Tuesday, March 31, 2020

தொண்டும் உதவியும்!

Status 177

உலகுக்கு தொண்டு செய்கிற மனிதன் உண்மையில் தனக்குத்தானே தொண்டு செய்து கொள்கிறான். பிறருக்கு உதவி செய்கிற மனிதன் தனக்குத்தானே உதவி செய்து கொள்கிறான். நீங்கள் ஒரு மனிதனுக்கு தொண்டு செய்யும் போதும், ஒரு நாட்டுக்கு செய்கின்ற போதும் தொண்டின் மூலம் உங்களை நீங்களே முன்னேற்றி கொள்ளவும், திருத்திக் கொள்ளவும், சரி செய்து கொள்ளவும் இறைவன் அரிய சந்தர்ப்பத்தை அருளியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

- சுவாமி சிவானந்தா

அந்த சந்தர்ப்பம்தான் நமக்கு இப்பொழுது கிடைத்திருப்பது. நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஒருமித்த கருத்துடன் நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும் இந்த தருணம்

- Victory king (VK)

Monday, March 30, 2020

இதுவும் கடந்து போகும்!

Status 176 

'இதுவும் கடந்து போகும்'- நம் எண்ணம் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் எதற்கும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. மாசற்ற மனதோடு திடமான மன உறுதியுடன் மனக் கவலையை மறந்து மகிழ வேண்டிய நேரமிது. இதற்கு மிகவும் முக்கியமானது நேர்மறை எண்ணம். உள்ளிருந்து கொண்டே கிடைத்த நேரத்தில்  அடுத்தவனை கெடுப்பதற்கும் அழிப்பதற்கும் முயன்று சிந்தித்தால் அதன் அதிர்வலைகள் அவனையே அழித்துவிடும். எனவே இத்தருணத்தில் நல்லவற்றையே எண்ணி மனதின் அழுக்கை அறவே ஒழித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதோடு நம்மை சுற்றி அனைவரையும் காப்பாற்றுவோம் என்று சூளுரைப்போம்.

-Victory king (VK)

Sunday, March 29, 2020

ஊரடங்கும் நம் பாதுகாப்பும்!

Status 175

எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்களுக்கு தாங்கவே முடியாது என்ற துன்பம் வந்தால் கூட அதனைப் பொறுத்து கொஞ்சம் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கடந்த காலம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். இன்று என்பது மட்டுமே நிஜம். இன்றைய பொழுதை முழுமையாக வாழ பழகுங்கள்.

- சுவாமி விவேகானந்தர்

எனவே இன்றைய இக்கட்டான உள்ளிருப்பு நிலையை முடிந்தவரை சந்தோஷமாக சமாளியுங்கள். இந்த மூன்று வாரங்களை மூன்று நாட்களாக எண்ணி மகிழ வேண்டும் என்றால் நாம் குடும்பத்தோடு மகிழ்வுடன் இருக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணுங்கள். நிலைமையை சமாளிக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் கூர்ந்து கவனித்து ஆறுதல் அடையுங்கள். தன்னுயிரையும் பொருட்படுத்தாது அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களையும், காவல்துறையும் மானசீகமாக மனதார வாழ்த்தி மகிழுங்கள். நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர முடியும்.

-Victory king (VK)

Saturday, March 28, 2020

ஒழுக்க நெறி

Status 174

நெருப்பைப் போல் களங்கமற்ற ஒழுக்கமுள்ளவர்களுடன் இளமையிலிருந்தே சிறுவர்கள் வாழவேண்டும். அத்தகைய உதாரண புருஷர் ஒருவரை முன்னால் வைத்துக்கொள்ளவேண்டும். பொய் சொல்வது பாவம் என்று வெறுமனே படிப்பதால் ஒன்றும் நடக்காது. வழுவாத பிரம்மச்சரிய நெறியில் நிற்பதற்கு ஒவ்வொரு சிறுவர் சிறுமியரும் பயிற்றுவிக்கப் படவேண்டும். அப்போது மட்டுமே நம்பிக்கை, சிரத்தை எல்லாம் உண்டாகும்.

- சுவாமி விவேகானந்தர்

இதையும் தாண்டி நெறி தவறுபவர்களை பயத்தை ஏற்படுத்தியாவது, ஏதேனும் ஒரு விதத்தில் நாம் அவர்களைத் திருத்தியே ஆக வேண்டும். இல்லையேல் அவர்கள் தான் கெட்டதோடு மற்றவர்களையும் கெடுத்து அழிவை ஏற்படுத்தி விடுவார்கள்.

-Victory king (VK)

Friday, March 27, 2020

சுயகட்டுப்பாடு!

Status - 173

மூன்று பொருட்களை மிச்சமாக வைக்கக் கூடாது.

1. அக்கினி சேஷம் 2. ருணசேஷம்3. சத்ரு சேஷம் 

வீட்டில் இரவில் நெருப்பை மிச்சமின்றி அணைக்கவேண்டும். இல்லையேல் எலி முதலிய பிராணிகள் துணிகளை இழுத்து விடும். அதனால் தீப்பிடிக்கும்.
கடன் முழுவதும் தீர்த்துவிட வேண்டும். ஒரு சிறிது மிச்சமாக விட்டு வைத்தாலும் வட்டி குட்டி போட்டு பெருகிவிடும். பகைவனை அடியுடன் அழிக்க வேண்டும். இல்லையேல் அவன் பலரை உடன் கூட்டிக்கொண்டு பெருகி விடுவான்.

- திருமுருக கிருபானந்த வாரியார்

அதுபோல்தான் தற்பொழுது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய வைரஸை அறவே ஒழித்திட வேண்டும். நாம் சுய கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தால், பொது நலனில் உண்மையான அக்கறை இருந்தால், இதற்காக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் இக்கட்டான இந்த சூழ்நிலையிலிருந்து நாம் விடுபடுவோம் என்பது உறுதி.

-Victory king (VK)

Thursday, March 26, 2020

எண்ணங்கள்

Status 172

காலம் சரியில்லை என்று சிலரைப் போல நீயும் சொல்லாதே! காலம் சரியாய் இருப்பதும் இல்லாததும் உன் எண்ணத்தையும் செயலையும் பொறுத்தே இருக்கின்றது. அதனால் நல்லதும் கெட்டதும் எங்கிருந்தோ வருவதாக எண்ணுவது தர்மமாகாது.

-  தர்ம சாஸ்திரம்

நம் எண்ணம் சரியில்லை என்றால் அடுத்தவனுக்குத் தீங்கிழைப்பதே பிரதான செயலாக மாறிவிடும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பாவச்செயலுக்கு தள்ளப்படுவோம். இதற்கான தண்டனையை நாம் அடைந்தே தீருவோம். தப்பவே முடியாது.

- Victory king (VK)

Wednesday, March 25, 2020

ஒற்றுமை

Status 171

தியாகத்தால் அன்றி எதையும் சாதிக்க முடியாது. மனிதன் செய்யத்தக்கவற்றுள் மிக உயர்ந்த மிகப் புனிதமான செயல் அதைக் கெடுக்காமல் இருப்பதே.

-சுவாமி விவேகானந்தர்

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து வரும் நாம் அனைவரும் செய்ய வேண்டிய ஒரே தியாகம் நம்மை நாமே காப்பாற்றி தனிமைப்படுத்திக் கொள்ளுதல், இதன் மூலம் மற்றவர்களையும் காப்பாற்றுதல். அதன் விளைவு நம் நாட்டையே காப்பாற்றுதல். இவற்றில் எந்த ஒரு எதிர்மறை கருத்தும் செயலும் இல்லாமல் நாம் ஒவ்வொருவரும் ஒருமித்து ஒத்துழைத்தால் கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் நாட்டின் நலனையும் மேம்படுத்துவோம். நாட்டு மக்கள் அனைவரும் மனதளவில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

-Victory king (VK)

Tuesday, March 24, 2020

அமைதியான வாழ்க்கை!


Status 170

ஜட வஸ்துக்களிடமும் மிருகங்களிடமும் நமக்கு இருக்கும் மனோபாவத்தை மனிதர்களிடம் வைப்பது கடினமாகிறது. ஏனெனில் அவைகளிடம் நாம் எந்த மாறுதலையும் எதிர்பார்ப்பதில்லை. ஏனென்றால் அவற்றால் மாற முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் மனிதர்கள் மட்டும் நம் சந்தோஷத்தின் பொருட்டு மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.நம்மை சுற்றியுள்ள ஒவ்வொருவரும் நமக்கு ஏற்ப மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பினால் நம் மனம் சதா அமைதியின்றி இருக்கிறது.

-சுவாமி
தயானந்த சரஸ்வதி

எந்தவித
எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது நம் மனம் லேசாக இருக்கும். அதற்கான பாராட்டை நாம் மற்றவரிடம் எதிர் பார்க்கும் பொழுது அது  கிடைக்கவில்லை என்றால் நமக்கு மனம் அழுத்தம் ஏற்பட்டு பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் உதவி செய்ய வேண்டும் என்ற  தத்துவத்தை மேற்கொண்டால் அமைதியாக வாழலாம்.

-Victory king (VK)

Monday, March 23, 2020

சுத்தமும் சுகாதாரமும்!

Status 169 

கெட்டவனை தொட்டால் தொட்டவனும் கெட்டான் என்ற
 நிலைதான் இன்று நமக்கு.

கட்டித்தழுவி அன்பை பகிர்ந்து கொள்ளல், ஒருவர் கையை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துதல், உண்ணும் பொழுது ஒருவருக்கொருவர் தட்டிலிருந்து உணவுகளை பகிர்ந்து கொள்ளல் இவைகளெல்லாம் சுகாதார சீர்கேடு என்று உணர்ந்தாலும் நடைமுறையில் இருந்து தான் வந்தது.

இவற்றுகெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொட்டுப் பேசுவதையும் அருகில் நின்று பேசுவதையும், வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்பொழுது கை,கால்களை நன்கு கழுவி விட்டுதான் வரவேண்டும் என்ற நிலைக்கு உலகத்தையே பதபதைக்க வைக்கும் கொடிய வைரஸால் தள்ளப்பட்டிருக்கிறோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாகக் கடைபிடித்தால் நாம் நம் கட்டுப்பாட்டில். இல்லையேல் வைரஸின் கட்டுப்பாட்டில்தான்.நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.

Victory king (VK)

Sunday, March 22, 2020

விஷ்ணு சஹஸ்ரநாமம்

Status - 168

சுக்லாம் பரதரம் விஷ்ணும்என்று தொடங்கும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை கேட்டாலே ஒரு வித பரவசம் ஏற்படும். விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒலிக்கும் இடத்தில் மங்களம் உண்டாகும். துர்தேவதைகள் அலறியடித்து ஓடும்.  நோய்நொடிகள் விலகும். வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். எனவே நம் வீடுகளில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ஒலிக்கச் செய்வதன் மூலமும், முடிந்தால் நாமே படிப்பதின் மூலமும் சகல செளபாக்கியங்களுடன் வாழ்வோம். மேலும் நம்மை எந்த வித தொற்று நோயும் அண்டவிடாது பாதுகாக்கும். இதனை யார் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் கேட்கலாம், படிக்கலாம். 

'ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே  மனோ ரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே' 

இந்த ஸ்லோகத்தை மூன்று முறை  சொன்னாலே முழு நாமாவளியை படிப்பததின் பலன் கிடைக்கும். 

– ஸ்ரீகாஞ்சி மகா பெரியவரின் அருளுரை

இன்றைய சூழ்நிலையில் ஸ்ரீகாஞ்சி பெரியவரின் அருளுரையை மனதார ஏற்று  பலனடைவோமே!

– Victory King (VK)


Saturday, March 21, 2020

சுய கட்டுப்பாடு

Status 167

சுய கட்டுப்பாட்டுடன் இருந்து சுற்றத்தையும் சூழலையும் சுபிட்சம் ஆக்குவோம். நம் நலம் காப்பதுடன் மற்றவர்கள் நலனையும் காக்க முழுமூச்சுடன் முனைந்து செயல்படுவோம். நாளைய பொழுதை நாடே போற்றும் வண்ணம் மானசீகமாக கைக்கோர்த்து ஒற்றுமையை நிலைநாட்டுவோம். உலகத்தையே அச்சுருத்தும் தொற்று நம் அனைவரையும்  தொற்றாமல் விரட்டியடிக்க எச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து நம்மை நாமே காத்துக் கொள்வோம். நாளைய பொழுது நலமாக இருப்பது நம்  ஒவ்வொருவரது செயல்பாடுகளில்தான் என்பதை உணர்வோம். ஒற்றுமையே வெற்றிக்கு ஒரே வழி

Victory king (VK)

Friday, March 20, 2020

எண்ணத் தூய்மை

Status 166

நாமும் ஒன்றும் செய்வதில்லை; ஏதாவது செய்பவரையும் எள்ளி நகையாடி ஏளனம் செய்வோம். நம் வீழ்ச்சிக்கு நாசகரமான இந்த குறைபாடே காரணம்.

- சுவாமி விவேகானந்தர்

நாம் நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. நல்லது செய்பவர்களை நய்யாண்டி பேசி அவமதிப்பது, அவர்கள் செயலை சீரழிக்க முயல்வது, புறம் பேசி அவர்களை நோகடிப்பது போன்ற செயல்கள் நாமே நம் அழிவு பாதையை நோக்கிச் செல்வதற்கு சமம்.எண்ணத் தூய்மையே நம் வாழ்வை இனிதாக்கும்.

- Victory king (VK)

Thursday, March 19, 2020

சாஸ்த்திரங்கள்!

Status 165
வீட்டில் முதலில் இருப்பது 'படி'.
இது நம்மை படிக்கவேண்டும் என்று கூறுகின்றது. இரண்டாவதாக அமைவது' நிலை.' படித்து அதன்படி நிற்க வேண்டும். அடுத்து 'நடை.' நாம் படித்த படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றது. அடுத்து 'கூடம்.' அது கூடி வாழ வேண்டுமென்று அறிவுறுத்துகின்றது. அதன் பக்கத்தில் 'முற்றம்.'லக்ஷியம் முற்று பெற்றால் மோக்ஷம் கிட்டும். முற்றம் முடிந்ததும் காண்பது 'வெளி.' இதுவே 'வீடு பேறு’ என்பதாகும்.

ஹிந்து தர்ம ஞானம்

இன்று நாம் வாஸ்து என்று கொண்டாடப் பெற்று கட்டிய வீடுகளில் வாழ்ந்து மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் அந்த காலத்திலேயே சாஸ்திர ரீதியாக வீடுகளை அமைத்து சுபிட்சமாக வாழ்ந்தார்கள். அன்றைய சாஸ்திரங்கள் தான் இன்று வாஸ்துவாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நாம் மாற்றங்களோடு வாழ்ந்தாலும் சாஸ்திரங்கள் மறுப்பதில்லை.

-Victory king (VK)

Wednesday, March 18, 2020

பிறப்பும் இறப்பும்!

Status 164

யாராக இருந்தாலும் பரவாயில்லை. எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு!
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

- டாக்டர் அப்துல் கலாம்

நாம் ஒரு செயலை தூய்மையான எண்ணத்துடனும், முழு மனதுடனும், விடா முயற்சியுடனும் வெற்றியை நோக்கி பயணம் செய்யும் பொழுது தோல்வி என்பதே இருக்காது. நம் சக்தியை நாம் உணர்வதற்கு இதுதான் தாரக மந்திரம்.

- Victory king (VK)

Tuesday, March 17, 2020

தர்மம்!

Status 163

மிதிவண்டி மிதிக்காமல் ஓடுகிறது ஏனென்றால் ஏற்கனவே மிதி பலகையை (pedal) அதிகம் மிதித்த தினால். ஆனால் ஓடுகிறதே என்பதற்காக மிதிக்காமல் விட்டால் வண்டி நின்று விடும். விளக்கு எரிகிறதே என்று கவனிக்காமல் விட்டால் தீபம் அணைந்து போகும்.எண்ணெய் ஊற்றவேண்டும், திரியை நெருடி விடவேண்டும். அது போலத்தான் நம் ஹிந்து தர்ம சக்தியும். எனவே நம் முன்னோர்களின் வழிநின்று தர்மத்தின் படி நடந்து ஹிந்து தர்மத்தை காப்போம்.

- ஹிந்து தர்ம ஞானம்

நம் முன்னோர்கள் அறிவுப்பூர்வமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அமைந்த பழக்க வழக்கங்களை மேற்கொண்டு வாழ்ந்து காட்டி மற்றவர்களும்அதனை உணர்ந்து செயல் படும் படி செய்தார்கள். முடிந்தவரை நாமும் அதைப் பின்பற்றி வாழலாமே

- Victory King (VK)

Monday, March 16, 2020

குடும்ப ஒற்றுமை

Status 162

ஆங்கிலத்தில் Home, தமிழில் இல்லம், சமஸ்கிருதத்தில் க்ருஹம் என்று அழைக்கப்படும் நமது இல்லம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. இந்த கட்டிடத்தில் குடியிருக்கும் நாமும் நமது உறவுகளும் சேர்ந்ததுதான் இல்லம். தாய் தந்தை, மாமியார் மருமகள், தாத்தா பாட்டி, பேரன் பேத்தி, அண்ணன் தம்பி, அக்கா தங்கை என்ற எல்லா உறவுகளும் கூடி குலாவி மகிழ்ந்து இருக்கும் வீடு மட்டுமே இல்லம் ஆகும்.

- நன்றி: ஹிந்து சிந்தனை மையம்

தற்காலத்தில் இதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்றாலும் அவ்வப்பொழுதாவது உறவுகளுடன் ஒன்றுகூடி மகிழும் பொழுது தலைமுறை இடைவெளி என்பது சிறிதும் நம்மை அண்டாது. நாமே நம் உறவுகளை பிளவுபடுத்தி நம் பிள்ளைகளின் மனதை கெடுக்காமல் இருந்தாலே நம் பிள்ளைகள் பேரன் பேத்திகள் நம் பாச வலையை விட்டும் நம் உறவுகள் வட்டத்தை விட்டும் விலக மாட்டார்கள். குடும்ப ஒற்றுமை நம் கையில்தான்.

- Victory king (VK)

Sunday, March 15, 2020

பெற்றோரும் பிள்ளைகளும்

Status 161

பிள்ளைகள் முன்னிலையில் அடிக்கடி சண்டையிடும் தம்பதிகள் பிள்ளைகளுக்கு மிக மோசமான முன்னுதாரணம்.சண்டையிடும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு இருக்காது. அவநம்பிக்கையும் அச்சமும் இருக்கும். மனக் குழப்பத்தால் பீடிக்கப்பட்டு, படிப்பு, விளையாட்டு எதிலும் முன்னேற மாட்டார்கள்.அதிக ஆபத்தான பிள்ளைகளை,   சண்டையிடும் பெற்றோர்கள் உண்டு பண்ணுகிறார்கள்.

நன்றி: ஹிந்து சிந்தனை மையம்

 பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசையோடும் பாசத்தோடும் மட்டும் வளர்த்தால் போதாது. பண்போடும் வளர்க்கவேண்டும். அதற்கு அவர்கள் தாங்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

Victory king (VK)

Saturday, March 14, 2020

வெற்றியின் மகிழ்ச்சி!

Status 160

முயற்சியால்தான் காரியங்கள் வெற்றி பெறுகின்றன மனக்கோட்டையினால் அல்ல. தூங்கிக்கொண்டிருக்கும் சிம்மத்தின் வாயில் மிருகங்கள் தானே வந்து நுழைவதில்லை.

- இந்து தர்ம சாஸ்திரம்

தோல்வியை கண்டு தயங்காமல் மேலும் மேலும் முயற்சித்தால் வெற்றி என்பது நிச்சயம். தோல்வி என்பது நம் முயற்சியின் ஒரு தடங்கல்தான்.அத் தடங்களை களைந்தெறிய முனைப்போடு முயற்சி வெற்றியின் மகிழ்ச்சி. வெற்றியின் மூல மந்திரம் முயற்சி.அதை சோர்வின்றி கடைபிடித்து வாழ்க்கையை வெல்வோம்

-Victory king (VK)

Friday, March 13, 2020

இன்பமும் துன்பமும்!

Status 159

இன்பத்தைப் போலவே துன்பமும் மனித வாழ்க்கைக்குத் தேவைதான். துன்பப்படும் போது தான் நல்ல மனிதன் நன்றாக கற்றுக் கொள்கிறான். ஆகையால் சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நீ இந்த உலகத்தில் உனக்காக ஒதுக்கப்பட்டுள்ள துன்பத்தை ஏற்றுக் கொள்ள உன்னை ஆயத்தப்படுத்திக் கொள். இதனால் திடீரென்று வரக்கூடிய துன்பத்தை  உன்னால் தாங்கிக் கொள்ள முடியும்.

-இந்து தர்ம சாஸ்திரம்

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. நாம் இன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால் நம்மை அகந்தை தான் ஆட்டிப்படைக்கும். நிழலின் அருமை கொளுத்தும் வெயிலில் இருந்து வருபவர்களுக்குத்தான் தெரியும். இன்பத்தின் அருமை துன்பத்திலிருந்து விடுபடும் போதுதான் உணரமுடியும். எனவே நாம் எதற்கும் தயாராக நம் மனதை பக்குவப்படுத்தி வாழ்ந்தால் நம் வாழ்வு சிறக்கும்

-Victory king (VK)

Thursday, March 12, 2020

வாழ்தல் இனிது!

Status 158

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்த காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லெளகீக நாகரீகத்தை விட்டு விட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காக பறக்க வேண்டியதில்லை. பணத்துக்காக பறக்காத போது பகவத் ஸ்மரணத்திற்கு நிறைய அவகாசம் கிடைக்கும்.வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னால் உண்டாகும்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

அதாவது  மேலும் மேலும் ஆசைகளை வளர்த்துக் கொண்டு  நம்மை நாமே வருத்திக் கொள்ளாமல் வாழ்ந்தால் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். முயற்சித்து  நம் சக்திக்கேற்ற தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு நமக்கு கிடைத்ததை வைத்து மகிழ்வுடன் வாழ்ந்தால் வாழ்வே சுகம் தான்.

- Victory king (VK)

Wednesday, March 11, 2020

தீவினையும் நல்வினையும்

Status 157

நீரிலுள்ள அல்லிமலரானது நீரினது மட்டத்தின் உயரத்தின் அளவாக இருக்கும். கூரிய அறிவானது தான் கற்ற நூல்களின் அளவே ஆகும். தான் அடைந்த செல்வமானது முற்பிறப்பில் செய்த தவத்தின் அளவாகவே இருக்கும்.

- ஔவையார்

நாம் முழுமனதுடன் முயற்சித்தால் மட்டுமே முன்னேற முடியும். நற்செயல்களை செய்தால் மட்டுமே நன்மை அடைய முடியும். எனவே நம் செயல்களுக்கு ஏற்பத்தான் நம் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்பதை மனதில் கொண்டு தீவினை அகற்றி நல்வினை செய்து வாழ்ந்தால் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்

-Victory king (VK)

Tuesday, March 10, 2020

அமைதி

Status 156

எப்போதுமே மௌனமாக இருந்தால் நல்லதுதான். ஆனால் அது அனுபவ சாத்தியமில்லை. அதற்கு வேண்டிய மன அடக்கத்தை எளிதில் பெற்று விட முடியாது. உலரும் நாவை அடக்க வேண்டுதல் சொற்பொழிவாளர் கடன். நம்முடைய மனதில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் சிறு குரலை கேட்க வேண்டுமானால் நாம் இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. சிலசமயம் வாய்திறந்து பேசுவதைவிட பேசாமல் இருப்பதே மிக்க பயனை அளிப்பதாகும்.

- மகாத்மா காந்தி

நாம் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய இடத்தில் பொருள்பட பொன்னால் தான் அதற்கு மதிப்பு. எதைச் சொன்னாலும் ஏற்க மறுப்பவர்களிடம் நாம் வாய் திறவாதுஅமைதி காத்தால் அன்பும் நம் மதிப்பு கூடும்.

- Victory king (VK)

Monday, March 9, 2020

அகமும் புறமும்

Status 155

ஒரு மனிதனை வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு நல்லவன் என்றோ தீயவன் என்றோ உறுதி செய்து விடாதே. பலாப்பழம் முள் முள்ளாக மேலே தோற்றமளிக்கும். உள்ளுக்குள் சுவையுள்ள சுளைகள் பல உண்டு. எட்டிப்பழம் மேலே பளபளவென்று இருக்கும். தொட்டாலே கசக்கும். நாவற்பழம் கருமை. ஆனால் நாவில் பட்டால் இனிக்கும். பாம்புக்குட்டி பளபளவென்று இருக்கும். கொடிய விஷத்தை தரும். அம்பு நேராக இருக்கும். உயிரை குடிக்கும். எனவே மனிதனை புறத்தோற்றத்தை வைத்து மதிப்பிடாதே.

- திருமுருக கிருபானந்த வாரியார்

நல்லவனை விட, நல்லவன் போல் நடித்து மற்றவர்களை ஈர்க்கும் வல்லவர்களின் செயல்பாடுகள்தான் தத்ரூபமாக காட்சியளிக்கும். எனவே அதனை இனம் கொண்டு நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்

-Victory king (VK)
.

Sunday, March 8, 2020

மகளிர் தின வாழ்த்து!

Status 154

பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது மேலானது.

- மில்டன்

எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.

- மனு

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது.

- டிக்கன்ஸ்

வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.

-கண்டேகர்

ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்.

- வால்டேர்

ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.

- ஜவஹர்லால் நேரு


சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்.

-காந்தியடிகள்

இத்தகைய பெருமை வாய்ந்த பெண்கள் மேலும் மேலும் சிறக்க   உலகம் மெச்ச புகழோடு வாழ மகளிர் தின நல்வாழ்த்துக்களுடன்...

- Victory king (VK)

Saturday, March 7, 2020

வாழ்க்கையில் வெற்றிபெற!

Status 154

நீ எப்படி இருந்தாய் என்பதை பற்றி கவலைப்படாதே. எப்படி இருக்கப் போகிறாய் என்பதை மட்டும் நினை. பின்நோக்கி பார்க்காதே. முன்நோக்கி பார்.நீ என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதை பார். நிச்சயமாக முன்னேறுவாய்.

- ஸ்ரீ அன்னை

கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படாமல்  அதை  அனுபவமாக எடுத்துக்கொண்டு நிகழ்வில் அதற்கேற்ப செயல்பட்டு இதன் பிரதிபலிப்பு எதிர்காலத்தில் நன்மையை பயக்கும் வண்ணம் நற் செயல்களைச் செய்து வாழ்க்கையை கடத்தினால் வாழ்க்கை வளமுடனும் நலமுடனும் மகிழ்வுடனும் அமையும்.

- Victory king (VK)

Friday, March 6, 2020

அறிவுரை

Status 153

காரணத்துடன் மட்டும் பேசுங்கள். எல்லாவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள். அளந்ததே பேசுங்கள். களங்க மற்ற நல்ல நோக்கம் கொண்ட வார்த்தைகளே சிலவேளைகளில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகின்றது. எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்ல போகாதீர்கள் நீங்கள் கேட்கப்பட்டாலன்றி. நாம் நமது வேலையை பார்ப்போம்.

- சுவாமி சிவானந்தா

அறிவுரை என்ற பெயரில் அதிகப் பேச்சு ஆபத்தை விளைவிக்கும். உணர்ச்சிவசப்பட்டு  பேச்சில் தடுமாற்றம் ஏற்படுவதுடன் அடுத்தவர் மனதை
 புண்படுத்தும் நிலையும் வரலாம். எனவே நிதானத்துடன் பேசி நம் நாவைக் கட்டுப்படுத்தி நம் பண்பை காப்போம்.

- Victory king (VK)

நம் மதிப்பு!

Status 152

தாழம்பூ மடல்களிலே பெரியதாக இருக்கிறது. ஆயினும் மிகச்சிறிய மலரான மகிழம்பூ மனத்தில் இனியதாக இருக்கிறது. சமுத்திரம் பெரியதா எனும் அதிலுள்ள நீர் உடல் அழுக்கை போக்குவதற்கு தக்க நீர் ஆகாது. அதன் அருகேயுள்ள சிறு ஊற்று நீர் உண்பதற்கு உகந்த நீராக  இருக்கிறது. எனவே உருவத்தால் சிறியவர் என்றாலும் அவரை மதிக்காமல் இருக்க வேண்டாம்.

- ஔவையார்

எளியவர் ஆயினும் ஏழ்மையில் இருந்தாலும் நம்மிடம் வேலை செய்யும் கூலித் தொழிலாளியானாலும் அனைவரையும் மனிதாபிமானத்தோடு நடத்துவதுதான் பண்பு. நம்முடைய மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள நாம் இதை உணர்ந்தால் போதும்.

- Victory king (VK)

Wednesday, March 4, 2020

பரோபகாரமும் பர அபகராமும்

Status 151

அவனவனும் தன் உடலையும், புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே பெரிய பரோபகாரம். துர்பழக்கங்களால் ஒருவன் வியாதியைச் சம்பாதித்துக் கொள்கிறான் என்றாள் அப்புறம் அவனால் எப்படி பரோபகாரம் பண்ண முடியும். அதுமட்டுமல்ல. அவனது நோய் மற்றவர்களுக்கும் பரவக்கூடும். துர் பழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொள்வது பர அபகாரம் ஆகும். நம்மை மீறி வந்தால் அது வேறு விஷயம்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

புத்தியை சுத்தமாக வைத்துக்கொண்டால் நம்மை தீய எண்ணங்கள் அண்டாமல் நேர்வழியில் கொண்டுசெல்லும்.அதுபோல் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டிய பழக்கவழக்கங்களை நாம் கடைபிடிப்பதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காப்பதுடன் மற்றவர்கள் நலனையும் காப்பாற்றுகிறோம் என்பதை மனதில் கொண்டு சுகாதார செயல்பாடுகளிலிருந்து மீறாமல் வாழ்வோம்

-Victory king (VK)

Tuesday, March 3, 2020

பாவ புண்ணியங்கள்!


Status 150

துரோகத்திற்கு ஒரு சிறந்த பழமொழி. ‘வேலியே பயிரை மேய்ந்தால்’. பாதுகாக்க வேண்டியவர்களே துரோகம் செய்தால் அதைவிட பெரிய பாவம் ஒன்றுமில்லை. நெருங்கிய நண்பர்கள் போல் நடித்து நம்மை நட்டாற்றில் விடுவது, நம் கூடவே இருந்து நமக்கே குழி பறிப்பது, அறிவுரை கூறுவது போல் நம் மனதில் நஞ்சை  ஊட்டுவது, விரோதிக்கு விரோதி நண்பன் என்ற என்ற பாணியில் துரோகிகளுடன் சேர்ந்து அடுத்தவர்களை அழிக்க நினைப்பது, அதைவிடக் கொடுமை பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம், பெற்றோர்களே பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம் அனைத்துமே துரோகத்தின் உச்சம். நாம் இதன் மூலம் பாவத்தைத் தான் சம்பாதிக்கிறோம் என்பதை மனதில் கொண்டு இதுபோன்ற  தீய செயல்களில் ஈடுபடாது இருந்தால்  வாழ்க்கை  சிறக்கும் என்பதுடன் நம் குடும்பம் செழிக்கும்.

Victory king (VK)

Monday, March 2, 2020

தொண்டின் இலக்கணம்

Status 149

தாய், தந்தை, சகோதரன், மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் உலகுக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது வெளி வேஷம் தான். அது போலித்தனம். மோசடி தனம். எல்லோரிடமும் அன்பாக இரு என்பது தொண்டின் இலக்கணம்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், தகுதி இல்லாமல் தன்னை உடை அலங்காரத்தால் மிகைப்படுத்தி மற்றவரை ஈர்த்தல், தன் வாய் சாதுரியத்தால் பொய்யான விஷயங்களை உண்மைபோல் சித்தரித்து அடுத்தவனை ஏமாற்றி பிழைத்தல், நல்லவன் போல் நாடகமாடி தன் வீட்டிலும் வெளியிலும் தன்னை பிரபலப்படுத்திப் பிழைத்தல் இவைகள் அனைத்தும் நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம்போல் ஆகும். எனவே நாம் நேர்மையாக நடப்பதோடு இது போன்ற ஆட்களை இனம் கொண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு வாழ்வில் நலம் பெற வேண்டும்

-Victory king (VK)

Sunday, March 1, 2020

மனிதனுக்கு இலக்கணம்

Status 148

முதலில் மனிதனாகு.  பிற எல்லாம் தாமாகவே உன்னைத் தேடி வருவதை காண்பாய். நல்ல நோக்கம், நேரிய வழி, தர்ம வீரம், நல்ல வலிமை ஆகியவற்றை பெறு. மனிதனாகப் பிறந்த நீ ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல். நீ இந்த உலகத்தில் பிறந்த போது உலகம் சிரித்தது.நீ அழுதாய். நீ இவ்வுலகை விட்டுச் செல்லும்போது நீ சிரிக்க உலகம் உனக்காக அழதக்க நல்ல காரியங்களைச் செய். இதை சாதிக்க முடிந்தால் நீ மனிதன். இல்லையேல் நீ பிறந்தும் பயனில்லை.

- சுவாமி விவேகானந்தர்

நாம் இறந்த பிறகும் நம் அருமை பெருமைகளை மற்றவர்கள் மனதார வாழ்த்தும் பொழுது தான் நம் பிள்ளைகளும் உற்றார் உறவினர்களும் நம்மைப்பற்றி முழுமையாக உணர்வார்கள்.நாம் செய்யும் நற்செயல்கள் மட்டுமே நம்மை இறுதிவரை காப்பாற்றும்

- Victory king (VK)