Friday, January 31, 2020

அறிவின் பயன்

Status 120

எல்லா நூல்களையும் கற்றிருந்தாலும், கற்றவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி இருந்தாலும் தான்மட்டும் திருந்தாத வனாக ஒருவன் இருந்தால் அவனைவிட அறிவில்லாதவன் யாருமில்லை

-இந்து தர்ம சாஸ்திரம்

கற்க வேண்டிய நூல்களை குற்றமற கற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்றபடி நடக்க வேண்டும். என்ற திருவள்ளுவரின் கூற்றுப்படி கற்றதினால் நமக்கு கிடைத்த அறிவின் கூர்மையை பயன்படுத்தாது நாம் பண்பற்ற வழியில் நடந்தால் நாம் கற்றதே விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடும். எனவே கற்றதினால் நமக்கு கிடைத்த அறிவின் பயனை முழுமையாக பயன்படுத்தி பண்போடு வாழ்வோம்.

-Victory king (VK)

Thursday, January 30, 2020

உண்மையின் மதிப்பு!

Status 119

இளமையும் அழகும் மறைந்துபோகும். ஆயுளும் செல்வமும் மறைந்துபோகும். பெயரும் புகழும் மறைந்துபோகும். மலைகளும் கூட உடைந்து தூளாகி விடும். நட்பும் அன்பும் மறைந்துபோகும். உண்மை ஒன்றே நிலைத்து நிற்கும்.

- சுவாமி விவேகானந்தர்

பாலில் துளி விஷம் கலந்து விட்டாலும் பால் முழுவதுமே விஷம் தான். அதுபோல் என்னதான் நாம் சொல்வதில் உண்மை இருந்தாலும் ஒரு பொய்யை சேர்த்து உரைக்கும் பொழுது முற்றிலும் பொய்யாக தான் போகும். அதில் உண்மைக்கு மதிப்பு இராது. பொய் சொல்வது என்று ஆரம்பித்து விட்டால் பொய்க்கு மேல் பொய் க்கு மேல் என்று போய் நம் வாழ்க்கையே பொய்யாகிவிடும். உண்மை ஒன்றுதான் எக்காலத்தும் நிலைத்து நிற்கும் ஒரு மகாசக்தி. எனவே எப்பொழுதும் உண்மையே பேசுவோம் உளம் மகிழ்ந்து வாழ்வோம்.

- Victory king (VK)

Wednesday, January 29, 2020

நற்குணம்!

Status 118

பணமோ, பெயர்புகழோ, கல்வி அறிவோ எதையும் சாதித்து விடாது. குணநலன் ஒன்றுதான் கடினச் சுவர்களை எல்லாம் பிளந்துகொண்டு போக வல்லது.

-சுவாமிவிவேகானந்தர்

குணநலம் நன்றாக இருந்தால்தான் மனம் நல்லதையே நினைக்கும் அதன் பிரதிபலிப்பு செயல்வடிவம் கொடுக்கும். சுற்றம் சூழலை மகிழ்விக்கும். அனைவரையும் அரவணைக்கும். வாழ்க்கையை ஒளிமயமாக்கும். எனவே நற்குணத்தை வளர்த்துக்கொள்வோம். நலமாக வாழ்வோம்.

-Victory king (VK)

Tuesday, January 28, 2020

தரமான வாழ்க்கை!

Status 117
வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் தவறான ஆசை தான் அதிகமாகும். எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் வறுமை தான் மிஞ்சும். Standard of living என்பதை வாழ்க்கை தரம் என்று மொழிபெயர்ப்பது சரியல்ல. வாழ்க்கைத்தரம் என்பதை quality of life என்று சொல்லவேண்டும். நற் குணங்களுடன் இறை பக்தியுடன் வாழும் வாழ்வே தரமான வாழ்க்கை.

-ஸ்ரீ காஞ்சி பெரியவர்

வருவாய்க்கு தகுந்தாற்போல் நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொழுதும் அல்லது தேவைகளுக்கு தகுந்தார்போல் வருவாயை உயர்த்த முயற்சித்து அதில் வெற்றி அடையும் பொழுதும் we are in safe zone. அதற்குமேல் ஆசைப்படும் பொழுது பேராசையாக விஸ்வரூபம் எடுத்து நம் வாழ்க்கையே நாசப்படுத்தி விடும். வாழ்வோம் நம் தகுதிக்கேற்ற வாழ்க்கையை.

Victory king (VK)

Monday, January 27, 2020

நம்மை நாம் நம்புவோம்

Status 116

உனக்கு என்ன வேண்டும் என்று உன்னையே நீ வினவிக் கொள். மனநிறைவும் மகிழ்ச்சியும்தான் தேவை என்பது விளங்கிவிடும். இதுவே மனிதப் பிறவியின் பெரு நோக்கம். பிறரிடமிருந்தும் அல்லது எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே! எதிர்பார்த்தல் பெரும்பாலும் ஏமாற்றத்தில் தான் முடிகிறது. இந்த ஏமாற்றம் இன்ப ஊற்றை அடைத்துவிடும்.

- வேதாத்திரி மகரிஷி

நமக்கு வேண்டியதை நாமே முயன்று கிடைக்கும் பொழுதுதான் ஒரு முழுமையான மகிழ்ச்சி நமக்கு ஏற்படும். பிறரை நாம் எதிர்பார்க்கும் பொழுது நமக்கு வேண்டியது கிடைக்காவிட்டால் நமக்குள் ஒரு விரக்தியும் அடுத்தவரிடம் விரோதமும் தான் மிஞ்சும். நம்மை நாமே நம்புவோம் மகிழ்வோம்.

- Victory king (VK)

Sunday, January 26, 2020

வெற்றியும் தோல்வியும்!

 Status 115

நமக்கு வேண்டிய பரிகாரங்கள் நம்மிடமே இருக்கின்றன. இயற்கையை கூட இயக்க வல்ல சக்தி நம்மிடம் உள்ளது. சோம்பேறித்தன மாகவும், திட்டமிடுவதில் கால தாமதத்தையும் உண்டாக்கிக் கொண்டே தோல்வியை தழுவிக் கொள்கின்ற போது விதியின் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்கிறோம். அறிஞர்கள் தங்கள் கஷ்டங்களுக்காக உட்கார்ந்துகொண்டுஅலறுவதில்லை. ஏற்பட்ட தீமைகளை எப்படி மாற்றுவது என்பதையே உவகையுடன் சிந்திப்பார்கள்.

- ஷேக்ஸ்பியர்

நாம் நினைத்தால் தோல்வியை விரட்ட முடியும், வெற்றியை வசப்படுத்த முடியும். வெற்றியோ தோல்வியோ நம் கையில்தான் உள்ளது. அறிவுபூர்வமாக சிந்தித்து விடாமுயற்சியுடன் நேர்வழியில் ஒரு செயலில் இறங்கினால் வெற்றி என்பது நிச்சயம். சீரிய சிந்தனையே வெற்றிக்கு அடிக்கல்.

- Victory king (VK)

Saturday, January 25, 2020

பற்றற்ற மனநிலை!

Status 114

மண்ணாசை வளர்ந்துவிட்டால் கொலை விழுகிறது. பொன்னாசை வளர்ந்துவிட்டால் களவு நடக்கிறது. பெண்ணாசை வளர்ந்துவிட்டால் பாபம் நிகழ்கிறது. இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்ததது. பற்றற்று வாழ்வது என்றால் சன்னியாசி ஆவதல்ல. இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போகட்டும் மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

- கவிஞர் கண்ணதாசன்

நாம் நம் குடும்பத்தை நலமுடன் காக்க குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முழு முயற்சியுடன் முயன்று உழைத்து முன்னேற வேண்டும். தேவைக்கு மேல் ஆசைப்படும் பொழுதும் நாம் முயற்சிக்கலாம். அப்பொழுதுதான் பற்றற்ற நிலை வர வேண்டும். வாழ்வோம் வளமுடன்.

- Victory king (VK)

Friday, January 24, 2020

அகமும் புறமும்!

Status 113

தம் இல்லத்தையும், உடலையும் எப்படி நாகரீக உலகத்திற்கு அழகுபடுத்துகின்றோமோ, அதைப்போல நம் அகத்தினையும் அன்பென்னும் சத்திய நியதியில் அழகுறச் செய்து, நல் ஞானம் பெறுங்கள். உடல் அழகைக் கண்டு மகிழ்வதை போல் அக அழகை அழகு படுத்திடுங்கள்.

- இந்து தர்ம சாஸ்திரம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது நல்லவர்களுக்கான பொன் மொழி. நல்லவர்களுக்கு உள்ளத்தில் உண்மை இருப்பதால் அதன் பிரதிபலிப்பு முகத்தில் பளிச்சென தெரியும். ஆனால் தீயவர்களோ அகத்தில் ஆயிரம்அழுக்கை வைத்துக்கொண்டு, முகத்தில் செயற்கையான சிரிப்புடன் நாவினால் தேனொழுக பேசி மற்றவர்களுக்கு வஞ்சகம் செய்வார்கள். இதை நாம் இனங்கண்டு பழக வேண்டும். எப்பொழுதும் உண்மை உண்மைதான். போலி என்றோ ஒருநாள் கேலிக் கூத்துக்கு ஆள் ஆகிவிடும்.

-Victory King (VK)

Thursday, January 23, 2020

சார்ந்திருத்தல்!

Status 112

ஒருவரது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மற்றவரை அண்டி இருப்பதுதான் ஒருவரது அமைதியை இழப்பதற்கான முக்கியமான காரணமாகும்.

"பராதீனம் பிராண சங்கடம்"

பிறரை அண்டி இருப்பது என்பது துன்பம் தருவதுதான். சுதந்திரம் ஆனந்தம் அளிக்கும். எனவே தன் காலில் நிற்க முயலுங்கள். முடிந்தமட்டும் முயலுங்கள். மனப்பூர்வமாக முயன்றால் பல்வேறு துறைகளில் உங்களால் தன் காலில் நிற்க முடியும் என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

சுவாமி சிவானந்தா

நம்மால் முடியாத பொழுது ஒருவரை நாடி இருப்பதில் தவறில்லை. நாம் உடல் வலிமையுடன் இருக்கும் பொழுது அடுத்தவர் உழைப்பில் வாழ நினைத்தால் அதுவே பழக்கமாகி போய் விடும். அதன் பிறகு உழைக்க நினைத்தாலும் உடம்பு ஒத்துழைக்காமல் அவமானப்படும் நிலை தான் வரும். எனவே நம் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் நலமாக மகிழ்வுடன் வாழ்வோம்.

- Victory King (VK)

Wednesday, January 22, 2020

மனிதாபிமானம்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைத் தற்று.
மன ஒற்றுமை இல்லாத வருடன் சேர்ந்து வாழ்வது, குடிசையுள் நாகப் பாம்புடன் வாழ்வது போன்றதாகும்.

- திருக்குறள் 890

சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல அக்கம்பக்கத்தில் உள்ள வீட்டில் மனிதாபிமான மே சிறிதும் இல்லாத மனித ஜென்மங்களுடனும், சுயநலவாதிகள் உடனும் வாழ்வது என்பது மிகவும் கடினம். அப்படிப்பட்ட சூழ்நிலை குடியிருப்பவர்களுக்கு வந்தால் வீட்டை மாற்றலாம். ஆனால் சொந்த வீட்டை வைத்திருப்பவர்கள் நிலை மிகவும் பரிதாபம் தான் விதியை நொந்து கொள்வதை விட வேறு வழியில்லை. இறைவனால் மட்டுமே இதற்கு பரிகாரம் கொடுக்க முடியும். அந்த நன்னாளை எதிர்நோக்கி வாழ்வோம்.

- Victory king (VK)

Tuesday, January 21, 2020

சுதந்திரனாக இரு!

நடந்ததை எண்ணி வருந்தாதே. கடந்ததை எண்ணிக் கலங்காதே. நீ செய்த நல்ல செயல்களையும் நினைவில் வைத்துக்கொள்ளாதே. சுதந்திரனாக இரு. பலவீனனாக, பயந்தவனாக, முட்டாளாக இருப்பவன் ஆன்மாவை அடைய முடியாது.

- சுவாமி விவேகானந்தர்

நடந்ததை எண்ணிப் பிரயோஜனமில்லை. நடக்கப் போவது என்ன என்று நமக்குத் தெரியாது. நல்லதே நடக்கும் என்ற மனப்போக்குடன் நிகழ்வதை இனிமையாக்குவோம்.

- Victory King (VK)

Monday, January 20, 2020

விழிப்புடன் இருத்தல்!

விழிப்புடன் இருத்தல் என்றால் உறங்காது ஜாக்கிரதையாக எச்சரிக்கையுடன் இருத்தல் நேர்மையுடன் இருத்தல் எதிர்பாராது அகப்பட்டுக் கொள்ளாதிருத்தல் என்பது பொருள் நீ விழிப்புடன் இருந்தால் பல ஆண்டுகளில் செய்வதை சில நாட்களில் செய்து விடலாம் நீ விழிப்புடன் இருந்தால் உனது வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஒவ்வொரு இயக்கத்தையும் உனது இலட்சியத்தைக் நெருங்கி வருவதற்கான ஒரு வாய்ப்பாக உன்னால் மாற்ற முடியும்.

-ஸ்ரீ அன்னை

விழித்திருப்போம் நயவஞ்சகர்களின்  நெஞ்சத்தைத் துளைத்திடுவோம். வஞ்சத்தை விரட்டி விடுவோம். நாம் சற்று அயர்ந்தாலும் நம் மீது ஏறி மிதித்து விடுவார்கள். கவனமாக இருப்போம். வாழ்க்கையை வென்றிடுவோம்.

-Victory king (VK)

Sunday, January 19, 2020

குடும்பம் எனும் பூஞ்சோலை

குடும்பம் ஒரு பூஞ்சோலை.
இதில் பூத்துக் குலுங்கும் பூக்கள் தான் உறவுகள்.
பூஞ்சோலை பாதுகாக்க வேலி அமைத்தும்.
தண்ணிர் ஊற்றி பராமரிப்போம்.
அதுபோல் உறவுகளை  அவ்வப்பொழுது ஒருவரை ஒருவர் சந்தித்தும், தொலைபேசியில் பேசி மகிழ்ந்தும்,
நல்ல பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் மேம்படுத்துவோம்.

என்னதான் பூஞ்சோலையை நன்கு பராமரித்தாலும் சமயத்தில் சில பெருச்சாளிகள் உள்ளே நுழைந்து நாசப்படுத்தி விடும்.
அதுபோல உறவுகளிலும் சமயங்களில் சில புல்லுருவிகள் உள்ளே நுழைந்து உறவுகளை உருக்குலைத்து விடும்.
அதற்கு நாம் சிறிதும் இடம் கொடுக்காமல்
நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்!

Victory king (VK)

Saturday, January 18, 2020

இறை அருளை வளர்த்துக்கொள்வோம்!

அதோ கூப்பிடு தொலைவில் இளைப்பாற இடம் இருக்கிறது என்று தெரிந்தால் தலைச்சுமை பாரமாக தெரியாது. இளைப்பாறும் இடம் தொலைவில் இருக்கிறது என்று தெரியவந்தால் சுமை கனக்க ஆரம்பித்துவிடும்.
உண்மையில் சுமக்கிற பாரம் ஒன்றுதான் என்றாலும் நாம் இளைப்பாற முடியும் என்கிற உணர்வவே ஆறுதலையும் உற்சாகத்தையும் தரும். நாம் புது தெம்பு பெறுவோர் ஆவோம்.

-ஸ்ரீராமகிருஷணர்

நாம் ஒரு நல்ல செய்தி எதிர் நோக்கும் பொழுது அந்த காலம் வரும் வரை மகிழ்ச்சியாக இருப்போம். தீவினை நம்மை வந்து  அடையும் என்று தெரிந்தால் அதன் தாக்கமே நம்மை வேதனைக்கு உள்ளாக்கி விடும். எனவே நடப்பது அனைத்தும்இறைவன் அருளே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.

-Victory king (VK)

Friday, January 17, 2020

தேவைகளை சுருக்கவும்!

தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்லக்கூடாது. பெருக்கினோமேயானால்  அனுபோகத்திலேயயே  மனம் சென்று கொண்டிருக்கும். பழிச் செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித் தொடர் நீளும். தேவைகளை முடிந்த அளவு சுருக்க வேண்டும். தூங்கும்போது தலையணை  தேவைதான். அதற்காக அதனை எந்நேரமும் தலையில் கட்டிக்கொண்டு இருப்பதில்லையே. அதுபோல தேவைப்படும் போது தேவையான அளவில் மட்டும் பொருட்களின் மேலெழும் ஆசையை ஏற்று நிறைவு செய்ய வேண்டியதுதான். வாழ்க வளமுடன்.

- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

அனைத்தும் நம் கையில்தான். நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். முயற்சி செய்துதான் பார்ப்போமே.

Victory king (VK)

Thursday, January 16, 2020

பண்பின் பரிமாற்றங்கள்!

நாம் நம் பண்பை வளர்க்க
அன்போடு பழகவேண்டும் ஆசையை அடக்க வேண்டும் இன்முகத்தோடு பேசவேண்டும் ஈகையை வளர்க்கவேண்டும்
உறவுகளை மேம்படுத்த வேண்டும்
ஊர் மெச்ச வாழவேண்டும்
எதிலும் நிதானம் வேண்டும்
ஏளனம் செய்யாதிருத்தல் வேண்டும்
ஐய்யம் அகற்றவேண்டும்
ஒப்பற்ற எண்ணம் வேண்டும்
ஓசையில்லாமல் உதவ வேண்டும்
ஒவ்வொரு அசைவிலும் பண்பின் பரிமாற்றங்கள் இருக்கும்
ஆகவே நாம் நம் பண்பை வளர்த்துக் கொண்டு நம் சந்ததிகளையும் வழி நடத்துவோம்

- Victory king (VK)

Wednesday, January 15, 2020

இறையருள்!


குதிரை கொடியை உடையவரும், தன் பாச கரங்களால் உலக மக்களை ரட்சிப்பவருமான சூரிய பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நல்லாசி தந்து அருள்புரிய உங்கள் பாதம் பணிகிறேன்.

சூரிய பகவானை உளமகிழ்ந்து வழிபட்டு  பொங்கலிட்டு உறவினர்களுடன் கலந்துரையாடி இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தோம்.  நம் அனைவருக்கும் இம்மகிழ்ச்சியை தொடர்ந்து அருளவும் பாசத்தோடும் நேசத்தோடும் வாழ்க்கையைத் தொடரவும் எல்லாம் வல்ல இறைவனை தொடர்ந்து பிராத்திப்போம். நன்மையே நம்மை நாடி வரும்.

-Victory King (VK)




Tuesday, January 14, 2020

பொங்கலோ பொங்கல்!!!

அகத்தின் அழுக்கை நீக்கி, எண்ணத்தில் தூய்மையை ஏந்தி, முகமலர்ச்சியுடன் நல்லற்றை வா வா என்று வரவேற்று ஆனந்தமாக மார்கழி இறுதி நாளை தை பொங்கல் திருநாளுக்கான போகி என்ற பிள்ளையார் சுழி போட்டு மகிழ்ந்தோம்.

தூய்மை பெற்ற இரு கரங்களைக் குவித்து நாளை இனிதே துவங்கும் பொங்கல் திருநாளில் சூரியபகவானை வணங்கி சர்க்கரைப் பொங்கலுடன் பல அமுதங்களையும் படைத்து அவரை மகிழ்வித்து அவருடைய அருளை பரிபூரணமாக பெறுவோம்.

அனைவரும் பொங்கல் திருநாளை மனமகிழ்வுடனும், முகமலர்ச்சியுடனும் சிறப்பாக கொண்டாடி மகிழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Victory king (VK)

Sunday, January 12, 2020

விவேகானந்தரை பின்பற்றுவோம்!

போலித்தனம் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது. இதுவே நான் விரும்புவது. நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பகலின் பிரகாசம் போல் விரிந்து நிற்கின்ற சத்தியத்தையே நம்பி இருக்கிறேன்.

- சுவாமி விவேகானந்தர்

எழுந்திருங்கள், விழித்திருங்கள், கருதியது கைகூடும் வரை சலியாது உழையுங்கள்! விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று அவரது இந்த அறைகூவலை மனதிற்கொண்டு நேர்மறை இலக்கை நோக்கி பயணிப்போம்.

- Victory king (VK)

Saturday, January 11, 2020

அகந்தை அழிப்போம்!

நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தம் இல்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். நீங்க சொன்னதே சரி, செய்ததே சரி  என்ற வாதாடதீர்கள். உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

-வேதாத்திரி மகரிஷி

அகந்தை என்பது ஒரு அரக்கன். அது நம்மை ஆட்கொண்டு விட்டால், நல்லதையே நினைக்க தோன்றாது. எனவே நான் என்ற அகந்தை நம்மிடம் வந்தடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமையாவது செய்யாதிருத்தல் வேண்டும்

-Victory king (VK)

Friday, January 10, 2020

பொறாமை தவிர்ப்போம்!

பிறர் தன்னை விட சுகமாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம்தான் பலரின் எல்லா துன்பங்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.

- இந்து தர்ம சாஸ்திரம்

பொறாமை என்பது ஒரு புரையோடிப்போன வியாதி. அதிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் கடினம். நம் வாழ்வு இப்படி இருக்கவேண்டும் என்று சிந்திப்பதை விடுத்து அடுத்தவரை பார்த்து ஏங்குவது நாமே நம் வாழ்வைக் கெடுத்துக் கொள்வதற்கு சமம். பிறர் வாழ்வோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டு வாழ்வதை விடுத்து நம் வாழ்க்கையை மேம்படுத்துவோம். நற்பண்புகளை வளர்த்துக் கொள்வோம்.

-Vicktory King (VK)

Thursday, January 9, 2020

தர்மமும் அதர்மமும்!

பணமும் பட்டமும் மனிதரால் விரும்பப்படுகின்றன என்பதற்காகத் தீமையின் துணைகொண்டு அவற்றைத் தேடிக்கொள்ளாதே. அது அதர்மமாகும். அதேபோன்று, வறுமையும் தாழ்வும் மனிதரால் வெறுக்கப்படுகின்றன என்பதற்காக தீமையின் துணைகொண்டு அவற்றைப் போக்கிக்கொள்ளாதே.

- இந்து தர்மசாஸ்திரம்

குறுக்கு வழியில் நாம் ஒரு செயலை சாதிக்க நினைத்தால் ஆரம்பத்தில் இனிக்கும். உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது பல அவமானங்களை சந்திக்க நேரிடும். எனவே நேர்வழியே நல்வழி. நிலையானது. நாம் நிதானத்துடன் இருந்து நேர்வழியில் நடந்து வாழ்வில் வளம் பெறுவோமே!

- Victory King (VK)

Wednesday, January 8, 2020

இலட்சியம்!

வாழ்க்கையில் மிகவும் உயரிய லட்சியம் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அதற்காகவே உங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்யுங்கள். அதன் நினைவாகவே வாழுங்கள். எந்த நேரமும் அதைப் பற்றி கனவும் காணுங்கள். அதற்காக அனைத்தையும் தியாகம் செய்யுங்கள். அந்த லட்சியத்தால் நிறைந்திடுங்கள். அதற்காக செயலாற்றுங்கள். வெற்றி நிச்சயம்.

- சுவாமி விவேகானந்தர்

நமது லட்சியம் நேர்மறையாக இருந்தால் வெற்றி  நிச்சயம். எதிர்மறையாக இருப்பின் விளைவும் எதிர்மறைதான். எண்ணம்தான் விதை. விதைத்ததைதான் அறுவடை செய்ய முடியும்.

- Victory king (VK)

Tuesday, January 7, 2020

நல்வினையும் தீவினையும்

கப்பலை மூழ்கடிக்க ஒரு சிறு ஓட்டையே போதுமானது. அதேபோல் மனிதனின் வாழ்வை கவிழ்க்க ஒரு சிறு தீய செயலே போதும்.

- இந்து தர்மசாஸ்திரம்


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீயசெயல்கள் தீமையை விளைவிப்பதால், அத் தீய செயல்கள் தீயைவிட மிகையாக அஞ்சத்தக்கன.  (குறள் - 202)

என்ற வள்ளுவன் வாக்குப்படி நாம் நலமாக வாழ தீவினைகளை எண்ணத்தாலும் செயல்களாலும் தவிர்த்தும் எந்த தருணத்திலும் தீவினை செய்பவர்களுக்கு துணை போகாமல் இருந்தும் நம்மை நாம் பார்த்துக்கொள்வோம்.

- Victory King (VK) 

Monday, January 6, 2020

முயற்சி

எவ்வளவுதான் முயன்ற போதிலும் கிடைக்கக்கூடியவை தான் கிடைக்கும். கிடைக்க கூடாதவைகள் வருந்தி உழைத்தாலும் வராது. கிடைக்க வேண்டியதை வேண்டாமென்று வெறுத்தாலும் விட்டு நீங்காது. இதை உணராமல் நினைத்து நினைத்து மனம் நொந்து வாடி மாண்டு போவதே மனிதரின் தொழிலாகிவிட்டது.

- ஔவையார்

எப்படியும் கிடைக்கக்கூடியவை கிடைத்தே தீரும் என்றாலும் அதற்கு முயற்சி முக்கியம். முயற்சியில் நேர்மையற்ற செயல், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தல், அடுத்தவரை அழித்து செயல்படுதல் இவைகள் இல்லாது இருந்தால் மட்டுமே சாத்தியம்.

- Victory king (VK)

Sunday, January 5, 2020

அன்பின் சக்தி

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பட்சி, கொசு, மரம், நீர் வாழ் நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதில் இருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். 

-ஸ்ரீகாஞ்சி பெரியவர்

அன்பு நமக்கு கடவுள் கொடுத்த ஒரு வரம். அன்பு சமாதானத்திற்கு ஒரு பாலமாகவும் அமைகிறது. இப்படிப்பட்ட அன்போடு கலந்த பண்பை நன்கு உணர்ந்தவர்கள் நெஞ்சத்தில் வஞ்சத்தை வளர்த்துக்கொள்ள மாட்டார்கள்.
எனவே நம்முள் அன்பை வளர்த்து ஆனந்தமாக வாழ்வோமே.

- Victory King (VK)

Saturday, January 4, 2020

வெற்றி நிச்சயம்

சாப்பிடுவது ஒரு படி சோறு, உடுத்திக் கொள்வது நான்கு முழ வேஷ்டி, ஆனால் 80 கோடி காரியங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கண்மூடித்தனமான இந்த மனித வாழ்வானது மண்பாண்டம் போல உயிர் உள்ளவரை துன்பமாகத்தான் இருக்கும்.

- ஔவையார்

கடவுள் நமக்கு அருளியதை வைத்துக்கொண்டு நாம் ஓர் இலக்கை அடைய எண்ணியதை எண்ணியபடி முடிக்க அதில் கண்ணும் கருத்துமாய் கண்ணியமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதுடன் இன்பமாக வாழ்க்கையை கடத்தலாம்.

-Victory king (VK)

Friday, January 3, 2020

போதுமென்ற மனமே!

போதுமென்ற மனம் உடையவனைக் கண்டு வறுமை அஞ்சும். தர்மச் செயல்களையே செய்பவனைக் கண்டு பாவம் அஞ்சும். கொலையாளிகளைக் கண்டு எல்லா உயிரும் அஞ்சும். இந்த மூன்றையும் கருத்தில்கொண்டு வாழ்வது நல்லது.

- திரிகடுகம்

தர்மத்தின் வழி நடந்து பிறருக்கு மனதாலும் தீவினை நினைக்காமல் வாழ்ந்து நாம் நேர் வழியில் அடைந்தவற்றை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டு மகிழ்வாக வாழ்வோமே!

- Victory King (VK)


Thursday, January 2, 2020

உதவி!


காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது உலகத்தைவிட மிகப்பெரியதாகும்.

- திருக்குறள் 102

பசித்தவர்களுக்கு வயிறார உணவு கொடுத்தல், கஷ்டப்படும்போது கைக்கொடுத்து தூக்கிவிடுதல், வாழ்ந்து நொடித்தவரை நோகடிக்காமல் உற்சாகப்படுத்தல் போன்றவைதான் உதவிக்கு உயிர்கொடுப்பதைப் போலாகும்.   வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாத வண்ணம் செய்யும் உதவியே போற்றுதற்குரிய செயலாகும்.

- Victory King (VK)

Wednesday, January 1, 2020

பேச்சின் நயம்!

பேசுவதைக் காட்டிலும் பேசாமல் இருப்பதே மேலானது. பேசித்தான் தீர வேண்டுமெனில் உண்மையை மட்டுமே பேச வேண்டும். உண்மையைப் பேசும்போதுகூட மற்றவர்களுக்கு நன்மைதரும் அன்பான வார்த்தைகளைக் கொண்டே பேசுவது  நல்லது. உண்மையாகவும், அன்பாகவும் பேச்சு அமைந்தால் மட்டும் போதாது. அது தர்ம நியாயங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்.

- பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா

இந்த 2020 புத்தாண்டில் பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறையில் வாழ முயற்சி செய்து பார்க்கலாமே.

- Victory King (VK)