Saturday, February 29, 2020

எண்வழி உன்னத பாதை என்பது எவை எவை?

Status 147

எண்வழி உன்னத பாதை என்பது எவை எவை?

நல்லுணர்வு, நல்லெண்ணம், நல் வாய்மை, நற்செயல், நல் வாழ்க்கை முறை, நன்முயற்சி,நற் கவனம், நற் சமாதி--இந்த எண்வழி உன்னத பாதையில் நடப்போர் துக்கத்திலிருந்து விடுபடுவதுடன் என்றும் ஆனந்த நிலையைப் பெறுவர். இதுதான் நித்திய ஆனந்தத்தை அடையும் வழி.

- பகவான் கௌதம புத்தர்

இவை அனைத்திற்குமே கரு தூய எண்ணமும் மனதறிந்து மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாதிருத்தலும்தான். கடைபிடித்தால் அடைவோம் ஆனந்தத்தை.

- Victory king (VK)

Friday, February 28, 2020

தன்னிறைவு

Status 146

மனிதனுடைய மனதிலே ஒரு நிறைவு வேண்டும். அந்த நிறைவிலிருந்து எழக்கூடிய தான் இன்பமான வாழ்வு. மனிதன் ஒருவரை பார்த்து அவரைப் போல் நாம் இல்லையே என்று நினைத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு துன்புறுகிறான். தனது ஆற்றலை உணர்ந்து வளர்த்துக் கொள்ளும் திறமை பெருமையும், செயல்படுத்த வாய்ப்புக் கிட்டாமையுமே சோர்வு வறுமை உண்டாவதற்குரிய காரணங்கள்.

- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நாம் தன்னம்பிக்கையுடன் நம் திறமையை வளர்த்துக் கொண்டு தனித்தன்மையுடன் வாழ்ந்தால் தன்னிறைவு தானே வரும். வாழ்க்கையே வசந்தம் தான்.

- Victory king (VK)

Thursday, February 27, 2020

இனிமையான சொல்!

Status 145

யானை மீது பாய்ந்து உருவும் அம்பானது பஞ்சுப் பொதியில் பாயாது. நீண்ட கடப்பாரைக்கு பிளவாத கருங்கல் பாறையானது பசு மரத்தின் வேருக்குப் பிளந்து கொடுக்கும். அவ்வாறு கடுமையான சொல்லானது இனிமையான சொல்லை வெற்றி கொள்ளாது.

-ஔவையார்

கடுமையான சொற்கள் என்பது கோபத்தின் வெளிப்பாடே. அது எதிர்வினை கொண்டு எதிராளியின் எதிர்மறை செயலுக்கு வித்திட்டு விடும். விளைவு நாம் அமைதியைக் எடுத்துக்கொள்வதுடன் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டு தீராத துயரத்தை அனுபவிக்க நேரிடும். எனவே நாம் முடிந்தவரை கோபத்தை தவிர்த்து இனிய சொற்களால் சூழ்நிலையை எதிர்கொண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோமே.

-Victory king (VK)

Wednesday, February 26, 2020

வாழ்க்கைக்கு அழகு

Status 144

கற்றோருக்கு அழகு கர்வம் இல்லாமல் இருத்தல். செல்வந்தருக்கு அழகு செருக்கு இல்லாமல் உதவி செய்தல். தர்மத்திற்கு அழகு நம்மால் இயன்றதை ஈதல். நட்பிற்கு அழகு நல்வழி காட்டல். நாவிற்கு அழகு தீவினை சொல்லாதிருத்தல். பண்பிற்கு அழகு புறம் பேசாதிருத்தல்.  பெற்றோர்க்கு அழகு ஆண் பெண் பேதமின்றி பிள்ளைகளை வளர்த்தல். மனதிற்கு அழகு நல்லதையே நினைத்தல். வாழ்க்கைக்கு அழகு பண்போடு வாழ்ந்து காட்டுதல்.

Victory king (VK)

Tuesday, February 25, 2020

உண்மையும் பொய்யும்!

Status 143

அன்பும் உண்மையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. உண்மையினாலும், அன்பினாலும் உலகத்தையே வெற்றிகொள்ள முடியும். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். உண்மை இல்லை என்று சொல்பவர்களை நாம் பார்த்ததில்லை.

-  மகாத்மா காந்தி

அன்புள்ளம் கொண்ட மனம்தான் உண்மையின் இருப்பிடம். அங்கே பொய்யை அண்டவிடாது. நன்மையைக் கருதி பொய் சொல்ல நேர்ந்தாலும் அந்த பொய்யிலும்  ஒரு உண்மை இருக்கவேண்டும். உண்மை என்பது ஒரு சிறந்த அறம். அது ஆரம்பத்தில் துன்பம் தருவது போல் இருந்தாலும் இறுதியில் உண்மைதான் வெற்றி பெரும். பொய்யின் இறுதி புதைகுழி தான். எனவே உண்மையையே பேசி நன்மையே செய்து நலம் பெற வாழ்வோம்.

- Victory King (VK)

Monday, February 24, 2020

ஞானம்

Status 142

தற்பெருமையின்மை, அகிம்சை, பொறுமை, நேர்மை, சிரத்தையுடன் பெரியோருக்கு பணிவிடை செய்தல், தூய்மை, உள்ளத்தில் உறுதி, தன்னடக்கம், போகங்களில் பற்று இல்லாது இருத்தல், அகந்தை இல்லாமை, தன்னுடையது என்ற எண்ணமின்மை, வேண்டிய வேண்டாதவற்றை அடையும் போதும் உள்ளம் ஒரே மாதிரி இருத்தல், மெய்ப்பொருள் காணல் இவை ஞானம்.

- பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்

நாம் ஞானியாக இருக்க முடிந்தவரை முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் மனிதனாக இருக்க முயலவேண்டும். மனித நேயத்துடன் இருக்க முயன்றாலே மற்றவைகள் அனைத்தும் நம்மை தானே தழுவிக்கொள்ளும்.

- Victory king (VK)

Sunday, February 23, 2020

நல்வினையும் தீவினையும்!

Status 142

கல்வியறிவில்லாத மனிதருக்கு கற்றவர்களின் சொற்கள் துன்பம் தரும். அறத்தில் விருப்பம் இல்லாதவருக்கு தர்மமே துன்பமாகும். மெல்லிய வாழைக்கு தான் ஈன்ற காயே எமனாகும்.

- ஔவையார்

அடுத்தவர்களுக்கு தீவினை செய்தே வாழ்ந்து வரும் ஒருவரை நாம் திருத்த முயற்சித்தால் அவர் செய்வதே நியாயம் என்று வாதித்து தான் திருந்தவே மாட்டார். ஆனால் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் திருந்த நினைத்தால் அப்பொழுது அவரைச்சுற்றி ஒருவரும் இருக்க மாட்டார். பைத்தியத்தின் நிலைதான் வரும். எனவே நாம் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே நல்லவற்றையே செய்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ந்து வாழ்வோமே!

-Victory king (VK)

Saturday, February 22, 2020

ஆசை!

Status 141

மனிதன் ஒன்றை உணர்ச்சிபூர்வமாக நினைக்கும்போது அதில் ஒருவகை பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் ஆசை உண்டாகிறது. ஆசையால் கோபம் உண்டாகிறது. கோபத்தால் மயக்கம் வருகிறது. மயக்கத்தால் நினைவு தடுமாறுகிறது. பிறகு அறிவு கெட்டுப் போகிறது. அறிவு கெட்டுப் போவதால் அழிந்து விடுகிறான். ஆகவே இக்கொடிய குணமான ஆசை போக வேண்டுமானால் திருப்தி அதாவது போதுமென்ற மனம் அடை. கர்மத்தின் காரணமாக என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு திருப்தி அடை.

- ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா

அழிவிற்கு காரணமான ஆசையை அடக்கி இருப்பதை இன்பமுடன் ஏற்கும் பக்குவத்தை நாம் அடைந்தால் நமக்கு என்னாலும் நன்னாளே.                             

- Victory king (VK)

Friday, February 21, 2020

நன்மை செய்து நலமாக வாழ்வோமே!

Status 140

நீங்கள் பிறரை வெறுத்தால், நீங்கள் பிறரை துன்புறுத்தினால், நீங்கள் மற்றவர்கள் அனைவரையும் மோசமாக நடத்தினால், நீங்கள் அடுத்தவரை ஏமாற்றினால் இன்னும் பல செயல்களை செய்து விட்டு மன அமைதியும் எதிர்பார்த்தால் நீங்கள் முடியாத ஒன்றை எதிர்பார்க்கிறீர்கள். அதுமட்டுமல்ல அதை பெற உங்களுக்கு தகுதியும் கிடையாது.

- சுவாமி சிவானந்தா

நாம் மற்றவர்களுக்கு பலவிதங்களிலும் கேடு செய்து பிழைப்பதும், நம் தவறுகளை திருத்திக் கொள்ளாமல் மேலும் மேலும் தவறு செய்து வாழ்வதும் இப்பொழுது வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். நம் மனசாட்சியே நம்மை அழிப்பதுடன் நம் சந்ததியினரையும்  அழித்துவிடும். எனவே நமக்காக இல்லாவிட்டாலும் நம் பிள்ளைகள் வாழ்வை  கருதியாவது நன்மையே செய்வோம் நலமாக வாழ்வோம்

- Victory king (VK)

Thursday, February 20, 2020

அன்பின் வலிமை!

Status 139

மானுடன் ஒருவன் மிக்க கோழைப்பட்ட நெஞ்சமோ, மிக்க கல் நெஞ்சமோ படைத்தவனாக இருக்க கூடாது. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னுடைய பாங்குகளை அவன் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வெறுப்பு விஷமாக வடிவெடுக்கிறது. அன்பின் வலிமை மிகவும் பெரிது. வீழ்ந்தவனை மீட்டெடுக்க வல்லது.

- பீஷ்மர் ஞானோபதேசம்

கோழை என்பது ஒரு பயத்தின் அறிகுறி தான். அதுபோல கல்நெஞ்சம் என்பதும் பயத்தின் அறிகுறியே. அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த தைரியமில்லாமல் உள்ளடக்கி வைப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் அழுத்தம்தான். இவைகளை உடைத்தெரிய அன்பினால் மட்டுமே முடியும். எனவே நாம் நம்முள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தி அனைவரையும் அரவணைத்து வாழ்ந்தால் மிகவும் தைரியசாலியாகவும் சாதனையாளர்களாகவும் திகழ்வோம். அன்பினால் சாதிக்க முடியாது ஒன்றுமில்லை என்பதை உணர்வோம்.

- Victory king (VK)

Wednesday, February 19, 2020

வாழ்க்கை அறம்!

Status 138

செல்வதைப்போல வலிமையுடையது இல்லை. கல்வியைப் போல ஒருவனுக்கு உற்றதுணை வேறு எதுவுமில்லை. வறுமையைப் போல துன்பமாவது வேறு எதுவும் இல்லை. இரப்போர்க்கு இல்லையென்று சொல்லா மனதைப் போல வளமையானது எதுவுமில்லை.

-நான்மணிக்கடிகை

செல்வச் செருக்கால் அடாத செயல்களை செய்து வாழ்பவனை விடவும், கல்விச் செருக்கால் மமதை கொண்டு மற்றவர்களை மதிக்காது வாழ்பவனை விடவும் வறுமையிலும் அன்போடும் பண்போடும் இருந்து துன்பத்தை துச்சமென எதிர்கொண்டு தனித்தன்மையுடன் வாழ்பவர்களே சாலச் சிறந்தவர்கள். இவருடைய அன்பும் பண்பும் இவரை அரவணைத்து வாழ்க்கையை வளமாக்கும்.

-Victory king (VK)

Tuesday, February 18, 2020

ஆஹாரம்!

Status 137

ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமல்ல. பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒவ்வொரு ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு பேச்சுகளை கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படி நாம் அநுபோகம் பண்ணுகிற தெல்லாம் நமக்கு ஆஹாரம் தான். இதில் எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். மனதைக் கெடுப்பவை யாக இருக்கக் கூடாது.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

காதிற்கு இனிய கீதம் மற்றும் சத்தான விஷயங்கள், கண்களுக்கு குளுமையான இயற்கை காட்சிகள், நுகர்வதற்கு பூக்களின் நறுமணம், உடலிற்கு இளம் தென்றல் காற்று இவை அனைத்தும் நமக்கு புத்துணர்ச்சியையும் புது பொலிவையும் கொடுத்து மகிழ வைக்கும்.

-Victory king (VK)

Monday, February 17, 2020

நல் வாழ்வு!

Status 136

நீ செய்யும் ஒவ்வொரு நற்செயலும் உன் துன்பத்தை தடுத்து காக்கும் தேவதைபோல் உன்னைக் காப்பாற்றும். நீ செய்யும் ஒவ்வொரு தீச்செயலும் உன்னை ஒரு சாத்தானைப் போல் பிடித்து ஆட்டி வைக்க தயாராய்  இருக்கிறது. தர்மத்திற்கு லட்சணம்  என்னவென்றால் உனக்குப் பிறர் எதை  செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ அதை நீ பிறருக்கும் செய்யாதிருப்பதே.

- சுவாமி விவேகானந்தர்

நல்ல பாதையிலேயே சென்று நல்ல செயல்களையே செய்து நாம் நம் தர்மத்தை காத்து வந்தால் அது நம் வாழ்வை நல்வழிப்படுத்தி வழிநடத்திச் செல்லும் என்பதை மனப்பூர்வமாக நம்புவோம்.

- Victory king (VK)

Sunday, February 16, 2020

முக மலர்ச்சி

Status 135

சாதுவாக இருப்பவன் புன்னகையுடன் இருந்தால் அவன் சிரமங்களைக் கடந்து வந்து விட்டான் என்று பொருள். நமது முகம் மலர்ச்சியை இழந்தால் அது நம்முடைய சுய நம்பிக்கையை கெடுத்து விடும். நம்மை தளரச் செய்யும் பலவீனத்திற்கு வாசலைத் திறந்துவிடும். சிரித்து முகமலர்ச்சியுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அதுவே வாழ்க்கைக்கு இனிமையையும், முயற்சிக்கு ஊக்கத்தையும் தரக்கூடியது.

- ஸ்ரீ அரவிந்தர்

அகத்தில் ஆயிரம் அழுத்தங்கள் இருக்கலாம். அதனை அடக்க மனதை திடப்படுத்த முயற்சிக்க  வேண்டும். அது அகத்தின் அழுத்தத்தை குறைக்கும். அதன் விளைவு நம் முகத்தில் பொலிவு ஏற்படும். அந்தப் பொலிவுதான் மற்றவரை ஈர்க்கும். எனவே மன திடத்தை வளர்த்துக் கொள்வோம். அனைவரையும் அரவணைப்போம்.  மகிழ்வோடு வாழ்வோம்

- Victory king (VK)

Saturday, February 15, 2020

நிறைவான வாழ்க்கை!

Status 134

வருந்தி உழைத்து தேடிய செல்வத்தை கொண்டு தானும் சுகப் படாமல், யாருக்கும் வழங்காமல், பூமியில் புதைத்து வைத்து அலையும் கேடுகெட்ட மனிதர்களே, உங்களுடைய உயிர் போனபிறகு அந்த பணத்தை யார் அனுபவிப்பார்?

- ஒளவையார்

வறுமை தெரியாமல் பொறுப்பில்லாமல் வளர்க்கப்பட்ட பிள்ளைகளும், குறுக்கு வழியில் பணம் ஈட்டி பேராசையோடு பல வழிகளிலும் காலத்தைக் கடத்துபவர்களும், ஓடி ஓடி நேர்வழியில் உழைத்து ஈட்டிய பணத்தை எதற்கும் பயன்படாமல் சேர்த்து வைத்து பெருமை படுபவர்களும் வாழ்க்கையை மகிழ்வுடன் கழிப்பது என்பது கடினம். எனவே, நிறைவாய் வாழ்வோம் நலமாய் வாழ்வோம்.

- Victory King (VK)

Friday, February 14, 2020

எதிர்பார்ப்பு!

status 133

எதையும் எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் எதிர்பார்ப்பு பரபரப்பையும், ஏமாற்றத்தையும் அளிக்கும். நீங்கள் எதை அனுபவிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அனுபவித்தே ஆகவேண்டும்.

- சுவாமி சிவானந்தா

இன்பமும் துன்பமும் சேர்ந்த கலவைதான் வாழ்க்கை. இன்பத்தை மட்டுமே ஒருவர் நாடும் பொழுதுதான் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி இறுதியில் அவமானத்தைச் சந்திக்க நேரிடுகிறது. துன்பத்தில் இருந்து ஒருவர் விடுபட்டு வரும் பொழுதுதான் இன்பத்தின் முழுமையை காணமுடியும். வெயிலில் வாடி வதங்கி வரும் ஒருவர் ஒரு மரத்தடி நிழலில் இளைப்பாறும் பொழுது அதுதான் அவருக்கு சொர்க்கம். ஆனால் அதே மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஒருவர் ஓர் இலை கூட ஆட வில்லையே காற்றுக்கு என்று வருத்தப்படுவார். எனவே இன்பம் வரும் பொழுது இறுமாப்பில் ஆடாமலும் துன்பம் வரும் பொழுது துவண்டு விடாமலும் நாம் வாழ்க்கையை கடத்திச் சென்றால் மகிழ்வோடு வாழ்வோம்.

-Victory king (VK)

Thursday, February 13, 2020

பணமும் குணமும்!

Status 132

பணத்தை தீய வழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிட பெரிய குற்றம். தீய வழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம்.

- இந்து தர்ம சாஸ்திரம்

பணத்தைத் தேடி நாம் அலையக்கூடாது. அது நம்மை தேடி வர வேண்டும். அப்படி என்றால் நேர்வழியில் உழைத்து பணத்தை அடைய வேண்டும். அடுத்தவர்களை அழித்தோ அடுத்தவர்களின் இயலாமையை பயன்படுத்தி மூளைச்சலவை செய்தோ நாம் அடையும் பணம் வந்த வழியே சென்று விடும். எளிமை, உண்மை, நேர்மை இவை மூன்றும் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும் அழியா பணத்தை அடைய.

- Victory king (VK)

Wednesday, February 12, 2020

கருத்துப் பரிமாற்றம்!

Status 131

நீங்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் நீங்கள் அடுத்தவர் பேச்சை கேட்பதைவிட நீங்கள் சொல்வதில்தான், அதாவது நீங்கள் சொல்வதை அடுத்தவர் கேட்க வேண்டும் என்ற ஆவலில் தான் அதிகமாக இருப்பீர்கள். நீங்கள் நினைத்துக் கொள்ளலாம், அடுத்தவர் உங்கள் பேச்சை மிகவும் சுவாரசியமாக கேட்கிறார் என்று. அவரும் உங்களைப்போல தன் எண்ணங்களை உங்கள் முன் இறக்கவே  ஆவலுடன் இருப்பார்.

- ஓஷோ

நாம் ஒருவரிடம் நம் கருத்துக்களை பரிமாறும் பொழுது  அடுத்தவரை ஈர்க்கும் வண்ணம் அந்த கருத்தை கூறி அதற்கு அடுத்தவருடைய கருத்தை அவர் சொல்லும்பொழுது நிதானமாக கேட்டால் கருத்து பரிமாற்றத்திற்கு பண்பும் பயனும் கிடைக்கும். முயற்சித்து தான் பார்ப்போமே!

- Victory king (VK)

Tuesday, February 11, 2020

குறையும் நிறையும்!

Status 130

எதிலும் குறை காணும் உனக்கு இறுதிவரை நிறை காணவே இயலாது. ஆகவே, குறை நீக்கி நிறை கொண்டு வாழப் பழகிக் கொள். அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

- இந்து தர்ம சாஸ்திரம்

குறையோ நிறையோ நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. எதில் குறை இருந்தாலும் நிறை மனதோடு பார்க்கும்பொழுது அதிலுள்ள நிறை மட்டும் தான் நமக்குத் தெரியும். பாலையும் தண்ணீரையும் கலந்து ஒரு அன்னப் பறவையிடம் வைத்தால் அந்தக் கலவையில் பாலை மட்டும் உண்டு தண்ணீரை ஒதுக்கிவிடுமாம். அதுபோல நாமும் அனைத்திலும் நிறைகளை மட்டும் பார்த்து குறைகளை ஒதுக்கப் பழகி மகிழ்வுடன் வாழ பழகுவோமே.

- Victory king (VK)

Monday, February 10, 2020

மனத்தூய்மை!

Status 129

தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி செல்வது விதி. ஆனால் அந்த நீரின் ஓட்டத்தை அணை கட்டி நிறுத்தி வேறு வகையில் பயன்படுத்தலாம். அதுபோல் விதியை மதியால் வெல்லலாம். இங்கே மதி என்பது தெய்வபக்தி நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த தூய மதியை குறிக்கும். ஆணவம், தீய ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த மதியினால் ஒருபோதும் விதியை வெல்ல முடியாது. உதாரணம் ராவணன்.

- சுவாமி கமலாத்மானந்தர்

தூய்மையான எண்ணத்தினால் மட்டுமே மதி வலிமை பெறும். அதன்மூலம் விதியின் வலிமையை குறைக்கவும் முடியும். மனத்தூய்மையுடன் வளமுடன் வாழ்வோம்

- Victory king (VK)

Sunday, February 9, 2020

நம் சக்தியை நாம் அறிவோம்!

Status 128

சிப்பிக்கு தன்னிடம் முத்து இருப்பது தெரியாது. கஸ்தூரி மானுக்கு தன்னிடம் கஸ்தூரி இருப்பது தெரியாது. யானைக்கு தன்னிடம் விலையுயர்ந்த தந்தம் இருப்பது தெரியாது. அதுபோல் நம்மில் பலருக்கு தங்களிடம் உள்ள சக்தி தெரியாது.

- சுவாமி கமலாத்மானந்தர்

மனிதப் பிறவியாகிய நாம் மட்டுமே அறிவைப் பயன்படுத்தி நம்மிடம் உள்ள திறமையை உணரக்கூடிய ஒரு மாபெரும் சக்தியைப் பெற்றிருக்கிறோம். எனவே அதை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் வளம் பெறுவோம்.

- Victory king (VK)

Saturday, February 8, 2020

வாழ்க்கையில் ஜெயிக்க!

Status 127

பொறுமையால் கோபத்தை ஜெயிக்க வேண்டும். துஷ்டபுத்தி
உள்ளவனை நல்ல உபதேசத்தால் ஜெயிக்க வேண்டும். கஞ்சனை தர்மத்தால் ஜெயிக்க வேண்டும். பொய்யை சத்தியமான வார்த்தையால் ஜெயிக்க வேண்டும்.

- இந்து தர்ம சாஸ்திரம்

நாம் நம் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் ஜெயிக்க வேண்டுமென்றால் மேற்கூறிய யுக்திகளை கையாள்வதுடன்  நம்  எண்ணமும் செயலும் நல்லதாக இருக்க வேண்டும்.

- Victory king (VK)

Friday, February 7, 2020

எல்லாம் செய்ய வல்லவர்கள் நீங்கள்!

Status 126

முடியாது, என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள். நீங்கள் எல்லையற்ற வர்கள். காலமும் இடமும்கூட, உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை. நீங்கள் எதையும் செய்ய முடியும். எல்லாம் வல்லவர்கள் நீங்கள்.

-சுவாமி விவேகானந்தர்

இந்த தாரக மந்திரத்தை மனதில் ஏற்றி நமக்கு நாமே ஒரு உத்வேகத்தை ஏற்படுத்திக்கொண்டால் நம்மையும் அறியாமல் நமக்கு ஒரு புத்துணர்வு ஏற்பட்டு அனைத்து செயல்களிலும் வெற்றி அடைவோம். வெற்றியும் தோல்வியும் நம் கையில்தான்.

Victory king (VK)

Thursday, February 6, 2020

நல்லொழுக்க நெறி!

Status 125

கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப விரிவடைகிறது. அதுபோல அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும் பெருகிக் கொண்டே இருக்கும். எதனாலே உனக்கு இன்ப வாழ்வு கிடைக்கும் எனில் விதவிதமாய் அலங்காரம், வீண் பேச்சு இவை ஒழித்து, மிதமான உணவு, உழைப்பு, மேலான எண்ணம் நித்தம் நிகழும் பழக்கத்தில் நீ கொள்ள அது கிட்டும்.

- வேதாத்திரி மகரிஷி

நாம் கட்டுப்படுத்திய ஆசை ஒவ்வொன்றும் நம் சக்தியை அதிகமாக்கும். எனவே நாம் நல்லொழுக்க நெறிகளுடன் வாழ்ந்தால் நம் அறிவு மேன்மேலும் கூர்மையாகி நம்மை மகிழ்வுடன் வாழ வைக்கும்.

- Victory king (VK)

Tuesday, February 4, 2020

தர்ம சிந்தனை

Status 124

ஒரு மாமரத்தை பார்த்து குழந்தைகள் மாங்காய் வேண்டும் என்று நினைப்பார்கள். தச்சு ஆசாரிகள் இந்த மரத்தின் பலகை நன்கு உபயோகப்படும் என்று நினைப்பார்கள். வெய்யிலில் இருந்து  வந்தவர்கள் நிழல் கிடைத்ததே என்று சந்தோஷப்படுவார்கள்.

- இந்து தர்ம சாஸ்திரம்

இதில் மூவரது எண்ணங்களும் நியாயமானதே. ஆனால் மரமோ, ‘ குழந்தைகளும் பாதசாரிகளும்  நினைப்பது மகிழ்ச்சிதான். ஆனால் தச்சு ஆசாரியின் எண்ணம் சரி என்றாலும் தன்னை வெட்டிவிட்டால் மற்றவர்களுக்கு பயனில்லாமல் போய்விடுவோமே. எனவே நாம் அதிக அளவில் காய்கனிகளை கொடுத்தால் தன்னை  வெட்ட மாட்டார்கள். நாம் அனைவருக்கும் பயன்படுவோம் என்று நினைக்குமாம். அதுபோல நாம்  நம்மால் முடிந்தவரை தர்ம சிந்தனையோடு வாழ்ந்தால் அது நம்மை மட்டுமல்ல நம்  சந்ததியினரையும் சிறப்பாக வாழ வைக்கும்.

- Victory King (VK)

Monday, February 3, 2020

உதவி செய்தல்!


Status 123

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

தனக்கு திரும்பி வருகின்ற பயனைக் கருதாமல் செய்த உதவியின் சிறப்பை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

- திருக்குறள்103

நாம் பிறருக்கு செய்யும் நன்மைகளையோ உதவிகளையோ எந்த தருணத்திலும் சொல்லி காண்பிக்கக் கூடாது. இப்படி சொல்லி காண்பித்தால் அதுபோன்ற பண்பற்ற செயல் வேறொன்றுமில்லை. நம்மால் இயன்ற அளவு எதையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வோம்.

- Victory king (VK)


Sunday, February 2, 2020

கோபம்!

Status 122

யார் என்ன சொன்னாலும், கோபம் இல்லாமலும் தைரியத்தை இழக்காமலும் எவன் பொறுமையுடன் இருக்கிறானோ அவன் சமர்த்தன் ஆவான். இப்படிப் பட்டவனுக்கு தெய்வ உதவி நினைத்த சமயம் கிடைக்கும்.

- இந்து தர்ம சாஸ்திரம்

நாம் எப்பொழுதும் பொறுமையைக் கடை பிடித்தால் கோபம் நம்மை அண்டாது. தைரியம் தானே வரும். நினைத்ததை நிதானத்தோடு செயல்பட்டு வெற்றி அடைவோம். நாம் தம்மைத் தாமே காத்துக் கொள்ள கோபத்தை கை விடுவோம். வாழ்க்கையில் வளம் பெறுவோம்.

- Victory king (VK)

Saturday, February 1, 2020

மனமிருந்தால் மார்க்கம்!

Status 121

நாம் எவருக்கும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ மனதிற்கும் உடலுக்கும் துன்பம் இழைக்கக் கூடாது. தேவை உள்ளவர்களுக்கும் துன்பத்தால் வருந்துபவர்களுக்கும் உடல் ஆற்றல், அறிவு ஆற்றல், பொருட்கள் இவற்றைக்கொண்டு இயன்றவரை உதவி செய்ய வேண்டும்.

-வேதாத்திரி மகரிஷி

ஒளி நம் கண்களுக்கு கூசும் பொழுது இமைகள்  உடனே தானே மூடிக்கொள்ளும். நாம் உடுத்தி இருக்கும் ஆடைகள் நம்மையும் அறியாமல்
 நழுவும் பொழுது நம் கைகள் உடனே தானே சரி செய்து கொள்ளும். இதுபோல பிறர் கஷ்டங்களையும் துன்பங்களையும் காணும்பொழுது நம்மையும் அறியாமல் அவர்களுக்கு உடன் உதவும் மனப்பான்மை வர வேண்டும். மனமிருந்தால் மார்க்கம்உண்டு.

- Victory King (VK)