Wednesday, September 30, 2020

மனிதப் பிறவியின் பயன்!

Status 357

மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லி அடுத்தவர் குடும்பத்தை கெடுத்து வாழ்பவர்கள் வீடு ஒருவருக்கும் பயன்படாமல் போகும். அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும். வெள்ளெருக்கு பூப்பூக்கும். பாதாள மூலி என்ற கொடிய விஷம் உள்ள கொடி வளரும். மூதேவி அத்தகையோர் வீட்டில்தான் வாழ்வாள். அந்த வீடுகளில் பாம்புகள்தான் வசிக்கும். மனதில் ஒன்று வைத்து ஒன்று வைத்து வெளியே வேறொன்று பேசுவது கயவர்களின் குணம்.   உள்ளத்தில் ஒரு கருத்தை மறைத்து வெளியே வேறு கருத்துச் சொல்லும் கயவர்களின் உறவே எனக்கு வேண்டாம்!’ 

- முருகப் பெருமானை வேண்டுகிறார் ராமலிங்க வள்ளலார்.

இத்தகைய கொடிய விளைவுகள் வரும் என்று தெரிந்தும் நாம் மனதளவில் திருந்தவில்லை என்றால் மனித ஜென்மம் எடுத்ததே பாழ்.

Victory King (VK)

Tuesday, September 29, 2020

முயற்சியை கைவிடோம்!

 Status 356

முயற்சியை விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்.சிந்திப்போம் செயல்படுவோம் நாளை நமதே!

சுவாமி விவேகானந்தர்

முயற்சி என்பது நம் ஊக்க சக்தி. அதில் எந்தவித தளர்வும் இன்றி முன்னேறிக் கொண்டே இருந்தால் அதன் பலன் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு கிடைத்தே தீரும். அது நாம் எதிர்பார்த்த ஒன்றாகவும் இருக்கலாம் அல்லது எதிர்பாராத மேன்மை உடையதாகவும் இருக்கலாம் அல்லது நமக்கு ஒரு முன் அனுபவமாகவும் அமையலாம். எனவே நாம் முயற்சியை மூலதனமாக்கி முன்னேறி வாழ்க்கையில் வளம் பெறுவோம்! 

Victory King (VK)

Monday, September 28, 2020

கர்மவினைகள்!

 Status 355

ஒரு மந்தையில் ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக் குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்மவினை அவனிடம் வந்து சேரும்.

சாணக்கியர்

கர்மவினை என்பது நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு கிடைக்கும் பலனே. எனவே நாம் எந்த கர்ம வினையில் இருந்தும் தப்ப முடியாது. அதனை நாம் நன்கு உணர்ந்து விட்டால் நாம் பாவ காரியங்களில் இறங்க மாட்டோம். நன்மையே செய்வோம் அதன் பலனை அனுபவிப்போம்.

Victory king (VK)

Sunday, September 27, 2020

வாழ்க்கையில் உயர்வதற்கு சிந்திப்போமே!

 Status 354

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தான் அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்.

சுவாமி விவேகானந்தர்

நம் வெற்றி நம் சாதனையால் ஏற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் செயலில் குறை கூறுவதால் நாம் சாதனையாளராக ஆகிவிட முடியாது. நம் தகுதியை நாம் நிரூபித்து அதனை மற்றவர்கள் கூறவேண்டும். எனவே அடுத்தவர்களை குறை கூறுவதை விடுத்து நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்போம்

Victory King (VK)

Saturday, September 26, 2020

தோன்றின் புகழோடு தோன்றுக!

 Status 353

தோன்றின் புகழோடு தோன்றுக! 

இதை SPB-ன் இறுதி மரியாதை ஒளிபரப்பை பார்த்த பிறகாவது நாம் அனைவரும் உணர வேண்டும். 

நாம் இறந்த பிறகு நம்மைப் பற்றி நான்கு பேராவது நல்லபடி கூறவேண்டும். அதுதான் மானிடப் பிறவியின் பயன். எனவே நமக்கு கிடைத்த புனிதமான இப் பிறவியில் நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் தீது நினைக்காமலும் குரோத எண்ணங்களோடு வாழாமலும் அடுத்தவனை அழிக்காமலும் வாழ்ந்தாலே போதும். ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் ஆகாத நிலையில் ஒரு பிடி சாம்பல் தான் மிஞ்சும் என்பதை உணர்ந்து பண்போடு வாழக் கற்றுக் கொள்வோம்.

Victory King (VK)

Friday, September 25, 2020

SBP - க்கு இதய அஞ்சலி

SPB - க்கு இதய அஞ்சலி!

தன் இசைப் புலமையால் உலக அளவில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஈர்த்து பல்லாயிரக் கணக்கானப் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை பெற்று தனக்கென ஒரு தனி இடத்தை இசை உலகில் பெற்ற உத்தமர் பண்பாளர் இனிய முகத்திற்கு சொந்தக்காரர் இன்று நம்மை விட்டு பிரிந்தார் என்றாலும் SPB அவர்களின்புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை அழியாது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு இதனை தாங்கும் சக்தியை அளிக்க பிரார்த்தனைகளுடன் SPB அவர்களுக்கு இதய அஞ்சலி.

1971 ல் ஓர் இசைக் கச்சேரரியில் கும்பகோணத்தில் நான் அவரை சந்தித்த இனிய நினைவுகளுடன் இந்த இசை மேதைக்கு என் கண்ணீர் அஞ்சலி.

ஓம் சாந்தி!

Victory King (VK)

Thursday, September 24, 2020

பழி பாவத்துக்கு அஞ்சார்!

 Status 352

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்                                      கொள்வர் பழிநாணு வார். 

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

(குறள் 433)

பழி பாவத்திற்கு அஞ்சாதவர்கள் சிறிதும் கவலைப்படாமல் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே இருந்தால் அதன் வினையை அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை. தண்டனைகளில் இருந்து தப்பவே முடியாது. உணர்ந்து செயல் பட்டால் உண்டு நல் வாழ்வு.

Victory King (VK)

Wednesday, September 23, 2020

கண்களின் மொழி!

 Status 351

'கண்களின் மொழி' - கண்கள் வலப்புறம் பார்த்தால் பொய் சொல்கிறது. இடப்புறம் பார்த்தால் உண்மை பேசுகிறது. மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. கீழே பார்த்தால் அடி பணிக்கிறது. எங்கோ பார்த்தால் தவிக்கிறது. வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. மூக்கை பார்த்தால் கோபப்படுகிறது.

ஒரு கவிஞனின் வரிகள்

ஒருவருடைய கண் பார்வையை வைத்து அவருடைய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பதனால்தான் தவறு செய்பவர்கள் நம் முன் நேருக்கு நேர் பேச தயங்குகிறார்கள். எனவே குற்றவாளிகள் தப்பிக்க என்ன முயற்சி செய்தாலும் அவர்கள் கண்களே அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும். இதனை நன்கு உணர்ந்தால் குற்றம் புரிபவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு.

Victory King (VK)

Tuesday, September 22, 2020

மகள்கள்!

 Status 350

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது பெருமைமிகு பெற்றோர்களாய் திகழ்வது அரிது. அதனினும் அரிது, பெண் மகவைப் பெற்றெடுத்தல். இத்தகைய பெருமை மிகுந்த மகளாய் பிறந்து குலவிளக்காய் திகழ்ந்து குடும்பத்தை குதூகலிக்க வைத்துக்கொண்டிருக்கும்  மகள்கள் அனைவரும் நல்ல அறிவாற்றலுடனும் நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து குடும்பத்திற்கும் ஈன்றெடுத்த பெற்றோருக்கும் பெருமை சேர்த்து கொடுக்க இந்த உலக மகள்கள் தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அனைத்து பெற்றோர்களின் சார்பிலும் மனமார வாழ்த்தும்...

Victory king (VK)

Monday, September 21, 2020

முடிந்ததை செய்வோமே!

 Status 349

நம்மை நம்பி வந்தவருக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அன்புடனும் பண்புடனும் பேசி ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லி அவர்கள் நலனை விசாரித்து நம்மால் என்ன முடிந்ததோ அதை அளித்து வாயார வாழ்த்தி வழியனுப்பினாலே அவர்கள் அகமகிழ்ந்து நம்மை வாழ்த்தி வணங்கி விடை பெறுவார்கள். முடிந்ததை முகமலர்ச்சியுடன் செய்து நாமும் அகமகிழ்வோமே!

Victory king (VK)

Sunday, September 20, 2020

கோழிக்குத்தி வானமுட்டி பெருமாள்!

 Status 348

ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் செய்த வானமுட்டி பெருமாள் கோழிக்குத்தி  என்ற கிராமத்தில் அத்திவரதராக விஸ்வரூப தரிசனம் அருள்கிறார்.

'இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும்' என்றும் சனி தோஷம் நீங்கும் என்றும் கூறுகிறார்கள் பக்தர்கள். 

இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் மூவலூரிலிருந்து வலது பக்கம் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அனைவரும் இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று வானமுட்டி பெருமாள் என்ற அத்திவரதரை தரிசித்து பயனடைவோம்.

Victory king (VK)


Saturday, September 19, 2020

சிந்திப்போம் செயல்படுவோம்!

 Status 347

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணி விடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி

புத்தர்

ஒருவர் பேசும் பொழுது நாமும் அதனுடனே பேசினாலோ அவர் பேசி முடிப்பதற்குள் நாம் பேச ஆரம்பித்தாலோ வந்தவர் கருத்தையும் நாம் சொல்ல நினைக்கும் கருத்தையும் இருவருமே புரிந்து கொள்ளுதல் இயலாது. எனவே அமைதியாக இருந்து அடுத்தவர் பேசுவதை நிதானமாக கேட்டு அதற்கு தகுந்தார் போல் நாம் பேசும் போது தான் அந்த உரையாடலுக்கு ஒரு உயிர் கிடைக்கும். பொதுவாகவே நாம் பேச்சைக் குறைத்து நன்கு சிந்திப்பதில் கவனம் செலுத்தி ஒரு செயலை செய்யும் பொழுது அது முழுமையாக வெற்றி பெறும்.. எனவே சிந்திப்பதில் கவனம் செலுத்துவோம். எண்ணிய செயல்களை எளிதாக முடிப்போம்.

Victory king (VK)

மனிதநேயம்!

 Status 346

யாரென்றே தெரியாத  ஒருவர் அழும் பொழுது காரணமே இல்லாமல் நம் கண்களும் கசியமானால் அதுதான் மனித நேயம்

அன்னை

ஏழை பணக்காரன் மேலோர் கீழோர் என்ற பாகுபாடின்றி மனிதநேயத்துடன் இருப்பதுதான் பண்பு. இருப்பினும் அவரவர்கள் தங்கள் எல்லையை மீறாத வரையில் பண்பின் இலக்கணம் புனிதமாகும்.

Victory king (VK)

Thursday, September 17, 2020

குறையும் நிறையும்!

 Status 345

இந்த உலகில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்ததும் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை என்பதை அறிந்து வாழ பழகிக்கொள்ளுங்கள்.

சாணக்கியர்

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. இதில் நானோ நீங்களோ விதிவிலக்கல்ல. நல்லவைகள் நடக்கும் பொழுது சந்தோஷப்படுவது போல் துன்பங்கள் வரும் பொழுது அதனை கண்டு துவளாமல் இதுவும் கடந்து போகும் என்று மனதார எண்ணி இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தால் நாம் எக்காலத்தும் நிம்மதியாக வாழ முடியும்.

Victory king (VK)

Wednesday, September 16, 2020

தன்வினை தன்னைச் சுடும்!

 Status 344

அடுத்தவன் வீட்டை நீ உலுக்கினால் உன் வீடே உன் தலையில் விழும்

சாணக்கியர்

தன் வினை தன்னைச் சுடும், கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிகளுக்கேற்ப நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலிப்பும் நம்மையே வந்தடையும். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப தான் நம் வாழ்வு அமையும். எனவே நல்லவற்றையே எண்ணத்திலும் செயலிலும் காண்பிப்போம். நற்பலனையே பெற்று நலமுடன் வாழ்வோம்.

Victory king (VK)

Tuesday, September 15, 2020

நாவடக்கம்!

 Status 343

ஒரு சொட்டு கூட ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் ஆற்றல்மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தான்.

புத்தர்

ஆயுதங்களால் ஏற்படும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும் என்பது ஒரு பழமொழி. நாவை நம் கண்ட்ரோலில் வைத்திருந்தால் அதைவிட உயர்ந்தது ஒன்றுமில்லை. நாவின் கண்ட்ரோலில் நாம் இருந்தால் அதைவிட தீயதும் ஒன்றுமில்லை. எங்கும் எப்போதும் எவரிடத்திலும் நாம் நாவடக்கத்தோடு பேசினால் நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வதுடன் பிறராலும் போற்றப்படுவோம்.

VictoryKing (VK)

Monday, September 14, 2020

லட்சியப் பாதை!

 Status 342

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் தான்கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது.

பகவத்கீதை

நம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை கொண்டு அதனை அடைய நேர்வழியிலும் பண்போடும் செயல்பட்டு அந்த லட்சியத்தை நோக்கி பீடுநடை போட்டால் இடையில் எந்த இடர்பாடுகள் வந்தாலும் இன்னல்கள் வந்தாலும் அதனை தூள் தூளாக்கி வெற்றி அடைவதுடன் மன நிறைவோடும் மகிழ்வோடும் வாழ்க்கைப் பயணம் இனிதாக செல்லும்.

Victory King (VK)

Sunday, September 13, 2020

உலக தாத்தா பாட்டி தினம்

 Status 341

பேரப்பிள்ளைகளை அன்போடு அரவணைத்து அகமகிழும் தாத்தா பாட்டிகளுக்கும், உறவுகளின் வலிமையை உணரும் வண்ணம் பிள்ளைகளை வளர்த்த பெற்றோர்களுக்கும் உறவுகள் என்ற சங்கிலித்தொடர் சிறிது சிறிதாக விலகி வரும் இந்நாளில் "உலக தாத்தா பாட்டி தினம்"என்ற செய்தி மூலம் உறவுகளின் மகிமையை நம் இளைய தலைமுறையினருக்கு உணரச் செய்யும இந்நாள் ஒரு பாலமாக அமையட்டும் எனக்கருதி மனமகிழ்ந்து வாழ்த்துக்களை கூறும்

Victory King (VK)

Saturday, September 12, 2020

இறைவனை சரணடைவோம்!

 Status 340

எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்? கவலையை விடுங்கள் வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்

அன்னை தெரசா

கவலை என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அந்த மனது கவலைப்படும் பொழுது ஒரு ஆறுதலை தேடும். அந்த ஆறுதலுகுத்தான் நமக்கு கண்கள் இருக்கிறது கண்ணீர்விட. கைகள் இருக்கிறது கண்ணீரைத் துடைக்க. பேசும் திறன் இருக்கிறது புலம்பி இறைவனைத் தொழ. இவை அனைத்தும்  நமது மன அழுத்தத்தை குறைத்து கவலைகளின் தன்மையை குறைக்கிறது. இவையே கவலைகளில் இருந்து வெளிவருவதற்கு நமக்கு இயல்பாக கிடைக்கும் மருந்து. இறைவனை சரணடைவோம் கவலைகளில் இருந்து விடுபடுவோம்.

Victory King (VK)

Friday, September 11, 2020

எண்ணிய முடிதல் வேண்டும்!

 Status 339

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்தநல் லறிவு வேண்டும்

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்

மகாகவி பாரதியார் 

அன்னை பராசக்தியிடம்வேண்டி பாரதி பாடிய இப்பாடல் எக்காலத்தும் எல்லா தரப்பினருக்கும் பொருந்தும். கடவுளிடம் நாம் வேண்டுவதிலும் ஒரு கண்ணியம் வேண்டும் என்று நமக்கெல்லாம் எளிமையாக எடுத்துரைத்த காவியத்தலைவன் மகாகவியின் பெருமையை அவரின் நினைவு நாளான இன்று போற்றி அவர் அறிவுரைகளை நாமும் கடைபிடித்து வீறு நடை போடுவோம்

Victory King (VK)

Thursday, September 10, 2020

எல்லாம் அவன் செயல்!

 Status 338

பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும். மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.

காஞ்சி மகாபெரியவர்

நமக்கு நடப்பது அனைத்தும் இறைவன் கொடுத்த வரம்தான். எனவே நாம் மனம் உருகி இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுககளில் இருந்து விடுபடுவதுடன் நமக்கு மன நிம்மதியும் நடக்க இருப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும். அனைத்தும் அவன் அருள் என்று நினைப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்

Victory King (VK)

Wednesday, September 9, 2020

நம்பிக்கை வைப்போம்!

 Status 337

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

சுவாமி விவேகானந்தர்

எந்த நிலையிலும் எந்த  செயலிலும் நம் தைரியத்தை விட்டுவிடாமல் நாம் முழு நம்பிக்கையுடன் அதில் ஈடுபட்டால் நம்மால் முடியாதது என்பது ஒன்றுமில்லை. நமது பலமே தன் நம்பிக்கையில்தான் இருக்கிறது. மனோதிடமே மனித பலம்.

Victory King (VK)

Tuesday, September 8, 2020

செய்வதை ஈடுபாட்டுடன் செய்வோமே!

 Status 336

நீ எதை செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு.

சுவாமி விவேகானந்தர்

நாம் எந்த ஒரு செயலை செய்யும் போதும் அதில் பிடிப்பில்லாமல் செய்தால் முழு வெற்றியை காண்பது கடினம். அதே செயலை மனமுவந்து ஈடுபாட்டுடன் செய்யும்பொழுது அந்த செயலில் ஒரு நேர்த்தியும் எதிர்பார்த்ததைவிட அதில் வெற்றியை காண்பதுடன் நமக்கு ஒரு மன மகிழ்வையும் கொடுக்கும். நாம் செய்யும் செயலுக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால் அதில் முழு ஈடுபாடுதான் முக்கியம்.

Victory king (VK)

Monday, September 7, 2020

உழைத்து வாழ்வோம்!

 Status 335

துருப்பிடித்து தேய்வதை விட உழைத்துத் தேய்வது மேலானது.

சுவாமி விவேகானந்தர்

நாம் எந்த வேலையையும் செய்யாமல் அடுத்தவர் உழைப்பில் பிழைப்பை நடத்தி, தனக்கு வாய்த்ததை விடுத்து அடுத்தவர்களை கெடுத்து பிழைப்பு நடத்தி, தன் மூளைக்கு வேலை கொடுக்காமல் அதனை மழுங்கடித்து நடைபிணமாக வாழ்வதை போல ஒரு கேவலமான செயல் வேறொன்றும் இல்லை. எனவே இறைவன் நமக்கு அருளிய பொக்கிஷமான மூளையை சுறுசுறுப்பாக்கி நமக்கு உள்ளதை நாமே அடைய முயற்சித்து வாழ்க்கையில் முன்னேறுவோம்.

 Victory King (VK)

Sunday, September 6, 2020

தன் நலம் பேண பிறரை அழிக்க வேண்டாமே!

 Status 334

நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை ‘கர்ம கோட்பாடு’ என கூறுகிறது.

காஞ்சி மகாபெரியவர்

சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் தன் சுயநலத்திற்காக மற்றவர்களை அழிக்க நினைப்பதும் மற்றவர்கள் மனதை நோகடிப்பதும் அது தனக்குத் தானே எடுத்துக் கொள்ளும்ஒரு slow poison போல்தான். தான் செய்யும் தீவினைகள் தன்னையே சிறிது சிறிதாக கொன்றுவிடும் என்பதை உணர வேண்டும். எனவே நன்மையே செய்து நற்பலனை அடைவோம்

Victory King (VK)

Saturday, September 5, 2020

ஆசிரியர் தினம்

 Status 333

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமை நிலையிலும் தன் அறிவாற்றலால் நல்ல மாணவனாக பேராசிரியராக பல்கலைக்கழகத் துணைவேந்தராக தன் நிலையை தன் திறமையால் உயர்த்தி பல விருதுகளை பெற்று நம் நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாகவும் இரண்டாவது ஜனாதிபதியாகவும்  பொறுப்பேற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்த மாமேதை அறிவுக்களஞ்சியம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த இந்நாளில் இளைய தலைமுறைகளை முன்னேற்றும் சீரிய பொறுப்பை ஏற்றிருக்கும் நல் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து அதன் பயனை முழுமையாக நம் இளைய தலைமுறைகள் அடைந்து தங்களை உருவாக்கிய பெருமைமிகு பெற்றோர்களையும் ஆசிரியப் பெருமக்களையும்  மகிழ்வித்து அனைவரும் உயர்நிலைநிலை அடைய மனதார வாழ்த்தும்

Victory King (VK)

Friday, September 4, 2020

துரோகத்தின் சம்பளம் தண்டனை!

 Status 332

நமக்கு துரோகம் செய்பவர்களை அன்பால், பண்பால் திருத்தலாம் என்று முயற்சித்தாலும் அவர்கள் திருந்தாமல் மேலும் மேலும் தன் துரோகச் செயலை செய்து கொண்டே இருநதால் அவர்களுக்கு அழிவு காலம் மிகவும் அருகில் வந்துவிட்டது என்றுதான் பொருள். கடவுள் அவர்கள் துரோகத்தை பார்த்து பார்த்து திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களையும் கொடுத்து கடைசியில் கடுமையான தண்டனையினால் திருத்த முடியும் என்ற ஒரு முடிவுக்கு வந்து அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கிவிடும். குற்றம் செய்பவர்கள் குற்றத்தை உணர்ந்து திருந்தவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை சூனியம் தான். எனவே நமக்கு துரோகம் செய்தவர்களை எண்ணி எண்ணி மனம் வருந்துவதை விடுத்து நம் தீராத துயரத்தை முறையிட்டு இறைவனை சரணடைந்தால் வெற்றி நமக்குத்தான்.

Victory king (VK)

Thursday, September 3, 2020

யாரையும் இழிவாக கருத வேண்டாமே!

 Status 331

அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது.யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.

காஞ்சி மகாபெரியவர்

நமது பணிகளை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். அடுத்தவர்கள் வேலைகளை குறை சொல்லியும் அவர்களை இகழ்ந்து பேசியும் நாம் சிறந்தவர் என்று பறைசாற்றிக்  கொண்டால் அது நிலைத்து நிற்காது. அதனால் நாம் அடையும் கோபங்கள் மற்றவர்களையும் கோபப்படுத்துவதுடன் நம்மையும் நாம் அழித்துக் கொள்கிறோம். எனவே நாம் செய்யும் செயல்களை செவ்வனே செய்வோம். மற்றவர்களையும் பாராட்டுவோம். மகிழ்வோடு இருப்போம்.

Victory King (VK)


Wednesday, September 2, 2020

நம் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்து!

 Status 330

ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

காஞ்சி மகாபெரியவர்

நாம் நம் பிள்ளைகளுக்கு நல்லவற்றை சொல்லி வளர்ப்பதுடன் அவர்கள் நல்லவற்றை பார்த்து வளரும் பொழுது ஒழுக்கத்தின் மேன்மையை நன்கு உணர முடியும். எனவே நாம் நம் பெற்றோர்களுக்கும் மூத்தோர்களுக்கும் கொடுக்கும் மரியாதையுடன் நாமும் ஒழுக்க சீலர்களாக வாழும்போது நம் பிள்ளைகள் மனதில் அவை அப்படியே பதிந்து விடும். இவைகளே நம் பிள்ளைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்தாகும்.

Victory King (VK)

Tuesday, September 1, 2020

கருணையும் மனித நேயமும் நம்மை வந்தடைய!

 Status 329

அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்

காஞ்சி மகாபெரியவர்

நம் மன அழுத்தத்தை தவிர்க்க, தீய எண்ணங்கள் நம்மை அண்டாதிருக்க, தீய செயல்களை செய்ய நம் மனம் தூண்டாதிருக்க காஞ்சி மகானின் இந்த அருளுரையை கடைபிடித்தாலே போதும். அன்பு கருணை மனிதநேயம் அனைத்துமே நம்மை வந்து அடையும். கடைபிடிப்போம் அமைதியான வாழ்வை நாம் பெறுவதோடு மற்றவர்களையும் வாழ வைப்போம்.

Victory King (VK)