Thursday, June 30, 2022

#Victory King: நல்ல சந்ததியினர்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1108

நம் எண்ணம் இனிதானால் நம் செயல் புனிதமாகும். நம் செயல் புனிதமானால் நம் வாழ்க்கை வளமாகும். நம் வாழ்க்கை வளமானால் நல்ல சந்ததி உருவாகும். எனவே நம் குடும்பம் குதூகளிக்க நாம் எண்ணியதை எட்டிப் பிடிக்க எண்ணத் தூய்மையே மூல மந்திரம் என்பதை உணர்ந்து மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Wednesday, June 29, 2022

#Victory King: பெற்றோரும் பிள்ளைகளும்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1107

நாம் நம் பிள்ளைகளை செல்லமாக வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு அவர்கள் தவறு செய்யும் பொழுதெல்லாம திருத்த முயற்சிக்காமல் அவர்கள் செய்வதை அப்படியே ஆமோதிப்பது அவர்கள் வயதுக்கு மீறிய கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பது அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இமாலய சாதனையாக நினைத்து போற்றுவது போன்ற இவைகள்தான் பிள்ளைகளின் மண்டையில் மமதையாக ஏறி இன்று எதுவுமே நம் கட்டுப்பாட்டில் வராத நிலை என்பதை நம் போன்ற பெற்றோர்கள் உணர்ந்தாலே போதும் பிள்ளைகளும் தங்கள் பொறுப்பை தாங்களே உணர்வார்கள்.

Victory King (VK) Alias V. Krishnamurthy

Sunday, June 26, 2022

#Victory King: சுயநலம் எனும் போதை!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1106

ஒருவன் தன் பேராசையின் உச்சத்தில் மதிமயங்கி அடுத்தவருக்கு துரோகம் செய்து, துன்புறுத்தி, சொத்துக்களை அபகரித்து அவர்கள் நிம்மதியை கெடுத்து சுயநலம் என்ற போதையைத் தனக்குள் ஏற்றி சொந்தத்தை இழக்கிறான், சுற்றத்தை இழக்கிறான், நட்பு வட்டத்தை இழக்கிறான், போதையின் உச்சத்தில் தன் சுகத்தையும் தன் குடும்பத்தையும் இழந்து இறுதியில் நாதியின்றி நடுத்தெருவில் அலையும் நிலையை வந்தடைகிறான். இதுதான் சுயநலத்தால் அவன் கண்ட பலன். இதனை உணர்ந்தால் சுயநலம் என்ற மதுவை ஒருவரும் அணுக மாட்டார்கள். யோசிப்போமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Saturday, June 25, 2022

#Victory King: பச்சோந்தித்தனத்தை தவிர்ப்போமே!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1105
அடுத்தவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதையே நாமும் சொல்லி அவர்களுடன் உறவாடுவது பச்சோந்தி தனம். அவர்கள் கூறுவதில் கருத்து வேறுபாடு இருக்கும் பொழுது நாம் நேர்மையான நம் கருத்தையும் கூறி அவர்கள் ஏற்கும்படி செய்யும் திறன் நம்மிடம் இருந்தால் அதுதான் உறவுக்கும் நட்புக்கும் நாம் கொடுக்கும் வலிமை. எது எப்படி இருப்பினும் அடுத்தவர்கள் மனம் புண்படாவண்ணம் பேச முயல்வது தான் மனிதநேயம் கூட. 
Victory King (VK) Alias V. Krishnamurthy

Friday, June 24, 2022

#Victory King: இளையதலைமுறை வளரும் தலைமுறை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1104

நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து வளமுடன் வளர தரமான நெல்லை விதைத்து அதை நாற்றுகளாக வளர்த்து அதை முறைப்படி சதுப்பு பூமியில் நட்டு நீர் வளத்துடனும் இயற்கை சூழல்களிலிருந்து காப்பாற்றியும் பேணிக் காத்தால் மட்டுமே அது நல்ல மகசூலை கொடுத்து தங்களை நன்கு கவனித்து வளர்த்த விவசாயிகளின் வாழ்வை வளம் பெறச் செய்யும். அதுபோல்தான் நம் பிள்ளைகளும் நன்கு வளர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வதுடன் தன் குடும்பத்தின் பெருமையையும் காப்பாற்ற வேண்டுமென்றால் அது பெற்றோர்களாகிய நம் வளர்ப்பில்தான் உள்ளது என்பதனை நாம் நன்கு உணர்ந்து நல்லதோர் இளைய தலைமுறைகளை உருவாக்குவோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Wednesday, June 22, 2022

#Victory King: குடும்ப உறவுகள் மனம் மகிழ!

  விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1103

சுபகாரியங்களுக்கோ, விசேஷங்களுக்கோ ஒருவரை அழைக்க நாம் அவர்கள் வீட்டிற்குச் சென்றால் அந்த வீட்டில் உள்ள அனைவரையும் இன்முகத்துடன் மனமுவந்து அழைக்கவேண்டும். அதுபோல் அவர்களை வரவேற்கும் பொழுதும் அனைவரது முகத்தையும் பார்த்து அன்புகூர்ந்து வரவேற்க வேண்டும். அதுதான் பண்பு. அதை விடுத்து நாம் அழைத்து வந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் தனித்துவம் கொடுக்கும் பொழுது மற்றவர்கள் மனம் சிறிதாவது காயப்படும் என்பதை நாம் உணர வேண்டும். சில உறவுகளும் நட்புகளும் பிளவுபடுவதற்கு நாம் ஒரு மூல காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதனை நாம் மனதில் கொண்டு பண்போடு வாழ்ந்து அன்போடு அனைவரையும் அரவனைப்போமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Tuesday, June 21, 2022

#Victory King: சொற்களின் வலிமை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1102

ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு வரும் பொழுது பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் வெறுப்பை வளர்ப்பது, மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் வேண்டாதவற்றை எல்லாம் பேசி வம்பை விலைக்கு வாங்குவது, அரைகுறையாகக் கேட்ட விஷயங்களை அலப்பரை செய்து வெறுப்பேத்துவது, யாரோ சொன்ன விஷயங்களை வைத்துக்கொண்டு நேரில் பார்த்தது போல் பறைசாற்றுவது இவைகளெல்லாம் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் பகைமையை மேலும் வளர்ப்பதற்கு சமம். எனவே இடமறிந்து அடுத்தவர் தரம் அறிந்து நாவடக்கத்தோடு சொற்களின் வலிமையை அறிந்து பேசினால் கருத்து வேற்றுமையை கருத்தொருமித்ததாக மாற்றவும் வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்து செயல்படுவோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Sunday, June 19, 2022

#Victory King: எண்ணமே நம் சொத்து!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1101

ஆழ்ந்த துக்கத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டால் துக்கத்தின் சுமை குறையும். கோபத்தின் உச்சத்தில் மௌனியாகி நிதானத்தை கடைபிடித்தால் நாவிலிருந்து கடும் சொற்களை தவிர்க்கலாம். மட்டற்ற மகிழ்ச்சியில்சாந்தமுடன்இயல்பாக செயல்பட்டால் மமதை தலைக்கு ஏறாமல் காப்பாற்றிக் கொள்ளலாம். உற்றார் உறவினர் நண்பர்களுடன் கலந்துரையாடினால் சோகத்தை தவிர்க்கலாம். அடுத்தவர்களின் சொத்தை அபகரிக்கும் எண்ணத்தை நம் மனதிலிருந்து நீக்கினால் நம் சொத்தை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். முயற்சிப்போமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

#Victory King: தினம் தினம் தந்தையர் தினம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1100

அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் தன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அன்போடும் ஆசையோடும் பாசத்தோடும் வளர்ப்பதில் தப்பில்லை. அதேசமயம் பிள்ளைகள் தடம் மாறும் நிலை வந்தால் அவர்களை திருத்தி பண்போடும் வளர்த்தால் மட்டுமேஅவர்கள் வாழ்க்கை வளம் பெரும்.நலம்பெரும். பாசமும் அன்பும் நம் கண்ணை மறைத்து அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் நாமும் ஆடினால் நாமே நம் பிள்ளைகளின் வாழ்வு கெடுவதற்க்கு ஒரு காரணகர்த்தா ஆகிவிடுவோம் என்பதனை நாம் உணர்வோமே! தந்தையர் தின வாழ்த்துக்களுடன்!
Victory King (VK) Alias V. Krishnamurthy

Friday, June 17, 2022

#Victory King: முயற்சி எனும் தீபம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1099

தீபம் சுடர்விட்டு எரிந்து நமக்கு ஒளியை கொடுக்க வேண்டுமென்றால் விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியை போட்டு தீக்குச்சியினால் அந்தத் திரியை ஏற்ற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அது அலைபாய்ந்து அணையாமல் இருப்பதற்கு பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். அதுபோல்தான் நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது முயற்சி என்ற தீப ஒளியை நம் மனதில் கொழுந்துவிட்டு எரியச் செய்து மனதை அலைபாயாமல் கட்டுப்பாட்டுடன் வைத்து செயலில் ஈடுபட்டால் பிரகாசமான வெற்றி நம் செயலுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. முயற்சி தான் நம் முன்னேற்றத்திற்கான மூலமந்திரம் என்பதனை உணர்ந்து வாழ்வோமே!
Victory King (VK)

Wednesday, June 15, 2022

#Victory King: நியாயமாக வாழ்வது அத்தனைக் கடினமா என்ன?

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1098

அடுத்தவர்கள் செய்யும் அனைத்துமே தவறு என்று அடித்து பேசுபவர்கள் சுயநலவாதிகளின் உச்சம். சரியோ தவறோ ஏதோ என் மனதில் பட்டதை சொல்கிறேன் என்று கூறுபவர்கள் மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்கள். அடுத்தவர்கள் செய்வது சரியோ தவறோ அதனைச் சுட்டிக்காட்டி அடுத்தவர்களை திருத்த முயல்பவர்கள் நேர்மையாளர்கள். இத்தகையோர் சமயத்தில் மனதளவில் காயப்பட்டாலும் திருத்த முயன்றதிலுள்ள ஆத்ம திருப்தியில் மகிழ்வார்கள். நியாய வாதிகளாக இருந்து வாழ்வது சற்று கடினமான செயல் என்றாலும் நாம் முயற்சித்து தான் பார்ப்போமே!
Victory king (VK)

Monday, June 13, 2022

#Victory King: நடைபயணம் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப் பயணம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1097

நாம் நடக்கும் பொழுது நம் இடது காலும் வலது காலும் பின்னோக்கியும் முன்னோக்கியும் மாறி மாறி செல்லும் பொழுது தான் நம் நடைப்பயணத்தின் இலக்கை அடைய முடிகிறது. அதுபோல்தான் நம் வாழ்க்கைப் பயணத்திலும் முன்னேற்றமும் பின்னடைவும் நிகழ்வது இயற்கை. எனவே நாம் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது முன்னேறும் பொழுது அகமகிழ்ந்து ஆணவத்தில் ஆடாமலும் பின்னடையும் பொழுது மனம் தளர்ந்து சோர்வடையாமலும் பயணித்தால் மட்டுமே நாம் அந்த இலக்கை அடைந்து வெற்றியை பெற முடியும் என்பதனை மனதில் கொண்டு சோர்விலா வாழ்க்கையை தொடர்வோமே!
Victory king (VK)

Sunday, June 12, 2022

#Victory King: தோற்கும் பொய்மை!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1096

பொய் என்ற கவசத்தை அணிந்து கொண்டு தாம் சொல்வதுதான் சரி, தாம் செய்யும் அராஜகங்கள் அனைத்துமே நியாயம் தம்மை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்ற ஆணவத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் உண்மை என்ற அஸ்திரம் அந்தக் கவசத்தை துளைத்தெடுக்கும் பொழுது அவர்கள் சுக்கு நூறாகி விடுவார்கள். எனவே உண்மை என்ற அஸ்திரத்தின் வலிமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நாம் நன்கு உணர்ந்து அநீதியை கடைப்பிடிக்காமலும் அநீதிக்கு துணை போகாமலும் திடமுடன் வாழ்ந்து நம் வாழ்வை வெல்வோமே!
Victory king (VK)

Monday, June 6, 2022

#Victory King: ஊன்றுகோலாக தன்னம்பிக்கை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 1095

தாங்கிப் பிடிப்பதற்கு ஒரு ஆள் இருந்தால் ஒரு சிலர் நொடிக்காத கால்களையும் நொடிப்பது போல் நடிப்பார்கள். இல்லாத சோகத்தை முகத்தில் ஏற்றியும் பரிதாப பார்வையில் மற்றவர்களின் பாசத்தை பெற்றும் அடுத்தவர் முதுகில் ஆனந்தமாக பயணம் செய்து சுகமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இப்படி இல்லாமல் நம்மை தாங்கி பிடிக்க ஒரு ஆள் இருந்துவிட்டால் நாம் சரிக்கு விழுந்தால் நம்மை தூக்கி விட ஆள் இருக்கிறது என்ற மனோதிடத்தில தன்னம்பிக்கையோடு செயல்பட்டு நமது இலக்கை அடைய அதனை ஊன்று கோலாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பழகுவோமே

Victory King (VK)

#Victory King: கூடா நட்பு கேடாய் முடியும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 1094 

தவறு செய்தவர்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாத கோழைகள் தான் தவறு செய்பவர்களிடம் அடைக்கலமாகி நல்லவர்கள் செய்யும் நற்செயல்கள் அறிவுரைகள் எல்லாம் தவறு என்று வாய்கூசாமல் கூறிக்கொண்டு தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டு அவர்கள் யாரோடு தவறுக்கு துணை போனார்களோ அவர்களோடு சேர்ந்து துணைபோன பாவத்திற்கு இவர்களும் சேர்ந்து அழிந்து விடுகிறார்கள். இதுதான் நிதர்சனம். "கூடாநட்பு கேடாய் முடியும்" என்ற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாம் உணர்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, June 4, 2022

#Victory King: நன்மையே செய்து நலமுடன் வாழ்வோமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1093

காலைச் சுற்றின பாம்பு கடிக்காது விடாது என்பார்கள். அதுபோல நாம் செய்யும் பாவங்கள் அடுத்தவர்களுக்கு செய்யும் துரோகங்கள் நம் நிழலைப் போல நம்மை விட்டு அகலாமல் சுற்றி சுற்றி வந்து வாழ்க்கையை அழிக்காமல் விடாது. ஆனந்தப்பட்ட கண்களில் கண்ணீரை வரவழைக்காமல் பரவசப்பட்ட முகத்தில் மரண பயத்தை உண்டாக்காமல் பாவ மூட்டைகளால் நம் நெஞ்சை அழுத்தித் நம்மை திணர வைக்காமல் அதன் வேகம் தணியாது. எனவே இந்நிலையை நமக்கு வராமல் நம்மை நாமே காத்துக்கொள்ள நன்மையே செய்து நலமுடன் மகிழ்வுடன் வாழ்வோமே!

Victory King (VK)


Wednesday, June 1, 2022

#Victory King: மனிதம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1092

ஐந்தறிவு உள்ள பிராணிகள் கூட நம்மோடு சிலகாலம் பழகிவிட்டால் நமக்கு நன்றியோடு செயல்படும். ஆனால் ஆறறிவு இருந்தும் சில மனிதர்கள் மனிதாபிமானமற்ற அதி சுயநவாதிகளாக செயல்பட்டு தங்கள் மூர்க்கத்தனத்தால் அடுத்தவர்களை துன்பப்படுத்தி அதில் ஆனந்தம் கண்டு உச்சக்கட்டத்தில் தங்களைத் தாங்களே பைத்தியங்கள் ஆக்கிக்கொண்டு அழிந்து விடுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட கயவர்களை புறக்கணித்து நன்றியுள்ளவர்களோடு பழகுவோம், நன்றியுள்ள செல்ல பிராணிகளிடம் அன்பு காட்டி அதனைப் பேணிக் காத்து மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

#Victory King: அனுபவமே வெற்றி தான்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1091

நம் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் அனுபவம் அல்ல. நடந்ததில் நாம் கற்றுக் கொண்டது என்ன எதையெல்லாம் களைந்தெடுத்தோம் எதையெல்லாம் நம் வாழ்க்கைக்கு உகந்தது என்று ஏற்றுக் கொண்டோம் அதன்படி நடந்து வாழ்க்கையில் முன்னேறினோம் என்பதில்தான் இருக்கிறது அனுபவத்தின் சக்தி. நாம் அனுபவத்தால் முன்னேறினால் அது தான் நம் வாழ்க்கையின் வெற்றி.
Victory King (VK)

#Victory King: ஒரு நாளும் அதர்மம் வெல்லாதே!

விக்டரி கிங்கின் சிந்தனை துளி 1090

நமது நேர்மையையும் தர்மசிந்தனையையும் மௌனத்தையும் மற்றவர்கள் அவர்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு நமக்கு துரோகம் செய்பவர்கள் அந்த சமயத்தில் வேண்டுமானால் அவர்கள் ஆனந்தபடலாம். காலத்தின் சுழற்சியில்அவர்கள் செய்த துரோகத்தின் பலனை பன்மடங்காக அனுபவித்து அணு அணுவாக அவதிப்பட்டு அழிவதிலி ருந்து அவர்கள் தப்ப முடியாது. எனவே நாம் செய்த நற்செயல்களுக்கு உரிய பலன் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாமல் அதர்மம் என்றும் வென்றதில்லை தர்மம் என்றும் தோற்றதில்லை என்ற தாரக மந்திரத்தை மனதார நம்பிசோர்வில்லாமல் வாழ பழகுவோமே!
Victory King (VK)