று வாழ்ந்தால் வாழ்வின் சுமை அறியாது மகிழ்வோடு வாழலாம்

Victory king (VK)

Friday, June 5, 2020

எதிர்பார்ப்புகள்

Status 242 

எதிர்பார்ப்புகள் சில சமயங்களில் ஏமாற்றங்களை தரும். கடமையைச் செய்து பலனை எதிர்பாராமல் இருப்பதே அனேக அற்புதங்களுக்கு
வழிவகுத்துவிடும்.

பகவத் கீதை

எதிர்பார்ப்புகள் மூன்று வகைப்படும்

1. மற்றவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. இதனால் நமக்கு மனவுளைச்சல் மட்டுமே வந்தடையும்.

2.நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு ஏக்க எதிர்பார்ப்பு. இதில் நாம் எண்ணியது நடந்துவிட்டால் மகிழ்ச்சி இல்லையேல் வேதனைதான்

3. நாம் மற்றவர்களிடம் எதையாவது எதிர்பார்த்து உதவி செய்தல். இது ஒருமுரண்பாடான செயல். எதிர்பார்த்தது நடக்குமா நடக்காதா என்ற மன உளைச்சலிலேயே நம் உடல் நலம் கெடும்.
எனவே நம் செயலும் சிந்தனையும் எதிர்பார்ப்பின்றி இருக்கும் பொழுதுதான் நமக்கு மகிழ்ச்சி என்பது நிலைக்கும்.

Victory king (VK)

Thursday, June 4, 2020

வாழ்க்கைக்கு மரியாதை!

Status 241

நாம் இந்த வாழ்க்கைக்கு எந்த அளவு மரியாதை தருகிறோமோ அதே அளவு மரியாதையை வாழ்க்கையும்  நமக்குத் தரும் என்பது விதி. மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியும், அலுப்பும் சலிப்புமாக எதிர்கொண்டால்  அவ்வாறே ஆகவும் நம் வாழ்க்கை அமைகிறது.

பகவத் கீதை

நாம் வாழ்க்கையை ரசித்து வாழ முயற்சிக்க வேண்டும். நாம் பசித்து உண்பதும், ருசித்து உண்பதும், இயற்கையை ரசித்து கண்ணுக்கினிய காட்சிகளை கண்டு மகிழ்வதும், மனதிற்கினிய கீதங்களை கேட்டு இதயத்தை சாந்தப்படுத்துவதும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்து ரசித்து அதனுடனே இணைந்து வாழ்வோமேயானால் நம் வாழ்க்கையே ஒரு சொர்க்கம் தான். முடிந்தவரை முயற்சித்து மகிழ்வோமே.

Victory king (VK)

Wednesday, June 3, 2020

வாழ்க்கையில் வெற்றி பெற!

Status 240

வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை. வாழ்க்கையில் பிற்பகுதியில் வெற்றிபெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.

பகவத் கீதை

இளம் வயதில் வளர்ப்பு சரியாய் இருபின் பெற்றோர்களின் ஆதரவையும் அரவணைப்பையும் முறையை பெற்று பெரியோர்களின் அறிவுரையை ஏற்று பொறுப்பை உணர்ந்து வாழ்க்கையை முன்னேற்றி கொள்வார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் தங்கள் அனுபவத்தினால் தன்னடக்கத்தை யும் நிதானத்தையும் அடைந்து பொறுப்பை உணரும் சக்தியையும் பெற்று வாழ்க்கையில் முன்னேறுவார்கள். வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் வெற்றிபெற அவரவர்கள் செயல்பாடுகளே தீர்மானிக்கிறது.

Victory king (VK)

Tuesday, June 2, 2020

வாழ்ந்து காட்டுவோம்!

Status 239

எடுத்துச் சொல்வது யாருக்கும் எளிதான செயல். ஆனால் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதே சிறந்தது.

காஞ்சி மஹாபெரியவர்

நாம் ஒருவருக்கு அறிவுரை கூறும் பொழுது அதற்கான பண்பு நம்மிடம் அமைய வேண்டும். இல்லையேல் நாம் அவமானப்பட கூடிய நிலைதான் ஏற்படும். அதுபோல்தான் நாம் நம் குழந்தைகளுக்கு அறிவுரை கூறி அவர்களை திருத்துவதை விட நாம் அதற்கான பண்போடு வாழ்ந்து காட்டினால் அது குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்துவிடும். சொல்முறை விளக்கத்தை விட செயல்முறை விளக்கம் மனதை விட்டு அகலாது.

Victory king (VK)