Saturday, May 28, 2022

#Victory King: பாரபட்சம் வேண்டாமே!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1089

பந்தியில் பாரபட்சம் காட்டக்கூடாது. பெற்ற பிள்ளைகளிடம் பாசத்தில் பிரிவினை காட்டக்கூடாது. அதுபோல் நம் உறவினர்களிடம் பழகும்பொழுது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் திருமணம் ஆகாதவர்கள் ஆக இருந்தாலும் சரி திருமணமாகி தனியாக இருந்தாலும் சரி கணவனை இழந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரிடத்திலும் அந்த குடும்பத்தில் மற்றவர்களுக்குக் கொடுக்கும் உரிய அந்தஸ்தை இவர்களுக்கும் கொடுப்பதுதான் பண்பான செயல். எனவே நமக்குப் பிறகும் நம் தலைமுறைகளின் வாழ்க்கை தொடரும் என்பதை நாம் நன்கு மனதில் கொண்டு பாரபட்சம் இன்றி வாழ்ந்து   உறவுச் சங்கிலியை வலுப்படுத்துவோமே!

Victory King (VK)

Tuesday, May 24, 2022

#Victory King: 'நா’ வண்மை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1088

நமது நாக்கு அறு சுவைகளை மட்டும் நமக்கு உணர்த்துவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. நாவின் மகிமை பல திறன் கொண்டது. நயமுடன் பேசி நட்பை வளர்க்கும். இனிமையாகப் பேசி அன்பை பெருக்கும். கோபத்தினால் கொடும் சொற்களை உதிர்த்து அடுத்தவர்களை அவமதிக்கும் பயனற்ற சொற்களைப் பேசி பண்பாட்டை கெடுக்கும். இப்படியாக நம் எண்ணத்தை பிரதிபலிக்கும் நாவை நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் நமக்கு எண்ணத் தூய்மை வேண்டும். எனவே ருசிக்கு மட்டும் அல்ல நமது 'நா' நமது மதிப்பை மேம்படுத்துவதும்"நா" தான் என்பதை நாம் நன்குணர்ந்து என்ன தூய்மையோடு வாழ்ந்து நம் மதிப்பை மெருகூட்டிக்கொல்வோமே!

Victory King (VK)

Monday, May 23, 2022

#Victory King: குற்றமும் தண்டனையும்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1087

ஒருவர் தெரியாமல் செய்த குற்றம்: அவருக்கு  புரிய வைத்து திருத்தி அவரை நேர்வழியில் செல்ல வைப்பது நமக்கு சாத்தியமே.

குற்றம் என்று தெரிந்தே செய்யும் குற்றம்: தானாக உணரவும் மாட்டார்கள் நாம் சொல்லியும் திருந்த மாட்டார்கள். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள்:

அவர்கள் செய்யும் அராஜகங்களினாலும் அநீதிகளினாலும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதுடன் தங்கள் சந்ததியினரையும் சேர்த்து அழித்து விடுவார்கள். அவர்கள் செய்யும் அராஜகங்களும் அநீதிகளுமே அவர்கள் வம்சத்தையே அழிக்கும் ஆயுதங்கள் என்பது நிதர்சனம்.

Victory King (VK)

Sunday, May 22, 2022

#Victory King: கடந்தகாலமும் நிகழ்காலமும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1086

கடந்த காலத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலும் வருங்காலம் எப்படி இருக்கும் என்று சிந்தித்து நம் செயல் திறனை சிதறவிடாமலும் நிகழ்காலம் தான் நம் கையில் இன்று என்பதை நன்குணர்ந்து அதனை செவ்வனே பயன்படுத்தி மகிழ்வுடன் வாழ முயற் சித்தால் நாம் வாழும் அனைத்து நாட்களுமே நமக்கு பொற்காலம்தான் என்ற தாரக மந்திரத்தை நாம் மேற்கொண்டு நலமுடன் வாழ முயற்சிப்போமே!

Victory King (VK)

Saturday, May 21, 2022

#Victory King: சோகமும், சுகமும் நம் கைகளில்தான்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1085

நாம் எண்ணியது நடந்தால் மகிழ்வதும் அதுவே எதிர்மறையாக நடந்துவிட்டால் மனம் வேதனைப்பட்டு விரக்தி ஆவதும் மனித இயல்புதான். இந்த எதிர்மறை நிகழ்வின் விரக்தியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் ஒன்று நாம் எதையும் அளவுக்கு மீறி எதிர்பார்த்து கனவு காணாமல் இருக்கலாம் அல்லது எதிர்மறை நிகழ்வுகள் நடந்து விட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளலாம். இதை விடுத்து நடந்ததையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் சுகம் என்பதே வாழ்வில் இல்லாமல் சோகம்தான் மிஞ்சும். எனவே வாழும் காலத்தை வசந்தமாக்கி வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Friday, May 20, 2022

#Victory King: மமதை ஒழிப்போம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1084

மதம் கொண்ட யானையை விட மமதை கொண்ட மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள். மதம் கொண்ட யானை தன் சுய நினைவில்லாமல் அனைத்தையும் அழிக்கும். ஆனால் மமதை கொண்ட மனிதர்கள் தன் சுய நினைவுடனேயே அனைவரையும் அழிக்க முயல்வார்கள். எனவே அத்தகைய மனிதர்களை நாம் இனம்கண்டு அவர்களிடமிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டாலே ஒழிய அவர்களிடமிருந்து தப்ப வேறு வழி இல்லை என்பதை நாம் நன்கு புரிந்து கொண்டு வாழப் பழகினால் மட்டுமே நமது வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

Victory King (VK)

Thursday, May 19, 2022

#Victory King : சுயநலம் தவிர்ப்போமே!

விக்டரிகிங்கின் சிந்தனைத் துளி: 1083

ஒருவருக்கு சுயநலம் மேலோங்கும் போது என்னதான் பட்டமும் பதவியும் பெற்றிருந்தாலும் அவர்கள் எண்ணம் நல்லதையே நாடாது. அடுத்தவனை எப்படி அழிக்கலாம் தன்னை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதில்தான் சிந்தனைஓடும். அது ஒரு நிலையில் அவர்கள் கண்ணையே மறைத்து  படுகுழியில் விழுந்து தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் நிலைதான் வரும். எனவே எந்நிலையிலும் நம் மனதில் சுயநலத்திற்கு இடங்கொடாமல் வாழ்ந்தால்மட்டுமே நம் வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

#Victory King: தூய்மையான மனம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1082

மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால் தான் அந்த மரம் கிளைவிட்டு துளிர்விட்டு பூத்துக் குலுங்கி சுவையான காய்கனிகளை நமக்கு கொடுக்க முடியும். அதுபோல்தான் நாம் சொல் செயல் சிந்தனை அனைத்திலும் தூய்மை பெற்று நம் மனதை உறுதியாக வைத்து வாழ்ந்தால் மட்டுமே நம் சந்ததியினர் வாழ்வு சிறக்கும். எனவே நம் குடும்பத்திற்கு நாம்தான் ஆணிவேர் என்பதை நாம் நன்கு உணர்ந்து நம் சந்ததியினரின் வாழ்வை மலர வைப்போமே!

Victory King (VK)

Tuesday, May 17, 2022

#Victory King: பிரிவினை தவிர்ப்போமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1081

நம் உணர்வுகளை மதிக்காமல் நம்மை மிதித்து பயணித்து உறவுகளை பிளந்து விட்டு நாம் இருக்கும்போதே அன்பாய் நான்கு வார்த்தைகள் பேசக்கூட முடியாதவர்கள் நாம் இறந்த பிறகு வந்து அழுது புரண்டு ஆர்பாட்டம் செய்யும் போலி உறவுகளின் செயல்கள் போல கேவலம் வேறு ஒன்றுமில்லை.எனவே உயிரோடு இருக்கும்பொழுதே உறவுகளை மதித்து உணர்வுகளை மதித்து பிரிவினையைத் தவிர்த்து மதிப்போடு வாழ்ந்து மகிழ்வோமே!

Victory King (VK)

Monday, May 16, 2022

#Victory King: சொர்க்கமும் நரகமும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1080

உள்ளத்திலே அழுக்கு உதட்டிலே போலியான புன்சிரிப்பு நாவினால் தேனொழுக  நஞ்சு கொண்ட பேச்சு அடுத்தவரை அரவணைப்பது போல் அழிக்கத் துடிக்கும் கரங்கள் இவைகள் அனைத்தும் நம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் நடைபாதை என்பதை நாம் நன்கு உணர்ந்து நம்மால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் எண்ணாமலும் செய்யாமலும் வாழ்ந்தாலே நாம் வாழும் காலங்களும் சொர்க்கம் நாம் இறுதியில் சென்றடையும் இடமும் சொர்க்கமே!

Victory King (VK)

Sunday, May 15, 2022

#Victory King: உறவினர் இங்கிதங்கள்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1079

உற்றார் உறவினர் சுப நிகழ்ச்சிகளுக்கு நாம் நேரில் செல்ல சந்தர்ப்பம் இல்லாத சமயங்களில் வாழ்த்துச் செய்தி அனுப்பி நமது உளமார்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், ஒருவரது இரங்கலுக்கு நமது ஆழ்மனது துக்கங்களை வெளிப்படுத்தி செய்திகள் அனுப்பி வைப்பதும் நாம் நம் மனசாட்சிக்கு உட்பட்டு செய்யும் செயல். இதனை ஏற்பவர்கள் சிலர் எதிராளியின் நிலையை சிறிதும் சிந்திக்காமல் தரம் தாழ்த்திப் பேசுவதும் உறவுகளை கேவலப்படுத்துவதும் அவர்களது அறியாமை என்று சொல்ல முடியாது. அது அவர்களது ஆணவத்தின் பிரதிபலிப்புதான். இப்படிப்பட்ட உறவுகளை பற்றி சிறிதும் நாம் கவலைப்படாமல் நம் மனசாட்சிதான் கடைசிவரை நம்முடன் வரும் உறவு என்று எடுத்துக்கொண்டு தூற்றுவாரை புறம்தள்ளி வைப்பதுதான் நம் இதயத்திற்கு இதம்!

Victory King (VK)

Saturday, May 14, 2022

#Victory King: தன் நிலை மறவாத நிலை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1078

நமக்கு பணம் பதவி புகழ் எது வேண்டுமானாலும் வரலாம். அதனால் எந்த நிலையிலும் நமக்கு மமதை மட்டும தலை தூக்க கூடாது. மமதை மதுவை விட மோசமானது. அது மட்டும் நம்மிடம் அடைக்கலம் கொண்டு விட்டால் எதிரில் இருப்பவர் தராதரம் தெரியாமல் பேசுவதும் தன்னை மிஞ்சி ஆளில்லை என்ற எண்ணம் மேலோங்கி நம் பழைய நிலையை மறந்து ஆடாத ஆட்டங்கள் ஆடி கடைசியில மண்ணைக் கவ்வும் நிலை தான் வரும். எனவே நாம் எந் நிலையிலும் நம் நிலையிலிருந்து மாறாது இருந்தால் மட்டுமே நம் மதிப்பையும் மரியாதையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்து வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Thursday, May 5, 2022

#Victory King: தவளை வைத்தியம்!

Victory King's Status 1077

நுணலும் தன் வாயால் கெடும் தவளை நீர் நிலையங்களில் குளிர்ச்சியுடன் இருக்கும் பொழுது வேகமாக கத்தி தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும். அதுவே அவைகளின் உயிர்களுக்கு ஆபத்து என்பதை அது உணராது. அதுபோல் சில மனிதர்கள் தங்கள் ஆனந்தத்தின் உச்சத்தில் எதிரிகளின்  சுபாவம் தெரியாமல் தேவையற்றவைகளை எல்லாம் பேசி சிக்கலில் சிக்கி தவிப்பார்கள். எனவே என்னதான் ஆனந்தம் வந்தாலும் நாம் நாவடக்கத்துடன் பேச பழகிவிட்டால் தவளை தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலைபோல் நமக்கு வராமல் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள ஏதுவாகும்.

விக்டரி கிங் (விகே) | Victory King (VK)

Wednesday, May 4, 2022

#Victory King: வஞ்சனை செய்யோம்!

Victory King's Status 1076

பிறர்குடியை வஞ்சனையாகக் கெடுத்தாலும், அதனை மனதினால் நினைத்தாலும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கூறினாலும்கூட அவனே தானாகக் கெட்டுப்போவான் என்றும் நாம் இன்று செய்யும் பாவங்கள் அனைத்தும் நம்மை நிழல்போல் தொடர்ந்து நம்முடனேயே வந்து நம்மையும் நம் சந்ததியினரையும் அழித்துவிடும் என்றும் பழமொழிகளை நன்கு உரைக்கும்படி கூறி நல்லதையே செய்ய வேண்டும் நன்மையையே நினைக்க வேண்டும் அதுதான் நலமுடன் வாழ ஒரே வழி என்று எவ்வளவோ முறை உரைத்தாலும் திருந்தாத ஜென்மங்கள்  அழிவிலிருந்து தங்களையும் தங்கள் சந்ததியினரையும் காப்பாற்ற இயலாது என்பதுதான் நிதர்சனம்!

விக்டரி கிங் (விகே)

Victory King (VK)

Monday, May 2, 2022

#Victory King: சுயபச்சாதாபம் தவிர்ப்போம்!

Victory King's Status 1075

நம் சுய பரிதாபம்தான் நம் சோகத்திற்கான மூலகாரணம். எதுவும்   நம்மால் முடியாது என்ற தன்னம்பிக்கையை இழப்பதுதான் நம் இயலாமையை முடுக்கி விடுகிறது. எனவே நாம் நம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு உற்சகத்துடன் செயல்பட்டு சுய பச்சாதாபத்தை அறவே நீக்கி மன மகிழ்ச்சியுடன் வாழ பழகுவோமே!

விக்டரி கிங் (விகே)

Victory King (VK)

Sunday, May 1, 2022

#Victory King: வாழ்க்கை எனும் நூலின் எழுதுகோல்!

Victory King's Status 1074

நாம் நினைத்தது நடந்துவிட்டால் அது நமக்கு மகிழ்ச்சிதான். வெற்றியும் கூட. அதுபோல் நினைத்தது நடக்காவிட்டாலும் நடந்ததை நம் மனம் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அதனுடனே நம் வாழ்க்கையை கடக்கும் சக்தி நமக்கு கிடைத்து விட்டாலே அதுவும் நமக்கு கிடைத்த வெற்றிதான்.நம் வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய மற்றவர்கள் அதை தீர்மானிக்க நம் வாழ்க்கை ஒன்றும் காட்சிப் பொருளல்ல. எனவே நம் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் நம் கையில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ முயற்சித்தால் அதுதான் நம் வாழ்க்கையின் வெற்றி.

விக்டரி கிங் (விகே)

Victory King (VK)