Saturday, November 29, 2025

#Victory King: கண்ணசைவும், முகபாவனையும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2423🥰   

கையில் இருக்கும் பொருள் கீழே விழுந்தால் உடையும் என்று தெரிந்தவர்கள் தங்கள் கொடுஞ்சொற்கள் அடுத்தவர்கள் மனதை உடைய செய்யும் என்பதை உணர்ந்து செயல்படுபவர்கள்தான் மனித நேயம் உள்ளவர்கள். எனவே கடுஞ்சொற்களாலும், கண்ணசைவு முகபாவனை போன்ற உடல் மொழிகளாலும் அடுத்தவர்கள் மனதை நோகடிக்காமல் மனிதநேயத்தோடு வாழ பழகுவோமே! 

"Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏30/11/25

Friday, November 28, 2025

#Victory King: வளரும் சூழல் நிர்ணயிக்கும் மனித சுபாவம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2422🥰  

சில கருங்கற்கள்  கடவுள் சிலைகளாகி கோவிலின் மூலஸ்தானத்தில் அமர்ந்து அனைவராலும் வணங்கப்படுகிறது. அதே சில கருங்கற்கள் அனைவரது கால்களாலும் மிதிபட்டு தேய்கிறது. அது போல்தான் நாம் இருக்கும் இடத்தை பொறுத்து தான் நமக்கு மதிப்பும் மரியாதையும். எனவே நாம் பிறக்கும் போது அனைவரும் ஒன்றுதான் என்றாலும் நாம் வளரும் விதமும், சூழ்நிலையும் தான் நம்மை வடிவமைக்கிறது என்பதை நாம் உணர்ந்தாலே போதும். நம் வாழ்க்கை சிறக்க! 

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏29/11/25

Thursday, November 27, 2025

#Victory King: பெற்றோர் சிறப்பு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2421🥰  

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி யாராவது ஒருவருக்கு தான் என்ற அகந்தை ஆட் கொண்டு விட்டாலே போதும் அவர்கள் வாழ்க்கை பாழாவதுடன் அவர்களைப் பார்த்து வளரும் பிள்ளைகளின் மனதில் அது ஒரு "அழியாத கோல"மாகி அவர்களின் எதிர்காலத்தையும், வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கும். எனவே பெற்றோர்கள் பண்போடும் அன்போடும் வாழ்ந்து காட்டினால் மட்டுமே சந்ததியினரின் வாழ்வும் சிறக்கும்.

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏28/11/25

Wednesday, November 26, 2025

#Victory King: விதியும், மதியும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2420🥰  

நாம் இப்பிறவியில் நமக்கு அளிக்கப்பட்டதை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி. எனவே நம் வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ அதனை ஏற்று இயல்பாக எடுத்துக் கொண்டு நம் நற்சிந்தனையாலும் நற்செயல்களாலும் விவேகத்துடனும் செயல்பட்டு அனுபவித்து வாழ பழகிவிட்டால் அந்த விதியையும் நம் மதியால் வென்று மகிழ்வுடன் வாழலாம். 

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏27/11/25

Monday, November 24, 2025

#Victory King: கடல் அளவு மனதைரியம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2419🥰 

நமக்கு எதிரிகளே தேவையில்லை நம்முடைய எதிர்மறை எண்ணங்களே போதும் நம்மை வீழ்த்துவதற்கு விரக்தி அடைவதற்கு வாழ்க்கை பாதையை தடுப்பதற்கு. எனவே அதனைத் தவிர்க்க ஒரே வழி நாம் நகைச்சுவை உணர்வோடு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் போதும் கடலளவு பிரச்சனை வந்தாலும் மன தைரியத்துடன் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். முயற்சிப்போமே!

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏25/11/25

Sunday, November 23, 2025

#Victory King: நல்ல எண்ணங்களே கைராசியாகும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2418🥰 

ஒருவர் பேச்சில், சிந்தனையில், செய்கையில் வளமை இருந்தால் தோற்றப் பொலிவும், நேர்மறை அலைகளும் அவர்களைச்சுற்றி வியாபித்து அவர்கள் எதைத் தொட்டாலும், எதைச் செய்தாலும் சிறப்பாக முடியும். இதுதான் ஒருவருடைய கைராசி என்பது.நமக்கு எண்ணத் தூய்மை இருந்தாலே போதும் அனைத்து நல்லவைகளும் நம்மை நாடிவரும் என்ற மூல மந்திரத்தை நாம் உணர்ந்தாலே போதும்.நம் வெற்றி நம் கையில் தான். 

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏24/11/25

Saturday, November 22, 2025

#Victory King: ஆரோக்கிய வாழ்வுக்கு அழகான நினைவலைகள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2417🥰 

சில மனிதர்கள் நம் மனதை விட்டு நீங்காத அளவிற்கு  பாசத்தை காட்டியும்,சில மனிதர்கள் இனிமையான அழகான நினைவலைகளை நம் மனதில் தக்கவைத்தும் நம்மோடு ஐக்கியமாகி விடுகிறார்கள். நம் மனக் கவலைகளுக்கு அந்த நினைவலைகளை மருந்தாக்கி வாழ்ந்தால் நாம் மனச்சோர்வையும் உடல் சோர்வையும் தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாமே! 

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏23/11/25

Thursday, November 20, 2025

#Victory King: இலக்கை நிர்ணயிப்போம், வெற்றி அடைவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2416🥰 

வாழ்க்கையில் நாம் ஒரு இலக்கை நிர்ணயித்து பிறகு அதை நோக்கி வேகத்துடனும் விவேகத்துடனும் பயணிக்கும் தருவாயில் இடையில் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் தோல்வியே நம்மை தழுவினாலும்  நம் பயத்தை கொன்றுவிட்டு மனம் தளராமல்  விடாமுயற்சியுடன் முன்னேறி வெற்றிபெற்று இலக்கை அடைவோமே! 

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏21/11/25

Tuesday, November 18, 2025

#Victory King: எண்ணத் தூய்மை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2415🥰  

நாம் எண்ணியது எண்ணியபடி முடிய வேண்டுமென்றால் முதலில் நமக்கு எண்ணத் தூய்மை வேண்டும். சூழல் சுமூகமாக இருக்க வேண்டும். பொறாமையின் ஊடுருவலை தவிர்க்க வேண்டும். இவற்றுடன் ஒருங்கிணைந்த மனதுடன் ஒன்றுபட்டு செயல்பட்டால் செயலில் வெற்றி என்பது நிச்சயம். 

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏19/11/25

Monday, November 17, 2025

#Victory King: சொந்தங்களும், பந்தங்களும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2414🥰 

நாம் தனிமையில் இருக்கும் பொழுது தான் தெரியும் நம் உறவுகளின் அருமையும் பாசமும். பூவிற்கு வாசம் அதிகம். அது நிலைத்து நிற்காது. ஆனால் அன்பு உள்ளங்களின் உண்மையான பாசம் நம் மனதில் இருந்து அழிக்க முடியாத ஒரு பொக்கிஷம். எனவே நாம் வாழும் வரை நம் சொந்த பந்தங்களோடு பாசத்தோடும் நேசத்தோடும் மகிழ்ந்து வாழ்வோமே! 

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏18/11/25

Thursday, November 13, 2025

#Victory King: சந்ததியினரின் வளமான வாழ்க்கை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2413🥰 

வேர்களின் உறுதித் தன்மையை பொறுத்து தான்  மரத்தின் வலுவும் தழைத்து வளரும் சக்தியும். வீட்டின் அஸ்திவாரத்தின் ஸ்திரத்தன்மையை பொறுத்து தான் கட்டிடத்தின் வலு தாங்கும் திறண். அதுபோல்தான் ஒரு குடும்பத்தின் ஆணிவேர் வழிநடத்தும் பெரியவர்கள்தான். எனவே அவர்களின் பண்பான வாழ்வுதான் சந்ததியினரின் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

"Happy children's Day" "Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏14/11/25

Wednesday, November 12, 2025

#Victory King: புரிதல் என்னும் புனிதத்துவம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2412🥰

குடும்பம் என்றால் அங்கே ஒருவருக்கொருவர் புரிதல் என்னும் புனிதத்துவம் இருந்தால்தான் அது ஒரு பூத்துக் குலுங்கும் பூங்காவனமாக திகழும்.  உறவுகளுடனும் நட்புகளுடனும்உறவாடி அகமகிழ்ந்து இளம்தென்றல் நம்மை தழுவுவது போன்று நாம் அனுபவிக்கும் சுகமே சுகம்தான்.  புரிதல் உள்ளங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலம். "புரிதல் இல்லாக் குடும்பம் தரிசு நிலத்திற்கு தான் ஒப்பாகும்"

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏13/11/25

Tuesday, November 11, 2025

#Victory King: நாம் சேர்த்துவைக்கும் புண்ணிய பொக்கிஷம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2411🥰 

துணிவு நம்மை உழைப்பில் உயர்த்தி நம் வாழ்வை வளம் பெற செய்யும் உந்து சக்தி. பணிவு நம் பண்பை உயர்த்தும் மகா சக்தி. நம்கனிவான வார்த்தை அடுத்தவரை ஈர்க்கும் ஒரு காந்த சக்தி. கருணை உள்ளம் நம் குடும்பத்திற்கும் சந்ததியினருக்கும் நாம் சேர்த்துவைக்கும் புண்ணிய பொக்கிஷம். முயற்சிப்போமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, November 10, 2025

Victory King: நம் வாழ்க்கை, நம் சொர்க்கம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2410🥰

ஏனோ பிறந்தோம் எப்படியாவது வாழ்ந்து முடித்தால் போதும் என்று எண்ணுவதல்ல நம் வாழ்க்கை. நமக்கு கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை முடிந்தவரை முழுமையாக அனுபவித்து வாழவேண்டும். பிறரின் முன் நாம் வாழ்ந்து காட்ட கிடைத்ததில்லை இப்பிறவி. நம் சக்தியை நாம் நன்கு உணர்ந்து வாழ்க்கையில்  உச்சத்தை தொட்டு சாதிக்க பிறந்தோம் என்பதை எண்ணி மகிழ்வுடன் வாழ்ந்தால் நம் வாழ்க்கையே ஒரு சொர்க்கம் தான். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, November 8, 2025

Victory King: ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2409🥰

ஏழ்மையிலேயே வாழ்பவர் நம் வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்று கவலைப்படுவது இயற்கையே. கால சுழற்சியில் நம் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்பு உண்டு என்பதை மனதில் ஏற்றி அமைதியுடனும் மகிழ்வுடனும் வாழப் பழகலாமே! "ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, November 7, 2025

Victory King: நம் முடிவு நம் கையில்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2408🥰

நாம் செய்ய விரும்பும் விஷயம் நியாயமானதாகவும் நம் மனதிற்கு நல்லதாகப்படுமாயின் உடனே முடிவெடுத்து செயல்படுத்தி விட வேண்டும். அனைவரது சம்மதத்தையும் பெற்று தான் செய்ய வேண்டுமென  நினைத்தால் அது குழப்பத்திலும் குளறுபடியாகவும் தான் முடியும். யோசனை கேட்கலாம் தவறில்லை. ஆனால் முடிவு நம் கையில் தான் இருக்க வேண்டும் அந்த விஷயம் முழுமை பெற. சிந்திப்போமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏07/11/25

Thursday, November 6, 2025

Victory King: நம் வாழ்க்கைக்கு ஆரோக்கியம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2407🥰   

வாழ்க்கையில் பல இடர்பாடுகள் வந்தாலும் அதனை முறியடித்து வாழ்க்கையை வீணடிக்காமல் வாழ்வது எவ்வளவு முக்கியமோ அதுபோல்தான் உற்றார் உறவினர்களிடம் அன்பு காட்டி பாராட்டி அந்த உறவை உயிரோட்டமாக வைத்திருப்பதும். பண்புடன் பழகும் சக மனிதர்களோடு சுமுகமாகவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் வாழ்வதுதான் நம் வாழ்க்கைக்கு ஆரோக்கியம். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Tuesday, November 4, 2025

Victory King: ஆணவத்தின் உச்சகட்ட நிலை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2406🥰 

ஆணவம், திமிர், கர்வம் இதன் உச்ச கட்டத்தில் இருப்பவர்கள் தாங்கள் குதிரையின் மேல் கம்பீரமாக சவாரி செய்வது போல் தன்னை பெருமித படுத்திக் கொள்ளலாம். ஆனால் குதிரையில் சவாரி செய்யும் பொழுது கர்வம் மிகுந்து கடிவாளத்தின் பிடிமானம் நழுவும் சமயத்தில் அந்த குதிரை தாறுமாறாக ஓடி சவாரி செய்பவரை தலை குப்புற விழ வைத்துவிடும். ஒருவரின் ஆணவத்தின் உச்சகட்ட நிலை இதுதான்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Sunday, November 2, 2025

#Victory King: தொட்டில் பழக்கம் இறுதி காலம் வரை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2405🥰

சுய பட்சாபத்தோடயே தன்னை முன்னிலைப்படுத்தி வளர்ந்தவர்கள் எப்போதுமே அடுத்தவர்களை நம்பியே தான் வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் தன் வயதான காலத்தில் அடுத்தவர்களுக்கு பாரமாகத்தான் இருக்க முடியும். இந்நிலை வரும்பொழுது ஒரு நிலைமைக்கு மேல் மற்றவர்களால் வெறுக்கப்பட்டும் சூழல்தான் வரும்."தொட்டில் பழக்கம் இறுதி காலம் வரை தொடரத்தான் செய்யும்"எனவே இந்நிலை நமக்கும் வராமல் வாழப் பழகுவோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Saturday, November 1, 2025

#Victory King: ரகசியம் காப்போம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2404🥰

நமக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை அதன் உண்மை நிலை தெரியும் வரை நம் மனதிற்குள்ளேயே வைத்திருப்பது தான் ரகசியம். அதை யாராவது ஒருவரிடம் வெளிப்படுத்திவிட்டாலே அது விஷம்போல் பலரூபத்தில் பரவி அந்த விஷயம் நமக்கே எதிர்வினையாக வந்தடைந்து நம்மை தலை குனிய வைத்து விடும்.எனவே ரகசியம் என்பது நம் மனதுக்கு மட்டுமே என்பதை உணர்ந்து செயல்படுவோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏