Sunday, May 26, 2013

கம்ப்யூட்டர் மூளை

கால்குலேட்டர், கம்ப்யூட்டர் இல்லாத காலங்களிலேயே, வரவு செலவுகளை மனதாலேயே போட்டு நொடிப்பொழுதில் விடை அளித்து வந்தார்கள். சற்றே பெரிய  வரவு செலவு கணக்குகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதி மனதால் கூட்டி கணக்கிட்டு வந்தார்கள். இன்றும் பூ வியாபாரிகள், தள்ளு வண்டியில் காய்கறி விற்பவர்கள், தலையில் பழக்கூடையை வைத்து விற்கின்றவர்கள்  என்று பள்ளிக்கூடம் நிழலைக் கூட மிதிக்காத சிறுவியாபாரிகள் கூட, கால்குலேட்டரோ மொபைலோ வைத்து கணக்கிடுவதில்லை.  எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மனதாலேயே கூட்டி, அவரவர்களுக்கு எவ்வளவு மீதி கொடுக்க வேண்டுமோ அவற்றை பிழையின்றி தடுமாறாமல் கொடுப்பதை நாம் பார்க்கிறோம்.

இதிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாகப் புரிகிறது. இவர்களுக்கெல்லாம் அவர்கள் மூளை தான் கம்ப்யூட்டர். ஆனால் நாம் சிறு கூட்டல் கழித்தல் என்றாலும் கால்குலேட்டரை தேடுகிறோம். கம்ப்யூட்டரைத் தேடுகிறோம். சமயத்தில் அதில் தவறான பட்டனை அழுத்தி விட்டு தடுமாறுகிறோம். 

அவ்வப்பொழுது நாம் கம்ப்யூட்டர், லேப்டாப், கால்குலேட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்களுக்கு சற்றே ஓய்வு கொடுத்து விட்டு, நம் மூளையை உபயோகப்படுத்தினால் நம் மனமும் புத்துணர்ச்சி பெறும். கண்களுக்கும் ஓய்வு கிடைக்கும்.

வீட்டில் உள்ள சோஃபா, டிவி, சேர், டேபிள் போன்றவற்றை இடம் மாற்றி புதிய சூழலை ஏற்படுத்திப்  பாருங்கள். வீடு புதுமாதிரியாக பளிச்சென்று கலையோடு இருப்பதைப் போல உணரலாம். நம் மனதுக்கும் ஒரு புத்துணர்வு கிடைக்கும். புதிய சூழல் உள்ளத்திற்கு  உத்வேகம்.

நாமும்  மாறுதலுக்கு மூளைக்கும் சற்று வேலை கொடுத்து பயிற்சி கொடுத்தால், அதுவும் புத்துணர்ச்சி பெறும், உள்ளமும் உற்சாகத்தில் திளைக்கும். இது என் அனுபவப் பூர்வமான உண்மை. நீங்களும் தான் முயற்சித்து பாருங்களேன்.

-வீக்கே-