Sunday, February 28, 2021

நன்மையும் தீமையும்!

 Status 2021 (58)

நல்லவை முதலில் நரகமாக தோன்றும் முடிவில் சொர்க்கமாகும். தீயவை முதலில் சொர்கமாக தோன்றும் முடிவில் நரகமாகிவிடும்.

பகவத் கீதை

நன்மையும் தீமையும் நிழல்போல் நம்முடன் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதனால் மனதைப் பொறுத்த வரையில் நல்லவை முதலில் நரகமாக தோன்றினாலும் அதனுடைய பலன் முடிவில் சொர்க்கமாக முடிகிறது. அதேபோல் தீயவை முதலில் சொர்க்கமாக தோன்றினாலும் முடிவில் அதன் பலன் நரகமாக முடிகிறது. எனவே நாம் நல்லது செய்தாலும் தீமை செய்தாலும் அதனதன் பலன்களை அடைந்தே தீருவோம். இதனை நன்கு உணர்ந்து நாம் நற்பலன்களையே அடைய முயல்வோம்.

Victory King (VK)

Saturday, February 27, 2021

நம் வாழ்க்கையை மன அமைதியுடன் கழிக்க!

 Status 2021 (57)

நமக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் இருந்தாலும் நம் வாழ்க்கையை நாம்தான் வாழ்ந்தாக வேண்டும். "போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் புழுதிக்கே" பட்டினத்தாரின் இந்த பாடல் வரிகளை நினைவில் கொண்டு நமக்கென்று இட்ட வாழ்க்கையை பிறரை நம்பி இல்லாமல் நம் பாதையில் கடந்து சென்றால் நமக்கு எந்தவித ஏமாற்றமும் இன்றி மன அமைதியுடன் வாழ்ந்து மகிழலாம்.

Victory King (VK)

Friday, February 26, 2021

போலியான உறவுகளும், தனிமையும்!

 Status 2021 (56)

தனிமை என்பது  கொடுமையான ஒன்றுதான். ஆனால் தேவைப்படும் பொழுது நம் புகழ் பாடி தேவைப்படாத பொழுது நம்மை ஒதுக்கி வைப்பதுமான போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதைவிட தனிமை ஒன்றும் கொடுமை அல்ல. சிந்திப்போம் சிறப்பாக வாழ்வோம்!

Victory King (VK)

Thursday, February 25, 2021

நேர்மறை செயல்பாடுகள்!

 Status 2021 (55)

தாழ்வு மனப்பான்மை, நன்கு யோசிக்காமல் எடுக்கும் முடிவு, தன்னம்பிக்கை இல்லா முயற்சி, தன்னடக்கம் இல்லாத வெற்றி, நமக்குக் கிடைத்ததை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளாத மனம், இல்லாததை நினைத்து ஏங்கும் குணம், உறவுகளை எல்லாம் உதறித் தள்ளும் பண்பற்ற செயல் இவைகள்தான் நம் வாழ்க்கையை கெடுக்கும் முக்கிய காரணம். இதனை மனதில் கொண்டு இவைகள் அனைத்திற்கும் நேர்மறை செயல்பாடுகளை நாம் மேற்கொண்டால் நம் வாழ்க்கை ஒளிமயமாகவும் வெற்றியுடனும் நகர்ந்து செல்லும். முடிந்தவரை முயற்சிப்போமே!

Victory King (VK)

Wednesday, February 24, 2021

வாழ்ந்து காட்டுவோம்!

 Status 2021 (54)

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்!

கிருஷ்ண பரமாத்மா

நம் வளர்ச்சியை பார்த்து பொறுக்கமுடியாமல் நமக்கு சாபம் கொடுப்பவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதனையெல்லாம் நமக்கு கிடைத்த உரமாக நினைத்து நாம் மேன்மேலும் உயர்ந்து காட்டி அவர்கள் தலை குனியும்படி செய்ய வேண்டும். குரோத எண்ணங்கள் கொண்டவர்களின் சாபம் அவர்களுக்கேதான் சென்றடையும். எனவே நாயிடம் கடிபடுவதை  விட அதற்கு வழிவிட்டு நம் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேறி வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!

Victory King (VK)

Tuesday, February 23, 2021

வாய்ப்புகளை தவற விட வேண்டாமே!

 Status 2021 (53) 

வாய்ப்பு என்பது பறித்துக் கொள்வதில்லை, திறமையால் நாம் தேடிக்கொள்வது!என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்து ஒதுங்காமல் வாய்ப்பு கிடைக்கும் பொழுது நழுவ விடாமல் நம் திறமை மேல் நம்பிக்கை வைத்து முயற்சியை தளரவிடாமல் ஒரு செயலில் நாம் ஈடுபடும் பொழுது வெற்றி நம்மை தேடி வரும். வாய்ப்பு முயற்சி தன்னம்பிக்கை இவை மூன்றும் ஒருங்கிணையும் பொழுது நம் மனதில் ஒரு உத்வேகம் ஏற்பட்டு நம் வெற்றிக்கு மகுடம் சூட்டுகிறது. நாம் வாய்ப்பை நழுவ விட்டால் "தும்பை விட்டு வாலைப் பிடித்த" கதையாகி விடும். எனவே நாம் வாய்ப்பை பயன்படுத்தி வளமான வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொள்வோமே!

Victory King (VK)

Monday, February 22, 2021

அத்து மீறாத ஆசை!

 Status 2021 (52)

நம் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்வது தவறில்லை. ஆனால் அந்த ஆசை நம் தகுதிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். தகுதிக்கு மீறி ஆசை பேராசையாக மாறிவிட்டால் நம் மனதில் ஒரு போராட்டம் தான். விளைவு நம் நிலையை தடுமாற செய்து மன உளைச்சலை ஏற்படுத்தி துன்பத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும். நாம் விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும். எனவே நம் மனதில் பேராசையை வளர்த்தால் அதன் பலன் துன்பம். மனதில் அன்பை வளர்த்தால் நாம் பண்போடு வாழ வழிவகுக்கும். நன்கு உணர்ந்து பேராசையை நாம் நம் மனதில் வளர்த்துக் கொள்ளாமல் அன்போடும் பண்போடும் மகிழ்வோடும் வாழ்வோமே!

Victory King (VK)

Sunday, February 21, 2021

நம் மனதுக்கு சரி எனப்படுவதை செய்வோமே!

 Status 2021 (51)

தன்னுடைய உள்ளத்திற்கும் அறிவுக்கும் சரியாக தோன்றாத வரையில் எதையுமே வேதவாக்காக ஏற்றுக்கொண்டு விடக் கூடாது. 

காந்தியடிகள்

மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று கண்மூடித்தனமாக எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் நாம் நம் சுய சிந்தனையை பயன்படுத்தி அறிவுபூர்வமாக சிந்தித்து நமக்கு சரி என்று தோன்றினால் மட்டுமே எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் பெற வேண்டும்.

Victory King (VK)

Saturday, February 20, 2021

கர்ணனை முன்னுதாரணமாகக் கொள்வோமே!

 Status 2021 (51)

கர்ணன் மாவீரன் மட்டுமல்ல ஈகைக்கும் நட்புக்கும் அவன் தந்த மதிப்பு, செய்நன்றி மறவாமை, அசைக்கமுடியாத தன்னம்பிக்கை ,பிறர் உயிரையும் தன் உயிராக நினைக்கும் பாங்கு, வாக்கு தவறாமை, நேர்மை கம்பீரம், கொடை என அனைத்துக்கும் சொந்தக்காரன். இவை எல்லாவற்றிலும் கர்ணனை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நம்மால் வாழ முடியவில்லை என்றாலும் நம்மால் முடிந்த அளவிற்கு பண்போடும் கருணை உள்ளத்தோடும் நாம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போமே!

Victory King (VK)

Friday, February 19, 2021

தானமும் தர்மமும்!

 Status 2021 (50)

நாம் பொதுவாக தான தர்மம் செய்தால் புண்ணியம் என்று சொன்னாலும் நாம் செய்யும் தர்மத்திற்குத்தான் பலன் புண்ணியமாக வந்து சேரும். பிறர் கேட்டு நாம் கொடுப்பதுதான் தானம். அது நாம் பிறந்த மனித பிறவிக்கு ஒரு கடமை என்றே சொல்லலாம். பிறர் கேட்காமலேயே அவர்கள் நிலையறிந்து தக்க சமயத்தில் உதவி செய்வதுதான் தர்மம். கர்ணன் தர்மத்தையே வாழ்நாள் முழுவதும்செய்த புண்ணியத்தால் போர்க்களத்தில் அவர் உயிர் அவரை விட்டுப் பிரியவில்லை. அவர் செய்த புண்ணியத்தை எல்லாம் கிருஷ்ணன் கேட்க அதை தாரைவார்த்துக் கொடுத்தவுடன்தான் அவர் உயிர் பிரிகிறது. தர்மத்திற்கு அப்படி ஒரு மகிமை. எனவே  ‘நானும் என்னிடம் உதவி கேட்டவர்களுக்கு எல்லாம் நிறைய செய்திருக்கிறேன்’ என்று பெருமைப் பட்டுக் கொள்ளாமல் தர்மம் செய்து புண்ணியத்தை பெற்று வாழ்க்கையில் சிறப்போம்!

Victory King (VK)

Thursday, February 18, 2021

வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்வோமே!

 Status 2021 (49)

வாழ்க்கையில் தவறுகள் நிகழ்வது, அறிந்தும் அறியாமலும் தவறுகள் செய்வது மனித இயல்பு. அந்த தவறுகளை உணர்ந்து மனம் வருந்தி நம்மை நாம் திருத்திக் கொண்டுவிட்டால் அதுவே நாம் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகி மனஅமைதி  பெறுவோம். அதனை உணராதவர்கள் மேலும் மேலும் தவறுகளை செய்து பாவ மூட்டையை பெருக்கிக் கொண்டு ஒரு நிலையில் வருத்தப்பட்டும் வேதனைப்பட்டும் பலனில்லாமல் தங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்கிறார்கள். எனவே நாம் எந்த சந்தர்ப்பத்திலும தவறு செய்யாமலும் அதற்கு துணை போகாமலும் இருந்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வோம்!

Victory King (VK)

Wednesday, February 17, 2021

சுயத்தை இழக்க வேண்டாமே!

 Status 2021 (48)

நாம் நாமாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் நம்மை நாம் மாற்றிக் கொள்ளக்கூடாது. மற்றவர்களுக்காக நாம் மாறும்பொழுது அவர்களுக்கு அடிபணிந்துவிடும் நிலை ஏற்படும். இது நம் நிலைப்பாட்டை சிதைத்து மற்றவர்கள் மத்தியில் நம் மதிப்பையும் கெடுத்துவிடும். எனவே, நாம் சுயத்தை இழக்காமல் சுற்றங்களுடன் உறவாடி நம்மை நாம் காப்போமே!  

Victory King (VK)

Tuesday, February 16, 2021

இறைவனிடம் சரணாகதி அடைவோமே!

 Status 2021 (47)

துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் மனிதர்களிடம் சொல்வதைவிட கடவுளிடம் சொல்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.

காஞ்சி மகாபெரியவர்

நாம் நம் துன்பத்தை பிறரிடம் கூறும் பொழுது தான் நம் மனது ஆறுதல் அடைந்து அமைதி கிடைக்கிறது. ஆனால் அதை கேட்பவர்களின் மனதறிந்து தகுதியறிந்து சொல்லவில்லை என்றால் சமயத்தில் அதுவே நம் மனதை மேலும் துன்பப்படுத்தி விடும். எனவே நாம் கடவுளிடம் சரணாகதி அடைந்து மனம் உருகி நம் துன்பத்தை மானசீகமாக சொல்லும்பொழுது தான் மனம் அமைதி பெறுகிறது. எனவே எல்லா கட்டங்களிலும் இறையன்பை நாடுவோம் இன்பமுடன் வாழ்வோம்!

Victory King (VK)

Monday, February 15, 2021

ஒன்றுபடுவோம்!

 Status 2021 (46)

பாவத்தாலும் துரோகத்தாலும் இன்று நீ கட்டும் மாடமாளிகை நாளை உன் பிள்ளைகளின் தலையில்தான் இடிந்து விழும் என்பதைமறந்து விடாதே!

கிருஷ்ண பரமாத்மா

துரோகம் மற்றவர்களுக்கு செய்தால்தான் என்பதில்லை. நம் குடும்பத்திலேயே நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி தாய் தம் பிள்ளைகளையே  தந்தையிடமிருந்து பிரிப்பதும், தந்தை தம் பிள்ளைகளையே   தாயிடமிருந்து பிரிப்பதும், தம் பிள்ளைகளிடையே பாரபட்சம் காண்பிப்பதும் ஒரு மகா பெரிய பாவச் செயலே. குடும்பம் ஒரு போதிமரமாக இருக்க வேண்டும்.அதனை போதனை மடமாக்கி நம்மையே நாம் அழித்து கொள்ளாமல் ஒற்றுமைக்கு வித்திட்டு ஒன்றுபட்டு வாழ்வோம்!

Victory King (VK)

Sunday, February 14, 2021

அன்புத் திருநாளாம் நன்நாளாம்!

 Status 2021 (45)

அன்பு தான் நம்மை  பரவசப்படுத்துவது.  அன்புதான் ஒருவரை ஒருவர் அரவணைப்பது. அன்புதான் நமது நட்பு வட்டத்தை விரிவாக்குவது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பும், பிள்ளைகள் பெற்றோரிடம் காட்டும் அன்புதான் குடும்பத்தை செழிக்க வைப்பது. மொத்தத்தில் அன்புதான் ஒரு மனிதனை மனிதன் ஆக்குவது. எனவே அனைவரிடமும் அன்பு காட்டியும், அத்துடன் வாயில்லா ஜீவன்களிடமும் அன்புடன்அதன் பசியைப் போக்கியும், மாற்றுத்திறனாளிகளுக்கு பரிவோடும் பாசத்தோடும் ஆத்மார்த்தமாக உதவி செய்தும் நமது அன்பை  வெளிப்படுத்துவதுதான் இன்னாளின் சிறப்பாக கருத வேண்டும். நாம் அனைவரும இந்த "அன்பு" திருநாளை ஆரவாரத்துடன் போற்றுவோம்.

Victory King (VK)

Saturday, February 13, 2021

உண்மைக்கு உயிர் உண்டு!

 Status 2021 (44)

ஒருவருடைய பலவீனம் அன்பாக இருக்குமானால் அதனுடன் விளையாடாதே. அது உண்மையான அன்பு மட்டுமல்ல உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆகும்.

பகவத் கீதை

நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பயன்படுத்தி நாம் உண்மைக்குப் புறம்பான விஷயங்களைச் சொல்லி நம் வாழ்க்கை யில் முன்னேற நினைப்பதும், நம்மைப் பற்றி பொய்யான தகவல்களை சொல்லி திருமணத்தை நடத்துவதும் அது ஒரு தற்காலிக சந்தோஷமே. உண்மை வெளிப்படும் பொழுது நாம் அசிங்கப் படுவதோடு நம் வாழ்க்கையே கேலிக்கூத்தாகி விடும். எனவே நாம் உண்மைக்கு உயிர் உண்டு என்பதையும் பொய்யின் முடிவு படுகுழி தான் என்பதையும் நன்கு உணர்ந்து நம்மை நாம் காத்து நலம் பெறுவோம்.

Victory King (VK)

Friday, February 12, 2021

உதவி செய்வோம், நேரத்துக்கு செய்வோம்!

 Status 2021 (43) 

நாம் ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால் உதவி தேவைப்படுபவர்களுக்கு தகுந்த உதவியை உடனே செய்து அதன் பயனை உதவி பெறுபவர்கள் முழுமையாக அடைய வேண்டும். அதுபோல் நமக்கு தக்க சமயத்தில் உதவியவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே நம் நன்றியை தெரிவிக்க வேண்டும். இதுதான் பண்பிற்கு இலக்கணம். எனவே நாம் செய்யும் எந்த உதவியும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியவர்களுக்கு சென்று அவர்கள் பயனடையச் செய்யும் பொழுது தான் அந்த உதவி முழுமை பெறும். நமக்கும் ஆத்ம சாந்தி கிடைக்கும். 

Victory King (VK)

Thursday, February 11, 2021

தேவையானபோது இளகிய மனமும், இறுகிய மனமும்!

 Status 2021 (42) 

நேரடியாக நமக்கு துரோகம் செய்பவர்களை நாம் எளிதில் எதிர்கொண்டு விடலாம். ஆனால் நம் அருகிலேயே இருந்து அன்பொழுக பேசி  நம்மை அழிக்க நினைப்பவர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம். ஒருவர்மேல் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை. அதுவே அதிதீவிர நம்பிக்கை யாக மாறும்பொழுது அதை அடுத்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நம்மை அழிக்க நாமே ஒரு காரணமாகி விடுவோம். நம்பிக்கை என்பது தும்பிக்கை போல் வலுவாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் நம்மை அழிக்க முற்படுகிறார் என்று தெரிந்தவுடன் நமக்கு யானை பலம் வந்து தும்பிக்கையால் தூக்கி எறிய நாம் தயாராக இருக்க வேண்டும். இளகிய மனம் மட்டும் இருந்தால் போதாது. தேவைப்படும் பொழுது இறுகிய மனதோடும் இருந்து செயல்பட்டால்தான் நாம் பிழைப்போம்.

Victory King (VK)

Wednesday, February 10, 2021

உறவினர்கள் மேகமல்ல, வானம் போன்றவர்கள்!

 Status 2021 (41)

ஆயிரம் உறவுகள் நமக்கு இருந்தாலும் நம்முடன் கடைசிவரையில் உண்மையாக இருப்பவர்கள், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சுக துக்கங்களில் பங்கேற்று கடைசிவரை நம்மோடு உறவாடும் உறவுகள், இவர்கள் நாம் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம். உறவு என்பது மேகமல்ல ஒரு நொடி பொழுதில் கலைந்து போக. இது வானம் போன்றது வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும்.. எனவே நம் உறவுகள் மேம்பட உறவுச் சங்கிலி விலகாது இருக்க ஸ்திரமான முயற்சிகள் எடுத்து ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம்!

Victory King (VK)

Tuesday, February 9, 2021

நம் மனம் காந்தம் போன்றது!

 Status 2021 (40)

நம் மனம் ஒரு காந்தம்போன்றது. நாம் மகிழ்ச்சியை நினைத்தால், நாம் மகிழ்ச்சிகளை ஈர்க்கிறோம், பிரச்சினைகளை நினைத்தால், பிரச்சினைகளை ஈர்க்கிறோம். எப்போதும் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுவோம், எப்போதும் நேர்மையாகவும் தன்னம்பிக்கையுடனும் இருப்போம். தீயவைகளை நினைத்து நம் மனதை மாசுபடுத்தாமல் தூய்மையாக வைத்துக்கொள்வோம்.

Victory King (VK)

Monday, February 8, 2021

பெற்றோரைப் போற்றுவோமே!

 Status 2021 (39)

நம் தாய் தந்தையரை ஒருபோதும் மறக்கலாகாது. உயிரோடு இருக்கும் பொழுதும் சரி இறந்த பிறகும் சரி அவர்கள் நம் உள்ளத்தில் குடியிருக்கும் ஒரு கடவுள். உயிரோடு இருக்கும்பொழுது பிறந்தநாள்  கொண்டாடுவதற்கும் இறந்த பிறகு வருடத்திற்கு ஒருநாள் நினைவு நாள் கொண்டாடுவதற்கும் அவை  பண்டிகை நாட்கள் இல்லை. அதையும் தாண்டி, உயிரோடு இருக்கும்போது அன்போடும் பாசத்தோடும் அரவணைத்து அவர்களின் மகிழ்வுற செய்வதும் இறந்த பிறகு அவர்களை நம்முடைய இதய தெய்வமாக வழிபட்டு வருவதும்தான் மனிதப் பண்பு. எனவே நம்மை பெற்றெடுத்து பாசத்தோடு வளர்த்து ஆளாக்கி நம் வாழ்க்கையை வளமாக்க பாடுபட்ட பெற்றோர்களை எப்பொழுதும் இதயத்தில் வைத்துப் போற்றுவோம்!

Victory King (VK)

Sunday, February 7, 2021

மானிடப் பிறவிக்குக் கிடைத்த பொக்கிஷம்!

 Status 2021 (38)

நாம் பிறக்கும் பொழுது நம்மை யார் யார் வந்து பார்த்தார்கள், எதைக் கண்டு ரசிக்கிறோம், எதனைக் கேட்கிறோம் என்ற புரியாத நிலையில் நமக்குத் தெரிந்தவரை வாய்மொழி அழுகையும் சிரிப்பும்தான். உயிர் நம் உடலை விட்டு பிரிந்த பிறகு நாம் ஒரு ஜடப்பொருள் ஆகிவிடுகிறோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலம்தான் நமக்கு கிடைத்த புரிதல் நிலை. மானிடப் பிறவிக்கு  கிடைத்த ஒரு மகத்தான காலகட்டம். எனவே நமக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை வீணடிக்காமல் அன்போடும் பண்போடும் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்து மகிழ்ந்து அந்த காலகட்டத்தை பொக்கிஷமாக்கி நம் சந்ததியினருக்கு அன்பளிப்பாக விட்டுச் செல்வோமே!

Victory King (VK)

Saturday, February 6, 2021

மனசாட்சி!

 Status 2021 (37)

மரண பயம் என்பது இறக்கும் தருவாயில் தங்கள் ஏக்கங்களை  வெளியில் கூற முடியாத ஒரு நிலையில் அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. ஆனால் தவறு செய்பவர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு செய்பவர்கள் துரோகம் செய்பவர்கள் இவர்களுக்கான தண்டனை தினம் தினம் அவர்கள் செத்து பிழைக்கும் நிலைதான். எல்லா குற்றங்களையும் செய்துவிட்டு நிம்மதியாக ஒருவராலும் இருக்க முடியாது. வெளியில் வேண்டுமானால் வேஷம் போடலாம். மனசாட்சி அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. அந்த மன உறுத்தல் ஒரு நிலையில் அடக்க முடியாமல் பைத்தியம் பிடித்து நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைதான் வரும். எனவே யாருக்கும் தெரியாமல் நாம் செய்த தவறை மறைத்துவிடலாம் என்று எண்ணி மகிழாமல் மனசாட்சியுடன் எண்ணம் செயல் அனைத்திலும் நேர்மை கடைபிடித்து மகிழ்வுடன் வாழ்வோம்!

Victory King (VK)

Friday, February 5, 2021

பிறரை நோகடிக்க வேண்டாமே!

 Status 2021 (36)

ஒரு சிலர் தமக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் அடுத்தவரை நோகடித்து அவர்கள் சொத்தை பறிப்பதிலும் அதனை நியாயப்படுத்தி பேசி அவர்கள் நிம்மதியைக் கெடுப்பதிலும் தங்கள் சுயநலத்தை வெளிப்படையாகவே காண்பிப்பார்கள். இது இவர்களுடைய பேராசையின் வெளிப்பாடே. பேராசையின் பலன் இப்பொழுது வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவு ஒருகட்டத்தில் நம்மையே தாக்கும் என்று உணர வேண்டும். அடுத்தவர்கள் புண்பட்ட மனதிலிருந்து வரும் வேதனை சும்மா விடாது. எனவே அடுத்தவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் அவர்களுக்கு தீது நினைக்காமல் இருந்தாலே நம் வாழ்க்கை நலமாக இருக்கும்.  குடும்பம் வளமாக இருக்கும்.

Victory King (VK)

Thursday, February 4, 2021

பொறாமை தவிர்ப்போம்!

 Status 2021 (35)

ஒருவரின் வளர்ச்சி, வெற்றி, வசதி, புகழ் இவை நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அதனைக் கண்டு பொறுமுதல், நமக்குக் கிடைக்காதது அவர்களுக்கும் கிடைக்கக்கூடாது என்ற குமுறுதல்,  இவைதான் பொறாமையாக வெடித்து அவர்கள் மீது கோபதாபங்கள் சண்டை சச்சரவுகள் என தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ளும் நிலை வந்துவிடுகிறது. இதற்கு மூல காரணம் அவர்களின் இயலாமையே. எனவே, அந்த அளவிற்கு நாம் உயர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாக சிந்தித்து செயல்பட்டு வெற்றி அடைய நாம் முனைந்தால் நம்மிடம் அந்த பொறாமை அண்டவே அண்டாது இதனை கடைபிடிப்போம் களிப்புடன் வாழ்வோம்!

Victory King (VK)

Wednesday, February 3, 2021

ஒற்றுமை போற்றுவோம்!

 Status 2021 (34)

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தால்தான் குடும்பம் தழைக்கும். ஒற்றுமை விலகி ஒருமை வந்துவிட்டால் அந்த குடும்பத்தில வெறுமைதான் மிஞ்சும். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சில உற்றார் உறவினர்கள் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடி தங்களுக்கு சாதகமாக அதனை பயன்படுத்திக்கொண்டு நம் குடும்பத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள். எனவே நாம் நம் சுயநலத்தை விடுத்து போட்டி பூசல்களை தவிர்த்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் உதவிகள் செய்து கொண்டு வாழ்ந்தால் தேவையில்லாமல் நம் குடும்பத்தில் நுழையும் புல்லுருவிகளை தடுத்து நிறுத்த முடியும். நம் வாழ்க்கையும் மகிழ்வுடன் தழைத்தோங்கும்.

Victory King (VK)

Tuesday, February 2, 2021

எண்ணங்கள்!

 Status 2021 (33)

பகைவர்கள் நமக்கு வெளியில் இல்லை; பலவீனமான எண்ணங்களே நமது உண்மையான எதிரிகள்.

- ஸ்ரீ அரவிந்தர்

நம் வாழ்க்கையை வழிநடத்துவது நம் எண்ணங்களே. பாசிட்டிவ் எண்ணங்களோடும் தன்னம்பிக்கையோடும் சிந்திப்பவன்தான் வெற்றி பெறுகிறான். எனவே நாம் தீயவைகளை நினைத்து நம் எண்ணத்தை எதிரியாக மாற்றாமல் நட்பு வட்டத்திலேயே வைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

Victory King (VK)

Monday, February 1, 2021

வாழ்க்கையில் வெற்றி பெற!

 Status 2021 (32)

நாம் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் நம்மால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கை நம்மை விட்டு அகலாது வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்பினால் அது எப்போதாவது வரும் எப்போது போகும் என்று நமக்கே தெரியாது. மற்றவர்களை நம்பினால் நாம் நம் தனித்துவத்தை இழந்து அதுவே நமக்கு ஒரு தடையாகிவிடும். மற்றவர்களால் நாம் ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நம் சுயத்தை இழக்காமல் தன்னம்பிக்கையுடனும் நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் வாழ்க்கை பயணத்தை அதன் போக்கில் தொடர்வோமேயானால் நமக்கு நேர்வழி கிடைக்கும், வெற்றியும் கிடைக்கும்.

Victory King (VK)