Tuesday, December 31, 2019

புத்தாண்டு தொடக்கம்!

கல்விக்கு அழகு குற்றம் இல்லாமல் பேசுதல். செல்வந்தருக்கு அழகு உறவினரை ஆதரித்தல். உணவுக்கு அழகு விருந்தினரோடு உண்ணுதல். அறிஞருக்கு அழகு அடக்கமாக இருத்தல்.

- ஒளவையார்

ஒளவையாரின் இந்த அருளுரையை  மனதில் கொண்டும், நாம் இதுவரை செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருக்கவும், நன்மைகளை மேலும் மேலும் தொடர்ந்து செய்யவும், பண்பாக வளமாக நலமாக வாழ்வோம் என்றும்  சூளுரைத்து 2019 -ம் ஆண்டிலிருந்து 2020 -ம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைப்போம்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

- Victory King (VK)

Monday, December 30, 2019

சேர்க்கை!

நல்லவர்களும் சில குறைபாடு உள்ளவர்களாய் இருப்பதற்குக் காரணம் சேர்க்கைதான். ஆகவே எவருக்கும் சேர்க்கை நல்ல சேர்க்கையாய் இருக்க வேண்டும்.  ‘சத் சங்கம்’ வேண்டும் என்று சாஸ்த்திரம் விதித்திருப்பது இதற்காகத்தான்.

- இந்து தர்மசாஸ்த்திரம்

மழை நீர் மிகவும் சுத்தமானது. அதை நாம் சேகரித்து வைத்தால் பயனுள்ளதாக்கலாம். இல்லையேல் கழிவு நீர் பாதையில் சென்று அதோடு ஒன்றிவிடும். அதுபோல கிடைப்பதற்கரிய பிறவி மானுடப் பிறவி. அதை பயனுள்ளதாக்க வேண்டுமென்றால் நல்லோர் நட்பினால் மட்டுமே முடியும். எனவே, நல்லோர் நட்பைப் பெற்று தீயவர் நட்பை  நாடி செல்வதை துறந்து வாழ்வை வளமாக்குவோம். 'கூடா நட்பு கேடாய்தான் முடியும்’

- Victory King (VK)


Sunday, December 29, 2019

புறம் பேசுதல்!

ஒருவர் மற்றவரை நிந்திக்க உங்களிடம் வந்தால் அதை கேட்காதீர்கள். கேட்பதே பெரும் பாவம். பிற்கால தொந்திரவுகளுக்கான விதை அதில் உள்ளது.

-சுவாமி விவேகானந்தர்

நாம் புறம் பேசுவதும் தவறு. புறம் பேசுபவருக்கு துணை போவது அதைவிட தவறு. இரண்டு செயல்களையுமே நாம் செய்யும்போது நம் தரம் தாழ்ந்து, நல்லோர்  முன்னிலையில் தலைகுனிவு ஏற்பட்டு நட்பு வட்டத்தில் இருந்து விலகி செல்லும் சூழலே ஏற்படும். புறம் பேசுதல் பொய்யைவிட கொடூரமான ஆயுதம். அது நம்மிடம் பாயாதிருக்க புறம் பேசுபவரை அண்டவிடாமல் செய்து நம் பண்பையும் காப்போம்.

- Victory King (VK) 

Saturday, December 28, 2019

பிள்ளைகள் வளர்ப்பு!

மாதா பிதாக்கள் பிள்ளை பெறுகின்ற விஷயத்தில் பிரசவ வேதனை தொடங்குவதில் இருந்து வித்தையும் அறிவும் கற்பிக்கிற வரை எவ்வளவு கஷ்டப்படுகிறார்களோ அதற்கு ஈடாக நாம் எத்தனை ஜென்மம் எடுத்து அவர்களுக்கு உதவி செய்தாலும் காணாது. அதனால் பெற்றோர்களை ஆயுள்வரை அவமரியாதை செய்யாமல் காப்பாற்றும் பொறுப்பு பிள்ளைகளைச் சேர்ந்தது.

- இந்து தர்ம சாஸ்திரம்

பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம். பாசத்துடனும், உறவுகளை உணர்த்தியும், பாரபட்சம் இன்றியும் பண்பை சுட்டிக்காட்டியும் வளர்த்த பிள்ளைகள் உண்மை நிலையை உணர்ந்து பெற்றோர்களை பேணிக்காப்பதில் பின்வாங்க மாட்டார்கள். பிள்ளைகளின் பொறுப்பு பெற்றோர்கள் கையிலும்தான்.

- Victory king (VK)

Friday, December 27, 2019

அகங்காரத்தின் தன்மை!

ஒருவனது அழகை கிழட்டுத் தன்மையும், தைரியத்தை பயமும், தர்மத்தை பொறாமையும், சம்பத்தை கோபமும், நல்ல நடத்தையை கெட்ட சேர்க்கையும், வெட்கத்தை காமமும் அபகரிக்கும். அகங்காரம் அனைத்தையுமே அபகரித்து விடும்.

- இந்து தர்ம சாஸ்திரம்

நமக்கு அகங்காரம் மட்டும் வந்துவிட்டால் மதம் பிடித்த யானையின் நிலைதான். சுற்றத்தை அழிக்கும், சூழலை அழிக்கும், கற்றதினால் ஏற்பட்ட நன்மைகளை அழிக்கும், முடிவில் நம் வாழ்க்கையையே அழித்துவிடும். எனவே எந்த நிலையிலும் அகங்காரத்தை நாம் நம்மை அண்டவிடாமல் தடுத்து வாழ முயல்வோமே.

- Victory king (VK)

Thursday, December 26, 2019

சினம்!

சினம் கொள்ளுதல் எளிது. சினத்தை அடக்குதல் அரிது. ஆதலின்அரியதைச் செய்தலே பெருமையாகும். இன் சொல்லினாலன்றி வன் சொல்லினால் ஒருவரும் மகிழ்ச்சியடையார்.

- இந்து தர்ம சாஸ்திரம்

நாம் சினம் கொண்டால் நம் ரத்தம் சூடு ஏறும். மனம் எரிமலை ஆகும். நா தடுமாறும். செயல் செய்வதறியாது தவிக்கும். உடல் முற்றிலும் பாதிக்கும். எனவே மனம் தெளிந்த நீரோடை போல் அமைதி பெற எடுத்த செயலில் வெற்றி பெற அடுத்தவரின் நன்மதிப்பைப் பெற உடல் நலத்தைக் காக்க சினத்தை அடக்கி வாழ்வோமே!

- Victory king (VK)

Wednesday, December 25, 2019

ஆசை!

ஆசை என்பது ஆச்சர்யமான ஒரு விலங்கு. அதனால் கட்டப்பட்டவர்கள் எப்போதும் தாவிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் கட்டப்படாதவர்கள் ஓரிடத்திலேயே அசைவற்று இருக்கிறார்கள்.

- இந்து தர்ம சாஸ்திரம்

நாம் ஆசைப்படுவதற்கும் ஒரு இலக்கு வேண்டும். ஒரு இலக்கோடு நேர்மையான ஆசையாக இருந்தால் இலக்கை அடைவது நிச்சயம். கற்றலுக்கு மட்டும் ஆசைக்கு எல்லையே கிடையாது. கற்க கற்க பண்பு
வளரும். இறக்கும்வரைகூட நாம் கற்று மேன்மையடையளாம்.

- Victory King (VK)

Tuesday, December 24, 2019

சொல்லும் செயலும்!


ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு

செல்வமும் அழிவும் சொல்லால் வருகின்றன. ஆகவே, சொல்லில் தவறு 
நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குறள் : 642

நாம் செய்யும் செயலில் நிதானத்தைக் கடைபிடித்தால் செயல் வெற்றி அடையும். நாம் பேசும்போது சொல்லில் நிதானத்தைக் கடைபிடித்தால் நான் சொல்லும் சொல்லுக்கு மதிப்புக் கூடும். எனவே, எதிலும் எப்போதும் நிதானம் தேவை.

Victory King (VK)

Monday, December 23, 2019

உண்மையும் பொய்யும்!


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொய் சொல்லமை என்னும் அறத்தை இடைவிடாமல் பின்பற்றி நடந்தால் பிற அறங்களை செய்யாவிடினும் நன்மை உண்டாகும்.

- திருக்குறள் 297

பொய் ஒரு பன்முகம் கொண்டது. அது ஒரு போதை. ஒருமுறை பொய் சொன்னால் பொய்க்கு மேல் பொய்க்கு மேல் என்று பொய்யையே பேசி வாழ்க்கையே பொய் ஆகிவிடும். ஆனால் உண்மைக்கு ஒரு முகம்தான். உண்மை என்பது எப்பொழுது சொன்னாலும் உண்மை உண்மைதான். அதில் மாற்றமே இருக்காது. எனவே பொய் என்ற போதைக்கு அடிமையாகாமல் வாழ்வது நமது கடமை.

- Victory King (VK)

Sunday, December 22, 2019

நாவடக்கம்!

நம்மிடமுள்ள நற் செல்வமும், பெரும் கெடுதியும் நமது நாக்குதான். நாக்கு நம்  கட்டுக்கு அடங்கினால் அதைவிட சிறந்தது வேறு இல்லை. நாம் அதன் கட்டுக்கு அடங்கினால் அதைவிட தீயதும் இல்லை.

- இந்து தர்ம சாஸ்திரம்

எதைக் காத்தாலும்  காக்காவிட்டாலும் நாவை மட்டுமாவது காக்க வேண்டும். அவ்வாறு காத்துக் கொள்ளாவிட்டால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர் என்ற திருவள்ளுவர் வாக்கை மனதிற்கொண்டு யாரிடம் எதை சொல்கிறோம் என்று யோசித்து அதன்படி பேசினால் அதுவே நமக்கு ஒரு கேடயமாக அமையும்.

- Victory king (VK)

Saturday, December 21, 2019

சுற்றம் சூழ வாழ்வோமே!

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

சுற்றத்தார் சூழ வாழ்வதே செல்வம் பெற்றதனால் உண்டாகும் பயனாகும்.

- திருக்குறள் 524

நம் வாழ்வில் நம் நிலை உயரலாம், நம் பிள்ளைகள் நிலை உயரலாம், மகிழ்வான வாழ்க்கை மிகுந்து அமையலாம். ஆனால் நம் சொந்தங்களை எந்த நிலையிலும் ஒதுக்கி வாழ நினைத்தலாகாது. அனைத்து சுகங்களுமே வந்துபோகும். எனவே, சொந்தங்களை இழந்து பந்தங்களை நீக்கி வாழாத மனநிலை வர வேண்டும். மனம் நினைத்தால் மார்க்கமுண்டு.

- Victory King (VK)




Friday, December 20, 2019

தளர்த்திக்கொள்ளாத தர்மம் வேண்டும்!

ஒரு குடம் பாலில் ஒரு சிட்டிகை உப்பு தவறி விழுந்தாலே அது திரிந்து உபயோகம் இல்லாமல் போட்விடும். அதுபோல எந்த சூழலிலும் தர்மத்தைத் தளர்த்திக்கொள்ளக் கூடாது. அப்படி தளர்த்திக்கொண்டால் பின்னர் அதுவே பழக்கமாகிவிடும்.

- காஞ்சி மகாபெரியவர்

நாம் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் மற்றவர்களின் மாய வலையில் சிக்கி தீய செயலுக்கு துணைபோகும் நிலை  வந்தால் நாம் அதுவரை கட்டிக் காத்த பெயர் புகழ் அனைத்தும் பயனில்லாமல் போய்விடும். எனவே எந்த நிலையிலும் நாம் மாறாத மனதிடத்துடன் நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

- Victory King (VK)


Thursday, December 19, 2019

நன்மையும் தீமையும்!

தமக்கு ஒரு நன்மை செய்தவர் தொடர்ந்து 100 குற்றங்கள் செய்தாலும் சான்றோர் பொறுத்துக்கொள்வர். ஆனால் கயவர்க்கு 700 நன்மைகள் செய்து தவறிப்போய் ஒன்று தீமையாக நேர்ந்துவிடினும் முன் செய்த 700 நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும். தீமையை மறப்பது சான்றோர் இயல்பு. நன்மையை மறப்பது கயவர் இயல்பு.

- நாலடியார்.

ஏற்போர் மனதை நாம் மாற்றுவது முடியாத செயல். தானாக மாறினால்தான் உண்டு. எனவே, நம்மால் முடிந்தவரை நன்மை செய்தலாகிய சீரிய பண்பையே ஏற்று செயல்வடிவம் கொடுத்து வாழ்ந்துதான் காட்டுவோமே!

- Victory King (VK)

Wednesday, December 18, 2019

உதவியும் அறிவுரையும்!

நல்ல குணம் உடையவருக்கு செய்த உதவி கல்லிலே செதுக்கிய எழுத்தைப் போல நிலையாக காணப்படும்.இரக்கமில்லா மனத்தவருக்கு செய்த உதவியானது நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாக அப்போதே அழிந்துவிடும்.

- ஔவையார்

நாம் ஒருவருக்கு உதவி செய்யும்போது அந்த உதவிக்கு தகுதியானவரா உதவி பெறுபவர் என்பதை அறிய வேண்டும் அதேபோல அறிவுரை கூறும்போதும் அந்த அறிவுரையை ஏற்க ஏற்றவரா அறிவுரை பெறுபவர் என்பதையும் அறிய வேண்டும்.   அப்போதுதான் நாம் செய்யும் செயலுக்கு உயிர் இருக்கும்

- Victory King (VK)

Tuesday, December 17, 2019

சுற்றம் சூழ வாழ்வோம்!

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று.

கரையில்லாத குளத்தின் கண் நீர் நிறைந்தால் அதனால் பயனில்லை. அதுபோலச்‌ சுற்றத்தாரோடு கலந்து பழகாதவன் வாழ்க்கை பயனற்றுப் போகும்.

- திருக்குறள் 523

உறவுகளின் வலிமையும் பெருமையும் நம் பிள்ளைகளையும் சென்றடைந்து அவர்கள் வாழ்க்கையை வளமாக்க வேண்டும். நாம் இருக்கும் பொழுதே உறவுகளை ஒதுக்கி வாழ்ந்தால் நாமே நம் பிள்ளைகளைக் கெடுத்ததுபோல் ஆகிவிடும்

- Victory king (VK)

Monday, December 16, 2019

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்தக் கருத்தை யார்சொல்லக் கேட்டாலும் அந்த கருத்தின் உண்மைத்தன்மையை காண்பதுதான் அறிவாகும்.

- திருக்குறள் 423

ஒருவன் வியாபார நோக்கில் ஒரு கருத்தை தன் பேச்சாற்றலால் மிகைப்படுத்தி  தேனொழுக பேசி நம் மனதை ஈர்ப்பது இயல்பு. நாம்தான் நம் மனதை அடக்கி அறிவைப் பயன்படுத்தி அதன் நம்பகத்தன்மையை கண்டறிய வேண்டும்.

- Victory king (VK)

Sunday, December 15, 2019

திறமை!

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

- டாக்டர் அப்துல்கலாம்

நாம் நம் திறமையை பயன்படுத்தி நம் மதிப்பை வெளிப்படுத்தல் வேண்டும். அதை விடுத்து மற்றவர்கள் திறமையை குறைத்துப் பேசி நம்மை உயர்த்திக்கொள்ள நினைத்தால் அது நிலையில்லாமல் போய்விடும்.

- Victory King (VK)

Saturday, December 14, 2019

செல்வச் செருக்கு

'ஈசலுக்கு அழிவுகாலம் வருவதற்கு முன் இறகு முளைக்கும். விளக்கு அணையப் போகும் பொழுது அதிக ஒளியுடன் கொழுந்துவிட்டு எரியும். இவை போல, தீச்செயல் புரியும் கீழோர் அவர்தம் செருக்கினால் அவர்களது செல்வத்தை இழப்பார்கள்'

- மாயூரம் வேதநாயகம் பிள்ளை

வாழ்க்கைக்கு பணம் மிகமிக முக்கியம்தான். ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. அந்த நிலை வந்தால் பேராசை நம்மைப் பற்றிக்கொள்ளும். அகம்பாவம்  நம்மிடம் அடைக்கலமாகிவிடும். இதன் விளைவு அடுத்தவரை அழித்தும் அடுத்தவர் மனதை கெடுத்தும் பிழைக்க மனம் உந்தும். ஒருவருக்கும் உண்மையாக இருக்க முடியாது. சுற்றங்களைத் துறந்துவிடும்.நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். Contented Life is a Continual Feast.

- Vicktory King (VK)

Friday, December 13, 2019

உயர்ந்த புகழ்!

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்

இவ்வுலகத்தில் அழியாமல் நிற்பது உயர்ந்த புகழைத் தவிர வேறொன்றும் இல்லை.

- திருக்குறள் 233

எண்ணத்தின் ஓட்டமே செயல். உயர்ந்த செயல்பாடுகளின் வெளிப்பாடே புகழ். புகழ் மட்டும்தான் இவ்வுலகில் நாம் இறந்த பிறகும் நிலையாக நிற்பது எனவே சொல் செயல் சிந்தனை அனைத்திலும் தூய்மை இருந்தால் மட்டுமே அந்த உயர் புகழை அடைய முடியும்.

- Victory king (VK)

Thursday, December 12, 2019

பசுத்தோல் போர்த்திய புலி

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

நெஞ்சத்திலே ஆசைகளைத் துறவாமல், துறந்தவர் போல் நடித்து வாழும் பொய் துறவிகளைப் போலக் கொடியவர் யாருமில்லை.

- திருக்குறள் 276

நல்லவர் போல் நடித்து அகத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகத் தேனொழுகப்  பேசி வஞ்சகத்தையே செயலாகக் கொண்டு பசுத்தோல் போர்த்திய புலி போல் நடமாடும் வஞ்சகர்களை நாம்தான் இனம்கண்டு கவனமாக இருக்க வேண்டும்.

- Vicktory King (VK)

Wednesday, December 11, 2019

விருந்தோம்பல்

அகனமர்ந்து  செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.

இனிய  முகத்துடன் விருந்தினரை உபசரிப்பவன் வீட்டில் மன விருப்பத்துடன் இலக்குமி (செல்வம்) வாழ்வாள்.

- திருக்குறள் 84

விருந்தோம்பல் ஒரு கலை. இனிய முகத்துடன் வரவேற்று அகமகிழ்ந்து அலவளாவி கூடிக் களித்து, உள்ளன்புடன் உபசரித்து உணவளித்து, வாயில் வரை சென்று வாயார வாழ்த்தி வழி அனுப்பி மகிழ்வதுதான் விருந்தோம்பலின் சீரிய பண்பு.

- Victory King (VK)

Tuesday, December 10, 2019

அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்.
அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? அன்புடையாரைக் கண்டதும் விடும் கண்ணீரே அன்பை வெளிப்படுத்தி விடும்.

- திருக்குறள் 71

வீட்டை ஒளி மயமாக்கிக் கொண்டிருக்கும் இந்த கார்த்திகை திருநாளில் இனிமையான உள்ளத்துடனும் முகமலர்ச்சியுடனும்  உற்றார் உறவினரிடம் அகமகிழ்ந்து உரையாடி மகிழவும் வாழ்த்தும்.

- Victory King (VK)

Monday, December 9, 2019

அன்னையும் பிதாவும்!

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
தாய் தந்தையரைப் பேரன்புடன் பாதுகாக்க வேண்டும். அவர்களது உடல்கள் நீங்கிய பிறகும் நாள்தோறும் நன்றியுணர்வுடன் நினைந்து வணங்க வேண்டும்.

- ஒளவையார்

குடும்பத்தில் கணவனும் மனைவியும் தத்தம் பெற்றோர்களை அன்புடனும் பண்புடனும் கடைசிவரை போற்ற வேண்டும். அதுபோல கணவன் மனைவியின் பெற்றோர்களையும், மனைவி கணவனின் பெற்றோர்களையும் போற்றுவதுதான் பண்பு. அவர்கள் அந்தப் பண்பில் இருந்து விலகும்போது தமக்கும் அதே நிலைதான் தம் பிள்ளைகளால் என்பதை உணர வேண்டும்.
‘தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை’

- Victory King (VK)

Sunday, December 8, 2019

தெய்வீகம்!

எங்கே ஒற்றுமை உள்ளதோ அங்கே தூய்மை இருக்கும்.
எங்கே தூய்மை உள்ளதோ அங்கே தெய்வீகம் இருக்கும்.
எங்கே தெய்வீகம் உள்ளதோ அங்கே ஆனந்தம் இருக்கும்.
ஒற்றுமை, தூய்மை மற்றும் தெய்வீகத்துக்கும்
இடையிலான நெருங்கிய தொடர்பை மக்கள் உணர வேண்டும்.

- பகவான் சாய்பாபா

புறத்தூய்மையை மட்டும் வைத்துக்கொண்டு பிறருக்கு தீங்கு இழைத்துக்கொண்டிருப்பவர்கள் முகத்தளவிலே தெளிவிருந்தாலும் அகம் அவரை  பயத்திலேயேதான் வைத்திருக்கும்.

- Vicktory King (VK)

Saturday, December 7, 2019

கல்வியின் சிறப்பு

கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும். பிறருக்கு தருவதால் குறையாது. கற்றவர் புகழை எங்கும் பரவச் செய்யும். நாம் உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.

- நாலடியார்

கற்றலின் புத்திக்கூர்மையை தகாத செயலுக்கு பயன்படுத்தும்பொழுது மதிகெட்டு மானமிழந்து எல்லோராலும் வெறுத்து ஒதுக்கும் நிலை வருவதோடு கற்றதின் பயனும் அழிந்து போகும்.

- Victory King (VK)

Friday, December 6, 2019

எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றிபெற!

அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் முடியும் காலம் வந்தாலன்றி மேற்கொண்ட காரியங்கள் முடிவு பெறாது. எவ்வாறெனில் கிளைத்த உருவத்தால் நீண்ட உயர்ந்த மரங்களாக இருந்தாலும் பழுக்கும் காலம் வந்தாலன்றிப் பழங்களை பெற முடியாது.

-ஔவையார்

அப்படியே எடுத்த காரியங்களை குறுக்கு வழியில் முயன்று முடிக்க நினைத்தாலும் சறுக்களில்தான் முடியும்

Victory King (VK)

Thursday, December 5, 2019

விதைத்ததையே அறுவடை செய்கிறோம்!

நாம் விதைத்ததையே நாம் அறுவடை செய்கிறோம், நாம் படுகின்ற துன்பங்கள், நாம் போராடுகின்ற தளைகள், எல்லாம் நாமே உருவாக்கியவை. அதற்கு பிரபஞ்சத்தில் உள்ள யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. கடவுளை குறை சொல்வதில் அர்த்தமே இல்லை.

- சுவாமி விவேகானந்தர்

நாம் இன்று செய்யும் செயல்களின் பிரதிபலிப்பே வருங்காலம் என்பதை நாம் உணர வேண்டும்.

-Victory King (VK)

Wednesday, December 4, 2019

தவறுகளும் தண்டனையும்!

தான் வாழ நினைக்கிறவன் மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்க வேண்டும். மற்றவர்களை வதைக்கின்றவன் தான் மட்டும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விட மாட்டான். மற்றும் இறைவன் தண்டனையும் அவனுக்கு உண்டு.

- இந்து தர்ம சாஸ்திரம்

அடுத்தவனை அழித்து வாழ நினைக்கிறவன் துரோகி. அதற்கான தண்டனையிலிருந்து அவன் தப்பவே முடியாது.

- Victory King (VK)

Tuesday, December 3, 2019

நன்மையும் தீமையும்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

துன்பம் தரும் தொல்லைகள் தன்னிடம் வரக்கூடாது என்று நினைப்பவன் தீமைகளை மற்றவருக்கு செய்யாதிருக்க வேண்டும்.

- குறள் எண் 206

 நாம் அடுத்தவர்களுக்கு செய்யும் தீய செயல்களுக்கான தண்டனை நம்மை மட்டும் பாதிக்காது. நம் சந்ததிகளையும் பாதிக்கும். எனவே அடுத்தவர்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் நமக்கு நாமே கல்லறை அமைத்துக் கொள்வது போல ஆகிவிடும்.

-Victory King (VK)

உழைப்பும் வாழ்க்கையும்

இரவில் பசியின்றி உறங்குவதற்கு தேவைப்படுவதை பகலில் சம்பாதிக்க வேண்டும். மழைக்காலத்தில் செலவழிக்க மற்ற மாதங்களில் சேமிக்கவேண்டும். முதுமையில் நிம்மதியாக வாழ்வதற்கு இளமையில் பொருள் தேடிக்கொள்ள வேண்டும்.உயிர் உள்ளவரை மனிதர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்கு மகிழ்ச்சி கிடையாது.

-பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா

கடின உழைப்பும் விடாமுயற்சியும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் நாம் மகிழ்வோடு வாழலாம்.

-Victory King (VK)

Sunday, December 1, 2019

நம்பிக்கையும் வெற்றியும்!

எந்த ஒரு செயலையும் துவங்கும்போது இது நம்மால் முடியாது. இதை சரியாக நம்மால் செய்ய முடியுமா? இதில் வெற்றி கிடைக்காது என்று எண்ணி துவக்காதீர்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றிக்காக போராடுங்கள். முயற்சியை அதிகப்படுத்துங்கள். முடியுமென்றால் முடிந்துவிடும். சிறப்பாகவே முடியும். முடியாது என்றால் முடியாது. என்னதான் முயன்றாலும் தோல்வி எண்ணம் இருந்தால் முயற்சி செய்தாலும் சிறப்பாக முடிக்க முடியாது.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்.

எந்த செயலையும் முழுமனதுடன் முடியுமென்ற முனைப்போடு செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம்.

- Victory King (VK)

செயலும் முயற்சியும்

உங்களது முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. உங்களது தொழிலும் உங்களது வாழ்க்கையும் முன் வினையால் உருவாக்கப்படுகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. நீங்கள் முன்னேற வேண்டும் என்று விதி இருந்தால் உலகம் முழுவதும் ஒன்று திரண்டாலும் அதை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு மாறாக நடக்க வேண்டுமெனில் அப்போதும் உலகம் முழுவதானாலும் ஒன்றும் செய்ய முடியாது

-  சுவாமி சிவானந்தா

படகு தானாக நகராது துடுப்புப் போட்டால்தான் நகரும். அதுபோல எந்த செயலுக்கும் முயற்சியும் முக்கியம்

Victory king (VK)

Friday, November 29, 2019

மனசாட்சி

என்றைக்கும் உண்மை உண்மைதான். பொய் பொய் தான். பொய்யை மெய்யாகவோ மெய்யை பொய்யாகவோ நிரந்தரமாக மாற்றிவிட முடியாது.ஆகவே எப்போதும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடக்கிறவர்  எந்தவித குறைபாடும் இன்றி நலம் அடைவர்.

- இந்து தர்ம சாஸ்திரம்.

குற்றம் செய்தவர் தண்டனையிலிருந்து தப்பலாம் ஆனால் மனசாட்சி அவர்களை துரத்தித் துரத்தி தண்டனையை கொடுத்துவிடும்.

- Victory King (VK)

Thursday, November 28, 2019

பிறப்பின் சிறப்பு!

அதிர்ஷ்டம் வாழ்க்கையில் ஒருமுறைதான் உங்கள் கதவை தட்டும். விழித்திருந்து செயலாற்றினால் சுகம் உங்களுக்கு சொந்தமாகும். பிறப்பால் சிறப்பு பெறுவதைவிட வாழ்ந்து காட்டி சிறப்பு பெறுபவர்களே வரலாறு ஆகிறார்கள். சிலர் பிறக்கின்ற போதே சிறப்போடு பிறக்கின்றனர். வாழ்கின்ற போது சிலர் சிறப்பு அடைகின்றனர் சிலர் மீது சிறப்புகள் போலியாக திணிக்கப்படுவதும் உண்டு.

- ஷேக்ஸ்பியர்

பிறப்பால் சிறப்புற்று இருந்தாலும் வாழ்ந்து காட்டும் போதுதான் அந்த பிறப்பின் அருமையும் பெருமையும் நம் பிள்ளைகளை சென்றடையும்.

-Victory King (VK)

Wednesday, November 27, 2019

பெருமைமிகு பெற்றோரும் மகனும்!

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய உதவி யாதெனின் இவனின் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தாரோ என்று உலகத்தார் புகழும்படி நடத்தல் ஆகும்.

- திருக்குறள் 70

இந்தக் குறள் இருபாலருக்கும் பொருந்தும். இத்தகு பெருமைமிகு பெற்றோர்களை அவர்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்தாளும் துரோகச் செயல் செய்பவர்களுக்கு மன்னிப்பு என்பதே இப்பிறவியில் கிடையாது.

- Victory king (VK)

Tuesday, November 26, 2019

நம்பிக்கையே வாழ்க்கை!

நோயாளி வைத்தியனிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் எத்தனை வருந்தத்தக்கததோ, அத்தனை  வருந்தத்தக்கதே யாரும் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்பதும். உலகில் நம்பிக்கை இல்லாமல் ஒரு கணம்கூட வாழவே முடியாது.முன்பின் தெரியாத டாக்ஸி டிரைவரை நம்பி பின்சீட்டில் தூங்குகிறோம். முன்பின் தெரியாத கம்பவுண்டர் தருகிற மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம். ஒரு கைகாட்டி மரத்தை நம்பி வழி நடக்கிறோம். எனவே நம்பிக்கைதான் மனிதனை உயர்த்தும்.

திருமுருக கிருபானந்த வாரியார்

எந்த செயலையும் நம்பிக்கையுடனும்
 துணிவுடனும் செய்தால் வெற்றி தான். ஆனால் அந்த செயல் நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

Victory King (VK)

Monday, November 25, 2019

கடந்து வந்த பாதை!

அதிகமான சுகத்தை அனுபவிக்கும்போது ஏற்கனவே கடைப்பிடித்து வந்த நற்பழக்கங்களை விட்டுவிடக் கூடாது‌. அதே சமயம் பழைய கஷ்டத்தை அடிக்கடி நினைத்துப் பார்க்கவும் தவறக்கூடாது.

- இந்து தர்ம சாஸ்திரம்

கடந்து வந்த பாதையை மறந்து இன்று அடைந்திருக்கும் புகழுக்கும் செல்வத்துக்கும் அடிமையாகி பேரானந்தத்தில் கர்வம் தலைக்கேறி விட்டால் நமக்கு சறுக்கி விழும் நேரம் நெருங்கிவிட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

Victory King (VK)

Sunday, November 24, 2019

வாழ்க்கை நெறி!

இரும்பில் இருந்து துரு தோன்றினாலும் இரும்பை அந்தத் துருவே அரித்து தின்று விடுகிறது. அதுபோலவே, நெறியிலிருந்து தவறியவனை அவனுடைய செயல்களே நாளுக்குநாள் அழிவை நோக்கி நடத்திச் செல்கின்றன. அதனால் எப்பொழுதும் உன் நெறியிலிருந்து தவறாதே.

- இந்து தர்ம சாஸ்திரம்.

எந்நிலை மாறினாலும் தன்னிலை மாறாத நன்நெறியுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Saturday, November 23, 2019

எண்ணம்போல் வாழ்வு!

தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.

துவக்கத்தில் இன்பம் தருபவை போலத் தோன்றும் தீய செயல்கள் பிறகு துன்பத்தையே தருவதால் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தையே தருகின்ற அத்தீய செயல்களை செய்ய, நெருப்பிடம் பயப்படுவதைக் காட்டிலும் பயப்பட வேண்டும். தீ உடலைத்தான் வருத்தும்; தீவினையோ உயிரை பல பிறவிகளுக்கு வருத்தும்.

- திருக்குறள் 202

நல்லதையே எண்ணுவோம் நன்மையே செய்வோம் நலம் பெற வாழ்வோம்.

Victory King (VK)

Friday, November 22, 2019

செயல்களும் பலனும்!

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறருக்கு தீங்கை ஒருநாளில் செய்தால் நமக்குத் துன்பம் என்றேனும் ஒருநாள் தாமாகவே வந்து சேரும்.

- திருக்குறள் 319

நாம் பந்தை சுவற்றில் அடிக்கும் பொழுது எந்த வேகத்தில் அடிக்கிறோமோஅதே வேகத்தில் நம்மை வந்தடையும். அதுபோல்தான் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களின் பலனும்.

-Victory King (VK)

Thursday, November 21, 2019

மகிழ்ச்சியின் இலக்கணம்

வாழ்க்கைப் பாதை நெடுகிலும் பூக்கள் மட்டுமே பூத்திருக்கும் என்று கடவுள் வாக்களிக்கவில்லை. மழை இல்லா வெயிலோ, கவலையில்லா மகிழ்ச்சியோ, வேதனை அற்ற சமாதானமோ உண்டாகும் என்றும் அவர் வாக்கு அளிக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகள் கொண்டதுதான் வாழ்க்கை. அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் சமமான நிலையும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

- டாக்டர் அப்துல் கலாம்

மகிழ்ச்சியை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதாத நிலையில் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

- Victory King (VK)

Wednesday, November 20, 2019

அறவழி செல்லா அறிவு!

எழுத எழுத பேனாவில் மை குறைந்துகொண்டே வரும். ஆனால் எழுதுபவனின் புத்தி மட்டும் குறைவதில்லை. மேன்மேலும் வளர்ச்சி அடைகிறது.

கத்தியை தீட்ட தீட்ட எவ்விதம் கூர்மை பெறுகிறதோ அதுபோல் பல நல்ல விஷயங்களை படிக்க படிக்க புத்தி கூர்மை பெறுகிறது.

சாணை தீட்டிய கத்தியை நல்ல முறையில் ஜாக்கிரதையாக கைகொள்ள வேண்டும். அதுபோல, கற்றவன் அந்தப் படிப்பை  நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

அறவழி செல்லா அறிவு விழலுக்கு நீர்பாய்ச்சியது போல்தான்.

- Victory king (VK)

Tuesday, November 19, 2019

பேச வேண்டியதை பேச வேண்டிய நேரத்தில்!

பேசுவதற்குத் தகுதியானவர் என்று தெரிந்தும் பேசாமல் இருந்துவிட்டால் நீ ஒரு நல்ல மனிதரை இழந்து விடுகிறாய். பேசுவதற்கு தகுதியற்றவர் என்று புரிந்தும் நீ பேசி விட்டால் உன் வார்த்தைகளை இழந்து விடுகிறாய். அறிவுள்ளவன், மனிதர்களையும் இழப்பது இல்லை, வார்த்தைகளையும் இழப்பதில்லை.

- கன்ஃபூஷியஸ்

பேச வேண்டியதை பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய நேரத்தில் பண்போடு பேசினால்தான் அந்த பேச்சிற்கு மதிப்பு.

- Victory King (VK)

Monday, November 18, 2019

பிடித்தது கிடைக்கவில்லை என்றால்...

உங்கள் அமைதியைக் குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். சூழ்நிலையை மாற்றுவதற்குப் பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதை விட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள். இப்படி நீங்கள் செய்வதால் வருடக்கணக்காக உங்களுக்குக் கெட்டதாக தென்பட்ட உங்கள் சூழ்நிலை அதிசயத்தக்க விதத்தில் நல்லவிதமாக மாறத் தொடங்குவதை காண்பீர்கள்.

சுவாமி சிவானந்தா

பிடித்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை பிடிக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

Victory King (VK)

Sunday, November 17, 2019

நயமோடு பேசுவோமே!

நீ சொல்லுவதே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு என வலியுறுத்திச் சொல்லக்கூடாது.

பேச்சின் தோனியும், வார்த்தைகளும் மிக அடங்கி அமைதியாக வற்புறுத்தல் இன்றி, இருக்க வேண்டும்.

வாதங்கள், பூசல்கள், அதிக எழுச்சி மிக்க பேச்சு இவை அனைத்தையும் தவிர்த்து, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி நிறுத்திவிட வேண்டும்.

 - ஸ்ரீ அரவிந்தர் -

அன்போடு பேசினால் அனைவரையும் அரவணைக்க முடியும்
அதிகாரப் பேச்சு ஆவேசப்பேச்சு நம் ஆற்றலைதான் குலைக்கும்!

- Victory king (VK) -

Saturday, November 16, 2019

நல்லவை அத்தனைக்கும் ஆசைப்படலாம்!

பத்தாயிரம் ரூபாய் இருந்தாலும் உண்ணக்கூடியது ஒருநாழி அரிசி தானே?

ஆயிரம் புடவை இருந்தாலும் ஒரு புடவை தானே கட்டிக் கொள்ள முடியும்?

தேசம் முழுவதும் ஆண்டாலும் படுத்துக் கொள்வதற்கு மூன்று முழம் இடம் தானே வேண்டும்?

நதியில் எவ்வளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் பாத்திரம் கொள்ளும் அளவுதான் நீர்.

இவ்வளவு தெரிந்தும் அதிகப் பிரயாசைப்பட்டு அளவுக்கு அதிகமாக பணம் சேர்க்கிறவர்கள் அனுபவிக்கக்கூடியது அற்பமே என்பதை ஏனோ உணர்வதில்லை.

 - தியாகப் பிரும்மம் -

நல்லவை அத்தனைக்கும் ஆசைப்படலாம்
ஆனால்
ஆணவத்திற்கு மட்டும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது!

- Victory king (VK) -

சிறந்த பெற்றோரின் இலக்கணம்

பிள்ளைகளை வளர்த்து கல்வி அளிப்பதோடு மட்டும் ஒரு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை.

அவர்களுக்கு நற்குணத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் ஒழுக்கத்தில் முறை தவறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதைவிட ஒரு பெரிய உதவியை ஒரு பெற்றோரால் செய்துவிட முடியாது.

இது கடமை மட்டுமல்ல. தர்மமும் கூட.

- நபிகள் நாயகம் -

சிற்பியின் கைவண்ணத்தில்தான் சிற்பத்தின் உயிரோட்டம். அதுபோல பெற்றோரின் வளர்ப்பில்தான் பிள்ளைகளின் எதிர்காலமும் முன்னேற்றமும்!

- Victory King (VK) -