Tuesday, January 31, 2023

#Victory King: புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்க!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1190

பெற்றோர்களால் நல்லவற்றை சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகளும், தவறு செய்யும் பொழுது தட்டி கேட்டு வளர்ந்த பிள்ளைகளும் புடம் போட்ட தங்கம் ஜொலிக்கும் ஆபரணங்களாக திகழ்வது போல் வாழ்க்கையில் வசந்தத்தை அனுபவிப்பார்கள். தம் பிள்ளைகளின் வாழ்வு மலர பெற்றோர்கள் இதை உணர்ந்தாலே போதும்!

Victory king alias V. Krishnamurthy

Sunday, January 29, 2023

#Victory King: மதிப்போம், வாழ்வோம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1189

நாம் வாழ்க்கையில் உறவுகளுடன்‌ ஒருவருக்கொருவர்புரிதல் என்ற துடுப்போடு பயணித்தால் மட்டுமே உறவுச் சங்கிலி விடுபடாமல் அமைதியுடனும் மகிழ்வுடன் இறுதி வரை பயணிக்க முடியும். இல்லையேல் துடுப்பை இழந்த படகில் பயணம் செய்வது போல் தத்தளிக்கும் நிலை தான் வரும். எனவே உறவுகளை மதித்து வலுப்படுத்தி வாழப்பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Sunday, January 22, 2023

#Victory King: மனப்பக்குவம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1188

எந்த விஷயமாக இருந்தாலும் நாம் பொறுமையை இழக்காமல் அமைதியையும் நிதானத்தையும் கடைபிடித்து சிந்தித்தால், அந்த விஷயத்தில் உள்ள சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஒரு தெளிவு பிறக்கும். பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வதுதான் சந்தோஷம் என்பதை மனதிலிருந்து நீக்கி, எதுவாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும் என்ற மனப்பக்குவத்தை பெற்று வாழப் பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Saturday, January 21, 2023

#Victory King: முகப் பொலிவு பெற!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1187

நாம் சுறுசுறுப்பாக இயங்கும் பொழுதுதான் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும செயல்படுவதுடன் நமக்கு முகத்தில் ஒரு பொலிவும் கிடைக்கிறது, மின்மினி பூச்சி பறக்கும் போது ஜொலிப்பது போல.எனவே நாம் ஆரோக்கியமாக வாழ தேன் பூச்சிகள் போல் எப்பொழுதும்சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

Victory king alias V. Krishnamurthy

Friday, January 20, 2023

#Victory King: நேசிப்போம் நம்மை நாமே!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1186

அடுத்தவனுக்கு கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில், நமக்கு கிடைத்ததையும் கோட்டை விட்டுவிடாமல், நமக்குக் கிடைத்ததை மகிழ்வுடன் ஏற்று, ஆக்கபூர்வமாக செயல்பட்டால் நாம் விரும்புவது மேன்மேலும் நம்மை வந்தடையும். முதலில் நம்மை நாமே ரசிக்க கற்றுக் கொண்டால்தான் நமக்கு கிடைத்ததை நம்மால் ரசிக்க முடியும்!

Victory king alias V. Krishnamurthy

Thursday, January 19, 2023

#Victory King: பிறந்ததே சாதிக்கத்தான்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1185

நாம் சாதிக்கத்தான் பிறந்தவர்கள் என்பதை நம் ஆழ்மனதில் நிறுத்தி, நேர்மறை எண்ணங்களோடு, வாய்ப்புக்காக காத்திருக்காமல் நாம் செய்ய நினைக்கும் செயல்களை மட்டும் செவ்வனே செய்தால், நமக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

Victory king alias V. Krishnamurthy

Wednesday, January 18, 2023

#Victory King: சொர்க்கமாகும் வாழ்க்கை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1184

அன்பைக் காட்டத் தெரிந்தால் அனைவரது‌ உள்ளத்திலும் இடம் பெறலாம். பாசத்தை பகிர்ந்தால் பகைமையை வெல்லலாம். சிரிக்கத் தெரிந்து விட்டால் சோகத்தை முறியடிக்கலாம். சாதிக்க தெரிந்து விட்டால் தடை கற்களையும் நடை கற்களாக மாற்றி முன்னேறலாம். செயலில் ஈடுபாடு இருந்தால் சுமையும் ஒரு சுகமே. மொத்தத்தில் இப்படியாக வாழத் தெரிந்து விட்டால் வாழ்க்கையே  சொர்க்கம் தான்!

Victory king alias V. Krishnamurthy

Monday, January 16, 2023

#Victory King: நமது பண்பில் இருந்து நாம் மாற வேண்டாமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1183

அகந்தையில் உறவுக்கும் வயதிற்கும் மரியாதை கொடுக்காதவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதும், அவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் செல்லாது இருப்பதும்தான் நமக்கு மரியாதை. அடுத்தவர்களுக்காக நாம் நம் பண்பை விட்டுக்கொடுக்காமல் நாம் நாமாக இருந்து விட்டாலே போதும். நம் மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்!

Victory king alias V. Krishnamurthy

Sunday, January 15, 2023

#Victory King: எழுதப் படாத உயில்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1182

ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் சகோதரிகளுக்கு சீர் என்ற பெயரில் பொங்கல் திருநாளுக்கு பொருள்களோ அல்லது பணமோ கொடுப்பதைஒரு சம்பிரதாயமாக முற்காலத்தில் இருந்து செய்து வருவது அந்த குடும்பத்தின் உறவு செங்கலியை வலுப்படுத்துவதற்காகத்தான். ஆண் பிள்ளைகள் இல்லாத வீட்டில் பெற்றோர்களே இதை செய்து வருவார்கள். இது போன்ற பாசத்தோடு பிணைந்த வழக்கங்கள் எழுதப்படாத ஒரு உயில் தான். இது ஒரு உதாரணம் தான். இன்றைய இளைய தலைமுறைகள் உணரட்டுமே!

Victory king alias V. Krishnamurthy

Saturday, January 14, 2023

#Victory King: பொங்கல் நல்வாழ்த்துகள்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1181

குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து குதூகளிக்கும் ஒரு சந்தர்ப்பம்தான் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள். எனவே இந்த போகி பொங்கல் பண்டிகையை நம் மனதிற்கு இனிய நாளாக்கி அனைவரும் போகி பொங்கல் உழவர் திருநாளை மகிழ்வோடு கொண்டாட மனமார வாழ்த்தும்... 

Victory king alias V. Krishnamurthy

Thursday, January 12, 2023

#Victory King: மரியாதை நிலைத்து நிற்க!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1180

நம் முன்னேற்றத்திற்கு மூல காரணமாக இருந்தவரை நம் வாழ்நாள் முழுவதும் மறக்காமலும், நமக்கு சிறு உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்லியும், நாம்  செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு  கேட்பதும் ஆகிய பண்புகள் நம் ஆழ்மனதில் பதிந்து விட்டால் நாம் இருக்கும் வரையிலும் இறந்த பிறகும் நமக்குள்ள மரியாதை நிலைத்து நிற்கும் என்பதை மனதில் கொண்டு வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Wednesday, January 11, 2023

#Victory King: சாதிக்க உதவும் மந்திரம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1179

விழுந்தவன் தானே எழுந்தால், அது தன்னம்பிக்கை. எழுந்தவன் நடந்தால், அது முயற்சி. நடந்தவன் முன்னோக்கி சென்று கொண்டே இருந்தால், அது விடாமுயற்சி. அதன் பலன்தான் அவன் அடைய நினைக்கும் இலக்கு. நம்மால் எதுவும் முடியும் என்ற நேர்மறை சிந்தனை நமக்கு இருந்தாலே, வாழ்க்கையில் நாம் சாதிக்க நினைக்கும் அனைத்தும் அடைவது சாத்தியமே!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, January 10, 2023

#Victory King: நட்பின் பெருமை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1178

நாம் என்னதான் அன்பையும் பாசத்தையும் அள்ளி அள்ளி கொடுத்தாலும், நாம் உழைப்பால் உயர்ந்தால் பொறாமையில் தூற்றுவதும், நம் நிலை சற்று தாழும் பொழுது நம்மை எள்ளி நகையாடுதலும் கொண்ட நட்பிலிருந்தும் சுற்றத்திலிருந்தும் சற்று நாம் தள்ளி இருந்தால்தான் நமக்குப் பெருமை!

Victory king alias V. Krishnamurthy

Monday, January 9, 2023

#Victory King: ஈகை குணம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1177

நம் இரக்க குணத்தால் ஏமாறும் பொழுதுதான் தெரிகிறது நாம் பச்சோதிகளிடமும் வஞ்சகர்களிடமும் முட்டாள்தனமாக பழகிவிட்டோமே என்று. எனவே நமது இரக்க குணத்தை நன்கு பயன்படுத்தி நம்மையே பலிகடா ஆக்கும் நயவஞ்சகர்களையும் துரோகிகளையும் இனம் கண்டு நம் ஈகை குணத்தை தக்க வைத்து வாழப் பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Sunday, January 8, 2023

#Victory King: மனிதாபிமானம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1176

உலகிலேயே மிக சிறந்த தானம் மற்றவர்கள் பசியை போக்கும் அன்னதானம். மற்றவர்கள் உயிரைக் காக்கும்  ரத்த தானம், உடல் உறுப்புகள் தானம். மற்றவர்களுக்கு கண்ணொளியை கொடுக்கும் கண்தானம். இவைகள் அனைத்தையுமே நாம் நிதானத்துடன் சிந்தித்து செயல்படுத்தினால் அதுதான் நம் மனிதாபிமானம். சிந்திப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Saturday, January 7, 2023

#Victory King: குதூகல குடும்பம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1175

பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோர்களில் யாராவது ஒருவர் ஆணவத்திற்கு அடிமையாகிவிட்டால் அழியப்போவது பிள்ளைகளின் வாழ்க்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும்தான். அடுத்த நிமிடம் நாம் இருப்போமா என்ற நிலையற்ற வாழ்க்கையில் இருக்கும் வரை அகங்காரம் ஆணவம் தற்பெருமை கோபம் போன்ற குப்பைகளை தவிர்த்து குடும்பத்தை குதூகலமாக்கி வாழ பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Friday, January 6, 2023

#Victory King: நல்ல மாற்றங்கள்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1174

நம் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால் நாம் எடுக்கும் முடிவுகளினாலும்அதற்கான முயற்சிகளினாலும் மட்டுமே அந்த மாற்றத்தை அடைய முடியும் என்பதை நாம் உணர்ந்தாலே போதும். நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நம்மை தேடி வரும்.

Victory king alias V. Krishnamurthy

Wednesday, January 4, 2023

#Victory King: தலைமுறையை காப்பாற்றும் தர்மம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1173

நாம் நம் உற்றார் உறவினர் நட்புக்களை வீட்டிற்கு அழைத்து அன்புடன் உபசரித்து உணவு அளித்தால் அது விருந்து. அது நட்பிற்கும் பண்பிற்கும் இலக்கணம். மற்றவர்கள் பசியை உணர்ந்து முகம் சுளிக்காமல் மனமுவந்து கருணையோடு உணவளித்தால் அது தர்மம். பண்போடு கலந்த  நட்பும் தர்மமும் தான் நம்மையும் காத்து நம் தலைமுறையையும் காப்பாற்றும்.

Victory king alias V. Krishnamurthy

Tuesday, January 3, 2023

#Victory King: நம் வளர்ப்பின் பெருமை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1172

நாம் பிள்ளைகளை வளர்க்கும் பொழுது சொல்லிக் கொடுப்பதை விட செயலில் செய்து காட்டுவதை அவர்கள் மனதில் நன்கு பதிந்துவிடும். ஒரு நிலையில் நாம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அது அவர்களுக்கு எரிச்சலைக் கூட உண்டாக்கிவிடும். ஆனால் நாம் நன்கு வாழ்ந்து காட்டி விட்டால், தானும் அது போல் வாழ வேண்டும் என்ற உத்வேகத்தைப்பெற்று, தாமும் நன்றாக வாழ்ந்து நம் வளர்ப்பின் பெருமையையும் நிலை நாட்டி விடுவார்கள். முயற்சிப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Monday, January 2, 2023

#Victory King: தன்னடக்கமே தொடர் வெற்றி!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1171

தோல்வி என்பது அந்த செயலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான எச்சரிக்கை என்று எடுத்துக் கொண்டு, அதனை கவனமாக செய்து அச்செயிலில் வெற்றி பெரும்பொழுது, நாம் அடக்கத்தை அகற்றிவிட்டு ஆணவத்தில் திளைப்போமேயானால் அச்செருக்கின் பலன் தொடர் தோல்வியே. தன்னடக்கம் இருந்தால் மட்டுமே தொடர்வெற்றி தானே வரும். சிந்திப்போமே!

Victory king alias V. Krishnamurthy