Thursday, December 31, 2020

ஆங்கிலப் புத்தாண்டு 2021 வாழ்த்துகள்

 Status 2021(1)

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள். உலகத்தையே உலுக்கி பல இடர்பாடுகளை நாம் சந்தித்த 2020-லிருந்து விடைபெறும் இந்த நன்னாளில் இந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நமக்கு நல்வாழ்வையும் புத்துணர்ச்சியையும் அளித்து குடும்பத்தில் குதூகலம் பொங்கவும் அனைத்து இன்னல்களில் இருந்தும் நம்மை காப்பாற்றவும் வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இந்த ஆங்கிலப் புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்போம். புது யுகத்தை எதிர்பார்ப்போம். நல்லதையே நினைப்போம். புதுப்பொலிவுடன் இந்த இனிய புத்தாண்டில் வாழ்க்கை பயணத்தை தொடர்வோம்.

Victory King (VK)

Wednesday, December 30, 2020

அன்பும் பண்பும்!

 Status 445

உதவியவரை ஒரு போதும் மறக்காதே! உன் மேல் அன்பு கொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே! நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே!

விவேகானந்தர்

முத்தான இந்த பொன்மொழியை முக்கியமாக சுயநலக்காரர்கள் கடைபிடித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். இதை நாம் அனைவருமே பின்பற்றி பண்புக்கு இலக்கணம் வகுப்போமே!

Victory King (VK)

Tuesday, December 29, 2020

ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி செய்வோம்!

 Status 444 

ஆரோக்கிய வாழ்விற்கு பணம் புகழ் ஆடம்பர வாழ்க்கை அறுசுவை உணவு இவைகள் மட்டும் போதாது. அமைதியான குடும்ப சூழ்நிலை நல் உறவுகளோடு கூடிய இருப்பிட சூழ்நிலை மதிக்கத்தக்க வெளி உலக சூழ்நிலை நல்லெண்ணம் கொண்ட நட்பு வட்டம் உணர்வுபூர்வமான உறவுகள் வட்டம் அன்போடும் பண்போடும் ஒருவரை ஒருவர் சந்தித்தல் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் அன்பு உள்ளங்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சந்தர்ப்பத்தை அவ்வப்பொழுது ஏற்படுத்தி மகிழ்தல் இது போன்ற நிகழ்வுகளினால் தான் நமது மனம் மகிழ்வடைந்து உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்து புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். மன அமைதியும் உளமார்ந்த முகமலர்ச்சியும்தான் நம்மையும் நம் வாழ்க்கையும் வளம் பெறச் செய்யும். வளமான நலமான வாழ்வைப் பெற நாம் முயல்வோமே!

Victory King (VK)

Monday, December 28, 2020

அகந்தையை அழிப்போம்!

 Status 443

விவேகானந்தர் அமெரிக்காவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இரண்டு ஐரோப்பியர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தார். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்த ஒரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு நாய்...' என, ஆங்கிலத்தில் கூறினான். மற்றொரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு கழுதை...' என்று கூறினான். இதை கேட்ட, விவேகானந்தர்  ‘அவை இரண்டிற்கும் இடையிலே தான், நான் அமர்ந்திருக்கிறேன்...’ என்று ஆங்கிலத்தில் கூறினார். இதைக் கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும் அவமானத்தால் தலை குனிந்தனர்.

விவேகானந்தர் வாழ்க்கையில் இருந்து!

ஒருவருக்கு அகந்தை தலைக்கேறி விட்டால் கண்களும் காதுகளும் செயலிழந்து நாவினால் தப்புத் தாளங்கள் போட்டு ஒரு நிலையில் மற்றவர்கள் மத்தியில் மதிப்பிழந்து மானமிழந்து தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நிலை தான் வரும். உணர்ந்தால் உண்டு நல்வாழ்வு!

Victory King(VK)

Sunday, December 27, 2020

நோக்கத்தை உறுதி செய்!

 Status - 442.

நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். கையில் பணமில்லையே...உடலில் வலுவில்லையே...உதவி செய்ய நண்பர்கள் இல்லையே... என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே...தயங்காதே! இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு. சோதனைகள் விலகும்.பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய். அதை யாராலும் தடுக்க முடியாது. 

சுவாமி விவேகானந்தர்.

நாம் நமக்கு வேண்டிய இலக்கை மன உறுதியோடு தீர்மானித்து விட்டால் அதை நோக்கிப் பயணம் செல்லும்போது என்ன இடர்பாடுகள் இருந்தாலும் தூள் தூளாக்கி இலக்கை அடைந்தே தீருவோம். மன உறுதி, தொடர் முயற்சி, உழைப்பு இவைகள் இருந்தால் போதும். 

Victory King(VK)

Saturday, December 26, 2020

வாழ்ந்து சாதிப்போம்!

 Status 441

"வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்....."

கவிஞர் கண்ணதாசன்

நமக்கு கவலை இருக்கலாம்; கடன் இருக்கலாம் ஏமாற்றும்; எத்தர்கள் இருக்கலாம்; நம்மை அவமானப்படுத்த துடிக்கும் துரோகிகள் இருக்கலாம்; கூடவே இருந்து குழி பறிக்கும் கயவர்கள் இருக்கலாம்;  எல்லா உதவிகளையும் நம்மிடம் பெற்றுக்கொண்டு பொல்லாங்கு கூறித் திரியும் உறவினர்களும் கூட இருக்கலாம். ஆனால் நாம்தான் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி அடைய வேண்டுமே ஒழிய எதற்காகவும் எவருக்காகவும் நாம் நம்மை அழித்துக் கொள்ளக் கூடாது.

‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை மனதில் கொண்டு, வாழ்வதற்காகவே நமக்குக் கொடுத்த இந்த அறிய பிறவியை வாழ்ந்து மகிழ்வோம்; வாழ்ந்தே சாதிப்போம்.

Victory King (VK)

Friday, December 25, 2020

மானிடப் பிறவியின் பயன்!

 Status 440

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. 

ஒளவையார்

எளிது எளிது மானிடராய் பிறந்து, சினம் பொறாமை போக்கி, ஏக்கமும் தாக்கமும் நீக்கி, அன்போடும் பண்போடும் வாழ்தல் எளிது;

கொடிது கொடிது மானிடராய் பிறந்தும், தான் என்ற அகந்தை பெற்று, அடுத்தவரை துன்புறுத்தி இன்பமுற்று, பொய்யும் புரட்டுமே தங்கள் வாழ்க்கையாக்கி, பிறவியின் பயனை இழந்து, இறுதியில் தன்னையும் இழக்கும் நிலை கொடிது;

எனவே இனிது இனிது சினம் நீக்கி, பொறாமை போக்கி, அகந்தையை அகற்றி, அன்பையும் பண்பையும் உள்வாங்கி, நமக்குக் கிடைத்த அரியதொரு மானிடப் பிறவியின் பயனை முழுமையாக அடைவோமே!

Victory King (VK)

Thursday, December 24, 2020

வாழும்போது மனிதத்துடன் வாழ்வோம்!

 Status 439             

ஆடுகிற ஆட்டமும், ஓடுகிற ஓட்டமும் ஒரு நாள் ஓயும் போது, கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீ யார் என்பதை.

பட்டினத்தார்

இன்று நமக்கு பக்க பலமும், பண பலமும், உடல் வளமும் இருக்கிறது என்று மற்றவர்களை மதிக்காது எகத்தாளம் பண்ணுவதும் மற்றவர்கள் மனதை துன்புறுத்துவதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு அடாத  செயல்களை செய்வதும்  இப்போது வேண்டுமானால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கலாம். நாம் ஆடி அடங்கி மற்றவர்கள் நம்மை நன்கு புரிந்த பிறகு, நாம் மற்றவர்களால் அவமதிக்கப்படுவதோடு, எழுந்து நடக்க முடியாத நிலைக்கு மானத்தை இழப்போம் மதிப்பை இழப்போம், செல்லாக் காசாகி விடுவோம் என்பதை நன்கு உணர வேண்டும்.

Victory King (VK)

Wednesday, December 23, 2020

செய்கின்ற தொழிலில் நேர்மை வேண்டும்!

 Status 438

நாம் செய்யும் தொழிலில் மேலும் மேலும் முன்னேற முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது நேர்மை, நாணயம், உண்மை, உழைப்பு அந்த தொழிலுக்கு உரிய மரியாதையை கொடுப்பது. இவைகளை விடுத்து வெட்டி பந்தா பண்ணுதல், தங்களை மிகை படுத்திக் காண்பித்தல், தங்கள் பின் பலம் என்ன என்பதை பறைசாற்றிக் கொள்ளுதல் இவைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை மதிக்க வைத்தல், எளியோரை தரம் தாழ்த்தி பேசுதல் இந்த செயல்களினால்  எதையும் சாதித்து விடலாம், முன்னேறி விடலாம் என்று நினைப்பவர்கள் ஆரம்பத்தில் சாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் போகப்போக அதலபாதாளத்தில் தான் விழுவார்கள். இதுதான் இயற்கையின் நீதி. எனவே சத்தியத்திற்கு கட்டுப்பட்டு மனசாட்சிக்கு பயந்து எந்த தொழில் செய்தாலும் எக்காலத்திலும் நாம் வளம் பெறுவது நிச்சயம்.

Victory King (VK)

Tuesday, December 22, 2020

உண்மையின் மதிப்பு!

 Status 437

பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை. பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

சுவாமி விவேகானந்தர்

‘பாம்பாட்டிக்கு பாம்பால் தான் சாவு’ என்று சொல்வார்கள். அதுபோல் பொய்யாலே பிழைப்பை நடத்துபவர்கள் தன் இனத்தைச் சேர்ந்த பொய்யர்களாலேயே தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வார்கள். பொய்யானது நம்மை துரத்தும் இரை தேடும் புலி. அது நம்மை அடித்து குதறாமல் விடாது. எனவே நாம் "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் நம்மை மதிக்கும்" என்ற பாடல் வரிகளை மனதில் கொண்டு மருந்திற்கும் பொய் பேசாமல் எப்பொழுதும் உண்மையே பேசி நம் வாழ்வை ஒளிமயமாக்குவோமே!

Victory King (VK)

Monday, December 21, 2020

நீ நீயாக இரு!

 Satus 436

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.

டாக்டர் அப்துல் கலாம்

நம் எண்ணம் தூய்மையாக இருந்து செயல் நேர்மையாக இருந்து நம் திறமையையும் உழைப்பையும் மட்டுமே நம்பி ஒரு குறிக்கோளை நாம் அடைய நினைக்கும் பொழுது அதனை நாம் அடைவது என்பது உறுதி. என் நிலையிலும் நம் நிலை மாறாத மனநிலையுடன் வாழ்ந்து வாழ்க்கையை வெல்வோமே!

Victory King (VK)

அன்பு என்பது யாதெனில்!

Status 435. 

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது. செயல்களால் தான் விளக்கம் பெறுகிறது அன்பு. 

அன்னை தெரசா. 

நாவில் தேனொழுக பேசுவதெல்லாம் அன்பாகாது. உண்மையான அன்பானது ஆழ்மனதில் இருந்து வந்து அதன் பிரதிபலிப்பு முகத்தில் மலர்ச்சியைக் கொடுக்கும். நம் நரம்புகள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று அன்பும் பண்பும் ஒருங்கிணைந்து நம் செயல்களில் வெளிப்படும். அதில் நமக்கு ஒரு பரவசம் ஏற்படும். அந்தப் பரவசமே மற்றவர்களுக்கு நம்மை ஈர்க்கும் சக்தியைத் தந்து பரஸ்பர உத்வேகத்தை ஏற்படுத்தும். அது நமக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருவரையும் இணைக்கும் நட்பு பாலமாக விளங்கி உறவுகளை மேம்படுத்தும். 

Victory King (VK)

Saturday, December 19, 2020

சுயமாக சிந்திப்போமே!

 Status 434

தமக்கென சொந்த கருத்து, புத்தி இல்லாதவர்கள் யார் எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள். பிறரது கருத்துக்களை அப்படியே ஏற்காமல் சுயமாக சிந்தித்து செயல்படுபவரே வெற்றி பெறும் தகுதி உடையவர்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

நாம் பிறர் சொல்லுவதை அப்படியே ஏற்காமல், வள்ளுவன் கூற்றுப்படி யார் எது சொன்னாலும் அதன் உண்மைப் பொருளை அறிந்து அதற்கேற்ப நாம் அதனை சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதுடன் நம் சிந்தனா சக்தியையும் நம் திறனையும் நன்கு உணர்ந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

Victory King (VK)

Friday, December 18, 2020

உண்மையுடன் நட்பாக இருங்கள்!

 Status 433

பொய்யுடன் நட்புறவு வேண்டவே வேண்டாம். பொய்யுடன் சேர்ந்து நீங்களும் நசுக்கப் படுவீர்கள். உண்மையிலேயே நீங்கள் பூத்துக் கொண்டிருக்கும் உயிராக ஆக வேண்டுமானால் உங்கள் உயிருக்கு உண்மையாகவே நீங்கள் சுதந்திரம் அளிக்க விரும்பினால் ஒரு போதும் பொய்யோடு நட்பு கொள்ளாதீர்கள். என்ன விலை கொடுத்தேனும் உண்மையாக இருங்கள்.

ஓஷோ

பொய் என்பது புற்று நோயின் ஆரம்பம். அதை சரி செய்யாமல் மேலும் மேலும் பொய்மையே வாய்மையாக கொண்டால் அது புரையோடி வாழ்வையே கெடுத்துவிடும். எனவே உண்மையே பேசுவோம் என்ற தாரக மந்திரத்தை வேதவாக்காக எடுத்துக்கொண்டு வாழ்வில் நலம் பெறுவோம்.

Victory King (VK)

Thursday, December 17, 2020

வைராக்கியம்!

 Status 432

கீழே கொட்டிய கடுகை பொறுக்கி எடுப்பதை போல, பல திசைகளிலும் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் அதை  வைராக்கியத்தால் சாதிக்க முடியும்.

ராமகிருஷ்ணர்

வைராக்கியத்துடனும் ஒரு குறிக்கோளுடனும் ஒரு இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற தீவிர சிந்தனையோடு ஒரு செயலில் ஈடுபடும் பொழுது நம் மனமானது அந்த நேர் கோட்டைவிட்டு விலகாது நாம் குறிக்கோளை அடைந்தே தீருவோம்.

Victory King (VK)

Wednesday, December 16, 2020

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்போமே!

 Status 431

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.

அன்னை தெரசா

பிறரிடம் காட்டும் அன்பு பாசம் நேசம் கருணை இவர்களை பொறுத்துத்தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டி கருணை செய்கிறார். உயிரோடு இருக்கும் பொழுது நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்பத்தான் நாம் இறக்கும் தருவாயிலும் இறந்த பிறகும் நமக்குத் திரும்பக் கிடைக்கும். நலிந்தோருக்கு நல்லது செய்தல், உதவி வேண்டுவோர்க்கு உதவி செய்தல், பசித்தோர்க்கு பசியாற்றுதல் இவை தான் நாம் இரக்கப்பட்டு செய்யும் செயல்களுக்கு முழு பலனளிக்கும். எனவே புகழுக்கு ஆசைப்பட்டு பலனில்லா செயல்களை செய்வதை விடுத்து வாடுவோர்க்கு வாழ்வளித்து மகிழ்வோமே!

Victory King (VK)

Tuesday, December 15, 2020

புன்னகையே அன்பின் சின்னம்!

 Status 430

புன்னகையே அன்பின் சின்னம். நாம் பிறருக்கு கொடுக்கும் அழகிய பரிசு.

அன்னை

நம் முகத்தில் புன்னகை இருந்தால் பொன்னகை தேவையில்லை என்று சொல்வார்கள். நம் உடலை அலங்கரிப்பது பொன்நகை. உள்ளத்தை அலங்கரிப்பது புன்னகை. புன்னகையால் முகம் பொலிவோடு இருப்பது மட்டுமல்லாமல் நமக்கு ஒரு அலாதி தைரியத்தையும் எழுச்சி உணர்வையும் கொடுப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களையும் உத்வேகப்படுத்தும் மகாசக்தி அந்தப் புன்னகைக்கு உண்டு. எதிரிகளையும் வெல்லக்கூடிய ஒரு ஆற்றல் நம் உடல் வலிமைக்கு மேல் புன்னகைக்கு சக்தி உண்டு. எனவே முகமலர்ச்சியோடு நாம் இருப்பதோடு மற்றவர்களையும் மகிழச் செய்வோம்.

Victory King (VK)

Monday, December 14, 2020

வாழ்க்கையின் வெற்றிக்கான மூன்று ரகசியம்!

 Status 429

மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும். உணர்வதற்கான இதயம், சிந்தனைத் திறன் உள்ள மூளை, வேலை செய்யக்கூடிய கைகள்.

சுவாமி விவேகானந்தர்

தன் குற்றங்களை அறிந்து திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும், சிந்தித்து ஆராய்ந்து செயல்படக்கூடிய வகையில் தன் திறனை மேம்படுத்திக் கொள்ளுதலும், அனைத்திற்கும் பிறர் கையை எதிர்பாராமல் தானே எந்த ஒரு செயலிலும் ஈடுபாட்டுடன் செயல்வடிவம் கொடுத்தலும் ஆன திறன்  ஒருவரிடம் இருக்குமேயானால் அவரது வாழ்க்கை தன்னம்பிக்கையுடன் மேலும் மேலும் உயர்வடையும்.

Victory King (VK)

Saturday, December 12, 2020

தன் வினை!

 Status 427

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்

சுவாமி விவேகானந்தர்

நாம் ஒருவருக்கு துரோகம் செய்துவிட்டு நம் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு துரோகச் செயலுக்கும் பல மடங்கு தண்டனையை அனுபவிப்பதோடு அது நம் குடும்பத்தையே அழித்துவிடும். எனவே அடுத்தவனுக்கு கேடு செய்வதையும் நிந்திப்பதையும் விடுத்து நாமும் நம் குடும்பமும் நலமுடன் வாழும் வழியை பார்ப்போமே!

Victory King (VK)

Friday, December 11, 2020

பாரதியை போற்றுவோம்!

 Status 426

எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே  எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

தெளிந்த நல்லறிவு வேண்டும்;

பண்ணிய பாவமெல்லாம்

பரிதிமுன் பனிபோல,

நண்ணிய நின்முன் இங்கு

நசிந்திடல்  வேண்டும் அன்னாய்.

- மகாகவி பாரதியார்.

எனவே நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை போக்கவும், மேலும் மேலும் பாவ காரியங்களை செய்யாமல் இருக்கவும், நாம் அன்னையிடம் ஆத்ம சுத்தியுடன் வேண்டினால் நம் பாவங்கள் நீங்குவதோடு நமக்கு நல்லறிவு கிடைக்கும். நல்லறிவால் மன வலிமை உண்டாகும். மன வலிமையால் நாம் நல்லனவே நினைப்போம். நல்லன எண்ணும்போது, நாம் எண்ணியன நடப்பதில் தடையேதும் இருக்காது.

Victory King (VK)

Thursday, December 10, 2020

உண்மையின் வலிமை!

 Status 425

நம்மிடம் உண்மை இருக்கலாம். அது மட்டும் போதாது. உண்மையின் பக்கம் நாம் இருக்க வேண்டும். நாம் உண்மைவாதியாக இருந்தாலும் எந்த தருணத்திலும் எக்காரணத்தினாலும் நாம் பகட்டு வித்தையால் மற்றவர்களை ஏமாற்றி பொய்யையே மூலதனமாக வைத்து வாழ்பவர்களிடம் சகவாசம் வைத்துக்கொள்ளாமல் இருந்தால்தான் நாம்  கொண்ட உண்மைக்கு உரிய அந்தஸ்து கிடைக்கும். உண்மையின் புனிதத்தன்மையை காப்போம். மதிப்போடு வாழ்வோம்!

Victory King (VK)

Wednesday, December 9, 2020

நா நயமும், நாணயமும்!

 Status 424

ஒருவரிடம் நா நயம் இல்லையென்றால் அவரிடமிருந்து நட்பும் சுற்றமும் விலகிப் போகும். அத்துடன் நாணயமும் இல்லையென்றால் மற்றவர்கள் யாரும் அவரை மதிக்க மாட்டார்கள். ஆக, நா நயமும் நாணயமும் இல்லாதவர்கள் வாழ்க்கை சூனியம் தான். எனவே நாம் நாவை அடக்கி நா நயத்துடன் பேசி நாணயத்தையும் காப்பாற்றி அன்போடு பழகி பண்போடு வாழ்ந்து அனைவரையும் அரவணைப்போமே!

Victory King (VK)

Tuesday, December 8, 2020

ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரின் ஆசி!

Status - 423 

ஸமஸ்த லோகா சுகினோ பவந்து!

தண்ணீருக்குள் பாறை வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால் களிமண் தண்ணீருக்குள் கிடந்தால் கரைந்துவிடும். அதுபோல திடமான நம்பிக்கையுள்ள மனமுள்ளவர்கள், சோதனையால் தடுமாற்றம் அடைவதில்லை. நம்பிக்கை இல்லாதவருடைய மனம் சிறு காரணத்துக்குக் கூட சலனமடையும்.

- ஸ்ரீகாஞ்சி மகாபெரியவர்.

ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரின் அருளால் நாம் அனைவரும் திடமான மனதும் நம் மீது நம்பிக்கையும் கிடைக்கப் பெற்று மனமகிழ்வுடன் வாழ்வோமே!

- Victory King (VK)

Monday, December 7, 2020

வினையும் பயனும்!

 Status 422

மனிதன் ஏமாற்றிவிட்டான் என்று கவலை வேண்டாம். ஒன்று நினைவு வைத்துக் கொள். காலச்சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. யாரும் தப்பிக்க முடியாது.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

ஒருவன் அடுத்தவனை ஏமாற்றி அவனுக்கு துரோகம் செய்வது. கொலை செய்வதற்கு சமம். அந்தப் பாவம் அவனை சும்மா விடாது. காலச் சுழற்சியில் ஏமாற்றியவனுக்கும் இதே நிலை வரும்.  அப்பொழுது அவன் செய்த பாவத்திற்கு அவன் தலை தூக்க முடியாத அளவிற்கு தண்டனை வந்தே தீரும். தப்பவே முடியாது. எனவே நியாயத்தின் பக்கம் நாம் நின்று தலை நிமிர்ந்து வாழ்வோமே.

Victory King (VK)

Sunday, December 6, 2020

உங்களால் முடியும்!

 Status 421

உங்களால் முடியும்: யார் ஒருவர் எதை அடைவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அவர் அதை அடையாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்த பிரபஞ்சத்திலுள்ள எந்த சக்தியாலும் முடியாது.

சுவாமி விவேகானந்தர்

நாம் ஒரு செயலை செய்து முடிப்பதற்கு நமது மூலதனம் முதலில் அதற்கான தகுதி. அடுத்தது விடாமுயற்சி. இவ்விரண்டும் இருந்து நேர்மையுடன் எந்நிலையிலும் சோர்வடையாமல் செயல்பட்டால் நாம் அதில் வெற்றி வாகை சூடுவது நிச்சயம்.

Victory King (VK)

Saturday, December 5, 2020

நல்லதை நினைப்போம் நலமுடன் வாழ்வோம்!

 Status 420

நாம் எதை தொலைத்தாலும் நம்மை நாமே தொலைத்து விடக் கூடாது. நம் மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மனதின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்றுவிட்டால் அது நம்மை அதன் போக்கில் தாறுமாறாக அழைத்துச் சென்று ஒரு நிலையில் திக்குத் தெரியாமல் தவிர்ப்போம்.நாம் என்ன செய்கிறோம் என்பதே நமக்கே புரியாத நிலை வந்துவிடும். நம்மை நாமே தேடக்கூடிய நிலையும் அதுவே. எனவே மனம் போன போக்கில் நாம் போகா வண்ணம் நம்மை நாம் காப்பாற்றிக் கொண்டு நல்லவைகளையே நினைத்து நன்மைகளையே செய்து நாம் நலமுடன் வாழ்வோமே

Victory King (VK)

Friday, December 4, 2020

இறை பார்வை!

Status - 419

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் 

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களஒழிந் தாரே.

பொருள்:

நம்மை கண்காணிப்பவர்கள் இல்லை என்ற தைரியத்தில் தவறு செய்பவர்கள் அநேகர். அது மனித இயல்பு. உண்மையில் நம்மை கண்காணிக்கும் இறைவன் இல்லாத இடமே இல்லை. அழ்ந்த விழிப்புணர்வுடன் பார்த்தால்  கண்காணிப்பவர் எங்கும் இருப்பது உணர முடியும். அவ்வாறு உணர்ந்த பின்னர் தங்களிடம் இருக்கும் தவறுகளை விட்டுவிடுவார்கள் மனிதர்கள்.

- திருமந்திரம் 2067

அப்படி உணர்ந்து திருந்தினால் நல்ல விஷயம் தான். இல்லையேல் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்! என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது

Victory King (VK)


Thursday, December 3, 2020

பிரார்த்தனையின் பலன்!

 Status 418

என்னதான் பிரார்த்தனை என்ற பெயரில் நாம் கடவுளிடம் மனம் உருகி வேண்டினாலும், அதற்கான ஹோமங்களை வீட்டில் ஊர் மெச்சம் அளவிற்கு செய்தாலும், நாம் நினைப்பதும் வேண்டுதலும் நியாயமானதாக இல்லையென்றால், தற்சமயம் நமது வேண்டுதல்கள் பலிப்பது போல் தோன்றினாலும் எண்ணத்தின் விளைவுகள் எதிர்மறையாகத்தான் இருக்கும். ஆனானப்பட்ட தீவிர சிவபக்தனான இராவணனையே ராமர் வதம் செய்ததும் , சிவனிடம் வேண்டி பெற்ற வரத்தினை தன் தீவினையினாலும் அகம்பாவத்தினாலும் அதனைக் கெடுத்துக் கொண்ட சூரனை முருகன் வதம் செய்ததும் தெரிந்திருந்தும், பணத்தினாலும் போலி பக்தியினாலும் நாம் எதையும் வென்று விடலாம் என்ற நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நம் வாழ்க்கை பரமபதத்தில் பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட நிலைதான். எனவே பக்தியின் புனிதத்தை கெடுக்காமல் உள்ளத் தூய்மையுடன் நாம் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் நிச்சயம் உண்டு

Victory King (VK)

Wednesday, December 2, 2020

மனோபலமும் தேகபலமும்!

 Status 417

ஒரு உறுதியான மனம் பலமற்ற உடலை எடுத்துச் செல்லும். ஆனால் ஒரு உறுதியற்ற மனதால் பலமுள்ள உடலைக் கூட எடுத்துச்செல்ல முடியாது

குருதேவ் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஒரு செயலை செய்வேன் என நினைப்பதும் சொல்வதும் தன்னம்பிக்கையைக் குறிக்கும். ஆனால் அந்த செயலில் பல இடர்பாடுகள் வந்தாலும் அதை செய்தே தீருவேன் என்று மனதில்கொண்டு ஈடுபாட்டுடன் அந்த செயலை செய்து காட்டுவதுதான் மனோபலம். எனவே மனோபலம்தான் தேகபலம்.

- Victory King (VK)


Tuesday, December 1, 2020

நம்பிக்கை மேல் நம்பிக்கை வைப்போம்!

 Status 416

உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை

விவேகானந்தர்

முதலில் நம்மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். எந்த ஒரு செயலையும் நாம் முழு நம்பிக்கையுடன் தொடங்கி திடமனதுடனும் நேர்மையுடனும்  தளர்வில்லாமலும் செயல்பட்டால் அந்த செயல் முழுமையாக வெற்றி அடைவது உறுதி. எனவே நம்பிக்கையை மூலதனமாக வைத்து செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

Victory King (VK)