Thursday, September 30, 2021

துரோகத்தின் கூலி!

 Status 2021 (264)

பாம்பு தன் தோலை எவ்வளவு தடவை உரித்தாலும் அது எப்போதுமே பாம்பு தான். அதுபோல் துரோகிகள் எவ்வளவு நல்லவன் போல் நடித்தாலும் துரோகி துரோகி தான். நாம் வாழ்க்கையில் அடிபட்ட பிறகுதான் துரோகிகளை இனம் கொள்ள முடிகிறது. துரோகத்தால் பலர் வீழ்ந்திருக்கலாம். ஆனால் துரோகித்தவர் ஒருவர்கூட நன்றாக வாழ்ந்ததே சரித்திரம் இல்லை. எனவே நாம் துரோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாம் அடுத்தவரை ஏமாற்றி துரோகம் செய்ய முயலக்கூடாது. நேர்மைக்கு என்றுமே மரணம் இல்லை என்பதை உணர்ந்து நேர் வழியில் நம் வாழ்வை கடந்து செல்வோமே!

 Victory King (VK)

Wednesday, September 29, 2021

உதவியும் சேவையும்!

 Status 2021 (263)

அத்தியாவசியமான உதவிகளை தேவைக்கு ஏற்ப சூழல் அறிந்து செய்வதே சேவை எனப்படும். பிறருக்காக உதவி செய்யும்போது அதில் எதிர்பார்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் செய்தால் அது சிறப்பு பெறும். எதிர்பார்ப்பில்லாமல் பிறருக்காக செய்யப்படும் உதவிகளை ஆத்ம திருப்த்தியுடன் செய்யும்போது நம் உணர்வு நரம்புகள் உத்வேகத்துடன் செயல்படும்.   நேர்மறை சிந்தனைகள் மேலோங்கி நம் வாழ்வை செம்மைப்படுத்தும். எனவே, நேர்மறை எண்ணங்கள் வளர நம் மனதைப் பக்குவப்படுத்தி வாழ்வோமே! 

Victory King  (VK)



Tuesday, September 28, 2021

சுயநலக் கேடு!

 Status 2021 (262)

நான் என்ற ஆணவம் பேராசையால் அடுத்தவனிடம் காட்டும் பொறாமை, சுயநலத்தால் அடுத்தவன் பொருளை அபகரித்து சுகபோகங்களை அனுபவிக்கும் மனோபாவம், தாம் யோக்கியன் போல் மற்றவர்களுக்கு செய்யும் உபதேசம், மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து அடுத்தவர்களை அழிக்கும் அராஜகம் இவைகள் அனைத்தும் நம் வாழ்க்கையையும் நம் சந்ததியினருக்கும் விடாது துரத்தி அழைக்கும் காரணிகள். இப்படிப்பட்ட  திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கூற வாய்ப்பு கொடுக்காமல் வாழ பழகுவோமே!

Victory King  (VK)

Monday, September 27, 2021

கெடுவான் கேடு நினைப்பான்!

Status 2021 (261)

நமக்கு அரிதாய் கிடைத்த ஆறாவது அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திப் பண்போடும் பாசத்தோடும் நேசத்தோடும் நம்மையும் நம் சுற்றத்தையும் மேம்படுத்தி வாழ்வதை விடுத்து அதை எதிர்மறையாகப் பயன்படுத்தி அடுத்தவனை அழித்தும் கேடு செய்வதையே தொழிலாகக் கொள்வதுமாக வாழ்ந்தால் அது நம் தலையிலேயே நாம் கொள்ளி வைத்துக்கொண்டு அழிவதற்கு சமம். இயற்கையை அழித்தோம்,  நீர் நிலைகளை பராமரிக்கத் தவறினோம், விண்ணை முட்டும்  அடுக்கு மாடிகளைக் கட்டி நிலத்தடி நீரை முழுவதுமாக உறுஞ்சினோம். அதன் விளைவுதான் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீரழிவுகள். அதுபோல்தான் நம் வாழ்வில் கேடு நினைத்தால் அழிவுதான் பிரதிபலன் என்பதை உணர்ந்து மனிதனாக வாழ முயல்வோமே!

Victory King (VK)

Sunday, September 26, 2021

இயற்கையும் இறைசக்தியும்!

Status 2021 (260)

நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நம் உழைப்புக்கு ஏற்ப அமையவும் வெற்றி கிடைக்கவும் ஆத்ம திருப்தி உண்டாகவும் இறைசக்தியும் வேண்டும். இது கண்களுக்குப் புலப்படாத சக்தி. நம்முடைய  முயற்சிகள் அனைத்தையும் தொய்வின்றி செய்வதற்கு நம் உடல் நலனும் மன நலனும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா. அதற்கு உதவுவது இயற்கை.  இது கண்களுக்கு புலப்படும் சக்தி. இயற்கையையும் இறைவனையும் மதிப்போம். நம் தேக நலத்தையும் மன நலத்தையும் காப்போம்!

Victory King (VK)

Saturday, September 25, 2021

எதிர்பார்ப்புகள்!

Status 2021 (259)

நாம் எதிர்பார்த்தது கிடைக்காவகடில் அதில் நாம் அதி தீவிரம் காண்பிக்கும் பொழுது நம் மனதில் ஒரு ஏக்கம் வரும். அதனை நாம் வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும்ஏக்கத்தின் உச்சகட்டம் நமது உணர்ச்சி நரம்புகளை பாதித்து நம் எதார்த்த நிலையை மாற்றி நம் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை மனதார ஏற்றுக்கொண்டு வாழ்வோமே யானால் ஏக்கம் நம்மை அண்டவே அண்டாது. எனவே நம் மனதில் ஏக்கத்திற்கு இடம் கொடுக்காமல் நலமுடன் வாழ்ந்து மகிழ்வோமே!

Victory King (VK)

Friday, September 24, 2021

தற்புகழ்ச்சி!

 Status 2021 (258)

நாம் நல்லவன் என்பதை மற்றவர்கள் கூறி அதனை நாம் கேட்டு ஆத்ம திருப்தி அடைய வேண்டும். அதை விடுத்து நான் நல்லவன் நான் நல்லவன் என்று நம்மை நாமே சுய தம்பட்டம் அடித்துக்கொண்டு தற்புகழ்ச்சி அடைவதைப் போல ஒரு கேவலமான செயல் இருக்க முடியாது. அதைவிட கேவலம் நாம் நல்லவன் என்று காட்டிக்கொள்ள மற்றவர்களை தீயவனாக சித்தரித்து நம்மை நாமே பெருமைப்பட்டுக் கொள்வது. இத்தகையோர் அவர்கள் உண்மை வெளிப்படும் பொழுது சென்றவிடமெல்லாம் மானங்கெட்டு மதிகெட்டு தம் நிலை கெட்டுப் போவதுதான் மிஞ்சும். எனவே நம் நிலையை உணர்ந்து நடந்து கொண்டால் நமக்கு உண்டு நல்வாழ்வு!

Victory King (VK)

Thursday, September 23, 2021

கலிகாலத்தின் நிலை!

 Status 2021 (257)

கெட்டவர்கள் காலம் முழுவதும் எந்தவித கஷ்டமும் இல்லமால் அடுத்தவர்களை அழித்துக்கொண்டும், தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டும் சுகமாகதான் சாகும் வரை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பண்போடு வாழ்ந்து நற்செயல்களையே செய்து பல கஷ்டங்களுக்கு இடையேதான் காலம் முழுவதும் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதுதான் கலிகாலத்தின் நிலை. எப்படி இருப்பினும் நாம் செய்த நற்பலன்களின் பலன் ஏதேனும் ஒரு ரூபத்தில் ஏதோ நிலையில் நமக்கு வந்தடையும் என்ற ஆத்ம திருப்தியில் யார் எப்படி இருப்பினும் நாம் நல்லவர்களாகவே இருப்போமே!  

Victory King (VK)

Wednesday, September 22, 2021

பெற்றோர் கடமை!

Status 2021 (256)

வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. அதனை ரசித்து உணர்ந்து வாழ வேண்டுமென்றால் நம் பெற்றோர்கள் கடந்து வந்த பாதையை அறிந்து கொண்டாலே போதும். அந்த அளவிற்கு பெற்றோர்கள் பண்போடு வாழ்ந்து காட்டி நம் சந்ததியினரை வழிநடத்தினால் நம் தலைமுறைகள் வாழ்வு சிறந்து விளங்கும். எனவே பெற்றோர்களாகிய நாம் அதனை நன்குணர்ந்து வாழ்ந்து காட்டுவோமே!

Victory King (VK)

Tuesday, September 21, 2021

பொதுநலத்தில் சுயநலனும்!

Status 2021 (255)

எல்லோரும் போகிறார்களே என்று நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றால் நம் பாதை நமக்கு புலப்படாது. நம் பாதையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நம் திறமையை நாம்தான் கண்டறிந்து நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி நாம்தான் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக சுயநலவாதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. தன்னம்பிக்கையோடு  நாம் செயல்பட்டு நம்மை நாம் மேம்படுத்திக் கொண்டால்தான் அது மற்றவர்களோடு நாம் இணக்கமாக செயல்பட முடியும். தன்னம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உணர்ந்து வாழ்வோமே! 

Victory King (VK)

Monday, September 20, 2021

நாம் மனிதன் தானா உணர்வோமே!

 Status 2021 (254)

நம் மகிழ்ச்சி நம் எண்ணத்திலும் நம் வார்த்தைகளிலும் நாம் செய்யும் நல்லிணக்கத்திலும் தான் இருக்கிறது. நம் எதிர்காலமும் நாம் இன்று செய்யும் செயலைத்தான் சார்ந்திருக்கிறது. செய்வதற்கான பலன் என்னவாக வர போகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நாம் எதுவும் செய்யாவிடில் நமக்கு எதுவுமே கிடைக்காது என்பதை நாம் உணர வேண்டும். நாம் மனிதனாய் பிறந்தால் மட்டும் மனிதனல்ல. மனிதாபிமானத்துடன் நாம் வாழ்ந்தால் மட்டுமே நாம் மனிதன் என்பதை மனதில்கொண்டு வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, September 18, 2021

தனித்துவத்துடன் செயல்படுவோமே!

  Status 2021 (252)

ஊரோடு ஒத்துவாழ வேண்டியதுதான். ஆனாலும் நமக்கென சில கொள்கைகளை வைத்துக்கொள்வதன் மூலம் தனித்துவத்துடன் செயல்பட முடியும். ஒரு தவறை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக அது சரியென்று ஆகிவிடாது. அதையே நாம் பின்பற்ற வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. தனித்துவத்துடன் செயல்படும்போது மனநிறைவும் ஆத்மதிருப்தியும் உண்டாகி தன்னம்பிக்கை உணர்வு மேலோங்கும்.

Victory King (VK) 

Friday, September 17, 2021

வஞ்சப் புகழ்ச்சி!

 Status 2021 (251)

பிறரை அதீதமாகப் புகழ்ந்து அவர்களை தன்வயப்படுத்தி அதன் மூலம் தன் ஆதாயத்தைத் தேடிப் பிழைப்பு நடத்துபவர்கள் பலர். புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. இதுபோல் வஞ்சப் புகழ்ச்சி செய்து அவர்களை தமக்கு அடிமையாக்கி பிழைப்பு நடத்துவது போன்று ஒரு மோசமான செயல் வேறெதுமில்லை. புகழ்ச்சிக்கு அடிமை ஆகுபவர்கள் இருக்கும் வரை இதுபோன்ற ஆசாமிகள் இருக்கத்தான் செய்வார்கள். எனவே எந்த காலகட்டத்திலும்  நம்மைப் பிறர் புகழும்போது அதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு மகிழ்ந்து அத்துடன் அதை முடித்துக்கொண்டால் இதுபோன்ற ஆசாமிகள் நம்மை அணுக அச்சமுறுவர். சிந்தித்து செயல்படுவோமே!

Victory King (VK) 

Thursday, September 16, 2021

‘அடக்கம் அமரருள் உய்க்கும்'

Status 2021 (250)

ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் அடிமை என்று அர்த்தமில்லை. அமைதியான குணம் என்பது ஒரு பண்பு. அமைதி மனத்தூய்மையைக் கொடுக்கும். மன அமைதி இருந்தால்தான் நம் செயல்களில் தெளிவு இருக்கும். அமைதிக்கு அடையாளம் அடக்கம். மனதில் தெளிவு இல்லை என்றால் அது தரிகெட்டு அவிழ்த்துவிட்டக் காளை போல் அலைபாய்ந்து தாறுமாறாய் சிந்திக்கத் தூண்டி மற்றவர்களை பதம் பார்க்க முற்படும். எனவே, அமைதியாக இருந்து அடக்கத்தைக் கடைபிடித்து மற்றவர்களை சீண்டாமலும் நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொண்டும் வாழ முயல்வோமே!  ‘அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவர் வாக்கைப் போற்றுவோமே! 

Victory King (VK) 


Wednesday, September 15, 2021

நன்றி மறப்பது நன்றன்று!

Status 2021 (249)

தேவையானவர்களுக்கு தேவைப்படும்போது தக்க சமயத்தில் உதவி செய்வதே நற்பண்பு. பணமும் பொருளும் கொடுத்து உதவுவது மட்டுமல்ல, மனம் தளர்ந்திருக்கும்போது நேர்மறையாக சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளும் உதவிதான்.  உதவி என்பது செயல் மட்டுமல்ல, உதவுபவருக்கும் உதவி செய்பவருக்கும் ஒருசேர மகிழ்ச்சியைக் கொடுக்கும் மனம் ஒத்த உணர்வு. நமக்கு உதவி செய்பவருக்கு எக்காலத்தும் நாம் மனதாலும் தீங்கு நினைக்காமலும் நன்றியை மறக்காமலும் இருந்தாலே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் கொள்வோமே! 

Victory King (VK) 


Tuesday, September 14, 2021

அதீத புகழ்ச்சி அழிவுக்கு வித்தாகும்!

Status 2021 (248)

பாராட்டு என்பது ஒருவரது சிறப்பை அங்கீகாரம் செய்வதற்கு பயன்படுத்தும் யுக்தி. பிறரது புகழ்ச்சியை நம் மனதுக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அதை ஓர் உற்சாக டானிக்போல எடுத்துக்கொண்டுவிட்டால் சிறப்பு. நம் மீது செலுத்தப்படும் புகழ்ச்சி அளவுக்கு மீறும்போது அதுவே போதையாகிவிடும். நம்மை அழிவுக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு வலிமையானது அதீத புகழ்ச்சி. எனவே, நமக்குக் கிடைக்கும் புகழ்ச்சியை மகிழ்ச்சியோடு ஏற்று அவ்வப்பொழுது நம் மனதில் இருந்து நீக்கிவிட்டால் நமக்கு மமதை ஏறாது. வாழ்க்கையை  நிலையாக வாழ ஏதுவாகும். கடைப்பிடிப்போமே! 

Victory King (VK)

Monday, September 13, 2021

சோம்பித் திரியேல்!

Status 2021 (247)

நாம் எந்த ஒரு பொருளையும் நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாது இருந்தால் அது நமக்குப் பயனற்றுதான் போகும். அது வீடாக இருக்கலாம், உபயோகப்படுத்தக் கூடிய எந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  அதுபோல்தான் நம் உடல் உறுப்புகளும். நம் உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுத்து உடல் உறுப்புகளுக்கு செயல்வடிவம் கொடுத்து எல்லாவற்றையுமே இயக்கத்தில் வைத்திருக்காவிட்டால் நாமும் ஒரு ஜடம்தான். எனவே,  ‘சோம்பித் திரியேல்’ என்ற ஒளவையாரின் வாக்கின்படி நாம் சோம்பலைத் தவிர்த்தாலே மனதும் புத்துணர்ச்சியுடன் இயங்கும். உடல் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் செயல்படும். வாழ்க்கையை தொய்வில்லாமல் கடத்த ஏதுவாகும் என்பதை உணர்வோமே!

Victory King (VK)

Sunday, September 12, 2021

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

Status 2021 (246)

நம் பிள்ளைகளிடம் நமக்கு பாசம், பரிவு அதிகமாக இருக்கலாம். அவர்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கிக்கொடுத்து மகிழ்விக்கலாம். ஆனால், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து பண்போடு வாழக் கற்றுக் கொடுத்து வளர்க்காமல் தன் பிள்ளை தனக்கு வேண்டியதை தானே தேர்ந்தெடுக்கும் திறமை அவர்களுக்குண்டு என அவர்கள் மீது பாசத்தைக் கொட்டி அவர்கள் வாழ்க்கையை கெடுக்காமல் தக்க சமயத்தில் தகுந்த அறிவுரைகளைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது சந்தேகமே இல்லை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? எனவே, அவர்களுக்கான பொறுப்புணர்வுக்கு அவர்களின் சிறுவயது முதலே நாம்தான்  முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லையேல் தும்பை விட்டு வாலைப் பிடித்த விஷயமாகத்தான் இருக்கும். சிந்திப்போமே!

Victory King (VK)

Saturday, September 11, 2021

அகமும் புறமும்!

 Status 2021 (245)

அகம் என்பது நமது உள்மனது. அதுவே ஆழ்மனது. புறம் என்பது நம் உடல் உறுப்புகள். அகத்தின் கட்டளைபடியே புறம் செயல்படும். எனவே, அகம் மகிழ்வுடன் இருந்தால்தான் புறத்தால் நாம் செய்யும் செயல்பாடுகளும் உணர்வுபூர்வமாகவும் உற்சாகத்துடனும் இயங்கும். அகம் மகிழ்வுடன் இருக்க நம் சிந்தனை நேர்மறையாக இருக்க வேண்டும்.  அப்படி இருக்கும்போது நம் முகத்தில் மகிழ்ச்சி பொலிவுடன் தெரிவதுடன் நம் உற்சாக நரம்புகள் உத்வேகத்துடன் செயல்பட்டு செயலில் நேர்த்தியும் அழகும் வெளிப்படும். எனவே, அகமும் புறமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உள்ளுணர்வுகள். எனவே, அகத்தை மகிழ வைத்து நம் செயலை செம்மைப்படுத்தி ஆத்மசாந்தியுடன் வாழ முயல்வோமே! 

 Victory King (VK)

Thursday, September 9, 2021

உண்மையே உயர்வளிக்கும்!

Status 2021 (243)

போலி என்பது உண்மைக்கு எதிரானது. நடக்காத ஒரு விஷயத்தை உண்மைப்போல நம்பச் செய்வதுதான் போலித்தனம். பிறரை ஏமாற்றுவதற்கான முயற்சியின் முதல்படியே போலியாக நடித்து நம்ப வைப்பதாகும். போலியாக நடித்து வாழ்வது மனிதாபிமானமே இல்லாத  நேர்மையற்ற பொய்யான வாழ்க்கைக்கு வித்திடும். பொய்யாக போலியாக நடிப்பவர்கள் வாழ்க்கை பொய்யில் முடிந்து அந்தப் பொய்யே அவர்களை வீழ்த்திவிடும். உண்மையே நமக்கு உயர்வளிக்கும், உயிர்காக்கும். உணர்ந்து நடந்தால் நம் வாழ்க்கையே வசந்தம்தான்.   

Victory King (VK)

Wednesday, September 8, 2021

தோன்றின் புகழொடு தோன்றுக!

Status 2021 (242)

நம்பிக்கையும் அவநம்பிக்கையும் –  நேர்மறையாக சிந்திப்பது நம்பிக்கை, எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை, அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவது தன்னம்பிக்கை. எனவே தன்னம்பிக்கையை வளர்ப்போம். நம் திறமையை நிலைநாட்டுவோம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். 'தோன்றின் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவன் வாக்கை மெய்ப்பித்து வாழ்வோமே!

Victory King (VK)



Tuesday, September 7, 2021

இடவாகுபெயர்!

 Status 2021 (241)

பொதுவாக மற்றவர்கள் நம்மைப் பார்த்து  ‘எப்படி இருக்கீங்க, வீடு ஆஃபீஸ் எல்லாம் எப்படி இருக்கு?’ என்று கேட்பது வழக்கம். அவர் கேட்பது ஆஃபீஸ் கட்டிடத்தைப் பற்றியோ, வீட்டின் அமைப்பைப் பற்றியோ அல்ல.  இது ஒரு இடவாகுபெயர். வீடு என்பது அப்பா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி குழந்தைகள் என உறவுகளால் பின்னிப் பிணைக்கப்பட்டு, அன்பினாலும் பாசத்தினாலும் கட்டுண்ட ஓர் ஆலயமாகக் கருதினால் ஒருவருக்கொருவர் எதிர்மறை எண்ணங்கள் விலகி அனைவரையும் அன்போடு அரவணைக்கும் பக்குவம் கிடைக்கும். அதுபோல் அலுவலகம் என்பது சக ஊழியர்கள், நண்பர்கள், உயர் அதிகாரிகள் போன்றோர்களால் சூழப்பட்டு இதையும் ஓர் ஆலயமாகவே நாம் கருதினால் உழைப்பில் சலிப்பும் மாறுபட்ட கருத்துக்களும் நம்மை வந்து அடையாது. பண்போடு நம் பணியை செய்ய வழிவகுக்கும்.  இவ்வாறாக நம் மனதைப் பக்குவப்படுத்த முயற்சிப்போமே! 

Victory King (VK)


Monday, September 6, 2021

பண்புக்கு இலக்கணம்!

Status 2021 (241)

நம் மதிப்பையும் பண்பையும் மற்றவர்கள் பார்த்து அதன் பெருமையை அவர்கள் வாயார வாழ்த்த வேண்டும். அதுதான் நம் மதிப்புக்கும் செயலுக்கும் பண்புக்கும் கிடைக்கும் உரிய அந்தஸ்த்து. அதை விடுத்து   தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொண்டு தன் செயலையே பெருமையாக நினைப்பதுடன்  மற்ற எல்லோரையும்விட தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்குடன் வாழ்வது நமக்கான மரியாதையை நாமே குறைத்துக்கொள்வதோடு ஒரு நிலையில் மற்றவர்கள் நம்மைப் பற்றி இகழ்ந்துப் பேசும் அழிவின் விளிப்புக்கே கொண்டு சென்றுவிடும். எனவே, நம் சுய கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் சுயதம்பட்டம் அடிப்பதை விடுத்து பண்போடு வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Sunday, September 5, 2021

பூத்துக் குலுங்கும் மலர்களைப் போல் வாழ்வோமே!

 Status 2021 (240)

நாம் பூத்துக் குலுங்கினாலே நம்மைப் பறித்துவிடுவார்கள் என்று மலர்கள் ஒரு நாளும் பூக்காமல் இருந்ததில்லை. அதுபோல மற்றவர்கள் எப்படி இருந்தாலும் என்ன நினைத்தாலும் நாம் பச்சோந்திகளை போல அவர்களுக்காக வேஷம் போடாமல் நம் நிலையை மாற்றிக்கொள்ளாமல் நாம் நாமாகவே இருந்து நம் சுயத்தை காப்பாற்றி பண்புடன் வாழ்வோமே!

 Victory King (VK)

Saturday, September 4, 2021

அளவோடு பழகுவோம்!

 Status 2021 (239)

நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்: மிகவும் நல்லவனாக இருந்து விட்டால் நம்மை நடிகன் என்று சொல்வார்கள். மிகவும் அதிகமாக அன்போடு பழகி விட்டால் ஒரு நிலையில் நம்மை அடிமையாக்கி விடுவார்கள். மிகவும் பொறுமையுடன் நடந்து கொண்டாலோ நம்மை பைத்தியம் ஆக்கும் வரை விடமாட்டார்கள். அதிகம் கோபப்பட்டாலோ கோமாளியாக்கி வேடிக்கை பார்ப்பார்கள். எல்லோரையும் நம்பி விட்டாலோ நம்மை ஏமாற்ற பலர் காத்திருப்பார்கள். எனவே நம் குணநலன்களை மிகைப்படுத்தி காட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் அளவோடு வெளிப்படுத்தி வாழ்ந்தால் மட்டுமே உலகம் நம்மை மதிக்கும். உணர்ந்து  செயல்பட்டால் உண்டு நல்வாழ்வு!

Victory King (VK)

Friday, September 3, 2021

பொறுமையே பெருமை!

 Status 2021 (238)

ஒருவருக்கு பொறுமை என்பது மிகவும் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய ஒரு உணர்வு. நாம் எந்த செயலை எடுத்துக்கொண்டாலும் நாம் முயற்சி செய்யலாமே ஒழிய அந்த செயல் எப்பொழுது நடக்க வேண்டுமோ அப்பொழுது தான் நடக்கும் என்பது எதார்த்தமான ஒரு உண்மை. நாம் நம் அவசரத்தை அதில் காட்டினால் அந்த செயல் ஏடாகூடமாக தான் முடியும் என்பதோடு நமது நிம்மதியையும் கெடுத்து மன உளைச்சலை தான் கொடுக்குமே ஒழிய செயலின் வெற்றியை நாம் காண்பது கடினம். எனவே பொறுமை கடலினும் பெரிது என்பதை மனதில் கொண்டு அனைத்து விஷயங்களிலும் நாம் பொறுமையாக இருந்து வெற்றி அடைய முயல்வோமே!

Victory King ( VK)

Thursday, September 2, 2021

ஆறாம் அறிவு!

Status 2021 (237)

ஒருவரால் நமக்குப் பிரச்சனை என்றால் சம்மந்தப்பட்டவரிடம் பேசி தீர்வு காண முடியும். ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் சிறிதாவது மனிதாபிமானத்துடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மனிதாபிமானமே இல்லாமல் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பது, துரோகம் செய்வது,  அடுத்தவன் சொத்தை அபகரிக்க நினைப்பது போன்ற தகாத செயல்களை தெரிந்தே விடாது செய்துகொண்டிருப்பவர்களிடம் எப்படி பண்போடும் அன்போடும் பேசினாலும் அவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் தெரிவதற்கு வாய்ப்பில்லை.  அவர்களாக அவர்கள் செய்யும் பாவத்துக்கும், துரோகத்துக்கும் தண்டனையை அனுபவிக்கும்பொழுதாவது உணர்வார்களோ என்னவோ? அவர்களுக்கு ஆறாவது அறிவு எதற்கு என்பதுதான் கேள்விக்குறி! சிந்திப்போமே!

Victory King (VK)


Wednesday, September 1, 2021

பிரச்சனைகளும் தீர்வுகளும்!

Status 2021 (236)

நமக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் அதற்கு தீர்வு காணதான் முனைய வேண்டும். அது சம்மந்தமாக ஊரெல்லாம் பேசி பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து,  சம்மந்தப்பட்டவர்களிடம் மட்டுமே பேச வேண்டிய விஷயத்தை மட்டும் பேசி நடந்ததைப் பற்றிக் கிளறி தர்க்கம் செய்வதை தவிர்த்து  நடக்க வேண்டியதை மட்டுமே பேசி அந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நம் பிரச்சனையை சரி செய்வதற்கு இதுவே சிறந்த வழியாகும். முயற்சிக்கலாமே! 

Victory King (VK)