Sunday, May 31, 2020

லட்சியம்!

Status 237

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் தான் கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக் கூடாது.

பகவத் கீதை

நாம் ஒவ்வொருவரும் ஓர் உயர்ந்த லட்சியத்தோடு வாழ முயற்சிக்க வேண்டும் அதற்கு முதலில் நாம் நம்மைப் பற்றி புரிந்து கொள்வதோடு நம்மை முழுமையாக நேசிக்க வேண்டும். நமக்கான விருப்பு வெறுப்பு எதிர்பார்ப்புகள் இவைகள் பற்றி புரிதல் வேண்டும். நாம் ஒரு லட்சியத்தை அடையும் முயற்சியில் இடர்பாடுகள் ஏதேனும் வரும் நிலையில் அதை எதிர்நோக்கும் முழு மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். நம்மால் முடியுமென்ற திடமான நம்பிக்கை நம்பிக்கை வேண்டும். இவைகள் அனைத்தையும் மனதளவில் நாம் ஏற்றுக்கொண்டு விடாமுயற்சியுடன் இலட்சியத்தை நோக்கிய பயணம் செய்தால் வெற்றி நம் பக்கம் தான்.

Victory king (VK)

Saturday, May 30, 2020

தவறுகளும் தண்டனைகளும்!

Status 236

யாரையும் திட்டாதீர்கள் சாபம் விடாதீர்கள் கெடுதல் நினைக்காதீர்கள் நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். மனம் வருந்தினாலே போதும் நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை வந்தே தீரும்.

பிரபஞ்ச நியதி

நமக்கு கெடுதல் செய்து துன்பத்தை தருபவர்களிடம் நாம் அதன் தாக்கத்தினால் மனம் கொந்தளித்து ஏதேனும் பேசும் பொழுது நம் உடல்நலம் கெடுவதோடு நாம் பேசுவது தான் முன்னிலையில் நிற்கும்  எனவே நாம் மனதளவில் வருந்தி அமைதி காப்பது தான் புத்திசாலித்தனம். தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. நம் மன வருத்தமே அவர்களை சுட்டெரித்து விடும். எதிர் வரும் காலத்தில் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீருவார்கள்.

Victory king (VK)

Friday, May 29, 2020

சரி தவறுகள்!

Status 235

 மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளாவிட்டாலும் நாம் நாமாகவே இருப்போம். மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.

பகவத் கீதை

நமக்கு சரி என்று தோன்றியது நியாயமாக இருப்பின் எதற்கும் கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும செயல்வடிவம் கொடுப்பதே சிறந்த செயலாகும். அதுவே நமக்கு மன அமைதியையும் திருப்தியையும் கொடுக்கும்.

Victory king (VK)

Thursday, May 28, 2020

நேர்மை நாணயம் நம்பிக்கை!

Status 234

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்துவிடும். ஆனால் உண்மை ஒருநாள் உலகறிய வெளிவந்தே தீரும். அப்போது யார் யார் எப்படி என்ற மாயையும் விலகும்.

கிருஷ்ண பரமாத்மா

நேர்மை நாணயம் நம்பிக்கை என உண்மையே நாடி வாழ்பவர்களுக்கும் சூழ்நிலையை பொறுத்து அவர்களை தூற்றப்படும் நிலை வரலாம்.ஆனால் அது நிரந்தரமல்ல. உண்மை வெளிவரும் பொழுது அனைவராலும் போற்றப்படுவதுடன் நன்மதிப்பும் கூடவே வந்து சேரும். அதுபோல்தான் பிறர் வாழ்க்கையை அழித்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்கள்  இவர்களுடைய உண்மை வெளிவரும் பொழுதும் அவர்கள் அழிவதுடன் சேர்ந்தோரையும்  சேர்த்து அழித்து விடும். உண்மைக்கு அப்படி ஒரு வலிமை உண்டு.

Victory king (VK)

Wednesday, May 27, 2020

விமர்சனங்கள்!

Status 233

ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறை விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் இரண்டையுமே எதிர்கொள்ள வேண்டும். நேர்மறை விமர்சனங்களால் தலைக்கனம் கொண்டும், எதிர்மறை விமர்சனங்களால் துவண்டும் போகாமல் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் கருத்தில் கொண்டு தொடர்ந்து சென்றால் வெற்றி எளிதில் வந்தடையும்

சாணக்கியர்

நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அதில் நம்முடைய எதிர்பார்ப்பு ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லையே ல் நமது எதிர்பார்ப்பில் ஏதேனும் சிறிது இடர்பாடுகள் இருந்தாலும் நாம் ஏமாற்றம் அடைவோம். மன அமைதி கெடும். எனவே நமது செயலில் அதன் இலக்கை அடைவது மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு முயற்சிகளை மேற்கொண்டால் பலன் நலமாகவே இருக்கும்

Victory king (VK)

Tuesday, May 26, 2020

நம்மை நாம் அறிவோம்!

Status 232

நம்மைப் பற்றி யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?
நம்மைப் பற்றி நாம் அறியாததையா அவர்கள் அறிந்திட போகிறார்கள்

கிருஷ்ண பரமாத்மா

எனவே நாம் மனதார நினைத்த நல்லதொரு கருத்தை மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று சற்றும் தயங்காமல் போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும்
நில்லேன், அஞ்சேன் என்று சூளுரைப்போம்.

 Victory king (VK)

Monday, May 25, 2020

வாழ்க்கை ஒரு சவால்!

Status 231

வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்.
வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள்.
வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுகள்.
வாழ்க்கை ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.
வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.
வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.

 பகவத் கீதை

பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை முறையில் வாழ முயற்சி செய்து பார்க்கலாமே!

Victory king (VK)

Sunday, May 24, 2020

பாசத்தின் பெருமை

Status 230

ராம லட்சுமண பரத சத்துருக்கனர்களுக்கு இணையான சகோதரர்கள் உலகில் எங்குமில்லை. அண்ணன் ராமனிடம் பாசம் செலுத்தும் அந்த மூன்று தம்பியரும் பாசம் செலுத்துவதில் ஒருவரையொருவர் மிஞ்சுகிறார்கள். லட்சுமணன் அதிர்ஷ்டசாலி. அவன்தான் மூவரிலும் ராமனுடன் அதிக நாட்கள் இருந்தவன். பிறந்தது முதல் ராமனின் நிழலாகவே வாழ்ந்தவன். கானகத்திற்கும் அண்ணனுக்குச் சேவை செய்யவென்றே உடன் சென்றவன். தூக்கத்தைத் தொலைத்து இரவிலும் பகலிலும் அண்ணனையும் அண்ணியையும் காவல் காத்து நின்றவன்.

வால்மீகி இராமாயணம்

இந்த இதிகாசத்தை நம் இதயத்தில் நிறுத்தி பாசத்தின் பெருமையை உணர்வோம். இன்றைய உலக சகோதரர்கள் தினத்தில் நம்மோடு இணைந்திருக்கும் சகோதரர்களுக்கு பாசத்தை பரிசாக அளித்து மகிழ்வோம். நம்மை விட்டுப் பிரிந்த சகோதரர்களுக்கு நமது பாசத்தை அஞ்சலியாக செலுத்தி நெகிழ்வோம்.

Victory king (VK)

ராவணன் கூறிய மூன்று இரகசியங்கள்!

Status 229

ராமாயணத்தில் ராமர் தம்பி லட்சுமணனிடம் ராவணன் கூறிய மூன்று ரகசியங்கள்.

1.வாழ்வில் எந்த ஒரு சுப காரியத்தையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அதேபோல் கெட்ட காரியத்தை எந்த அளவிற்கு தாமதப்படுத்த வேண்டுமோ அந்த அளவிற்கு தாமதமாக செய்ய வேண்டும்-
 2.எப்போதும் நமது எதிரியை குறைவாக எண்ணக் கூடாது.
3.வாழ்க்கையில் ஒருவரது ரகசியத்தை எந்தக் காரணம் கொண்டும் உலகத்தில் யாரிடமும் கூறக் கூடாது.

சாகும் தருவாயில் ராவணன் கூறிய இந்த 3 வாழ்க்கை ரகசியங்களும் அனைவரது வாழ்விலும் பொருந்தும்.

Victory king (VK)

Friday, May 22, 2020

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே!

Status 228

எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எண்ணுவதை விட நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று நினைப்பதே வாழ்வை வளமாக்கும்

பகவத் கீதை

நமக்கு ஏற்படும் இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையில் நம் மனதிற்கும் புலப்படாத சில நன்மைகளும் மறைந்திருக்கக்கூடும். எதிர்வரும் காலங்களில்தான் அதை நாம் உணர முடியும். எனவே நமக்கு  கவலைகளும் கஷ்டங்களும் வருங்காலத்தில் இதனை மனதில் கொண்டு ஆறுதல் அடைந்தால் நம் வாழ்நாள் சிறக்கும்

Victory king (VK)

Thursday, May 21, 2020

பேசும் வார்த்தைகள்!

Status 227

நரம்பற்ற நாக்கின் வரம்பற்ற பேச்சானது இரும்பான இதயத்தையும் சிதைத்துவிடும் துரும்பாக. பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால், செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்.

பகவத் கீதை

உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு உன்னை உயர்த்திப் பேசும் போது செவிடனாய் இரு

விவேகானந்தர்

இந்த லாஜிக்கை நாம் பின்பற்றுவதில் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. இருப்பினும் நம் பேச்சானது பிறரைக் காயப்படுத்தாமல் இருந்தால் அதுவே சிறப்பு. இதை நாம் கடைபிடிக்க முடியும். அன்பினாலும் பண்பினாலும் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. அந்த மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே

Victory king (VK)

Wednesday, May 20, 2020

மனசாட்சி

Status 226

உன் பின்னால் நிற்கும் எல்லோருக்கும் உன்னை பிடிக்கும் என்று நினைக்காதே. அதில் எத்தனை பேர் உன் முதுகில் குத்த போகிறார்கள் என்பது உனக்குத் தெரியாது.

பகவத் கீதை

நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஏனென்றால் நம் பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது என்ற அகந்தையில் இருப்பவர்களுக்கு இது ஒரு சரியான நியதி. எனவே பின்னால் இருக்கும் கூட்டத்தை மட்டும் நம்பாமல் நம் மீது நம்பிக்கை வைத்து, நம் செயல்களின் மீது நம்பிக்கை வைத்து,மன சாட்சியுடன் நல்லதையே பேசுவோம் நன்மையையே செய்வோம். எப்போதும் விழித்து இருப்போம்.

Victory king (VK)

Tuesday, May 19, 2020

நல்லவர்களும், தீயவர்களும்!

Status 225

நல்லவர்களுக்கு உதவாமல் போனாலும் பரவாயில்லை. தீயவர்களுக்கு உதவாதீர்கள்.

சாணக்கியர்

மாற்றுக்கருத்துடைய வர்களுடன் நாம் நேருக்கு நேர் நின்று வெற்றியடைய வேண்டும். அதை விடுத்து 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற பார்முலாவை வைத்து தீயவருடன் நட்பு கொண்டு அடுத்தவரை எதிர்கொள்ள நினைத்தால் நம் சுயம் தோற்றுப்போகும். நம் பண்பு காற்றில் பறந்து போகும். நம்மையும் அறியாமல் நம் நாக்கு தடுமாறும்.  'நாம் பேசும் பேச்சில் ஒரு சொல்லேனும் தீமை உடையதாக இருப்பின் அதனால் அவன் செய்த நன்மை எல்லாம் தீமை ஆகிவிடும்' என்ற திருவள்ளுவர் வாக்கின்படி நம் பண்பை நாமே கெடுத்துக் கொள்ளும் நிலை வந்து சேரும். எனவே கூடாக் கூட்டணியைத் தவிர்ப்போம். நல்லவர்களோடு உறவாடுவோம்.

Victory king (VK)

Monday, May 18, 2020

ரகசியங்கள்!

Status 224

உன் இரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்துவிடும். நீயே காப்பாற்றமுடியாத உன்  இரகசியத்தை, மற்றவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்காதே.

– சாணக்கியர்

இரகசியம் என்பது நம் மனதுக்குள்ளேயே வைத்துக் காக்கவேண்டிய ஒரு பொக்கிஷம். இரகசியம் கசிய ஆரம்பித்தாள் ஒரு சிலரது வாழ்க்கையே சூனியமாகிவிடும். சில குடும்பங்களில் காலங்காலமாய் பெரியவர்களால் காப்பாற்றி வந்த ரகசியங்கள் வெளிவரும் பொழுது அது இளைய தலைமுறைகளை சீர்திருத்தவும் வாய்ப்புண்டு. இரகசியங்களை ராணுவ ரகசியங்களை போல் காப்பாற்றி சமயம் வரும் பொழுது சம்பந்தப்பட்டவர்களுடன் பகிர்ந்தால் மட்டுமே கட்டிக் காப்பாற்றிய இரகசியத்தின் வலிமை பயனளிக்கும்

-Victory king (VK)

Sunday, May 17, 2020

திருத்திக்கொள்ளும் தவறுகள்

Status 223

மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்;  எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்து பாடம் கற்க  உங்கள் வாழ்நாள் போதாது.

-சாணக்கியர்

நம் மீது தவறு இருக்கும் பட்சத்தில் பிறர்மீது கோபம் கொள்ளக்கூடாது. நம் தவறை உணர்ந்து அதனை நாம் சரி செய்து கொள்ளும் பொழுது நமக்கு நிம்மதி கிடைக்கும். மற்றவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை திருத்த முயன்று அதில் வெற்றி பெற்றால் அதைவிட பலமடங்கு நிம்மதி அடைவோம்.

-Victory King (VK)

Saturday, May 16, 2020

தர்மத்தின் தாத்பர்யம்!

Status 222

கடலில் பெய்யும் மழை, பகலில் எரியும் தீபம், வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு அனைத்தும் பயனற்றது.

- சாணக்கியர்

பகட்டுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள தன் பணப் பெருமையை காட்ட மற்றவர்களுக்கு உதவி செய்வது போல் காட்டும் மாயை என்றாவது ஒரு நாள் வெளிச்சம் போட்டு காட்டி விடும். இக்கட்டான நிலையில் தவிப்பவர்களுக்கு தக்க சமயத்தில் செய்யும் உதவியும், வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு உடைகள் கொடுத்து உதவுவதும், ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் பழகுவதும் தான் சாலச் சிறந்த தர்மமாகும்.

- Victory king (VK)

Friday, May 15, 2020

குடும்ப ஒற்றுமை!

Status 221

இந்த உலகத்தில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்தவனும் கிடையாது. இதுவே உலகின் இயல்புநிலை என்பதை அறிந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

- சாணக்கியர்

தன் குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி பொது இடத்திலோ, பிறரிடமோ குறை கூறாதீர்கள். உங்கள் குடும்ப மதிப்பை இழக்க நீங்களே காரணமாகி விடாதீர்கள். எனவே நாம் நம் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காத்து மதிப்புடனும் மகிழ்வுடனும் அனைவரும் வாழ இன்றைய உலக குடும்ப தினத்தில் உறுதிகொள்வோம்.

- Victory King (VK)


Thursday, May 14, 2020

காலத்தின் அருமை!

Status 220

''மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்''

- டார்வின்

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகளை நாம் நம் மனதை விட்டு அகலா வண்ணம் பற்றிக்கொண்டு வாழ்க்கையில் நம் நேரத்தின் அருமையை புரிந்து கொண்டு சோர்வில்லாமல் செயல்பட்டால் எங்கும் எதிலும் வெற்றிதான்.

- Victory king (VK)

Wednesday, May 13, 2020

உள்ளத்தில் நல்ல உள்ளம்!

Status 219

உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரான தாகவே இருக்கும்

பாரதியார்

உயர் நோக்குடனும் உள்ளத் தூய்மையுடனும் ஓர் இலக்கை நோக்கி பயணம் செய்யும்பொழுது எதிர்வரும் இன்னல்கள் ஏதேனும் இருந்தாலும் மனோதிடத்துடன் அதனை சந்தித்து வெற்றியடைய முடியும்.

Victory king (VK)

Tuesday, May 12, 2020

தன் குறை உணர்தல்!

Status 218

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.

மகாத்மா காந்தி

குறை கூறுதல் என்பது ஒரு தொற்று நோய். தன் குற்றத்தை மறைப்பதற்கு ஒரு வடிகால் மற்றவர் குற்றங்களை அலசி மகிழ்வது தான் தார்மீகப் பொறுப்பற்றவர்களுக்கு ஒரு எளிய வழி. மற்றவர்களை மட்டம் தட்டி தங்களை உயர்த்திக் கொள்ளும் சுய நாடகம் தான் அது. மற்றவர்களை குறை கூறுவது என்பது நம் ரத்தத்தில் சிறுவயதிலிருந்தே ஊறிப்போன ஒன்றாகும். நாம் கல்லில் தடுக்கி விழுந்து விட்டால் கல்லைத் தானே திட்டுகிறோம். நாம் எப்பொழுது நம் குறைகளை உணர்கிறோமோ அப்பொழுதுதான் நாம் தெளிவு பெறுவோம். எனவே நம் குறைகளை களைவோம் நலமாக வாழ்வோம்.

Victory king (VK)

Monday, May 11, 2020

வெற்றிகரமான வாழ்க்கைக்கு...

Status 217

உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி

சுவாமி விவேகானந்தர்

நாம் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன் மனதளவில் திட்டமிடல் வேண்டும். பின் அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும். பின் செயல்வடிவம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். முழு முயற்சியுடனும் விடாமுயற்சியுடனும் இலக்கை அடையும்வரை மனம் தளராது உழைக்க வேண்டும். இவைகள் அனைத்தையும் நாம் செயல்படுத்த நம் உடலை நாம் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் பேணி காக்க வேண்டும். வெற்றிக்கு இலக்கணமான இந்த தாரக மந்திரத்தை நாம் கடைபிடித்தால் நாம் எடுக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி அடைவது நிச்சயம்.

Victory king (VK)

Sunday, May 10, 2020

அன்னையர் தினம்!

Status 216

எதுவும் நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும். கவலையை விடுங்கள். முதலில் வாழத் தொடங்குங்கள்.
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.

- அன்னை தெரசா

அன்பு செலுத்துபவள்  தாய்
பாசத்தைப் பொழிபவள் தாய்
அரவணைத்து செல்பவள் தாய்
தன் கருவில் வைத்து அடைகாத்து
தன் உயிரையே பணயம் வைத்து ஈன்றெடுத்த வள் தாய்.
இத்தகைய பெருமை வாய்ந்த அன்னையைப் போற்றுவோம் இந்நன்னாளில்.
எக்காலத்தும் தாய் சேய் ஒற்றுமையைப் பேணிக் காப்போம்.

-Victory king (VK)

Saturday, May 9, 2020

பக்குவப்படும் மனசு!

Status 215

தோல்விகள், நிலைகுலைந்து போக செய்யும் கால சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டம், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள், இவை அனைத்தும் மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள். இதுபோன்ற போராட்டங்களை மன உறுதியுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மனிதன் எவனோ அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக திகழ்கிறான்.

பகவத் கீதை

நாம் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நம் மனதை பக்குவப்படுத்தி கொண்டு விட்டால் நமக்கு கஷ்டங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Victory king (VK)

Friday, May 8, 2020

ஆணவம்!

Status 214

ஆணவம் கொண்டவருக்கு ஆபத்து எப்பொழுது வருமோ  அது ஆண்டவனுக்கே  தெரியாது.

- வால்டேர்

பணம், பகட்டு, பதவி இவைகளின் மீது நமக்கு அதீதமான ஆசை வந்துவிட்டால் தற்புகழ்ச்சி நம்மையும் அறியாமல் நம்மிடம் தாண்டவமாடும். ஆணவம் தலைக்கேறும். கண்கள் சுற்றத்தை மறைக்கும். நட்பை மறைக்கும். உச்சத்தில் மனைவி, குழந்தைகளையே மதியாத நிலைக்கு வந்துவிடும். அதுதான் அழிவிற்கான ஆரம்பம். எனவே இந்நிலை நமக்கு வராது இருக்க நம் தகுதிக்கு ஏற்ப ஆசையையும் மனிதாபிமானத்தையும்  வளர்த்துக் கொள்வோம். இறுதிவரை இன்பமாக இருப்போம்.

- Victory king (VK)

Thursday, May 7, 2020

மன அமைதி பெறும் வழி!

Status 213

மன அமைதி பெற  நீ விரும்பினால் ஒன்று நான் கூறுவேன்.  பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன்     குறைகளைக் காண்.

அன்னை சாரதாமணி

மன அமைதி பெற வேண்டும் என்றால் முதலில் முன் கோபத்தை குறைக்க வேண்டும். கோபத்தை குறைக்க நம்மை சீண்டுபவரை கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும்.  மற்றவர் குறைகளை ஆராய்வதை தவிர்த்தல், மாற்றுக்கருத்து உள்ளவர்களிடமிருந்து ஒதுங்கி இருத்தல் போன்ற இவைகளை கடைபிடித்தால் நமது மன அழுத்தம் குறையும். மேலும் நமக்கு மிகவும் பிடித்த செயல்களில் ஈடுபடுதல், மனம் விட்டுப் பேசி மகிழ்தல் இவைகளின் மூலம் நம் மனம் மேலும் அமைதிபெறும். இத்தகைய சுய கட்டுப்பாட்டினை வளர்த்து நாம் நோயற்ற வாழ்வுடன் மகிழ் வதோடு மற்றவர்களையும் மகிழ்விப்போம்

Victory king (VK)

Wednesday, May 6, 2020

கடின உழைப்பும் அதற்கான பலனும்!

Status 212

மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒரு போதும் நடப்பதில்லை.

- சுவாமி விவேகானந்தர்

தத்துவங்களை காது குளிர கேட்டு மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவற்றை நாம் முதலில் நம் மனதில் நிரப்பிக்கொள்ள வேண்டும். பின் எண்ணங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் விளைவால் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் நம் செயலின் வெற்றியை, உழைப்பின் மகிமையை உணர்வுபூர்வமாக அனுபவித்து மகிழ முடியும். நம் வாழ்க்கைக்கு உழைப்புதான்  முன்னேற்றத்திற்கான ஆணிவேர்.

- Victory king (VK)

Tuesday, May 5, 2020

துன்பம் வரும் காலத்திலும் இன்பமாக இருப்போம்!

Status 211

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. நாம் கடந்து செல்லும் பாதை முழுவதும் சமதளத்தில் இருப்பதில்லை. மேடு பள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். அதற்கு தகுந்தார்போல் நாம் நடந்து சென்றாலும் சரி வாகனத்தில் சென்றாலும் சரி அனுசரித்து தான் செல்கிறோம். அதுபோல்தான் வாழ்க்கை முழுவதும் இன்பமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்பத்திற்கு நடுவில் துன்பம்  வரும்பொழுதுதான் இன்பத்தின் அருமையை முழுமையாக உணரும் முடியும். எனவே துன்பம் வரும் காலத்தும் மகிழ்வுடன் இருக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை எப்பொழுதுமே இன்பம்தான்.

Victory king (VK)

குறிக்கோள்

 Status 210

பேசும்முன் கேளுங்கள் எழுதுமுன் யோசியுங்கள்
செலவு செய்யும் முன் சம்பாதியுங்கள்
முதலீடு செய்யும்முன் விசாரியுங்கள்
குற்றம் செய்யும் முன்
நீதானியுங்கள்   இறப்பதற்கு முன்
தர்மம் செய்யுங்கள்

வில்லியம் ஆர்தர்

கால் போன போக்கிலே நாம் சொல்லக்கூடாது. ஒரு குறிக்கோளை நோக்கி பயணம் செய்யும் பொழுதுதான் அதை சிரமமின்றி அடைய முடியும். எந்த ஒரு செயலில் நாம் அணுகும் பொழுதும் அதன் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் முயற்சியே வெற்றி பெறும். இதை நாம் வாழ்க்கையின் இறுதிவரை கடைபிடித்தால் நம் வாழ்க்கையே வசந்தம் தான்.

Victory king (VK)

Sunday, May 3, 2020

தவறுகளை திருத்திக்கொள்வோம்

Status 209

நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்னொரு தவறை செய்தவராகி விடுவீர்கள்.

-கன்பூசியஸ்

தன்னையும் அறியாமல் தவறுகள் நடப்பது என்பது மனித இயல்பு. அதை உணர்ந்தவுடன் திருத்திக் கொள்வது தான் மனிதாபிமானம். துன்பம் வரும்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் தவறான எண்ணங்கள் மனதில் உந்தும். தவறான செயல்களுக்கு அடிகோலும். எனவே நாம் மனதை நம் கட்டுக்குள் வைத்து அந்த நேரத்தில் தவறு இழைக்காமல் இருந்து விட்டால்  நம் வாழ்க்கை நலமாக இருப்பதுடன் புகழோடும் மகிழ்வோடும் வாழ்வோம்

 -Victory king (VK)

Saturday, May 2, 2020

உண்மையும் பொய்யும்

Status 208

பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

-ஆப்ரஹாம் லிங்கன்

நம் குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்கிறோம் என்ற எண்ணத்தில் அவர்களை அடித்தும் கடுமையாக பேசியும் பணிய வைக்கும் பொழுது குழந்தைகள் நம்மை திருப்திபடுத்த நமக்கு தகுந்தார்போல் உண்மைகளை மறைத்து நம்மை ஏமாற்றும் மனநிலைக்கு வந்து விடுவார்கள். இதன் பிரதிபலிப்புதான் வருங்காலத்தில் அவர்கள் பொய்யையே ஆயுதமாக்கி மற்றவர்களை ஏமாற்ற முனைகிறார்கள். எனவே குழந்தைகளை அன்போடும் பண்போடும் அரவணைத்து அவர்களை நல்வழிப்படுத்த நாம் அப்படியே வாழ்ந்து காட்ட வேண்டும்.

-Victory king (VK)

Friday, May 1, 2020

பாவமும் புண்ணியமும்!


Status – 207

மற்றவர்களுக்கு நன்மை செய்வது புண்ணியம், தீமை செய்வது பாவம்

– சுவாமி விவேகானந்தர்.

நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெட்டது செய்யாமல் இருப்பது ஒருவகையில் நல்லதே. பாவம் புண்ணியம் என்பதெல்லாம் ஏதோ கடவுளுடன் சம்மந்தப்பட்டது என எண்ணிவிட வேண்டாம். எதெல்லாம் நல்லதோ அதெல்லாம் புண்ணியம். எதெல்லாம் தீமையோ அதெல்லாம் பாவம். அவ்வளவுதான்.

-Victory King (VK)