Friday, November 29, 2019

மனசாட்சி

என்றைக்கும் உண்மை உண்மைதான். பொய் பொய் தான். பொய்யை மெய்யாகவோ மெய்யை பொய்யாகவோ நிரந்தரமாக மாற்றிவிட முடியாது.ஆகவே எப்போதும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடக்கிறவர்  எந்தவித குறைபாடும் இன்றி நலம் அடைவர்.

- இந்து தர்ம சாஸ்திரம்.

குற்றம் செய்தவர் தண்டனையிலிருந்து தப்பலாம் ஆனால் மனசாட்சி அவர்களை துரத்தித் துரத்தி தண்டனையை கொடுத்துவிடும்.

- Victory King (VK)

Thursday, November 28, 2019

பிறப்பின் சிறப்பு!

அதிர்ஷ்டம் வாழ்க்கையில் ஒருமுறைதான் உங்கள் கதவை தட்டும். விழித்திருந்து செயலாற்றினால் சுகம் உங்களுக்கு சொந்தமாகும். பிறப்பால் சிறப்பு பெறுவதைவிட வாழ்ந்து காட்டி சிறப்பு பெறுபவர்களே வரலாறு ஆகிறார்கள். சிலர் பிறக்கின்ற போதே சிறப்போடு பிறக்கின்றனர். வாழ்கின்ற போது சிலர் சிறப்பு அடைகின்றனர் சிலர் மீது சிறப்புகள் போலியாக திணிக்கப்படுவதும் உண்டு.

- ஷேக்ஸ்பியர்

பிறப்பால் சிறப்புற்று இருந்தாலும் வாழ்ந்து காட்டும் போதுதான் அந்த பிறப்பின் அருமையும் பெருமையும் நம் பிள்ளைகளை சென்றடையும்.

-Victory King (VK)

Wednesday, November 27, 2019

பெருமைமிகு பெற்றோரும் மகனும்!

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய உதவி யாதெனின் இவனின் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தாரோ என்று உலகத்தார் புகழும்படி நடத்தல் ஆகும்.

- திருக்குறள் 70

இந்தக் குறள் இருபாலருக்கும் பொருந்தும். இத்தகு பெருமைமிகு பெற்றோர்களை அவர்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்தாளும் துரோகச் செயல் செய்பவர்களுக்கு மன்னிப்பு என்பதே இப்பிறவியில் கிடையாது.

- Victory king (VK)

Tuesday, November 26, 2019

நம்பிக்கையே வாழ்க்கை!

நோயாளி வைத்தியனிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் எத்தனை வருந்தத்தக்கததோ, அத்தனை  வருந்தத்தக்கதே யாரும் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்பதும். உலகில் நம்பிக்கை இல்லாமல் ஒரு கணம்கூட வாழவே முடியாது.முன்பின் தெரியாத டாக்ஸி டிரைவரை நம்பி பின்சீட்டில் தூங்குகிறோம். முன்பின் தெரியாத கம்பவுண்டர் தருகிற மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம். ஒரு கைகாட்டி மரத்தை நம்பி வழி நடக்கிறோம். எனவே நம்பிக்கைதான் மனிதனை உயர்த்தும்.

திருமுருக கிருபானந்த வாரியார்

எந்த செயலையும் நம்பிக்கையுடனும்
 துணிவுடனும் செய்தால் வெற்றி தான். ஆனால் அந்த செயல் நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

Victory King (VK)

Monday, November 25, 2019

கடந்து வந்த பாதை!

அதிகமான சுகத்தை அனுபவிக்கும்போது ஏற்கனவே கடைப்பிடித்து வந்த நற்பழக்கங்களை விட்டுவிடக் கூடாது‌. அதே சமயம் பழைய கஷ்டத்தை அடிக்கடி நினைத்துப் பார்க்கவும் தவறக்கூடாது.

- இந்து தர்ம சாஸ்திரம்

கடந்து வந்த பாதையை மறந்து இன்று அடைந்திருக்கும் புகழுக்கும் செல்வத்துக்கும் அடிமையாகி பேரானந்தத்தில் கர்வம் தலைக்கேறி விட்டால் நமக்கு சறுக்கி விழும் நேரம் நெருங்கிவிட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

Victory King (VK)

Sunday, November 24, 2019

வாழ்க்கை நெறி!

இரும்பில் இருந்து துரு தோன்றினாலும் இரும்பை அந்தத் துருவே அரித்து தின்று விடுகிறது. அதுபோலவே, நெறியிலிருந்து தவறியவனை அவனுடைய செயல்களே நாளுக்குநாள் அழிவை நோக்கி நடத்திச் செல்கின்றன. அதனால் எப்பொழுதும் உன் நெறியிலிருந்து தவறாதே.

- இந்து தர்ம சாஸ்திரம்.

எந்நிலை மாறினாலும் தன்னிலை மாறாத நன்நெறியுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Saturday, November 23, 2019

எண்ணம்போல் வாழ்வு!

தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.

துவக்கத்தில் இன்பம் தருபவை போலத் தோன்றும் தீய செயல்கள் பிறகு துன்பத்தையே தருவதால் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தையே தருகின்ற அத்தீய செயல்களை செய்ய, நெருப்பிடம் பயப்படுவதைக் காட்டிலும் பயப்பட வேண்டும். தீ உடலைத்தான் வருத்தும்; தீவினையோ உயிரை பல பிறவிகளுக்கு வருத்தும்.

- திருக்குறள் 202

நல்லதையே எண்ணுவோம் நன்மையே செய்வோம் நலம் பெற வாழ்வோம்.

Victory King (VK)

Friday, November 22, 2019

செயல்களும் பலனும்!

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறருக்கு தீங்கை ஒருநாளில் செய்தால் நமக்குத் துன்பம் என்றேனும் ஒருநாள் தாமாகவே வந்து சேரும்.

- திருக்குறள் 319

நாம் பந்தை சுவற்றில் அடிக்கும் பொழுது எந்த வேகத்தில் அடிக்கிறோமோஅதே வேகத்தில் நம்மை வந்தடையும். அதுபோல்தான் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களின் பலனும்.

-Victory King (VK)

Thursday, November 21, 2019

மகிழ்ச்சியின் இலக்கணம்

வாழ்க்கைப் பாதை நெடுகிலும் பூக்கள் மட்டுமே பூத்திருக்கும் என்று கடவுள் வாக்களிக்கவில்லை. மழை இல்லா வெயிலோ, கவலையில்லா மகிழ்ச்சியோ, வேதனை அற்ற சமாதானமோ உண்டாகும் என்றும் அவர் வாக்கு அளிக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகள் கொண்டதுதான் வாழ்க்கை. அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் சமமான நிலையும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

- டாக்டர் அப்துல் கலாம்

மகிழ்ச்சியை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதாத நிலையில் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

- Victory King (VK)

Wednesday, November 20, 2019

அறவழி செல்லா அறிவு!

எழுத எழுத பேனாவில் மை குறைந்துகொண்டே வரும். ஆனால் எழுதுபவனின் புத்தி மட்டும் குறைவதில்லை. மேன்மேலும் வளர்ச்சி அடைகிறது.

கத்தியை தீட்ட தீட்ட எவ்விதம் கூர்மை பெறுகிறதோ அதுபோல் பல நல்ல விஷயங்களை படிக்க படிக்க புத்தி கூர்மை பெறுகிறது.

சாணை தீட்டிய கத்தியை நல்ல முறையில் ஜாக்கிரதையாக கைகொள்ள வேண்டும். அதுபோல, கற்றவன் அந்தப் படிப்பை  நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

அறவழி செல்லா அறிவு விழலுக்கு நீர்பாய்ச்சியது போல்தான்.

- Victory king (VK)

Tuesday, November 19, 2019

பேச வேண்டியதை பேச வேண்டிய நேரத்தில்!

பேசுவதற்குத் தகுதியானவர் என்று தெரிந்தும் பேசாமல் இருந்துவிட்டால் நீ ஒரு நல்ல மனிதரை இழந்து விடுகிறாய். பேசுவதற்கு தகுதியற்றவர் என்று புரிந்தும் நீ பேசி விட்டால் உன் வார்த்தைகளை இழந்து விடுகிறாய். அறிவுள்ளவன், மனிதர்களையும் இழப்பது இல்லை, வார்த்தைகளையும் இழப்பதில்லை.

- கன்ஃபூஷியஸ்

பேச வேண்டியதை பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய நேரத்தில் பண்போடு பேசினால்தான் அந்த பேச்சிற்கு மதிப்பு.

- Victory King (VK)

Monday, November 18, 2019

பிடித்தது கிடைக்கவில்லை என்றால்...

உங்கள் அமைதியைக் குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். சூழ்நிலையை மாற்றுவதற்குப் பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதை விட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள். இப்படி நீங்கள் செய்வதால் வருடக்கணக்காக உங்களுக்குக் கெட்டதாக தென்பட்ட உங்கள் சூழ்நிலை அதிசயத்தக்க விதத்தில் நல்லவிதமாக மாறத் தொடங்குவதை காண்பீர்கள்.

சுவாமி சிவானந்தா

பிடித்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை பிடிக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

Victory King (VK)

Sunday, November 17, 2019

நயமோடு பேசுவோமே!

நீ சொல்லுவதே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு என வலியுறுத்திச் சொல்லக்கூடாது.

பேச்சின் தோனியும், வார்த்தைகளும் மிக அடங்கி அமைதியாக வற்புறுத்தல் இன்றி, இருக்க வேண்டும்.

வாதங்கள், பூசல்கள், அதிக எழுச்சி மிக்க பேச்சு இவை அனைத்தையும் தவிர்த்து, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி நிறுத்திவிட வேண்டும்.

 - ஸ்ரீ அரவிந்தர் -

அன்போடு பேசினால் அனைவரையும் அரவணைக்க முடியும்
அதிகாரப் பேச்சு ஆவேசப்பேச்சு நம் ஆற்றலைதான் குலைக்கும்!

- Victory king (VK) -

Saturday, November 16, 2019

நல்லவை அத்தனைக்கும் ஆசைப்படலாம்!

பத்தாயிரம் ரூபாய் இருந்தாலும் உண்ணக்கூடியது ஒருநாழி அரிசி தானே?

ஆயிரம் புடவை இருந்தாலும் ஒரு புடவை தானே கட்டிக் கொள்ள முடியும்?

தேசம் முழுவதும் ஆண்டாலும் படுத்துக் கொள்வதற்கு மூன்று முழம் இடம் தானே வேண்டும்?

நதியில் எவ்வளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் பாத்திரம் கொள்ளும் அளவுதான் நீர்.

இவ்வளவு தெரிந்தும் அதிகப் பிரயாசைப்பட்டு அளவுக்கு அதிகமாக பணம் சேர்க்கிறவர்கள் அனுபவிக்கக்கூடியது அற்பமே என்பதை ஏனோ உணர்வதில்லை.

 - தியாகப் பிரும்மம் -

நல்லவை அத்தனைக்கும் ஆசைப்படலாம்
ஆனால்
ஆணவத்திற்கு மட்டும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது!

- Victory king (VK) -

சிறந்த பெற்றோரின் இலக்கணம்

பிள்ளைகளை வளர்த்து கல்வி அளிப்பதோடு மட்டும் ஒரு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை.

அவர்களுக்கு நற்குணத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் ஒழுக்கத்தில் முறை தவறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதைவிட ஒரு பெரிய உதவியை ஒரு பெற்றோரால் செய்துவிட முடியாது.

இது கடமை மட்டுமல்ல. தர்மமும் கூட.

- நபிகள் நாயகம் -

சிற்பியின் கைவண்ணத்தில்தான் சிற்பத்தின் உயிரோட்டம். அதுபோல பெற்றோரின் வளர்ப்பில்தான் பிள்ளைகளின் எதிர்காலமும் முன்னேற்றமும்!

- Victory King (VK) -